காரைக்குடி அழகப்பா
பல்கலைக்கழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் அழகப்பா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பண்பாட்டு
மையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமத்தின் தமிழ்வளர்ச்சிக் குழுமம் இணைந்து நடத்தும்
பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது.
இதில் 21-ம் நூற்றாண்டில்
தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் நடக்கப் போகும் கருத்தரங்கத்துக்கு பின்வரும்
21 தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரை அனுப்ப விழைபவர்கள் அனுப்பலாம்.
இக்கட்டுரை ஆய்வுக்காக
நான் தேர்ந்தெடுத்த தலைப்பு மின்னிதழ்கள் பற்றியது.
"தமிழ் வளர்ச்சியில்
மின்னிதழ்கள். "
எனவே மின்னிதழ்கள்,
இணைய இதழ்கள் பற்றி முழுமையான விபரம் சேகரித்துக்கொண்டிருக்கிறேன்.
உங்கள் மின்னிதழ்
ஆரம்பிக்கப்பட்டது எப்போது ? ஆரம்பித்தது யார், எந்த வருடம், எதை முக்கியத்துவப்படுத்தி
இது செயல்படுகிறது , இதன் நோக்கம், தமிழ் வளர்ச்சியில் இதன் பங்கு, இதுவரை இதன் ஆசிரியராக,
நிர்வாகியாக செயல்பட்டு வருபவர் யார், மின்னிதழ் நடத்துவதில் மேற்கொண்ட சங்கடங்கள்,
இடையூறுகள், அவற்றை எப்படிக் களைந்தீர்கள்,
இம்மின்னிதழ் மூலம் அடைந்த சாதனைகள், விருதுகள், சிறப்புத் தகவல்களை, சிறப்பிதழ்கள்,
பற்றிப் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறேன்
/////திண்ணை, உயிரோசை,
கீற்று , வார்ப்பு, வல்லினம்,
வல்லமை,அதீதம், முத்துக்
கமலம், வலைச்சரம், சுவடு, பூவரசி,
தகிதா, புதிய “ழ”
, அவள் பக்கம், தென்றல், காற்று
வெளி, பண்ணாகம், லங்காஸ்ரீ,
சொல்வனம். அமீரத்தின்
தமிழ்த் தேர், தமிழ்
ரைட்டர்ஸ் போர்ட்டல்,
கவிசூரியன்.////
ஏ 4 தாளில்
நான்கு பக்கமே வரும் கட்டுரை என்பதால் சுருக்கி அனுப்பவேண்டும். ஆனால் என்
வலைத்தளத்தில் ஒவ்வொரு மின்னிதழ் பற்றியும் ஆகஸ்ட் மாதத்தில் இருந்து விரிவான
தகவல்கள் வெளியாகும்.
எனவே உங்கள்
மின்னிதழ்கள் பற்றிய விரிவான தகவல்களை எனக்கு honeylaksh@gmail.com என்ற ஈமெயில்
ஐடிக்கு அனுப்பி உதவ வேண்டுகிறேன். வேறு மின்னிதழ்கள் பற்றியும் தெரிந்தால் அதன்
ஈமெயில் ஐடி , விபரங்கள் அனுப்பி உதவ வேண்டுகிறேன்.
எல்லா மின்னிதழ்கள்
பற்றியும் முழுமையான ஒரு தொகுப்பாகஇது அமையவேண்டும் என்பது எனது பேரவா.
வரும் ஜூலை 15
க்குள் அனுப்ப வேண்டும் என்பதால் ஜூலை 10 ஆம் தேதிக்குள் உங்கள் மின்னிதழ் விபரங்கள்
எனக்குக் கிடைத்தால் நலம்.
அன்பும்
நன்றியும்,
தேனம்மைலெக்ஷ்மணன்.
என எல்லா மின்னிதழ்களுக்கும் நான் மின்னஞ்சல் அனுப்பியும்
நான்கைந்து மின்னிதழ்களில் இருந்து மட்டுமே பதில் கிடைத்தன. எனவே அவற்றை வைத்து
என் ஆய்வை முடிக்கமுடியாது என்பதால் என் வலைத்தளத்தில் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.
முதலில் அனுப்பிய
முத்துக்கமலம் இணைய இதழ் ஆசிரியருக்கு நன்றிகள்.
முத்துக்கமலம் இணைய இதழ்
சென்னையில் இருப்பவர்களில் ஓரிருவர் மட்டும் தமிழ் இணைய இதழ் தொடங்கிய
காலத்தில், சென்னைக்கு வெளியில் தேனியிலிருந்து மு. சுப்பிரமணி முதன்
முதலாகக் கடந்த 01-06- 2006 முதல் முத்துக்கமலம் எனும் பெயரில் தமிழ் இணைய
இதழ் (www.muthukamalam.com) ஒன்றினைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்து
வருகிறார். இதன் வெளியீட்டாளராக உ. தாமரைச்செல்வி இருக்கிறார். மின்னிதழ்
குறித்துப் பலரும் அறியாத நிலையில், இணையத்தில் கிடைக்கும் பல்வேறு
மின்னஞ்சல் முகவரிகளுக்கு ‘முத்துக்கமலம்’ இணைய இதழின் ஒவ்வொரு
புதுப்பித்தலுக்கும், புதுப்பித்தலில் இடம் பெற்றிருக்கும் படைப்புகள் குறித்த
தகவல்களை அனுப்பி அதனைப் பார்வையிடச் செய்வதற்காக ஐந்தாண்டுகள் வரை
தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆங்கில மொழியிலான
இணையதளங்களைப் போல தமிழ் இணையதளங்களுக்கு விளம்பர வருவாய்
எதுவும் கிடைக்காத நிலையிலும், விடாமுயற்சியுடன் தொடர்ந்து நடத்தப் பெற்று
வருகிறது. முத்துக்கமலம் படைப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் பல்வேறு
முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, 12 ஆம் ஆண்டு தொடக்கம் முதல் ஒவ்வொரு
புதுப்பித்தலிலும் இடம் பெறும் சிறுகதை, கட்டுரை, கவிதை ஆகிய தலைப்புகளிலான
படைப்புகளில் ஒன்று தேர்வு செய்யப்பட்டு, அதனை எழுதியவருக்கு நூல் ஒன்று
பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. பிற தலைப்புகளிலான படைப்புகளுக்கும் நூல்
அல்லது பயன்படுத்தக்கூடிய பொருள் பரிசு அளிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு
வருகின்றன.