Ar Vidhya Lakshmi Rajasekar பதிவு:
தேவானை l திருநிலை l ஒப்பிலாள் l உண்ணா l ஒமையா மற்றும் சில செட்டிநாட்டு பெண்கள்… தேனம்மை லெக்ஷ்மணன்
எங்கிருந்து ஆரம்பிப்பது என்று புரியாத நிலையில் இருக்கிறேன். முதல் சில கதைகள் செட்டிநாடு சார்ந்த பெண்களின் வாழ்வியலும், அவர்களின் குடும்ப சூழலில் கணவன், அவர்களின் வியாபாரம், அதை சார்ந்த அவர்களின் வாழ்வியல், பெரும்பாலும் இன்னொரு திருமணம், அதை சுற்றிய புரிதல், சமூக கட்டமைப்பில் சகித்து வாழ்தல் என்பதாக இருக்கிறது. என்னை பெரிதும் ஈர்த்த விஷயங்கள், இந்த கதைகளில் சொல்லப்படும் செட்டிநாட்டு வீட்டின் அறிமுகங்களும், அவர்கள் பயன்பாட்டில் இருந்த சொல்லாடல்கள், பழக்கவழக்கங்கள் போன்றவை புதிதாக இருந்தது.
எல்லா காலகட்டத்திலும் பெண்கள் தங்களை சுற்றி ஒரு பிம்பத்தை வடிவமைத்துக் கொண்டு, அதை மெய்யாக்கவும், அதை மெய் என்று எண்ணியும், தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் இட்டுச் செல்வதாகவே எனக்குப்பட்டது. சில கதைகளில் இப்படியான மனிதர்கள் கூட இங்கு வாழ்ந்திருக்கிறார்களோ என்ற எண்ணம் வராமல் இல்லை.
இந்த கதைகளின் வழியாக சமூகத்தில் முன்னிறுத்தப்படுகிற ஆணின் படிவம், அவன் பின்னால் இருக்கும் பெண்ணோடு எவ்வளவு தொடர்புடையது என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். இந்தப் பகுதி சார்ந்த கதைகளில் அவர்களின் வீடுகளில் உதவிக்கு இருக்கும் பெண்களின் கதைகளும் வருவதிலிருந்து, இரண்டு வேறு வேறு தளங்களில் இருக்கும் பெண்கள் பழகிக் கொள்ளும் விதமும், ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொண்டு இணைந்து வாழ்வதில் உள்ள புரிதலும் நம்மால் அறிய முடிகிறது.
என் வரையில் சூலாட்டுக்குட்டி, புவனா இரண்டு கதைகள் மனதிற்கு மிக இணக்கமாக ப்பட்டது. சூலாட்டுக்குட்டி, எப்பொழுதும் என் மனதில் இந்த தலை முறை என்று இல்லாமல் இதற்கு முந்தைய தலைமுறையும், கணவர்களை முதல் பிள்ளைகளாகவே ஏற்று வாழ்வில் பல நிலைகளில் நடத்திக் கொண்டு வருவதாக நான் நினைக்கிறேன். கணவன் இல்லாத பெண்களும், மனைவி இல்லாத ஆண்களும் ஒரு துணையை இழந்ததாக தோன்றினாலும், மனதளவில் இவை இரண்டும் வெவ்வேறு வகையான சூழல்கள். மனைவியை இழந்தால், வேற எந்த உறவுகளாலும் இட்டு நிரப்பிக் கொள்ள முடியாத ஒரு சூழல்தான் வயதான காலத்தில் அல்லது இளமையிலோ ஒரு கணவனுக்கு அமைகிறது. மிக அருமையாக சூழாட்டுக்குட்டி இந்த விஷயத்தை கையாண்டு இருக்கிறது. இதை பெரும்பாலும் இன்றைய தலைமுறை அப்பாக்கள் அறிந்திருக்கிறார்களா என்பது கேள்விதான். என் அப்பா உட்பட….
புவனா தனிப்பட்ட முறையில் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட வேண்டிய திருமணம் என்று கட்டாயத்தில் என் வாழ்க்கையில் நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேனோ, அதில் சிறிய பகுதியை இங்கு படித்தேன். இதுவும் இதை தாண்டி நிறைய செய்ததில் இப்பொழுது நினைக்கும் பொழுது சிரிப்பாக இருந்தாலும், அன்றைய பொழுதுகளில் அது பெரும் வலி. பெரும் புரிதலும், அதை சார்ந்த பொறுமையும் இத்தகைய சூழலை கையாள உதவி இருக்கலாம். புவனாவை போன்று என் குடும்பத்திலும் யாருக்கும் அந்த புரிதல் இல்லை… ஆணாகப் போனதாலே அவர் மகன் முடியாது என்று கூற இடம் இருந்தது, அத்தகைய இடமும் எனக்கு இல்லை….
அருமையான ஒரு புத்தகத்தை எழுதியதற்கு தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களுக்கும், பதிப்பித்த Herstories பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)