எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 12 மே, 2018

ஆச்சியும் ஆட்சியும்.

”யாகாவாராயினும் நா காக்க” என்ற திருக்குறளை நினைவுபடுத்துகிறது அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களின் டிவி பேட்டி.

நடிகர் ரஜனிகாந்த் அவர்கள்  தென்னிந்திய நதிநீர் இணைப்பைக் கொண்டுவருவதுதான் தன்  வாழ்நாள் கனவு என்ற கருத்தைச் சொல்லி இருக்கிறார். அதற்கும் ஆச்சிக்கும் என்ன சம்பந்தம் ?

வார்த்தை விளையாட்டு என்பது விபரீதமாகிவிடக்கூடாது. விவேக் ஒரு படத்தில்  காரைக்குடிப் பக்கம் (ஆச்சியைப் பிடித்தார் என்று ஒரு பெண் தொகுப்பாளர் உச்சரிக்கும்போது ) சொன்னால் கலவரம் வந்துவிடும் என்பார். அதை விட அதிகமாகக் கண்டன ஆர்ப்பாட்டம்  நேற்று நடைபெற்றது. ( தொடர் பயணங்களால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக நான் கலந்து கொள்ளவில்லை. ) அனைவருமே கொந்தளித்துப் போய் உள்ளார்கள்.

காரைக்குடி மட்டுமல்ல 72 நகரத்தார் ஊர்களிலும் பெண்களை ஆச்சி என்றே அழைக்கிறார்கள். திருநெல்வேலிப் பக்கத்திலும் முதிய பெண்களை ஆச்சி என்றே அழைக்கிறார்கள். காரைக்குடியில் வயதில் மூத்த பெண்களையும், மூத்த சகோதரிகளையும் அக்கா என்ற பதத்தில் ஆச்சி என்றும் , திருமணமான பெண்களையும் ஆச்சி என்றும் அழைப்பதுண்டு.

வாய்க்கு வந்ததை காமெடி என்று நினைத்து சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லி விளக்கம் கொடுத்தால் சரியாகிவிடுமா என்றே நேற்றைய அவரின் பேட்டிகள் பார்த்துத் தோன்றியது. ஆச்சியாயினும் பெண்கள்தானே. அனைத்துப் பெண்களையும் இப்படிக் கிண்டலடித்துவிட்டு இருந்துவிட முடியுமா.



நாகரீகம் காத்து அனைத்து நகரத்தார் சங்கங்களும் தங்கள் கோபத்தையும் கண்டனத்தையும் கண்ணியமான முறையில் பதிவு செய்தார்கள். கூட்டத்தில் கலந்துகொண்ட ஆச்சிகள் அதீத கோபத்தில் அவருக்கு காலணிகளை பதிவு அஞ்சலில் அனுப்பியுள்ளார்களாம். முதலமைச்சருக்குப் புகார் மனுவும் அனுப்பி உள்ளார்களாம். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள்.

கண்டன ஆர்ப்பாட்டம் முதலில் கண்ணதாசன் மணிமண்டபத்தின் எதிரில் நடப்பதாக வாட்ஸப் தகவல் வந்தது. அதன்பின் ஐந்துவிளக்கின் அருகில் நடப்பதாகத் தகவல். அங்கேயும்  நடக்க இடம் கொடுக்காததால் பழைய நகரச் சிவன் கோயில் அருகே அறுபத்திமூவர் மடத்தில்  நடந்தது. தினகரன், தினமலர், தி இந்து ஆகியவற்றில் புகைப்படத்துடன் பகிர்வுகள் வந்தன இன்று.

ஆர்ப்பாட்டத்தைக் கூட முடிந்தவரை அமைதியாக நடத்தி உள்ளார்கள். கண்ணகி, காரைக்காலம்மை, பட்டினத்தடிகள் வந்த மரபில், வள்ளல் அழகப்பர் வளம் செய்த மண்ணில் வாழும் பெண்களின் கண்ணியம் காப்பது நம் கடமை என்று ஜெயங்கொண்டான் போன்ற இளைஞர்கள், கண்ணதாசன் அவர்களின் கவிதையோடு முழங்கி இருக்கிறார்கள்.

தமிழ்க் கல்லூரியின் வள்ளி ஆச்சி திருவண்ணாமலையில் நடந்த ஒரு நிகழ்வைக் குறிப்பிட்டு ஆட்சியாளர் ஆச்சியிடம் மன்னிப்புக் கேட்டதாக ஒரு தகவலைப் பகிர்ந்தார் ( வாட்ஸப் வீடியோ ).

”ஆச்சியைப் பிடிப்பது ஆட்சியாளர்களால் மட்டுமல்ல யாராலும் முடியாது. காரைக்குடி ஆச்சிகளைப் பற்றி அவதூறாகப் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எனது கண்டனங்கள் “ என்று முகநூலில் நேற்றே பதிவு செய்திருந்தேன்.

இப்போது எல்லா சேனல்களிலும் காரைக்குடி ஆச்சி பற்றிய கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என்று தினகரனில் அதற்கு விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு.

காரைக்குடிப் பக்கங்களில் எல்லா இல்லங்களிலும் ஆச்சியின் ஆட்சிதான் என்பது வெள்ளிடை மலை. 

9 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. ம்ம்...ஆதங்கமான பதிவு..என்ன கவலையென்றால் செல்லூர் ராஜு போன்றவர்களெல்லாம் போராடவைக்கிறார்களே என்றுதான்..
    ஆயினும் உங்கள் போராட்டம் வெல்ல வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. சொல்லை கவனமாகக் கையாளவேண்டும். அதிலும் பொறுப்பிலுள்ளோர் இன்னும் கவனமாக இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. பொதுவெளியில் இருப்பவர்களும் சரி யாராக இருந்தாலும் வார்த்தைகளைக் கவனமாகக் கையாள வேண்டும். நியாயமான ஆதங்கப் பதிவு

    பதிலளிநீக்கு
  5. ஒரு நம்பருக்கு மிஸ்ட் கால் செய்தால் நதிகளை இணைக்கலாம் என்றார்களே

    பதிலளிநீக்கு
  6. நல்லதொரு சிந்தனையை முன்வைத்துள்ளீர்கள்.
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  7. ஒரு அமைச்சரின் பொறுப்பற்ற வார்த்தை அத்துமீறல் கண்டனத்திற்கு உரியது.

    பதிலளிநீக்கு
  8. நன்றி மீரா செல்வகுமார்

    உண்மை ஜம்பு சார்

    அப்படித்தான் சொல்கிறார்கள் பாலா சார் !

    ஆம் டிடி சகோ

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    ஆம் முத்துசாமி சகோ


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...