எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

சதுரங்க வேட்டை. சினிமா விமர்சனம்.

பணம்.. அச்சடித்த ஆயுதம்.

லேசாக THE WOLF OF WALL STREET  ஞாபகம் அவ்வப்போது அலைமோதியது. அதிலும் இதிலும் பணம் ஒன்றே வேதம். மதம் பிடித்தது போல மனிதர்களை ஆட்டி வைக்கும் பெருஞ்சுழல்.

இதுதான் சுற்றிச் சுற்றி மனிதர்களை வேட்டையாடும் ஆயுதம். ஆசை பேராசை கொண்டு துரத்த வைக்கும் பொறி.

சதுரங்க விளையாட்டில் ராஜாவுக்கு ஆபத்து நேரும்போது ராணி வந்து காப்பாற்றுவாள். ராணிக்குத்தான் எண்ட்லெஸ் பவர். எல்லாப் பக்கமும் போகலாம். இதில் அன்பு ராணியான இஷாரா தன்னுடைய அன்பு வியூகங்களால் தன்னையும் தவறான வழியில் சம்பாதிக்கும் தன் கணவனையும் அதிலிருந்து காப்பாற்றிக் கொள்கிறாள்.ஒளிப்பதிவாளர் நட்ராஜ் சதுரங்க வேட்டையின் ஹீரோ. ஒரு சாயலுக்குப் பார்த்தால் கிருஷ்ணன் பஞ்சுவோ என்ற பிரம்மையைத் தோற்றுவித்தார். இஷாராவையும் பார்த்து அமலாபாலோ என எண்ணியிருந்தேன். கூகுள் பண்ணித்தான் இருவர் பேரையும் கண்டுபிடித்தேன்.

அது ஏன் இவ்வளவு நல்ல படத்தில் பேர் எல்லாம் கடைசி நிமிடத்தில் போடுகிறார்களோ. என் மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டில்ஸ் ரவியின் பேரையும் சீட்டை விட்டு இறங்கி நடக்கும்போதுதான் பார்த்தேன்.

சென்னையில் எக்ஸ்ப்ரஸ் வேயில் இந்தப் படம் பார்த்தோம். என் பையனின் தெரிவு. தொலைபேசியில் சொல்லிப் பார்க்கச் சொன்னான். மிக அருமையான மெசேஜை சொன்ன படம்.

ஆரம்ப விறுவிறுப்புக் குறையாமல் கடைசி வரை இருந்தது. இசையும் பாடல்களும் ஒளிப்பதிவும் டைரக்‌ஷனும் எடிட்டிங்கும் அற்புதம். இதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை.

டைரக்டர் வினோதின் வசனங்கள் ஒவ்வொன்றும் நறுக் & சுருக். மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங். ஈமு கோழி, எம் எல் எம்,  (இன்னும்  தேக்கு மரம், மணி செயின், காந்தப் படுக்கை , வெள்ளைமண் சோப்  எல்லாமும் இருக்கு ). பத்தியும் , தங்க வேட்டையில் மனிதர்கள் ஒன்றுக்குப் பாதியாகத் தருகிறார்கள் என்றதும் கடையை அர்த்த ராத்திரியில் இருந்து ரவுண்டு கட்டி நானே ஏமாறுகிறேன் என்று வலிய வந்து பணம் கொடுப்பதும் இன்னும் எல்லா ஊர்களிலும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஒருவர் மூன்று பேரைச் சேர்த்துவிடுவது ( ஏமாற்றி ) என்பதும் இதே போல கூட்டங்களில் கலந்துகொள்ள அழைப்பும் வந்தவண்ணம் இருக்கிறது.

கல்லூரி பயிலும் வயதிலும் ரிட்டயர்மெண்ட் வயதிலும் இருக்கும் ஆண்களைப் பணத்தாசை காட்டிப் பொறிவைத்துப் பிடிப்பது ஒரு வகை என்றால் மத்திய வர்க்க இல்லத்தரசிகளையும் இதுபோன்ற பிசினஸ்களில் ஈர்க்கப் பாடுபடுவார்கள். இதில் சொல்வது போல சில்வர்,கோல்ட், டயமண்ட் என்று விதம் விதமான உயர்வு தந்து கடைசியில் சிக்கி சிக்குப்பட வேண்டியதுதான்.

தன் தாயின் இறப்பைப் பற்றியும் வாழ்க்கையின் அவலங்கள் பற்றியும் பொன்வண்ணனிடம் ஹீரோ காந்தி பாபு -- நட்ராஜ் கூறும் இடம் பதறவைத்தது. இயல்பான நடிப்பு. யதார்த்தம். காதல் காட்சிகளில் நாசுக்கு. ஹீரோயினும் அப்படியே.உங்க அம்மாவை யாராவது காப்பாத்தி இருந்தா நீங்க இப்பிடி ஆகி இருக்க மாட்டீங்கள்ல என அவர் கேட்கும் இடம் டச்சிங். ஆனால் அவருக்குத்தான் குங்குமத்தைக் கேரள பாணி சந்தனம் போல வைத்திருக்கிறார்கள். திடீரென்று மலையாளப் பெண்ணோ என்று தோன்ற வைக்கிறது. ( தமிழர்களுக்கு மலையாளிகளைப் பிடிக்கம் என்ற சைக்காலஜியாலோ என்னவோ. :) :) :) அவர் உண்மையில் கேரளப் பெண்தானே.

பொன்வண்ணன் என்றைக்காவது பணம் மட்டுமே முக்கியமில்லை என்பதை நீ உணர்வாய் அப்ப எதுவுமே மிஞ்சி இருக்காது என்பார். அதுக்குள்ள இத எல்லாம் விட்டு விடு என்பது போல ஒரு அர்த்தமுள்ள வசனம்.

 இளவரசனின் கண்களில் பணத்தாசை துளிர்விடுவதும், பாம்பை மனைவி அடித்ததும் கணவர் அடிக்க அவர் விஜயை அடிச்சிட்டேனே எனப் புலம்ப மகன் நீங்க ரெண்டு பேரும் லூசா என சலம்புவதும் செம செம.. :)

தமிழ் பேசும் வில்லனும், திலகனாக நடித்திருக்கும் ராமச்சந்திரனும் நல்ல இயல்பான நடிப்பு. தப்பு செய்தா தண்டனை அடைஞ்சே ஆகணும். எவ்வளவுதான் படம் முழுக்க பணம் பண்ணுவது குறித்தான நேர்மையில்லாத  வெவ்வேறு கருத்துக்களும் சிந்தனைகளும் வந்தாலும்  முடிவில் உண்மைக்கு  நேர்மைக்கு அடிபணியத்தான்  வேண்டும் என்று கூறிய கதை.. இதைப் பார்த்து இன்னும் யாரும் ஏமாறாமல் இருந்தால் நலம். ஏதேனும் ஒரு விதத்தில் அநேகம் பேர்  ஏமாற்றப்பட்டவர்களாகவும், சிலர் அதைப் பற்றி அறிந்தவர்களாகவும் இருக்கவும் கூடும். ஒரு சில இடங்களில் மிக மிக லேசான தொய்வு இருக்கிறது. இருந்தாலும் மக்களை நல்லா எச்சரிக்கை செய்த படம்.

கமல், ரஜனிக்கான ஒரு கதையம்சம் உள்ள படத்தை நடராஜ் சிறப்பாகச் செய்துள்ளார். மிக மிக நல்ல தன்மையும் எளிய குணங்களும் கொண்ட அழகுப் பெண்ணாக இஷாராவும் அற்புதம். கெமிஸ்ட்ரி என்று ஓவராக இல்லாவிட்டாலும் இவர்கள் இருவரின் உரையாடலும் அந்யோன்யமும் அழகு.  இந்தப் பாடல் என் மனம் கவர்ந்த ஒன்று. இதில் இருக்கும் இசையும் காட்சியமைப்பும். இயல்புத்தன்மையும் அழகு.ஏமாத்துறவன் ஏமாந்து போவான். பேராசை பெருநஷ்டம். உழைப்பே உயர்வு தரும். நிம்மதி தரும் என்று சொன்ன படம். ரொம்ப நாட்களுக்குப் பிறகு ஒரு நல்ல படம் பார்த்த திருப்தி. குறுக்கு வழியில் உயர்ந்திடலாம் என எண்ணும் மனிதர்கள் மட்டுமல்ல.. எல்லா மக்களும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம்.

கடைசி கடைசியாக மனதில் ரீங்கரித்த வார்த்தைகள்.. வலிமையான வார்த்தைகள் இவைதான்..

.. மத்தவங்ககிட்ட அன்பா இருக்கணும். அன்பை உணர வைக்கணும்.

மிக மிக தைரியத்தோடு நல்லதொரு படம் தந்த மனோபாலா, லிங்கு சாமி, நட்ராஜ், இஷாரா,வினோத்,  ஷான் ரோல்டன், வெங்கடேஷ் ஆகியோருக்கும் படக்குழுவுக்கும் வாழ்த்துகள்.

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. எந்திரன் .. THE ROBOT.. எனது பார்வையில்.

2. ஸ்மைலியும் க்ளாடியும் கல்கியும்.


 


 


9 கருத்துகள்:

 1. பார்க்கணும்.எல்லோரும் நல்லாயிருக்குன்னு சொல்றாங்க.

  பதிலளிநீக்கு
 2. உண்மையிலேயே நல்ல படம். மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதற்காக வரி விலக்கு அளித்தாலும் தப்பில்லை.

  பதிலளிநீக்கு
 3. சினிமா விமர்சனமும் சூப்பராப் பண்றீங்க அக்கா. ரசிச்ச விஷயங்களை அழகா எடுத்துச் சொல்லி பாக்கணும்கற எண்ணத்தை தூண்டிட்டிங்க. அனேகமா எல்லா சைடிலருந்தும் பாராட்டுக்களை பெற்ற படம்ங்கறதால நிச்சயம் பாக்கணும்.

  பதிலளிநீக்கு
 4. சிறந்த ஆய்வும் கருத்தும்
  தொடருங்கள்

  பாபுனையும் ஆற்றல் இருப்பின் போட்டிக்கு வாரும்!
  http://paapunaya.blogspot.com/2014/08/blog-post.html

  பதிலளிநீக்கு
 5. நானும் பார்த்தேன் . உங்கள் கருத்துக்கள் எனக்குள்ளும் தோன்றியது.

  பதிலளிநீக்கு
 6. நன்றி மொஹைதீன்

  நன்றி அமுதா

  நன்றி உமேஷ். நிச்சயம் வரிவிலக்கு அளிக்கலாம். நல்ல கருத்து. சொன்னதுக்கு தாங்க்ஸ்

  நன்றி கணேஷ்

  நன்றி யாழ்பாவண்ணன்

  நன்றி எழில்.

  பதிலளிநீக்கு
 7. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு
 8. //பொன்வண்ணன் என்றைக்காவது பணம் மட்டுமே முக்கியமில்லை என்பதை நீ உணர்வாய் அப்ப எதுவுமே மிஞ்சி இருக்காது என்பார். அதுக்குள்ள இத எல்லாம் விட்டு விடு என்பது போல ஒரு அர்த்தமுள்ள வசனம். //

  பணத்தை உருவாக்குவதும் மனிதன் அதனால் அழிவதும் மனிதன்...

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...