எனது நூல்கள்.

திங்கள், 28 மே, 2018

ஃப்ரன்ஸ் காஃப்காவின் உருமாற்றம் ஒரு பார்வை.

ஃப்ரன்ஸ் காஃப்காவின் உருமாற்றம் ஒரு பார்வை.

காஃப்காயெஸ்கு என்பதை நான் கசப்பு அதீத தவிர்க்க இயலாத பிறவிக் கசப்பு என்று மொழிபெயர்த்துக் கொண்டிருக்கிறேன்.

துயரமுற்றவர்கள், தோற்றோடியவர்களின் பிரச்சனைகளை, அதிலிருந்து மீள கைகொடுக்க யாருமில்லாதவர்களை, ஒரு வட்டத்துக்குள் கட்டப்பட்டவனை நாயகர்களாகக் கொண்டவை காஃப்காவின் கதைகள். ஒருவனின் பிரச்சனையை யாருமே பிரச்சனையாக கருதாதவரை, அது அவனுக்கான ப்ரத்யேகப் பிரச்சனை மட்டுமே என்ற அளவில் அணுகுபவரை அவன் வாழ்க்கை நெடுகச் சந்திப்பான். 

பரிணாமம், வளர்சிதை மாற்றம், என்பதை எல்லாம் வளர்முகப் பாதையிலேயே பார்க்க விரும்பும் நம்முன் சிதைந்த ஒன்றை,  பிரம்மாண்டமானதாக தவிர்க்க இயலாததாகப் பிம்பம் கலைந்த ஓவியமாக முன் வைக்கிறார் காஃப்கா. காஃப்காவின் கதைகள் அனைத்துமே வாசிப்பவரின் முடிவுக்கு விடப்படுபவை.. அநேகம் அவலச்சுவை நிரம்பியவை.
இத்தொகுப்பில் உருமாற்றம் ( மெட்டமார்ஃபாஸிஸ் ), காஃப்கா தன் தந்தைக்கு எழுதிய கடிதம், உருமாற்றம் பற்றி காஃப்காவின் டைரிக் குறிப்புகள், முதல் துயரம், சட்டத்தின் வாயிலில் பட்டினிக் கலைஞன், வாளியில் பயணம் செய்கிறவன், காஃப்காவும் ஒரு தமிழ் எழுத்தாளரும் ஆகிய கதைகள் இடம்பெற்றிருக்கின்றன.  


உருமாற்றம் படித்துவிட்டு ஓரிரு நாட்கள் சொல்லவியலா அவஸ்தை கூட ஏற்பட்டது. தந்தை தனயனுக்கான உறவுகள் என்றைக்குமே தாய்க்கும் மகனுக்குமான உறவு போல நெகிழ்வாய் அமைந்ததே இல்லை. தந்தையின் பாசத்துக்கு ஏங்கும் எத்தனையோ மகன்களின் பிம்பமாக உருமாற்றத்தில் காட்சி அளிக்கிறார் காஃப்கா.கதை ஆரம்பத்திலிருந்து முடிவு வரை ஒரு வகையான இழிவரல் நம்மைத் தொற்றிக் கொண்டு வருவதை தவிர்க்க இயலாது. குடும்பத்துக்காக சொற்ப சம்பளத்துக்குத் தினம் ஓடாய் உழைத்து, நிறுவனம் தரும் டார்கெட்டைத் தாண்ட இயலாமல் தோல்வியில் துவளும் சராசரி மனிதன்தான் நம் நாயகன் ஆனால் ஒருநாள் அவன் தூங்கி எழும்போது அருவருக்கத்தக்க கரப்பானாக விழிக்கிறான்.

அக உலகும் புற உலகும் ஆணுக்கு ஒன்றும் பெண்ணுக்கு ஒன்றாகவும் இருந்தே தீரும் என்று நினைக்கிறோம். ஆண்கள் எதிர்கொள்ளும் பணிச்சுமை மிகுந்த உலகையும் அதை எதிர்கொள்ளாமுடியாத மெல்லிய மனதையும் இக்கதை தெளிவுறுத்துகிறது. ஆண்கள் மேல் திணிக்கப்படும் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள் அதை நிறைவேற்ற அவர்கள்படும் அவஸ்தைகள்,( தங்கை இசை கற்றுக்கொள்ள வகுப்புக்கு அனுப்ப நினைத்து அதை வலியுடன் கைவிடுகிறான் க்ரகர் சேம்சா)  ஆகியன 

இக்கதை நாயகன் தன்னைத் துரத்தும் யதார்த்தத்திலிருந்து தப்பிக்க நினைத்து ஒரு பூச்சியாக மாறுகிறானோ என்று தோன்ற வைத்து கதை நெடுகவே அது தொடர்கிறது. கடைசியில் யாருக்கும் வேண்டாதவனாக அவன் இறந்து தூக்கிப் போடப்படும்வரை அப்படியே பூச்சியாகவே நீடிக்கிறான். பாசாங்குக்குக் கூட அதை கற்பனை என்றோ கனவு என்றோ விட்டு விலகிவிடத் தயாராக இல்லை காஃப்கா. க்ரகர் சேம்சாவை ஒரு காக்ரோச்சாகவோ அல்லது பூச்சியாகவோ வடிவமைத்து அதற்குத் தக்கவே அவனது செயல்பாடுகளையும் விசித்திரமாக அமைத்திருக்கிறார்.

தனிமை, ஒற்றைக்கூட்டு மனப்பான்மை, ஓட்டுக்குள் ஒடுங்குதல், சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் தைரியமின்மை, தந்தைமேலான அச்சம், யதார்த்தை நேரிட பயம் போன்றவை எல்லாக் கதைகளிலும் வெளிப்படுகின்றன. கதை நாயகன் ஒரு விபரீதமான கோமாளி முயற்சியில் ஈடுபடுகிறானோ என்று கூட தோன்றுகிறது பட்டினிக் கலைஞன் கதையில் இதைப்போன்ற விடாப்பிடியான அடமண்ட் ஆட்களை நாம் சந்தித்திருந்தாலும் இக்கதையின் நாயகன் அதன் உச்சக்கட்டம்.

ஒரு வகையான பதற்றம், அமைதியின்மை, எதிலும் நம்பிக்கையின்மை, பிடிவாதம், மனச்சிக்கல், ஓரங்கட்டப்படுதல், வாழ்க்கை நிகழ்வுகளில் ஒழுங்கமைதியின்மை,  எதிர்கொண்ட அதிகாரம், அடக்குமுறை,  மனதளவில் கட்டுண்ட, சிறைப்பட்ட தன்மை, அதை மீறமுடியாமை இதெல்லாம் அவர் எதிர்கொண்டவையாக இருக்கலாம். அவையே நம்மை ஆட்டுவிக்கும் எழுத்தாக வெளிப்படுகின்றன.

நடக்கும் எதையும் மிகை எதார்த்தமாகவோ அதீத உணர்ச்சியின் ஆட்பட்டோ எடுத்துக்கொள்ளும் கதைப்பாங்கு இவருடையது. இருப்பின் சிக்கல், சுயத்தின் பிளவு காஃப்காவின் கதைகளின் மூலநாடி. தனக்குத்தானே அந்நியமாதலை அவர் வெகு விருப்பத்துடன் வெகு ஆவலுடன் அடுத்தவரை பயமுறுத்தும் உச்சத்துடன் செய்திருப்பதுபோல் படுகிறது.

சக மனிதர்களுடனான ஆத்மார்த்தத் தொடர்பு, அதைப் பெறமுடியாமல் போகும் ஏக்கம், ( உருமாற்றம் )  தன்னைக் கவனிக்காத உலகை தன்னை வருத்தி அலட்சியப்படுத்துதல்( பட்டினிக் கலைஞன் ), உலோகாயுதப் பொருட்களை வாங்க முடியாமல் உயிர்வாழப் போராடும் சராசரி மனிதனின்  அவசம் ( வாளியில் பயணம் செய்கிறவன்)
இக்கதைகள் எல்லாம் அந்தத் துயர் மிகுந்த மனிதனைச் சுற்றி இருக்கும் சமூகத்தை சமுதாயத்தைக் கேலி செய்கின்றன. 

பாரதியின் தனிமனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம் எனப் புறப்படுவதில்லை காஃப்காவின் கதை மாந்தர்கள். ரத்தமும் சதையுமாகத் தன்னை வருத்தித் துன்புறுத்தித் தன்னையே கொஞ்சம் கொஞ்சமாக அழித்து மறக்க இயலாத நினைவுகளை மானுட வர்க்கத்துக்குப் பரிசாகக் கொடுத்துச் செல்கிறார்கள்.

காஃப்காஎக்ஸ்க்யூ நம்மை பலமாகவே தாக்குகிறது. முதலாளித்துவம், கேப்பிடலிஸம், என்பதெல்லாம் நவீன முடியாட்சியே. சர்வாதிகாரமே., ( MONARCHY & SOVERNITY ) , கையறு நிலையில் இருக்கும் பொது ஜனம் ஒருவன், சாமான்யன்,  பிரச்சனைகளின் அழுத்தத்தாலோ சூழ்நிலையின் பதற்றத்தாலோ தன்னைத்தானே சிதைத்துக் கொள்ளும் யதார்த்தகாலப் பிரச்சனைகளை ( தீக்குளித்தல் ) கண்முன்னே கண்டுகொண்டுதானே இருக்கிறோம்.

அருவருப்பான ஜந்துவாகக் காட்சி அளிக்கும் க்ரகர் சேம்சாவின் பிரச்சனைகளைப் புரிந்துகொள்ளும் சகோதரியும் அம்மாவும் அவனுக்கு சிறிது ஆசுவாசம் அளிக்கிறார்கள். ஆனால் முடிவில் யாருக்கும் வேண்டாதவனாகி விடுகிறான். அவனது முடிவு அதிர்ச்சி அளித்தாலும் அவனுக்குப் பின்னும் அவர்கள் உலகம் சுயநலத்தோடு உயிர்த்திருப்பது மட்டுமல்ல. தெளிந்திருப்பதும் அவர்களால் தங்களைத் தாங்களே போஷித்துகொள்ள முடிவதும் யதார்த்தத்தில் நாம் காணும் உண்மைகளே.

உருவமற்ற எண்ணங்களும் பேச்சுக்களும் உருக்கொள்ளும் சமயம் எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியன. வாழ்தலின், ஜீவித்தலின்  பொருட்டு ( ஜெயித்தலின் பொருட்டு அல்ல )  ஓடிக்கொண்டிருப்பவர்களிடம் தங்கள் சமரசங்களைப் புட்டு வைக்கச் சொன்னால் பல்வேறு உருமாற்றங்களுக்கான  நூற்றுக்கணக்கான கதைகள் கிடைக்கும். பார் விளையாட்டு என்ற கதையும் அத்தகையதே. தங்கள் ஓட்டத்தைத் தொடராவிட்டால் அதுவும் தாங்கள் விரும்பும் வகையில் கஷ்டத்துடன் தொடராவிட்டால் தனக்கு ஏதும் ஆகிவிடும் என்று நினைக்கும் மனிதனைப் பற்றியது. எல்லா வலிகளையும் துயரங்களையும் பெருமை என்றே நாம் விடாப்பிடியாகத் தொற்றிக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றவைத்த கதை. 

சட்டத்தின் வாயிலில் கதை சட்டத்தில் எத்தனை எத்தனை கெடுபிடிகளும் அதைத் தவிர்த்த ஆயிரக்கணக்கான ஓட்டைகளும் உள்ளன என புலப்படுத்துகிறது. ஆனால் ஒரு சாமானியனுக்கோ அது  எட்டவியலாக் கோட்டை.

காஃப்காவும் மூன்று தமிழ் எழுத்தாளர்களும் சிறந்த முடிவாக இந்நூலுக்குக் கட்டியம் கூறுகிறது.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால் ……

ஜெயித்த அப்பா முன் தன்னைத் தாழ்வாக உணரும் தோற்ற மகன் வாழத் தகுதியற்று மடிந்த கதை உருமாற்றம். என்றேனும் எப்போதேனும் ஒரு நாள் இம்மாதிரி ஜெயித்த தகப்பன்களின் முன் தோற்று மறைந்த மகன்களின் மனதைத் திறந்தால் இக்கதை போன்றே ஒன்றை நாம் கண்டடையலாம் என்பது உண்மை.

நூல்:- உருமாற்றம்.
ஆசிரியர் :- ஃப்ரன்ஸ் காஃகா.
தமிழில் :- ஆர். சிவகுமார்
பதிப்பகம்.:- தமிழினி
விலை:-ரூ. 90/-

4 கருத்துகள் :

R Muthusamy சொன்னது…

நூலறிமுகம் உருமாற்றம் நிறைவாக உள்ளது.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி முத்துசாமி சகோ


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

வித்தியாசமான கதை...நல்ல அறிமுகம் சகோ/தேனு

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி துளசி சகோ :)

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...