எனது நூல்கள்.

வெள்ளி, 25 மே, 2018

சிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.

சிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன்.
அத்தாணி மண்டபம். அத்தினாபுரத்து அரசிளங்குமரர்களான பாண்டவர்களும், கௌரவர்களும் கூடி இருந்தார்கள். அங்கே வில் வேல் வாளில் பயிற்சி பெற்ற இளையர்களின் திறமைக்கான போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது.  ஒவ்வொரு போட்டியிலும் யாரோ வென்ற போது கூடியிருந்த சிற்றிளங்குமரர்கள் அவர்களை ஆரவாரத்துடன் கரகோஷம் எழுப்பிப் பாராட்டினார்கள்.
அர்ஜுனன் முறை வந்தது. அவர் அங்கே தொங்கவிடப்பட்டிருந்த பொம்மைக் கிளியின் கண்ணைத் தன் அம்பால் எய்தார். உடனே அவருக்குக் கரகோஷம் எழும்ப கூடியிருந்த சிற்றிளங்குமரர்கள் மத்தியிலிருந்து சூரியனைப் போலப் ப்ரகாசமான, தேஜசான ஒரு வீரன் எழுந்தான்.
“ இந்தக் கிளியின் ஒரு கண் என்ன , இரு கண்களையும் என்னால் குறிவைத்து அடிக்கமுடியும். “ என்று போட்டி மேடையில் ஏற முயன்றான்.
“நில்.. அரசிளங்குமரர்களுடன் போட்டியிட நீ தகுதியானவந்தானா. எந்த நாட்டு இளவரசன் நீ. ? “ என்று தடுத்து நிறுத்தினார் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களின் குருவான துரோணர்.
திகைத்து நின்றான் அந்த வீரன். இழிவரல் கொண்டு இறங்க முற்பட்டான். அப்போது அவனைத் தடுத்து நிறுத்தியது ஒரு குரல். அக்குரலுக்குச் சொந்தக்காரன் துரியோதனன்.

“இறங்காதே. அங்கேயே நில். க்ஷத்திரியர்களுடன் பொருத நீயும் க்ஷத்திரியனாய் இருக்கவேண்டும் என்பது மரபு. எனவே உன் வீரத்தில் நம்பிக்கை கொண்டு உன்னை அங்கதேசத்து அரசனாக்குகிறேன். “ உடனடியாக க்ரீடத்தைக் கொண்டுவரச் செய்து அங்கேயே அவனுக்குப் பட்டாபிஷேகம் நடத்தி அங்கதேசத்து அரசனாக்கினான் துரியோதனன்.
ஆமாம் சிம்மாசனம்தான் கிடைத்துவிட்டதே என்று எண்ணுகிறீர்கள்தானே. அவனுக்கு நியாயமாகச் சேர வேண்டியது அங்கதேசத்து சிம்மாசனமல்ல.. மாபெரும் பெருமையுடைய, சர்வ வல்லமையுடைய குருவம்சத்தின் பெருமையான அஸ்தினாபுர சிம்மாசனம்.
அதைப் பற்றிப் பின்னாளில் தெரிந்திருந்தும் தன் உரிமைகளை நிலைநாட்டாது செஞ்சோற்றுக் கடன் கழித்தானே அந்தக் கர்ணன் அவனது சிறப்புகள் சொல்லில் அடங்கா. குந்தியும் கிருஷ்ணரும்அவனைப் பற்றிய உண்மை உரைத்தபோதும்  செய்நன்றிக்காக வாழ்ந்த அந்த உத்தமன் பட்டபாடும் எழுத்தில் அடங்கா. பிறப்பிலிருந்து இறப்பு வரை எல்லாத் திசையிலும் இருந்து அவன் பட்ட அவமானங்களைப் பார்த்தால் கல்லும் கண்ணீர் விடும்.
ஒரு கொடை வள்ளலாக, செஞ்சோற்றுக் கடன் தீர்த்தவராகத்தான் இவரை அறிந்திருப்பீர்கள். இவரின் சிறப்பைப் பற்றி மேலும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
குந்திநாட்டு இளவரசி குந்தி செய்த பணிவிடையால் மகிழ்ந்து துர்வாச முனிவர் ஒரு வரம் அளிக்கிறார். திருமணம் ஆகாத குந்தி அதை உடனடியாகப் பரிசோதிக்க விரும்பி ஒரு குளக்கரையில் சூரியனை நினைத்து அந்த மந்திரத்தை உச்சரிக்க சூரிய பகவான் உடனே தோன்றி கர்ணகுண்டலத்தோடு இருந்த தேஜசான மகனை அளித்துச் செல்கிறார்.
தந்த நிறமும், கொள்ளை கொள்ளும் சிரிப்பும், சுருட்டைக் கேசமும், குட்டிவிழிகளுமாய் சுட்டித்தனத்தோடு தன் பிஞ்சுக் கை கால்களை அசைத்துக் கூத்தாடுகிறது குழந்தை. வெல்லக்கட்டிபோல் பிறந்த முதல் மகன் தாய்க்குத்தலைமகன். குழந்தையை ரசித்தாலும் தன் அவசரத்தை எண்ணிக் கலங்குகிறாள் குந்தி.
”திருமணம் ஆகுமுன்னே குழந்தையா.. ” திடுக்கிட்ட குந்தி தன் தோழி தத்ரி துணையுடன் ஒரு கூடையில் வைத்து கங்கையில் நதியின் போக்கில் விட்டாள். யாராவது இக்குழந்தையை எடுத்துக் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் பிரிந்து சென்றாள். தாய்க்கும் வேண்டாத சேயாக அந்தக் கர்ணன் கூடையில் பயணித்தான்.
”ஏதோ கூடை மிதந்து வருகிறதே. அதைப் பிடிங்க “ என்று ராதா சொல்லவும் அதிரதன் அக்கூடையைப் பிடித்து இழுத்துத் திறந்தால்..
“என்னது இது குழந்தை..” தங்கக்கட்டிபோல இருக்கும் இக்குழந்தையை எப்படித்தான் விட மனம் வந்ததோ என்று எடுத்துச்சென்று வளர்க்கிறார்கள்.  
குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான். அத்தோடு தானே முயன்று அனைத்து வித்தைகளையும் பயின்றான். அவனை குரு துரோணர் ஒதுக்க தானே அனைத்தும் பயின்றான்.  
அப்போதுதான் இளையர்களுக்கான போட்டியில் துரியோதனன் வழங்கிய அங்கதேசத்தின் அதிபதியாக ஒரு அங்கீகாரம் கிடைத்தது. அந்த நன்றிக் கடனுக்காக கர்ணன் பெற்றதும் கற்றதும் அதிகம்.
அங்கதேசத்தின் அரசன் மாபெரும் வள்ளல் எனப் பேரெடுத்தான். வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்பது அவனுக்குப் பொருந்தும். அதைக் காரணமாகக் கொண்டு இந்திரன் ஒரு தந்திரம் செய்தான். இந்திரன் மகன் அர்ஜுனன் என்பதால் தன் மகனோடு கர்ணன் போட்டிக்கு வந்துவிடக்கூடாது என்று கர்ணனின் அங்கத்தைச் சுற்றியிருந்த கவசத்தைத் தானமாகக் கேட்டான். அதுவும் எப்படி.. ஒரு வயதான மனிதன் உருவத்தில் வந்து கேட்டான்.
தினப்படி தன்னுடைய தந்தையான சூரியனை வந்தனை செய்வது கர்ணனின் வழக்கம். அந்தநேரத்தில் யார் எதைக் கேட்டாலும் கொடுப்பதைத் தன் பழக்கமாக வைத்திருந்தான். வந்திருப்பது இந்திரன் எனத் தந்தை சூரியன் எச்சரித்தும் மனம் இரங்கிய அங்கதேசத்து அரசன் தன் அங்கத்தைச் சுற்றியிருந்த கவசத்தையும் குண்டலங்களையும் பிய்த்துக் கொடுத்தான்.
அத்தோடு அடங்கிற்றா என்றால் இல்லை. கிருஷ்ணன் கர்ணனின் பிறப்பு உண்மைகளைக் கூறிப் பாண்டவர் பக்கம் போரிட அழைக்கும்போதும் மறுத்து செஞ்சோற்றுக்கடன் தீர்ப்பதே தன் கடன் என்றான்.  
அதன் பின் தாயான குந்தி தேவி குருக்ஷேத்திரப்போர் தொடங்கியதும் அவனைக் காண வந்தாள்.
“கௌந்தேயா..” என அழைத்தாள். தாயின் அழைப்பில் மனம் உருகியது அவனுக்கு. ஆனால் அன்னையோ அவனை நாடி வரவில்லை. அவன் பாண்டவர் பக்கம் சேரவேண்டும் எனவும், அப்படி இல்லாவிட்டாலும் அவர்களுக்கு எதிராக எந்த பாணத்தையும் ஒருமுறைக்குமேல் பயன்படுத்தக்கூடாது எனவும், அர்ஜுனன் தவிர பாண்டவர் யாரையும் கொல்லக்கூடாது எனவும் கேட்கவே வந்திருந்தாள்.
உண்மையை உணர்ந்துகொண்ட கர்ணன் சொன்னார். “ அன்னையே. நான் கௌந்தேயன் அல்ல. ராதேயன் . நீங்கள் கவலற்க. நான் எந்த பாணத்தையும் ஒருமுறைக்குமேல் ப்ரயோகிக்க மாட்டேன், அர்ஜுனன் தவிர வேறு பாண்டவர் யாரையும் கொல்லமாட்டேன். “ என உறுதிகொடுத்தான்.
ங்க வங்க கலிங்க கேகய, அஸ்தினாபுர தேசத்தின் அரசிளங்குமரர்கள் கூடியிருந்தார்கள். திரௌபதியின் சுயம்வரம். அங்கே ஐம்பத்தாறு தேசத்து ராஜாக்களில் கர்ணனும் போட்டியிடச் சென்றபோது திரௌபதி கர்ணனைத் தேரோட்டியின் மகன் அரசர்களோடு போட்டியிட சமதையானவர் இல்லை என அவமானப்படுத்துகிறாள்.
மகாவீரனான கர்ணன் குருக்ஷேத்திரப் போரில் போரிடச் சென்றபோது பீஷ்மர் , அர்ஜுனனுக்கு இணையான ஒரே வீரன் என்ற காரணத்தால் அவனை பீஷ்மர் தவிர்க்க விரும்புகிறார். அவர் சொன்ன ஒருசொல் அவனைப் போர்க்களத்தை எட்டவிடாமல் செய்கிறது. ”அர்த்தரதன்” என்று பீஷ்மர் கூறிய அச்சொல்லுக்கு அர்த்தம் அரைஅரைத்தேர்வீரன் என்பதாகும்.
பத்தாம் நாள் பீஷ்மர் வீழ்ந்தபின்னே அவனுக்குப் போர்க்களம் செல்லும் வாய்ப்புக் கிட்டுகிறது. குருஷேத்திரப் போரிலும் கர்ணனின் ஒன்பது மகன்களும் கௌரவ சேனைக்காகப் போரிட்டு மடிகிறார்கள்.  
பதினாறாம் நாள் போரில் பாண்டவர்கள் அனைவரையும் கொல்லும் வாய்ப்புக் கிடைத்தும் தாய் குந்திக்கு அளித்த வரத்தின்படிக் கொல்லாமல் விடுகிறான். பதினேழாம் நாள் அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் உக்கிரமான போர். பரசுராமரிடம் கற்றுக் கொண்ட வித்தைகள் அனைத்தும் அவர் கொடுத்த சாபத்தால் மறந்துவிடுகிறது கர்ணனுக்கு.
கிருஷ்ணன் தேரோட்டியாக வந்து அர்ஜுனனின் தேரைக் கீழே அழுத்தியதால் அர்ஜுனன் மீது ஒருமுறையே கர்ணன் எய்த நாகாஸ்திரம் குறி தவறிப் போகிறது. ஆனால் நிராயுதபாணியாக அமிழ்ந்துவிட்ட தன் தேர்ச்சக்கரத்தைக் கர்ணன் மேலே எடுக்கும் நேரம் அர்ஜுனனின் அம்பு கர்ணனைத் தாக்குகிறது.
அதன் பின்னும் கர்ணனின் உயிர் போகவில்லை. அந்த சமயத்திலும் தானம் கேட்க கிழட்டு வேதியரின் உருவில் வந்து அவன் செய்த புண்ணியம் அனைத்தையும் தாரை வார்க்கக் கோருகிறார் கிருஷ்ணர்.
எல்லா இன்னல்களிலும் போராடிப் போராடி அந்த நல்லுள்ளம் நைந்துவிடுகிறது. என்ன கொடுமை. தெய்வமே மனிதனிடம் யாசிப்பது கொடுமையா. அல்லது அந்த நிராதரவான வீரனிடம் மிச்சமிருக்கும் புண்ணியங்களையும் பறித்தது கொடுமையா. தன் புண்ணியங்களையும் தாரை வார்க்கிறார் அந்தக் கர்ணமஹாராஜா.
எல்லாம் கர்மவினைப்பயன் மாதிரி நடந்து முடிகிறது. அவர் அழிந்த அடுத்த நாளே, அதாவது குருக்ஷேத்திரப் போரின் பதினெட்டாம் நாளே கௌரவர்கள் அழிந்து போக போர் முடிவுக்கு வருகிறது. குந்தி அப்போது கர்ணன் அவர்கள் சகோதரன் என்று பாண்டவர்களிடம் அறிவிக்கிறார். இதைக்கேட்டுப் பாண்டவர்கள் அதிர்கிறார்கள்.

அப்போதுதான் ஒரு உண்மை அனைவருக்கும் புலப்படுகிறது அத்தினாபுரத்தின் சிம்மாசனத்துக்கு உரிய முதல் அரசன் அவன் தான் என்று.  சிம்மாசனம் மறுக்கப்பட்ட அப்பேரரசன்  அனைத்து உண்மைகளும் தெரிந்தும் விட்டுக் கொடுத்த நற்பண்பும்  நல்லுள்ளமும் அவனது கொடைச் சிறப்பும் உலகம் உள்ளளவும் பேசப்படும் என்பது தெளிவு.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 18. 5. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார். 


டிஸ்கி :- ராமனின் பெரியப்பா என்ற இதிகாச புராணக் கதை பற்றிப் பாராட்டிய வேலூர் வாசகர் சரவணன் அவர்களுக்கு நன்றி. 

3 கருத்துகள் :

ஸ்ரீராம். சொன்னது…

சுவாரஸ்யம்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

படித்தேன். அருமையாக இருந்தது.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஸ்ரீராம்

நன்றி ஜம்பு சார்


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...