எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 28 ஜூன், 2017

கம்பனில் இயற்கை – ஒரு பார்வை.



கம்பனில் இயற்கை – ஒரு பார்வை.

காரைக்குடி கம்பன் கழகமும் அந்தமான் தமிழ் இலக்கிய மன்றமும் இணைந்து நடத்திய கம்பராமாயண மூன்றாவது உலகத்தமிழ் ஆய்வுக் கருத்தரங்கக் கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. வருடா வருடம் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கட்டுரைகள் பேராளர்களால் ஆக்கப்பட்டு காரைக்குடி கம்பன் கழகத்தாரால் புத்தகமாக்கம் பெறுகின்றன. ஐந்தாவது நூல் இது. இச்சீரிய முயற்சிக்காக எனது பாராட்டுகளும் உரித்தாகட்டும். 

இந்நூலில் மொத்தம் 78 பேராளர்கள் அளித்த ஆய்வுக் கட்டுரைகள் உள்ளன. காவியம் பாடிய கம்பன் பற்றி 76 பேரும், ஏரெழுபது பாடிய கம்பன் பற்றி இருவரும் கட்டுரை யாத்திருக்கிறார்கள்.

இயற்கையே இறைநிலை என்கிறார் தமது கட்டுரையில் திரு கம்பனடிசூடி அவர்கள். அதை நிறுவிய விதம் அருமை. கண்ணுக்குத் தெரியாத இயற்கை ( உலகங்கள் பற்றி ) மீ கண்ணன் அவர்களும், கம்பனில் இயற்கை என்ற சொல்லாட்சி இருக்கும் இடங்கள் பற்றி முனைவர் வீ செல்வபெருமாளும் இயம்பி இருப்பதும் சிறப்பு.

அந்தமான் தமிழ் இலக்கிய மன்றத் தலைவர் தி.நா. கிருட்டிணமூர்த்தி அவர்கள்  சுனாமி எதிர்ப்புச் சக்தி பற்றிக் கூறும்போது யுத்த காண்டத்தில் ஊழிக்காலத்திலும் நிலைபெற்று விளங்கும் தேர் பற்றிக் குறிப்பிடுகிறார்.

பெரும்பாலான கட்டுரைகள் நர்மதை,கோதாவரி, சுவணகம், பெண்ணை, பொருணை, பம்பை, சரயூ , கங்கை போன்ற நதிகளின் சிறப்பு மற்றும் செழிப்புப் பற்றியும், மழை மற்றும் நீர்வளம் பற்றியுமே எழுதப்பட்டிருக்கின்றன. இன்றைய தேவை என்பதால் இருக்குமோ என்னவோ J வெள்ளத்தின் வர்ணனையும் இயற்கைச் செல்வத்தின் வர்ணனையும் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. முனைவர் கு பாலுசாமி இம்மூன்று நதிகளைப் பற்றியும் பரமேஸ்வரி ஆறு நதிகளைப் பற்றியும் ஒப்புமைப்படுத்தியுள்ளார். 

முனைவர் மா சிதம்பரத்தின் கட்டுரை ஞாயிறின் சிறப்பை ஒவ்வொரு நிலையிலும் உயர்வு நவின்றது. நிலவு, விண்மீன், அன்னங்கள் பற்றியும் அழகுற மொழிந்தது. காவிரிக்கும் கங்கைக்கும் ஒப்புமைப்படுத்தி அதிலும் காவிரியை தெய்வத்திருநதி என்று கம்பர் உயர்வுபடுத்தியதாக முனைவர் மு பழனியப்பன் அவர்களும் சிறப்பாகக் கட்டுரை அளித்துள்ளார்கள். 

அலகிலா இயற்கை விளையாட்டு பற்றி சொ சேதுபதியும் , POETIC SUPREMACY OF KAMBAR – THE MILLENNIUM POET என்ற தலைப்பில் சிங்கப்பூர் ஸ்ரீ டி ஏ லெக்ஷ்மி அவர்களும் ( ஷேக்ஸ்பியர், ஸ்காட் ரஸ்ஸல் ஸ்காண்டர்ஸ், ஜான் மில்டன், பெர்சி பைஷ் ஷெல்லி, வால்ட் விட்மன், விர்ஜில், ஜியார்ஜிக்ஸ் 19 ஆம் நூற்றாண்டு, ஆண்டாள், மகாகவி காளிதாஸ், வால்மீகி, திருவள்ளுவர், புகழேந்தி ஆகியோரின் படைப்புகள் மழை மற்றும் வெள்ளத்தோடு ஒப்புமைப்படுத்தி ஆங்கிலத்தில் ) சிறப்பாகக் கட்டுரை படைத்துள்ளார்கள். 

கோசலை நாட்டின் செழுமை, மருதம் நெய்தல் திணைமயக்கம், வெள்ளப் பெருக்கும் விலைமகளும், காப்பிய நாயகி, நாயகனை அன்னத்துக்கும் யானைக்கும் உவமித்தது, நீர்க்கரை உறவுகள் பற்றிக் கூறுவது, தாய்ப்பால் போன்ற சரயூநதி, செங்கிடை, வள்ளைக்கொடி, குவளை சீதையின் வாய், காது, கண்ணை ஒத்திருப்பது, சந்திரசயிலம் பற்றிப் பாடுவது, நடுவண் ஐந்திணையான பாலை, களத்துமேடு, கார்காலம், உழவின் சிறப்பு, சுற்றுச் சூழல்/ஒலி/காற்று/நீர் மாசுபாடு , நீர் மேலாண்மை, சூழல் காப்பு, காட்டுயிர்ப் பாதுகாப்பு மேலும் ஐம்பூதங்களும் அனுமனே எனப்படும் கட்டுரை, ஆகியன நனி சிறப்பு. 

”தண்டலை மயில்கள் ஆட ” என்ற பாடலும் “வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்” என்ற பாடலும் அநேக கட்டுரைகளில் எடுத்தாளப்பட்டிருக்கின்றது. ஐயோ என்ற வார்த்தையை சீதையின் அழகை இயற்கையோடு ஒப்புமைப்படுத்திக் கம்பன் கூறுமிடத்தை பேராசிரியர் சு. வெள்ளச்சாமி சிறப்பித்துக் கூறுகிறார். இயற்கையோடு இயைந்த பாத்திரங்களாக வாலி, அங்கதன், நளன், அனுமன், வானர வீரர்கள் ஆகியோரைக் குறிப்பிடுகிறார் முனைவர் ச.அங்கயற்கண்ணி.

நம் வலைப்பதிவர் சாந்தி லெட்சுமணன் கம்பன் வழி திரேதாயுக தரிசனம் பற்றியும் சைவ வைணவ சமரசம் பற்றியும் கூறி இருப்பது அதி சிறப்பு. 

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று, ஆர்கலி மேய்ந்து, அகில்
சேறு அணிந்த முலைத்திருமங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டவே. “

இயற்கைக் கொள்கை கம்பனும் சங்கச்சான்றோரும் – ஓர் ஒப்பீடு என்ற தலைப்பில் முனைவர் ஞானசுந்தரத்தரசு அவர்களின் கட்டுரையும் சித்திரக்கூட மலைப்புனைவு – கம்பரும் வால்மீகியும்  என்ற தலைப்பில் முனைவர் இராசாராமின் கட்டுரையும், இராமாயணத்தில் கடல், தமிழ் இராமாயணம் மற்றும் கன்னட இராமாயணம் ஒரு பார்வை என்ற கா. நல்லதம்பியின் கட்டுரையும், இயற்கைப் புனைவில் கம்பனும் ஆழ்வார்களும் ,கம்பனும் பிற தமிழ்க்கவிகளும் , கம்பனும் பாரதியும் வித்யாசமானவை.

இதில் முதல் பரிசு பெற்ற கட்டுரையை திருமதி கம்பனடிசூடி தெய்வானை பழனியப்பன் எழுதி இருக்கிறார்கள். மிக இயல்பான கட்டுரை அது. ஆனால் தேர்ந்தெடுத்திருக்கும் மையம் வித்யாசமான ஒன்று. உலைக்கழுநீர், செந்தயிர்க் கண்டம் பற்றியும் காளான் ( காளாம்பி )  பற்றியும் தனது தாவரவியல் சம்பந்தமான இளங்கலைப் பாட அறிவோடு அவர் சொல்லியிருக்கும் விதம் வெகு சிறப்பு. 

அன்னம், அசுணம், அன்றில், மகன்றில், சக்கரவாகம், சிரல், நீர்க்காகம்,  மயில், வண்டு, கிளி, குரங்குகள், யானைகள், பசு, புல், தேன், காளான், தாமரை, காற்று, மழை, மலர்கள், வனம், மரங்கள், ( கோங்கு, குங்கும மரம், அரசு, சந்தன மரம், அசோக மரம், கடுக்காய், வில்வம், சரக்கொன்றை,  செடிகள், மிருகங்கள், உயிரினங்கள், பறவைகள், பூச்சிகள் ( இந்திரகோபபூச்சி ) மலை, நதி, கடல்,சூரியன் , சந்திரன், வானம், மேகம், மின்னல்கள், வாடைக்காற்று, வெள்ளம், பருவகாலங்கள், மற்றும் திணை பற்றிய இயற்கையோடு இயைந்த வாழ்வின் சிறப்புக் கூறப்படுகிறது.

ஆகக்கூடி கம்பனில் வாழ்வியலோடு கலந்த இயற்கையும் சம அளவு முக்கியத்துவம் கொடுத்துப் பாடப்பட்டிருக்கிறது. நவில்தொறும் நூல்நயம்போலும் பயில்தொறும் பண்புடையாளர் தொடர்பு என்பார்கள். இயற்கை இல்லையேல் நாம் இல்லை என்பதை உரத்துப் பதிவு செய்த இந்நூலை வாசித்துப் பாருங்கள். இதன் சொல்லாட்சியையும் நூல்நயத்தையும் , அது கூறும் கருத்துக்களையும் ரசித்து வியந்துகொண்டே இருப்பீர்கள்.

நூல் :- கம்பனில் இயற்கை.
பதிப்பாசிரியர்கள் :- கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்
முனைவர்  சொ. சேதுபதி
முனைவர் மு. பழனியப்பன்
முனைவர் இரா. குறிஞ்சிவேந்தன்
பேராசிரியர் சொ அருணன்.
வெளியீடு; கபிலன் பதிப்பகம்.
பக்கம் – 480
விலை ரூ 500/-


4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...