காதல் கெமிஸ்ட்ரி
நாட்காட்டியில் இருக்கும் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு விசேஷ நாளாக அறிவித்து அதை வணிகமயமாக்கும் முயற்சியில் மேற்குலகம் ஈடுபட்டிருக்கிறது. தந்தையர் தினம், அன்னையர் தினம், காதலர்தினம் என்று. அந்த வணிகத்தில் அதிகம் கொள்முதல் ஆவது காதலர் தினத்தில்தான். உலகெங்கும் மில்லியன் கணக்கில் புறாக்கள், சிறகுள்ள தேவதைகள் கொண்ட காதலர்தின வாழ்த்து அட்டைகளும், சிவப்பு இதயங்களும் ( சாக்லேட்டுகள் ) சிவப்பு ரோஜாக்களும் , பரிமாறிக்கொள்ளப்படுவது அன்றுதான். அதை ஒட்டி ஒரு வாரம் விழாக்கோலம்.
ஐயன்மீர் காதல் என்பது என்ன என்று கேட்டார் ஜேகே. காதல் என்பது எதுவரை. ? கல்யாணகாலம் வரும்வரை என்ற சந்திரபாபு பாட்டு கேட்டிருக்கலாம். காதல் என்பது கல்யாணம் வரைதானா. அதற்குப் பின் அது அழிந்து போய்விடுகிறதா. ? ரோமியோ ஜூலியட், க்ளியோபாட்ரா மார்க் ஆண்டனி, ஹெலன் பாரிஸ், ஷாஜகான் மும்தாஜ் மஹல், அம்பிகாபதி அமராவதி, லைலா மஜ்னு, அனார் சலீம் எல்லாமே காவியத்தில் கண்ட அமரத்துவக் காதல்.
காதல் என்பது கூட நான் என்ற அகந்தைதான். அந்த அகங்காரத்தை அடுத்தவர்மேல் திணித்து அதையும் காதல் என்று எண்ணித் திரும்ப அவரிடமிருந்து வலுக்கட்டாயமாக நாம் விரும்பும் பதிலை செய்கையை. விளைவுகளை எதிர்பார்க்கிறோம், பிடிக்குள் வைத்துக்கொள்ள விரும்புகிறோம் என்று தோன்றுகிறது என்று கூறுகிறார் பிரபல எழுத்தாளர் ப. சிங்காரம். இந்த வகைக் காதல்தான் பல்வேறு படங்களில் காணக் கிடைக்கிறது. புதிய பாதை, அம்மன் கோயில் கிழக்காலே ஆகியன ஒரு சாம்பிள்.
மன்மத லீலையை வென்றார் உண்டோ, வதனமே சந்திர பிம்பமோ என்றெல்லாம் எம்கேடி பாடினாலும் நம் காலத்துக்கு முற்பட்டவர் என்பதால் ஏதொன்றும் தோன்றியதில்லை. காதல் கசக்குதையா என்று கூட பாண்டியராஜன் பாடி இருக்கிறார்.
கைக்கிளைக் காதல் படம் உயிர், பெருந்திணைக் காதல் படம் முதல் மரியாதை, ராக்கத மணத்தைச் சொன்ன படம் புதுப்பேட்டை, காந்தர்வ மணத்தை சொன்ன படங்கள் அலைபாயுதே உட்படப் பல படங்கள்.
பணக்கார ஹீரோயின், ஏழை ஹீரோ இந்த காம்பினேஷன்தான் அதிகம். ஆயிரத்தில் ஒருவன், சகலகலாவல்லவன்,டார்லிங் டார்லிங் டார்லிங். பணக்கார ஹீரோ ஏழை ஹீரோயின் காம்பினேஷன் கம்மி, நெஞ்சம் மறப்பதில்லை போல. காதலிக்க நேரமில்லை, காதலர் தினம், காதல், காதல் கோட்டை, காதலுக்கு மரியாதை, மின்னலே, பருத்திவீரன், விண்ணைத் தாண்டி வருவாயா, தில்லானா மோகனாம்பாள், விருமாண்டி, சங்கமம், அலைபாயுதே என எத்தனை படங்கள் காதலை விதம் விதமாகச் சொல்லின.
சிப்பிக்குள் முத்து, பிதாமகன், தெனாலி, குணா போன்று குணம், மனம் பிறழ்ந்த மனிதர்களின் காதலும் சில சமயம் ஆச்சர்யப்பட வைக்கும். கள்வனின் காதலியில் கெட்ட மனிதனைக் காதலிக்கும் பெண். கலாபக் காதலாவில் அக்கா கணவரையே காதலித்து அது நிறைவேறாததால் உயிர் துறக்கும் பெண். பல்வேறு படங்களில் ப்ளேட்டானிக் லவ், ஸ்டூபிட் லவ், இந்த வகைக் காதல்கள் அலைகள் ஓய்வதில்லை, அழியாத கோலங்கள்.
மூடு பனியில் என் இனிய பொன் நிலாவே என்று பிரதாப் பாடுவது மிரட்டும் வகைக் காதல். ஒருதலை ராகம், பாலைவனச் சோலை நிறைவேறாக் காதல்கள். இருவர் ஒரே பெண்ணையே காதலிப்பது திருடா திருடா, காதல் தேசம், இரு பெண்கள் ஒரு ஆணைக் காதலிப்பது நினைத்தேன் வந்தாய். காதலைச் சொல்லத் தவிக்கும் படம் காலமெல்லாம் காதல் வாழ்க, பூவேலி. காதலுக்காக காதலியின் உறவினரிடம் அடிமை உத்யாகம் பார்க்கும் படம் சந்தோஷ் சுப்ரமண்யம், க்ளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, ஏக் துஜே கேலியே நிறைவேறாக் காதலுக்காக காதலர்கள் தங்களையே தண்டித்துக் கொண்ட படங்கள்.
முத்துராமன், சிவக்குமார், விஜயகுமார் குடும்பத்தலைவர் கேரக்டருக்குப் பொருத்தமானவர்கள். ஜெய்சங்கர் ஜேம்ஸ்பாண்ட் மைனஸ் பெண்கள். அர்ஜுன் ஆக்ஷன் கிங். ரவிசந்திரன், சிவச்சந்திரன், ஏவிஎம் ராஜன் ஓரிரு படங்களுக்கு மேல் காதல் எல்லாம் ஃபினிஷ்ட். பாக்கியராஜ் காதல் நகைச்சுவைக் காதல். எஸ்.எஸ்.ஆர், எம்.ஆர். ராஜா, பாலாஜி, சரத்பாபு, சுதாகர், பார்த்திபன், பாண்டியன், பாண்டியராஜன், ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ், நெப்போலியன், ராம்கி, ராஜேந்தர், விஷால், ஆர்யா, ஜெய், சிவா, எஸ்,ஜே.சூர்யா, சுந்தர்.சி எல்லாம் இந்தக் கேட்டகிரிக்குள் அதிகம் வரமாட்டார்கள். விக்ரம் ஆல்ரவுண்டர். சந்திரபாபு, நாகேஷ் காதல் எல்லாம் கதையோடு சேர்ந்த காமெடி வகையறா.
விஜய்காந்துக்குக் காதலை விட தேசப்பற்று அதிகம். மோகன் ஹீரோயினை விட மைக்கை அதிகம் காதலித்தவர்!. பிரபுதேவாவின் காதல் தாடியில் முடங்கி நடனத்தோடு முடிந்துவிடும். ராகவா லாரன்ஸின் காதல் டான்ஸில் சிக்கி சின்னாபின்னமாகிவிடும். தனுஷின் காதல் கொண்டேன் குணா டைப் மிரட்டல். சிலம்பரசன் கொண்டாட்டக் காதல். ஸ்ரீகாந்த் மனைவியைக் காதலியாகக் கண்டவர். சத்யராஜும் கார்த்திக்கும் காதல் என்று காமெடி செய்துவிடுவார்கள். இவர்களைப் போலத்தான் உதயநிதியும், விஷ்ணு விஷாலும்,
சங்கர், கங்கா, ராஜிவ், ராஜா, ராமராஜன், கார்த்திக், அப்பாஸ், குணால், மனோஜ், ஷாம், ஜீவா, நந்தா, ஜெயம் ரவி, பரத், நகுல், சித்தார்த், வினய் எல்லாம் காதலில் ஒன் ஃபிலிம் வொண்டர்ஸ். சூர்யா ஹீரோயினை விட நடிப்பை அதிகம் காதலிப்பவர். முரளி காதலியைத் தேடியே தனிமையானவர். ரஹ்மான், வருண் நல்ல டான்ஸர்ஸ். சரத்குமார் நாட்டாமை. சேரன் நல்ல இயக்குநர். ரஜினி, விஜய் சேதுபதிக்குக் காதலை விடப் பல்வேறு பரிணாமங்கள் சிறப்பு. ஜெமினியைக் காதல் மன்னன் என்று கூறினாலும் அவர் மாதவன், பிரஷாந்த், சிம்பு, பிரான்னாவின் காதல் போன்று திகட்டும் சாக்லேட் வகையறா.
அஜீத்தின் காதல் கோட்டை, விஜயின் காதலுக்கு மரியாதை, அரவிந்த சாமியின் உயிரே ஆகியன காதலின் மேல் நம்பிக்கை ஏற்படுத்திய படங்கள். பிரசன்னா சிநேகா, ஷாலினி அஜீத், பார்த்திபன் சீதா, எஸ் எஸ் ஆர் விஜயகுமார், ஜெமினி சாவித்ரி, பூர்ணிமா பாக்கியராஜ், ராதிகா சரத்குமார், மதுரம் என் எஸ் கிருஷ்ணன், சூர்யா ஜோதிகா என்று ரீலிலும் ரியலிலும் இணைந்துவிட்ட ஜோடிகளைப் பற்றி அதிகம் சொல்ல ஏதுமில்லை.
பிரபு குஷ்பூ அதிகம் பேசப்பட்ட ஜோடி என்றாலும் கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், அனாடமி எல்லாம் பொருந்தியது மூவரின் காதல்தான். அது எம்ஜியார், சிவாஜி கமலுக்கே உரியது. மற்றவர்கள் கேரக்டருக்குத் தேவையான அளவு காதல் நடிப்பை வழங்கி இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் மூவரின் காதலும் பின் தொடர்ந்து வந்து சில நாட்கள் கூட நம்மைத் தொந்தரவு செய்யக் கூடியது. காதலில் ஒரு தவிப்பு இருக்கும். ஏக்கம் இருக்கும். இதே கெமிஸ்ரி ஹீரோயினிடமும் பிரதிபலிக்கும் அதுதான் இவர்கள் ஸ்பெஷல்.
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது, என் வானிலே ஒரே வெண்ணிலா என்றெல்லாம் ஸ்ரீதேவி கமலுடனும் ரஜனியுடன் பாடும் பாடல்களும் சரி நடிப்பும் சரி மனம் கவர்ந்தவை. அம்பிகா, அமலா, ஆண்ட்ரியா. ஸ்ரீவித்யா என எந்த ஹீரோயின் ஆனாலும் கமலின் கையில் ஒரு பிடி பூச்சரம் போல் ஆகிவிடுவார்கள். சலங்கை ஒலி, புன்னகை மன்னன், தேவர் மகன் எல்லாமே இதன் சாட்சி.
வலது கையிலும் இடது கையிலும் ஹீரோயினை வீசித் த்ரோபால் போலக் கையாள்வது எம்ஜியாருக்கே சாத்தியம். எம்ஜியாரின் படங்களில் முதலில் மோதல் அதன்பின் காதல் இதுதான் மில்ஸ் அன் பூன் டைப் காதல் டெக்னிக். ”என்ன கொடுப்பாய் என்ன கொடுப்பாய் அன்பைக் கொடுப்பேன் நான் அன்பைக் கொடுப்பேன்.” “பாதையிலே வெகு தூரம் பயணம் போகிற நேரம் காதலை யார் மனம் நாடும் அதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூடும்” “உள்ளம் என்றொரு கோயிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா” என்றெல்லாம் ஏங்கி அழைத்து அவர் நம்மையும் அவரின் காதல் துயரத்தைச் சுமக்கச் செய்திடுவார். ஆனால் முடிவில் ஹீரோயினுடன் சேர்ந்து ஃபேரி டேல்ஸ் கதை போல் இனிமையாக முடிந்துவிடும் அவரின் காதல்.
”மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன என சிவாஜியைக் காதல் மிக்கூரக் கிண்டலடிப்பதும், சிவாஜியின் உடல் காயத்தைக் கண்டு ”நலந்தானா நலந்தானா” என்று கண் கலங்க அடிபட்ட மயில்போல அகவுவதும் சிவாஜி பத்மினி ஜோடியின் அக்மார்க் காதல். அக்கால மக்களால் நிஜமெனவே நம்பப்பட்ட ஒரு காதல் ஜோடி இவர்கள்தான்.
புதிய பறவையில் ரஃப் அண்ட் டஃப் மனிதனாக க்ளப்புக்கு வந்து சிகரட் புகைக்கும் அவர் நடனமாடும் சௌகாரை பார்த்துக் கொஞ்சம் கொஞ்சமாய்க் காதல் வயப்பட்டுக் கன்னத்திலும் உதட்டிலும் விரல்வைத்துப் புன்னகையுடன் அவர் பார்க்கும் வசீகரப் பார்வை நம்மையும் கொள்ளை கொள்ளும். ”யார் அந்த நிலவு என்று தனிமையில் உருகும் சிவாஜி அழகே வா என்று கேரளக் கடற்கரையின் அலைகளில் புரளும் தேவிகாவின் பிம்பத்தின் பின் அலைமோதிச் செல்வது எல்லாம் அமரத்துவக் காதல். வசந்த மாளிகையில் யாருக்காக என்று தன் காதல் மாளிகையைப் பார்த்துக் கதறுவது நம் மனத்தையும் பேதலிக்க வைக்கும் என்றால், இவரையே நடிப்பில் மட்டுமல்ல காதலிலும் சக்கரவர்த்தி என்று இன்றும் என்றும் கூறலாம்.
டிஸ்கி:- ஜனவரி இதழில் வெளியான நகரத்தார் நட்சத்திரங்கள் என்ற என்னுடைய கட்டுரையை வாசகர் கடிதத்தில் பாராட்டி இருக்கும் குருவிக்கொண்டான்பட்டி வாசகர் மு.சுப. கருப்பையா அவர்களுக்கு நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)