எனது நூல்கள்.

சனி, 19 மே, 2018

பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன். தினமலர் சிறுவர்மலர் - 17.


பரமாத்மாவுடன் கலந்த பறவைகளின் அரசன்.

ருமேகங்கள் சூழ்ந்து நிற்கின்றன. இன்றைக்கு என்ன வெளிச்சத்தையே காணமுடியவில்லையே. உயர்ந்து ஓங்கி வளர்ந்திருந்த ஒரு ஆலவிருட்சத்தில் அமர்ந்திருந்த அந்தப் பறவைகளின் அரசன் தன் இறக்கைகளைச் சோம்பல் முறித்து விழிக்கிறார். சடசடவென தெறித்து விழுகின்றன முதிர்ந்த மரத்தின் சுள்ளிகள்.

அவருக்கு வயது 60,000 ஆண்டுகள்.உள்ளத்தில் நன்னெறிகள் நிரம்பியதால் இன்னும் பறந்து விரிந்த பிரம்மாண்ட சிறகுகளும் தீட்சண்யமான பார்வையும் கொண்டு திடமாகத்தான் விளங்குகிறார். 
  
வானம் இன்னும் மேகமூட்டத்துடந்தான் இருக்கிறது. இன்று என்னவோ ஒரு அசம்பாவிதம் நிகழப்போகிறது என்று ஏனோ தோன்றியது அந்தப் பறவைகளின் அரசனான ஜடாயுவுக்கு. மனதில் இனம் தெரியாத ஒரு அவசம். என்னவானால் என்ன எதிர்கொள்ளத்தானே வேண்டும். தன் தினப்படி காரியங்களை முடித்துவிட்டு நிஷ்டையில் அமர்ந்திருக்கிறார்.

அது சரி இந்த ஜடாயு யார். அவர் மனதை அச்சுறுத்திய அசம்பாவிதம்தான் என்ன ?

பெரியப்பா.. பெரியப்பா” என்ற குரல்கள் அசைக்கின்றன. ஆனால் கண் விழிக்க இயலவில்லை. அரைக்கண் மூடியபடி பார்க்கிறார் ஜடாயு. தயரத புத்திரர்கள்தான். ஒருவித ஏலாமையுடன் அவர்களிடம் அந்த அசம்பாவிதத்தைச் சொல்லியவுடன் அவரது கண்கள் நிரந்தமாக மூடுகின்றன.

ஞ்சவடி. ஐந்து ஆலமரங்கள் கூட்டமாக நிற்கின்றன. அவற்றில் ஒன்றில் அமர்ந்திருக்கிறார் பறவைகளின் அரசன் ஜடாயு. இவர் அருணனின் இளைய மைந்தன். ஏதோ நரர்களின் அரவம் கேட்கிறதே. தான் அமர்ந்திருந்த கிளைகளிலிருந்து எட்டிப் பார்க்கிறார். அட இவர்களா..? அவர் முகம் மலர்கிறது. தன் இறக்கைகளை விரித்துப் பறந்துவந்து அவர்கள் முன் நின்று முகமன் கூறுகிறார்.  

அந்த நரர்கள் வேறு யாருமல்ல அவரது நண்பர் அயோத்தியின் அரசர் தயரதனின் புத்திரர்கள் ராமர், இலக்குவன், அவரது மருமகள் சீதை ஆகியோர்தான். அவர்களும் அவரைப் பணிந்து முகமன் கூறுகிறார்கள்.

சம்பாசுரப் போரில் அவர் தசயரதனின் உயிரைக் காப்பாற்றியதால் அவரை ராமனும் இலக்குவனும் பிரியத்துடன் பெரியப்பா என்றே அழைப்பார்கள்.

இனி இங்கேதான் தாங்கள் தங்கப்போவதாக அவர்கள் கூற மிக மகிழ்வோடு தானும் உறுதுணை இருப்பதாக உறுதி கூறுகிறார் ஜடாயு. அந்த ஆரண்யமே மிக அழகாகி விட்டது ராம சீதை இலக்குவனின் வரவால்.

மிக அழகான ஒரு பர்ணசாலை அமைத்துத் தங்கி இருக்கிறார்கள் மூவரும். புதரும் கொடியுமாகக் கிடந்த இடம் அவர்கள் வருகைக்குப் பின் பூத்துக் குலுங்குகிறது. பட்சிகளின் கானம் எங்கும் நிரம்பி ஒலிக்கிறது.

ரு நாள் ராமரும் இலக்குவனும் சீதையும் அமர்ந்திருக்கும்போது அழகான மான் ஒன்று துள்ளி விளையாடுகிறது. அதன் அழகால் கவரப்பட்ட சீதை அது வேண்டுமெனக் கேட்க ராமர் உடனே அதைப் பின் தொடர்கிறார். அதுவோ ஒரு மாயமான். மாரீசன் என்னும் அரக்கன்தான் மான் உருக்கொண்டு அங்கே ஓடி வந்தது. சிறிது தூரம் சென்றதும் அம்மாயமான் ராமரின் குரலில் “அபயம்” என்று அலறுகிறது.

துணுக்குற்ற சீதை உடனே இலக்குவனைப் போய்ப் பார்க்கும்படிக் கூறுகிறாள். முதலில் மறுத்த இலக்குவன் பின் செல்ல சம்மதிக்கிறான். ஆனால் ராமரைக் காணச் செல்லுமுன் ஒரு கோட்டை வரைந்து அதைத் தாண்டவேண்டாம் எனக் கூறிச் செல்கிறான்.

அவன் சென்றதும் அதற்காகவே காத்திருந்தாற்போல் வருகிறான் இலங்காதிபதி இராவணன். தன் உருவில் சென்றால் அவளைக் கவர முடியாது என்று ஒரு சந்நியாசி உருவெடுத்து யாசிக்கிறான். வீட்டின் வாசல்படியை அண்ட முடியவில்லை. ஏதோ தடுக்கிறது அவனை. அது இலக்குவன் இட்ட கோடுதான்.

குடிலில் வெளியே வந்து பார்க்கிறாள் சீதை. யாரோ ஒரு துறவி பசியுடன் இருப்பது தெரிகிறது. இரக்க சுபாவத்துடன் உள்ளே சென்று உணவை எடுத்து வருகிறாள். நயவஞ்சக ராவணனோ நடந்து வாங்கிக் கொள்ள இயலாதவன் போல் அந்த இலக்குவனின் கோட்டுக்குப் பின்னே நிற்கிறான். இளகிய மனம் கொண்ட சீதை தன்னை மறந்து அக்கோட்டைத் தாண்டிச் சென்று உணவை அளிக்கிறாள்.

ஐயகோ இதென்ன அந்த சந்நியாசி திடீரென ஒரு அரக்கனாக ஆகிவிட்டானே. அவனுக்குப் பத்துத் தலை இருபது கரங்கள் முளைத்திருக்கின்றவே.. இதைப் பார்த்தவுடன் தலை சுற்றுகிறது சீதைக்கு.

மயங்கி விழும் அவளைப் பிடித்துக் கொள்கிறான் இராவணன். தன்னுடைய புஷ்பக விமானத்தை அங்கே  பறந்துவரச் செய்து அதில் ஏற்றுகிறான். கனவா நனவா என்றறியாததால் திகைத்து மயங்கிய சீதை அபயக்குரல் எழுப்புகிறாள்.

மரத்தின் மேல் அமர்ந்திருந்த பறவைகளின் அரசனுக்கு அவள் குரல் எட்டுகிறது. ஈதென்ன சத்தம். சீதையின் குரல் போல் தெரிகிறதே. தன் இறக்கைகளை விரித்து ஜடாயு சர்ரென்று காற்றைக் கிழித்துப் பறக்கிறார். என்னது ஏதோ ஒரு இயந்திரம் பறவை போலப் பறந்து வருகிறதே அதில் ஒரு அரக்கன் இருக்கிறானே.

அடடா இதென்ன இவ்வரக்கன் கையில் சீதையுமல்லவா சிக்கி இருக்கிறாள். அவனுடன் போராடியபடி தன் நகைகள் ஒவ்வொன்றாக அவள் கழட்டி வீசி ஒரு தடத்தை உருவாக்குகிறாள். ஜடாயுவைப் பார்த்ததும் அவள் இன்னும் உக்கிரமாக அந்த அரக்கனின் பிடியில் போராடுகிறாள்.

வேகவேகமாகச் சென்று இந்த அநீதியைத் தடுத்து அவளைக் காக்க விழைகிறார். அந்த புஷ்பக விமானம் தெற்கு நோக்கிப் பறக்கிறது. லேபாக்க்ஷியைத் தாண்டுகிறது. அவரும் துரத்தியபடி பறக்கிறார். அந்த அரக்கனின் தோளில் அமர்ந்து கீறுகிறார். சண்டையிடுகிறார்.

”அடுத்தவன் மனைவியை அபகரிப்பது குற்றம். அடுத்துக் கெடுப்பது தவறு. ராமன் நீதிமான். ஒரு மன்னனான நீயே இக்குற்றம் புரியலாமா. “ அவர் கூறிய அறிவுரை மொழிகள் அவன் செவிக்குள் புகவில்லை.

அவரை நோக்கி அம்பு மழை பொழிகிறான். அவரோ தன் கூரிய மூக்காலும் கால்களாலும் அவனைக் கொத்துகிறார். தீயைத் தோய்த்துப் பாணங்களில் எய்கிறான் ராவணன். அவற்றை இறக்கைகளால் வீசி அணைத்துவிடுகிறார் ஜடாயு.

சுற்றிச் சுழன்று சண்டையிட்டவாறு தொடர்கிறார் ஜடாயு. ஆனால் வயதோ 60, 000 ஆகிவிட்டதே. அசுரத்தனத்தின் முன் வயோதிகம் தோற்கத் தொடங்கியது. இடைவிடாமல் தொடர்ந்து போரிடும் அவரைக் கண்டு வெகுண்ட இராவணன் சிவன் தனக்களித்த சந்திரகாசம் என்னும் வாளினால் அவரது இறக்கைகளை வெட்டுகிறான். அவரது உயிர் அவரது சிறகுகளில் இருப்பதால் அவர் தொய்ந்து பூமியில் விழுந்து விடுகிறார். அந்தப் புஷ்பக விமானம் அவரது கண்ணெதிரே சீதையின் அபயக்குரலோடு போயே போய்விட்டது.  

றக்கைகள் அறுபட பாறைகளின் மேல் துடித்துத் துவண்டுகிடக்கிறார் ஜடாயு. ஓடிவருகிறார்கள் இராமனும் இலக்குவனும். அவர் கிடக்கும் நிலை கண்டு கண்கள் கசிய அவரைத் தன் மடியில் ஏற்றிக் கொள்கிறார் இராமன்.

மாயத்தால் சீதையைக் கவர்ந்து சென்றவன் ஒரு அரக்கன் என்றும் அவன் தெற்குத் திசை நோக்கிச் சென்றதாகவும் சொல்கிறார் ஜடாயு. சீதையைக் காக்கச் செல்லுமுன் ஜடாயுவுக்கான இறுதிக்காரியங்கள் செய்துவிட்டுச் செல்லலாமே என எண்ணுகிறார் ராமர்.

தன் தந்தையைப் போன்ற ஜடாயு தன் கைகளில் மரித்தது கண்டு கலங்குகிறது ராமனின் உள்ளம். தந்தைக்குச் செய்யாத ஈமச்சடங்குகளைத் தன் பெரிய தந்தையான ஜடாயுவுக்குச் செல்ல விழைகிறார்.

அம்பு ஒன்றை எடுத்து அவர் அடிக்க அங்கே ஏழு புனித தீர்த்தங்களும் தோன்றுகின்றன. இறுதிச்சடங்குகளை நிகழ்த்துகிறார் ராமர். யாருக்கும் கிடைக்காத பெரும்பேறு பரமாத்மா கைகளினால் ஜடாயுவுக்குக் கிடைத்தது. பறவை அரசனின் இறுதி மூச்சு பரமாத்மாவுடன் கலந்து நித்யமோட்சம் பெற்றது.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 4. 5. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார். 

3 கருத்துகள் :

Manavalan A. சொன்னது…

Paravai kathai Donna vitham nalla puriyum vitham ullathu.

R Muthusamy சொன்னது…

ஜடாயுவின் கதை சுவாரஸ்யம்

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மணவாளன்

நன்றி முத்துசாமி சகோ


வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...