திங்கள், 31 ஜூலை, 2017

திப்புவை வஞ்சத்தால் வீழ்த்திய வாட்டர்கேட் வாயில்.நயவஞ்சகமும் துரோகமும் கைகோர்த்து மாவீரன் திப்புவை வீழ்த்திய இடம் வாட்டர்கேட் எனப்படும் மதில் சூழ் இடத்தின் அருகில் அமைந்துள்ளது. 

மீர் சாதிக், குர்ரம் குண்டா கமருதீன், பூர்ணய்யா, அலி சயித் சாயிப், ஹைதராபாத் நிஜாம், குலாம் உத்தீன் கான், ஆகிய துரோகிகள் பதவி ஆசையால் வாணிகம் செய்ய வந்த அந்நிய வியாபாரிகளுக்கு ஆட்சியைத் தாரை வார்த்துவிட்டனர். 

கர்நாடகாவின் மாண்டியாவில் இருக்கும் ஸ்ரீரங்கப்பட்டிணம் இருபுறமும் காவிரியால் சூழப்பட்ட ஸ்ரீரங்கநாதர் கோவில் இருக்கும் ஒரு தீவு நகரம்.இதில் அமைந்துள்ளதுதான் திப்பு ஆண்ட மைசூரின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டிணம் கோட்டை. ( வடக்கில் இருக்கும் ) இதன் ஒரு வாயில்தான் வாட்டர்கேட் எனப்படுகிறது. 1762 இல் இருந்து 1799 வரை மைசூரை ஆண்ட அரசர்கள் ஹைதர் அலியும் திப்பு சுல்தானும். நான்கு மைசூர்ப் போர்களிலும் ஆங்கிலேயரை வென்றவர்கள்.

இருநூறு ஆண்டுகள் ஆட்டுமந்தையாய் வாழ்வதை விட இரண்டு நாட்களே வாழ்ந்தாலும் சீறும் புலியாகச் சாவதே மேல் என்று சூளுரைத்தவரின் மகன்களை சிறைப்பிடித்ததோடு அல்லாமல் அவரின் மெய்க்காப்பாளர்களையும் ( சையத் கமர், சயீத் கஃபார், ராஜாகான் தவிர ) பதவி ஆசை காட்டித்தான் அவரை வீழ்த்தமுடிந்தது ஆங்கிலப்படையால். 
நயவஞ்சகத் தளபதிகள் அகழிகள், ஆழமான சுற்றுச்சுவர் ஆகிய இருந்தும் கோட்டை மதிலில் உடைப்பு ஏற்படுத்தி அதைப் பலவீனப்படுத்தினார்கள். ஆங்கிலப் படைகள் ஊடுருவிய செய்தி வந்ததும் உணவருந்த அமர்ந்த திப்பு உடைவாளுடன் குதிரையேறிப் புறப்படுகிறார். அவர் போரிட வெளியேறிய மதில் சுவர் வாயிலை அவர் திரும்பி வரமுடியாதபடி அடைக்கிறான் வஞ்சகத் தளபதி ஒருவன். ஆங்கிலேயரின் குண்டு உடல் துளைக்க அந்த மாவீரன் ஒரு புலியைப் போலக் கம்பீரத்துடன் வீழ்கிறான். அக்கல்வெட்டைக் காணும்போதே மனதில் புகுந்து உடலைப் பதறவைக்கும் காட்சி அது.
மே 4, 1799 இல் திப்புசுல்தான் உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் இதுதான். கர்னல் வெல்லெஸ்லியின் ஆணையின் பேரில், திப்புவின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் ஒரு கல்வெட்டு செதுக்கப்பட்டுள்ளது.வடக்கு கோட்டை வாயில் வாட்டர்கேட். ( கோட்டைக்குள் நீர் கொண்டு செல்ல உதவும் இடம் )


WATER GATEஅது ஒரு பூங்கா போன்று பராமரிக்கப்படும் இடத்தில்தான் இருக்கிறது என்றாலும் அங்கே காணப்படும் ஒவ்வொரு செடிகளும் பூக்களும் கூட வீரர்கள் உறைந்திருப்பதுபோன்ற மாயக்காட்சியை விதைப்பதை உணரமுடியும். அதுவும் திப்பு வீழ்ந்த இடத்தைப் பார்க்கும்போது தன்னையறியாமல் ஒரு விதிர்ப்பு ஏற்பட்டது.


கொலோனல் பெய்லியின் டஞ்சன் என்றொரு இடத்தைக் காட்டினார் கைட். அதை எடுக்க இயலவில்லை. இது திப்புவின் ஆட்சியில் பிடிபட்ட ஆங்கிலேயர்களை அடைக்கும் இடம்.
கோட்டையின் எச்சங்கள்.பிரிந்த காவிரியின் இன்னொரு பகுதி.மன்னர்கள் இறக்கலாம். மாவீரர்களுக்கு மரணம் இல்லை. அவர்கள் விதையாக விழுந்து நம் சுதந்திர விருட்சமாக விரிந்திருக்கிறார்கள். அவர்கள் தியாகத்துக்கு நமது அஞ்சலி.


4 கருத்துகள் :

ஸ்ரீராம். சொன்னது…

நயவஞ்சக தளபதிகள்.... ஹூம்.. கூட இருந்தே குழி பறித்த கூட்டம்.

சுவாரஸ்யமான பதிவு, படங்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

மாவீரர்களுக்கு மரணமில்லை. உண்மை.

படங்கள் வழி நானும் அங்கிருந்த உணர்வு.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மெய் சிலிர்க்கிறது...

Thenammai Lakshmanan சொன்னது…

nandri Sriram

aam Venkat sago

nandri DD sago

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...