செவ்வாய், 13 ஜூன், 2017

மஞ்சள் முகமே வருக. (நமது மண்வாசத்துக்காக).

மஞ்சள் முகமே வருக.

என்னது மஞ்சள் பூசிக்குளிக்கிறதா. அதெல்லாம் ஓல்ட் ஃபேஷன் . இப்ப எல்லாம் மஞ்சள் கொண்ட க்ரீம் வந்திருக்கு. அத பூசிட்டா போச்சு என்கின்றார்கள் பெண்கள். இயற்கையான மஞ்சள் பூசிக்குளிச்சா அது நிச்சயம் முகத்துக்கு அழகுதான் கொடுக்கும். முகத்தின் மினுமினுப்பை அதிகமாக்கி தேவையற்ற ரோமங்களை நீக்கி, கிருமி நாசினியாகவும் செயல்படுது மஞ்சள்.


மஞ்சள் பூசி மலர்கள் சூடி திருமணத்தின் போதும் வளைகாப்பின் போதும் நலுங்கு வைப்பது நம்மவர் வழக்கம். தங்கள் திருமணத்தின்போது ஒரு நாள் இதை ஹல்தித் திருவிழான்னு வடநாட்டாரும் கொண்டாடுவாங்க.

திருமணப்பத்ரிக்கைலேருந்து குடிபுகுதல் வரை நல்லது எல்லாத்துக்கும் அழைப்பிதழ்களில் மஞ்சள் தொட்டுத்தடவி அனுப்புவாங்க. அதே போல புதுத்துணி எடுத்தா கோடித்துணின்னு மஞ்சள் தொட்டு வைச்சிட்டுத்தான் உடுத்துவாங்க. இதெல்லாம் நம்ம தென்தமிழ்நாட்டார் பழக்கம்.

வீட்டு வாசற்படிகளில் மஞ்சள் குங்குமம் வைக்கிறதும், ஹோமம், யாகம், பூஜை போன்றவற்றில் மஞ்சளையே பிள்ளையாராப் பிடிச்சு வைச்சு வணங்குறதும் இந்தியர்களுக்கே அதுவும் தமிழர்களுக்கே உரித்தான ஒரு வழக்கம். மஞ்சள் கிருமி நாசினி என்பதால் புண்ணியாவசனம் போன்றவை செய்யும்போது வீட்டில் மஞ்சள் தண்ணீர் தெளிப்பாங்க. காத்துக் கருப்பு அண்டாமல் இருக்கவும் மஞ்சள் தண்ணீர் தெளிப்பார்கள்.


இப்ப கோடை சமயம். திருவிழாக்காலம். கிராமங்களில் மாமன் மச்சான் போன்ற உறவுமுறைகளின் மேலே மஞ்சள் தண்ணீர் தெளிச்சு திருவிழாவையை குதூகலமாக்கிடுவாங்க முறைப்பொண்ணுங்க. சடங்கான பெண்ணையும் மஞ்சள் நீராட்டுவார்கள். அதற்குப் பூப்புனித நீராட்டு எனச் சொல்வார்கள். தென் தமிழ்நாட்டின் சில திருமணங்களில் மாப்பிள்ளை & பெண் மஞ்ச நீராடுவாங்க. அதே போல சம்பந்திங்களும் மஞ்சத்தண்ணியை ஒருத்தருக்கொருத்தர் தொட்டுத் துணியை நனைச்சுக்குவாங்க.

உணவு வகைகளில் நிறம் கொடுக்கவும் ருசி கொடுக்கவும் பயன்படுது. மஞ்சள் கிழங்கு வேகவைத்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் புத்துணர்ச்சி ஏற்படும். முன் காலத்துல இது உடைகளுக்கு சாயம் ஏற்றவும் பயன்பாட்டுல இருந்தது.

இந்த மஞ்சள் பொங்கல் சமயத்துல முக்கியப் பங்கு வகிக்குது. பொங்கல் பானையில் மஞ்சள் இஞ்சிக் கொத்துக்களைக் கட்டித்தான் பொங்கல் பொங்குவாங்க. அதே மஞ்சள் இலையிலதான் மாட்டுக்கும் பொங்கல் படைப்பாங்க. அந்தப் பொங்கலின் போது கட்டின மஞ்சள்கிழங்குகளை நறுக்கி வெந்நீரில் வேகவைத்துக் காயவைத்துப் பொடியாக்கி சமையல்லயும் பயன்படுத்துறோம். அநேக மசாலா பொடிகளில் மஞ்சள்தூளும் கலந்து இருக்கும்.

பலவகை மஞ்சள் இருந்தாலும் கஸ்தூரி மஞ்சள், விரலி மஞ்சள் இரண்டும் ரொம்ப ஃபேமஸ். கஸ்தூரி மஞ்சள் பூசிக் குளிக்கவும், விரலி மஞ்சள் சமையலுக்கும் உதவுது. பூசு மஞ்சள்தூள், சமையல் மஞ்சள் பொடின்னு இப்போ கடைகளிலும் விக்கிறாங்க. ஆனா நாமே தயார் செய்வதுதான் சிறந்தது.

மஞ்சள் கல்லீரல் செயல்பாட்டுக்கும் குடற்புண் ஆற்றவும் பயன்படுது. இனிப்பு நீர், இதயக் கோளாறு, புற்றுநோய், செரிமானக் கோளாறு, தோல் நோய் ஆகியவற்றுக்கு இதை மருந்தா பயன்படுத்துறாங்க. பாலில் போட்டுக் குடிச்சா இருமல், ஷயம் போன்ற நோய்கள் குணமாகும். நல்ல எண்ணெயில் போட்டுக் காய்ச்சிப் பூசுனா அதிகப்படியான நீர்பாரத்தையும், சளியையும் நீக்கும். காயம் பட்ட இடத்திலும் கட்டி இருந்தா அதை உடைக்கவும் இதை நீரில் குழைத்துப் பூசுவார்கள். மஞ்சளில் கர்குமின் என்கிற வேதிப் பொருள் இருக்கு. இதிலேருந்து க்ரீம், ஆயிண்ட்மெண்ட் ஆகியனவும் தயாரிக்கிறாங்க.

இது சித்தா, ஆயுர்வேதிக் மருந்துத் தயாரிப்பில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்பாட்டில் இருந்து வருது. இது நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருவதோடு எதிர்மறை எண்ணங்களையும் நீக்குது.

பசும் மஞ்சள் வைத்தியம் அப்பிடீங்கிற ஒண்ணு பேலியோ டயட்டில் கடைபிடிக்கப்படுது. பசும் மஞ்சளை ஈரோட்டுப் பக்கம்  அரைத்துக்குழம்பு வைப்பாங்க. அதே போல் வட இந்தியாவில் ஹல்தி சப்ஜின்னும் செய்றாங்க. அதே போல் மஞ்சள் சேர்க்காத சைவ அசைவ உணவுகள் கம்மின்னு சொல்லலாம். ஊறுகாய், குழம்பு வகைகள், ரசவகைகள், மசாலா வகைகள் மட்டுமில்ல, ஐஸ்க்ரீம், சீஸ், யோகர்ட், சாலட், சூப், பாப்கார்ன், சாஸ், ஜெலாட்டின் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுது.

தமிழ்நாட்டில் காரமான பொருள் தயாரிக்கத்தான் மஞ்சளைப் பயன்படுத்துறோம். ஆனால் வடநாட்டில் ரவை சேமியா கலந்த ”ஸ்ஃபோஃப்” என்னும் இனிப்புத் தயாரிக்க மஞ்சள் தூள் பயன்படுத்துறாங்க. சில இடங்களில் இது குங்குமப்பூவுக்கு பதிலா நிறமியா பயன்படுத்தப்படுது. ,

கோவாவின் பாரம்பரிய உணவான “பாடலியோ” மஞ்சள் இலையில் அரிசி, தேங்காய்த்துருவல், வெல்லம் கொண்டு தயாரிக்கப்படுது. தமிழ்நாட்டிலும் புழுங்கல் அரிசியையும் துவரம்பருப்பையும் பொடித்து மஞ்சள்தண்ணீர் தெளித்துப் பிசறி ஆவியில் வேகவைத்து வெல்லப்பாகு சேர்த்து புட்டு தயாரிக்கப்படுது.

புத்த துறவிகளின் அங்கியைக் கட்டும் கயிறு மஞ்சள் தோய்ந்ததாகத்தானிருக்கும். இவ்வளவு ஏன். மஞ்சளில் நனைத்து முறுக்கிய நூல்கயிறுதான் மஞ்சள் கயிறாக, தாலிக் கயிறாகத் திருமணச் சடங்குகளில் பயன்படுது. திருமாங்கல்யம் கோர்க்கவும் இம்மாதிரி 8 ஆம் நம்பர் நூல்கண்டுகளில் மஞ்சளை உரசிச் சேர்த்து மூன்றாக ஏழாக முறுக்கிக் கருத்திரு உருப்படிகளைக் கோர்ப்பார்கள். இதைக் கொண்டுதான் திருப்பூட்டுவார்கள்.

ஆடி அம்மன் திருவிழாக்களில் மஞ்சள் உடையுடன் குளித்து பால்குடம், முளைப்பாரி, மதுக்குடம் எடுப்பார்கள். சிலர் மஞ்சள் உடையுடன் அலகு குத்தியும் வருவார்கள். தீமிதி பூமிதி போன்றவற்றிலும், தீச்சட்டி ஏந்தியும் மஞ்சள் ஆடை பக்தர்கள் வருவார்கள். ஐயப்பன் கோயில் செல்லும் வழியில் மஞ்சள் மாதா என்றொரு கோயிலும் உண்டு.

எவ்வளவு பணக்காரர்களாக இருந்தாலும் சில பகுதித் திருமணங்களில் மஞ்சள் புடவைதான் திருமணத்தின் போது கூறைப்புடவையாகவும் உடுத்தப்படுகிறது. மஞ்சள் மங்களகரமாக இருப்பதால் அதன் மகத்துவம் அதிகம். மங்கல நிகழ்வுகளில் அதன் முக்கியத்துவமும் அதிகம்.

மஞ்சள் நிறத்தோடு சூரியனை ஒப்பிடுவது போல கொற்றவை தேவியின் பூஜையிலும் மஞ்சள் முக்கிய இடம் வகிக்குது. அம்மன் கோயில்களில் மஞ்சள் முக்கிய இடம் வகிக்கிது. மஞ்சளையும் சுண்ணாம்பையும் சேர்த்துத்தான் குங்குமம் தயாரிக்கப்படுது. திருஷ்டி கழிக்கும் போதும் மணமான தம்பதியினர் புதுவீடு புகும்போதும் மஞ்சள் சுண்ணாம்பு கரைத்த நீரில் வெற்றிலையைக் கிள்ளிப் போட்டு ஆரத்தி எடுப்பார்கள். நீராலாத்தி, சதுராலாத்தி, எல்லாமே மஞ்சள் கொண்டு செய்யப்படுவதுதான்.

நமது பாரம்பரியத்தின்படியும் பண்பாட்டின்படியும் மஞ்சள் வகிக்கும் இடம் சிறப்பான ஒன்று. நம்ம நாட்டுச் செடியான இதை அந்நியநாட்டார் பேடண்ட் உரிமை கொண்டாடி இதுல பை ப்ராடக்ட்ஸ் தயாரிச்சு நம்மகிட்டயே விக்க வர்றாங்க. நம்ம நாட்டுச் செடிகள்,பயிர்களோட மகத்துவம் அறிஞ்சு நாம அதை உபயோகிக்கிறதோட நம்ம பாரம்பரியப் பயிர்களோட உரிமையை விட்டுத்தராமல் இருக்க வேண்டியதும அவசியம். நமது நாட்டின் சீதோஷ்ணத்துக்கு ஏற்றவாறு உள்ளும் வெளியேயும் மனிதர்களைக் கவசம் போலக் காக்கும் நமது பாரம்பரியச் செடியான மஞ்சளை நாம் நமதெனக் காப்போம்.


2 கருத்துகள் :

mohamed althaf சொன்னது…

அருமை

Thenammai Lakshmanan சொன்னது…

THANKS MOHAMED SAGO :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...