எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

சித்திரைக் கவிதைகள் ( குழந்தைக் கவிதைகள் )



1. முத்தங்களைப் பொறிக்கிறது குழந்தை
தன் எச்சிலில் பெயரெழுதிய
சிற்பமாக்குகிறது என்னை.


2. தாப்பூ தாமரைப் பூவாய்
குழந்தை கை விரியும் போதெல்லாம்
கூம்பிக் குனிகிறது குளத்துத் தாமரை

3. வாளிநீரில் நிலவுமீனைப்
பிடித்துப் போடுகிறாள் தாய்
குழந்தை அடிக்கும் நீரில்
வெள்ளிச் செதிலாய்ச் சிதறுகிறது நிலவு.

4. சொட்டு முத்தங்களால்
வாளியை நிரப்புகிறது
குட்டி மழை.

5. முளைவிட்ட தாவரமாய்
பூமுகம் உயர்த்திப் பார்க்கிறது
தலை நின்ற குழந்தை.

6. குழந்தை புரண்டு படுக்கும்போதெல்லாம்
கண்டத்திட்டுக்களாய் இடம்பெயர்கின்றன
தலையணைத் திண்டுகள்.

7. மெட்டி ஒலியோடு தாயும்
தண்டை ஒலியோடு குழந்தையும்
நடனநடைபயில்கிறார்கள் கைபிடித்து.

8. அடிபட்டு விழுந்தாலும்
எழுந்துவிடலாமெனக் கற்கிறது
நடைபயிலும் குழந்தை.

9. வாக்கரில் காலுந்தி
வீடுமுழுதும் உலாவருகிறது
இளம்குழந்தைச் சூரியன்.

10. பிடித்தவர்களிடம் பேசுவதற்கு
முகாரி ராகத்தை
முகாந்திரமாக்குகிறது குழந்தை.

11. அம்மாவின் முந்தானை
பிடித்துச் சுற்றுகிறது குழந்தை
பூமியைச் சுற்றும் நிலவாய்.

12. . பால்யத்தில் தன்னைத் தொலைத்தவள்
திருமணத்தில் தன்னைத் தொலைக்காதிருக்க
ப்ரார்த்தித்துக் கொண்டது பொம்மை..

13. யார் தொட்டாலும்
அதிகமாய் அணைக்கிறாள்
குட்டிம்மா தன் பொம்மையை ..
அடிக்கடி யாராவது
தொட வேண்டும் என
ஆசைப்படுகிறது பொம்மை.

14. கார்ட்டூன் சேனலின்
பொம்மைகள் வீட்டுள் குதிக்கின்றன
ரிமோட்டில் விளையாடும்
குழந்தையின் கைகோர்த்து..

15. குழந்தை சிரிக்கும்போதெல்லாம்
சிரிக்க ஆசைப்படுகிறது
காற்றிசைச் சிணுங்கி..

16.வாநீர் வடியப்
புன்னகைக்கிறது குழந்தை
தேன்துளி வழியும் பூவாய்..

17. கண்ணாமூச்சி ஆடும்போதெல்லாம்
குழந்தையிடம் பிடித்துக் கொடுக்கிறது
கை நழுவி விழும் முந்தானை..

18 . பொக்கை வாய்ச்சிரிப்பு
இரட்டை இதழ் ரோஜாவாய்
விரிகிறது குட்டி முகத்தில்

19. கை பிடித்துத் தொங்கி கண்விரித்துச்
செல்லம் கொஞ்சும் போதெல்லாம்
குழந்தைப் பருவம் புகுகிறாள்
பதின் பருவ மகள்.

20. அம்மா அப்பா கைகோர்த்து
நடந்து வரும் பாணியில்
குழந்தைகளின் பிரதிபலிப்பு..
பெருவயதுக் குழந்தைகள்..

21. கோடைத் திருவிழாவுக்கு
எங்கும் போவதில்லை
அம்மாவும் அப்பாவும்
வீட்டுக்குள் குட்டி நந்தவனம்
கொஞ்சிக் கொஞ்சிக்
களைப்பாறுகிறார்கள்
குழந்தையின் பூமடியில்..

22. கருப்பட்டிக் கட்டியாய்
முதுகு ஊஞ்சலில்
கசியும் சிரிப்போடு
வெய்யிலில் பயணிக்கின்றது
ஊசி பாசிவிற்பவளின் குழந்தை.

23 . ராட்டினம், பலூன், பீப்பீ ஊதல்
எல்லாம் போட்டு
தேரைக் காட்டி
இழுத்து விளையாடக் கேட்கிறது
கைப்பிடியில் திமிறும் குழந்தை.

24. தோட்டத்தில் ஓடும் ஒடக்கானைத்
தோழனாக்கி கை நீட்டிப்
பேசிக்கொண்டிருக்கிறது குழந்தை..
காதுகொடுத்து வால்தூக்கிக்
கண் உருட்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறது அணில்..

25. தொலைக்காட்சியில் வரும்
பொம்மை வில் கேட்டு
தரையில் விழுந்து அடம்பிடிக்கிறது குழந்தை..
அடுத்து வரும் அட்டைக் கத்தி பார்த்து
அதை மறந்து இதைக் கேட்கிறது..

26. கழுத்துப் பாசி, பட்டுக் கயிறு,
வசம்பு வளையம், மணித்தண்டை
ரப்பர் வளையல், கிருஷ்ணன் கொண்டை
வாசனைப் பொடி, மருந்துக் குப்பி
சிதறிக் கிடந்தாலும் மணக்கிறது
வீடெங்கும் குழந்தை வாசம் சுமந்து.

டிஸ்கி :- இந்தக் கவிதைகள் மே 1 - 15 , புதிய தரிசனத்தில் வெளியானவை.

3 கருத்துகள்:

  1. சித்திரைக் கவிதைகள் என்று தலைப்பு சொன்னாலும் கூட ஒவ்வொன்றும் முத்திரைக் கவிதைகள் தேனக்கா. மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  3. நன்றி கணேஷ் சகோ

    நன்றி யாழ்பாவண்ணன்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...