எனது பதிநான்கு நூல்கள்

சனி, 28 ஆகஸ்ட், 2021

சாட்டர்டே போஸ்ட். தலைமை ஆசிரியை கலைவாணி கூறும் இணையவழி வகுப்பின் இன்னொரு பக்கம்

 காரைக்குடியில் 2016 இல் த.மு.எ.க.ச கூட்டம் ஒன்று மகரிஷி வித்யா மந்திரில் நடைபெற்றது. உறவினரோ நண்பரோ ( ஞாபகமில்லை ) அது பற்றிச் சொன்னதால் அங்கே சென்றேன். அந்த நிகழ்வுக்குச் சென்றபோது கலைவாணி ஒரு நூல் பற்றி விமர்சித்துக் கொண்டிருந்தார். அதுதான் முதல் சந்திப்பு. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நட்பில் இருக்கிறோம், நேரிலும் முகநூலிலும். அவ்வப்போது சந்தித்துக் கொள்வோம். அக்கா என்று உரிமையாய்ப் பாசத்தோடு அழைப்பார். 


தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் காரைக்குடி புத்தகத் திருவிழாக் குழுவினரும் இணைந்து நடத்திய கண்காட்சியில் விஞ்ஞானி ரகுபதி விருது பெற என் பெயரைப் பரிந்துரைத்திருக்கிறார் . ( திரு வினைதீர்த்தான் சாரும். இருவருக்கும் கடமைப்பட்டுள்ளேன். ).

ஆசிரியையாக இருக்கும் கலைவாணியின் பல்சுவைப் பேச்சை பலமுறை சுவைத்திருக்கிறோம் அனைவரும். மகளிர் தினத்தில் த.மு.எ.க.ச சார்பாக நடந்த கூட்டத்தில் அவரது தலைமையில் 16 பெண்களுக்கு மேல் கலந்து கொண்டு பதினைந்து பெண்கள் உரையாற்றினோம். அந்த நிகழ்வில் அவரது தலைமை உரை மிகச் செறிவாய் இருந்தது. த.மு.எ.க.சவுக்கும் நன்றி. த.மு.எ.க.சவின் எந்த ஒரு நிகழ்வுக்கும் அவரும் அவரது கணவரும் முன்னின்று தோள் கொடுப்பார்கள். 

அவர் த.மு.எ.க.சங்கத்தின் சிவகங்கைக் கிளையில் குழு உறுப்பினராய் இருக்கிறார். சிறுகப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். அவரிடம் கொரோனா கால ஆன்லைன் கல்வியின் சாதக பாதகம் பற்றியும், அதனால் குழந்தைகள் எதிர்கொள்ளும் இடர் பற்றியும் எனது ”சும்மா” என்னும் வலைப்பூவுக்காக எழுதித் தரும்படிக் கேட்டிருந்தேன். அவர்  எழுதி அனுப்பியதை இங்கே பகிர்வதில் மகிழ்கிறேன். 


/// இணையவழி வகுப்பின் இன்னொரு பக்கம்

“ஈதல் இயல்பே இயம்பும் காலை 
காலமும் இடமும் வாலிதின் நோக்கி
சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி
உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து
விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து
கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங்கொளக்
கோட்டமில் மனத்தில் நூல் கொடுத்தல் என்ப”

என்று ஆசிரியர் மாணவர்களுக்குப்  பாடம் சொல்லிக் கொடுக்கும்  முறை பற்றிச் சொல்கிறது நன்னூல்.  கொரனோ என்னும் தொற்றுநோய், 

”அலையே சிற்றலையே 
கரை வந்து வந்து போகும் அலையே ”

என முதல்அலை,  இரண்டாம் அலை முடித்து மூன்றாம் அலையாகவும் வரப்போகிறது என்று அச்சுறுத்துகின்றனர்.  ஆன்லைன் கல்வி முறை மாணவர்களின் மனநிலையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஆண்ட்ராய்டு போன் இல்லாத குழந்தைகள் ஏங்கித் தவிக்க வசதியுள்ள குழந்தைகள் ஃப்ரீ பயர், மைன் கிராஃப்ட் என்று கல்விக்கென வாங்கித்தந்த போன்களில் சிக்கிச் சின்னாபின்னமாக தொடங்கிவிட்டனர். 

டெஸ்ட் வைத்தால் வகுப்பு நண்பர்களுக்கும் பதிலை பிடிஎஃப் ஆக அனுப்பி வைப்பது, மைக்கை ஆஃப் செய்துவிட்டு ஆசிரியரின் பாடத்தை மினிமைஸ் செய்துவிட்டு  யூடியூப் பார்ப்பது பார்ப்பது, சிக்னல் கிடைக்கவில்லை என பொய் கூறுவது என எல்லா வகையான தகிடு தத்தங்களையும் கற்று வருகின்றனர். ”இது தவறு என்பதே இல்லை ” என்ற மனப்பான்மையுடன் குழந்தைகள் வளர்கின்றனர் என்பது வேதனைக்குரிய உண்மை. சமீபத்தில் அரசுப் பள்ளிகளில் நடந்த சில வேடிக்கையான சம்பவங்களைச் சொல்லவேண்டும். 

”ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு மாணவர்கள் பள்ளி்க்கு வந்து இரண்டாம் பருவத்திற்கான புத்தகங்களைப் பெற்றுச் செல்லுங்கள்” என்று தலைமை ஆசிரியர் அறிவிப்பு செய்ய,  ஏழாம்  வகுப்பு மாணவி புத்தகம் வாங்க வந்தாள். ஏற்கனவே கையெழுத்து போட்டு இருப்பதைப் பார்த்து ”நீ ஏற்கனவே புத்தகம் வாங்கி விட்டாயே” என்ற உடன் தான் ”இந்தப் புத்தகம் வீட்டில் இருக்குது” என்று திரும்பிச் சென்றாள்.  புத்தகத்தை விரித்துப்  படிக்க வில்லை, ஏன் பார்க்கவே இல்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது. 

ஆறாம் வகுப்பில்  சேர்ந்த மாணவி சென்ற ஆண்டு ஏழாம் வகுப்புக்கு ஒரு நாள் கூட வரவில்லை. இந்த ஆண்டு எட்டாம் வகுப்பு வாட்ஸ்அப் குரூப்பில் அவள்  பெயர் சேர்க்கப்பட்ட உடன் ஆசிரியருக்கு போன் செய்து ”நான் ஒன்பதாம் வகுப்பு படிக்க வேண்டும். என்னை ஏன் மிஸ் எட்டாவது வகுப்புக்கான குரூப்பில் சேர்த்தீங்க.?” என்று கேட்டுத் திகைக்க வைத்து விட்டாள். 

பள்ளியில் வைக்கும் தேர்வுகளுக்கான விடைகளை வாட்ஸ்அப் குரூப்பில் பகிரும் நகரத்துப் பெற்றோர்களுக்கும்,  என் பிள்ளைக்கு எதுவும் சொல்லித் தர முடியலையே என வருந்தும் கிராமத்துப் பெற்றோர்களுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய இடைவெளியை எதைக்கொண்டு இட்டு நிரப்புவது?.  தன் பிள்ளைகளின் ஆன்லைன் டெஸ்ட் செய்யும் வகுப்பையும் கவனித்து விடை அனுப்பும் ஆசிரியர்கள் தங்களிடம் படிக்கும் பிள்ளைகளின் கல்வியில் முழுக் கவனம் செலுத்துவதில்லை என்பதும் வருத்தம் தரக்கூடிய உண்மை.

 செப்டம்பர்- 1 பள்ளிகள் திறக்கப் போகிறது என்ற உடன் அதிர்ச்சி அடையும் பிள்ளைகள் ஒருபுறம். அதெல்லாம் திறந்திட முடியாது, கொரோனா திரும்பவும் வரும் என நம்பும் பிள்ளைகள் ஒருபுறம் என்று கலவரமான சூழல் தான் இன்று நிலவுகிறது.

 ”உழைப்பு இல்லாத செல்வம் 
மனசாட்சி இல்லாத மகிழ்ச்சி 
மனிதநேயம் இல்லாத அறிவியல் 
பண்பாடு இல்லாத அறிவு 
நீதி இல்லாத வர்த்தகம் 
தியாகம் இல்லாத வழிபாடு”  

என இவையெல்லாம் பயனற்றவை என்பதை மாணவரும் ஆசிரியரும் பெற்றோரும் உள்ளடக்கிய சமுதாயம் உணர அற வழிபட்ட கல்வி வேண்டும். அதற்குப் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்.

க. கலைவாணி,
கோட்டையூர்.///

டிஸ்கி:- நன்னூலோடு அலைபாயுதே பாடலையும்  சொல்லி ஆன்லைன் கல்வியின் பாதகங்களை நேர்த்தியாகப் பட்டியலிட்டுள்ளீர்கள் கலைவாணி.  விளையாட்டுகளில் சிக்கித் தவிக்கும் பிள்ளைகள், கல்வி கற்க முடியாத பிள்ளைகள் என ஒரு ஆசிரியையாகத் தாங்கள் கூறியிருக்கும் கருத்துக்கள் மனதைக் கனக்கச் செய்தன. 

கொரோனா வந்த இந்த ஒன்றரை வருடத்தில் பிள்ளைகளின் கல்வித் திறன் பாதிப்பை இதைவிட விரிவாகச் சொல்ல முடியாது. எந்த வகுப்பில் படிக்கிறோம், என்ன புத்தகம் படிக்க வேண்டும் என்று கூடத் தெரியாமல் ஒரு விசித்திரச் சுழலுக்குள் ஆழ்த்தி விட்டது இந்த ஆன்லைன் கல்வியும் கொரோனா லாக்டவுனும். 

நகரத்து மற்றும் கிராமத்துப் பெற்றோரின் அவதி பற்றியும் கூறியுள்ளீர்கள். அதே சமயம் ஆசிரியர்கள் சிலரின் பொறுப்பற்ற தன்மையையும் சாடி உள்ளீர்கள். மொத்தத்தில் பள்ளி திறப்பது குறித்து ஏற்பட்டிருக்கும் இந்தக் கலவரமான சூழல் முடிவுக்கு வந்து அறவழிப்பட்ட கல்வி அனைவருக்கும் கிட்ட வேண்டும் என்ற உங்கள் ஆதங்கம் மனதை தொட்டது. பள்ளி திறக்க வேண்டும். பாலர்கள் பாதுகாப்புடன் பள்ளி வந்து கற்று இன்னும் மேன்மையடைய வேண்டும் என்பதே என்னுடைய வாழ்த்துக்களும். 

சாட்டர்டே போஸ்டுக்காக இன்றைய சூழலில் மிகத் தேவையாக இருக்கும் ( நேரடிப்)  பள்ளிக் கல்வி பற்றிக் குரல் கொடுப்பதற்கும் எழுதி அனுப்பியமைக்கும் அன்பும் மகிழ்ச்சியும் கலைவாணி. உங்கள் தொண்டு சிறக்கட்டும். உங்களிடம் கற்கும் மாணாக்கர்கள் ஒளிவீசும் தீபங்களாகச் சுடரட்டும் என வாழ்த்துகிறேன். 

5 கருத்துகள்:

 1. கலைவாணி ஐயை, தங்களின் கருத்து உண்மையின் உரைகல்.


  பதிலளிநீக்கு
 2. கொரொனா கால இணையவழி கல்வியின் போக்கும் தாக்கமும் குறித்து ஓர் கடமை உணர்வுமிக்க ஆசிரியையாக, பெற்றோராக, சமூகப்பொறுப்புள்ள பெண்மணியாக முப்பரிமாணத்தில் மனதைத்தொடும் வகையில் பகிர்ந்த திருமதி.கலைவாணிக்கு வாழ்த்துகள்.
  ஜனநேசன்

  பதிலளிநீக்கு
 3. கொரொனா கால இணையவழி கல்வியின் போக்கும் தாக்கமும் குறித்து ஓர் கடமை உணர்வுமிக்க ஆசிரியையாக, பெற்றோராக, சமூகப்பொறுப்புள்ள பெண்மணியாக முப்பரிமாணத்தில் மனதைத்தொடும் வகையில் பகிர்ந்த திருமதி.கலைவாணிக்கு வாழ்த்துகள்.
  ஜனநேசன்

  பதிலளிநீக்கு
 4. திரு கிருஷ்ணகுமார் அவர்கள் கூறியது.

  மாணவர்களை மட்டுமல்ல, சமுதாயத்தையே சோம்பேறி ஆக்கிவிட்டது கொரோனா. adolescent age எனப்படும் 13 to 17 வயதில் குழந்தைகள் கையில் internet, android phone, laptop என்பது கலாச்சார சீரழிவுதான் ஐயமில்லை. மேற்கத்திய நாடுகள் 50 வருடங்களுக்கு முன்பே இப்படி ஆகிவிட்டன. உங்கள் ஆதங்கத்தை நானும் பகிர்ந்து கொள்கிறேன்.


  கவிஞர் மதுமிதா கூறியது.

  கலைவாணி மிகவும் அழகாக வருத்தமான நிலையை சூழலை பதிவாக எழுதி இருக்கிறீர்கள்... நன்றி ❤️🙏 பகிர்ந்த தேனுமா க்கு 😍🙏🙌

  திரு ஜீவசிந்தன் சார் கூறியது.

  மிக்க மகிழ்சி.அருமையான பதிவு. கலைவாணி மேடம் மிகச்சிறந்த பேச்சாளர் அறிவோம். மிகச் சிறந்த எழுத்தாளர் என்பதை இப்பதிவின் வழியே அறிகிறோம். ஒரு சின்ன திருத்தம் காரைக்குடி கிளை தமுஎகச உறுப்பினர்.சிவகங்கை மாவட்டக் குழு உறுப்பினர்.காரைக்குடி கிளையில் 10 பேருக்கும் மேல் ஆற்றல் மிக்க சகோதரிகள் கவிஞர்களாக, பேச்சாளார்களாக இருக்கிறார்கள் என்பது நாம் பெருமைப்பட வேண்டிய விசயம். அவர்களின் ஆற்றலை அறிய நாம் நடத்திய வார இலக்கிய சந்திப்புகள் தான் வாய்ப்பினை ஏற்படுத்தித் தந்தது. தேனம்மை மேடமும் அவ்விதம் அறியப்பட்டவரே. மாநில அளவில் அறியப்படும் வாய்ப்பை ஏற்படுத்தும் அளவிற்கு மிகப் பரந்த கட்டமைப்பைக் கொண்டது தமுஎகச .உரிய காலம் விரைவில் வரும். மாநில அளவில் அறியப்படுவார்கள்
  .நன்றி தேனம்மை மேடம் அவர்களுக்கு .வாழ்த்துகள் கலைவாணி மேடம் அவர்களுக்கு.

  திரு சங்கர சுப்ரமண்யன் அவர்கள் கூறியது

  தமுஎகச மாவட்டக்குழு உறுப்பினர் கலைவாணி அவர்களின் ஆன்லைன் கல்வி படாதபாடு படுவதை விளக்கும் கள அனுபவ பதிவு அருமை

  விடுங்க இரண்டு வருடம் பிள்ளைங்களுக்கு லீவ் விட்டதாக நினைத்முக்கொள்வோம்

  ஆன்லைன் கல்வி ஒன்னத்தையும் கற்றுக்கொடுக்கலைன்னாலும் ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருக்கிறோம் என்ற வகையில் திருப்தி அடைவோம்

  பரிட்சை என்பது வித்தவுட் புக்காகத்தான் இருக்க வேண்டுமா என்ன?

  வித் புக்காக... வித் ஆன்சராக கூட இருக்கட்டுமே

  அதிலிருந்து துளியூண்டாவது கற்றுகொண்டிருந்தால் கூட சரிதான்

  பள்ளி திறந்தபின இடை நிற்றல் ஆன குழந்தைகளை தேடி கண்டுபிடித்து கொண்டு வருவோம்.

  என்ன நான் சொல்றது?

  ஒரு சிறந்த ஆசிரியர் என்பவர் எப்போதும் கற்றுக்கொண்டு இருப்பவராக இருக்க வேண்டும்

  நம்ம எச் எம் அவ்வாறு இருக்கிறார்

  புத்தகம் வாங்கி படிப்பதை எச் எம்மும் அவரது இணையர் பேராசிரியரும் எப்போதும் செய்துகொண்டிருப்பது சிறப்பானது

  அது இருவரையும் நாம் வாழும் சமூகத்தை பற்றி, மாணவர்களை பற்றி கவலைப்படுபவர்களாக , தன்னால் முடிந்ததை செய்ய வேண்டும் என்று துடிப்பவர்களாக மாற்றி வைத்திருக்கிறது

  வாழ்த்துக்கள்

  சாட்டர்டே போஸ்ட் மூலம் அவர்களை மேடையேற்றிய தேனம்மை அவர்களுக்கு பாராட்டுகள்

  திரு வினைதீர்த்தான் அவர்கள் கூறியது

  சிறந்த இயல்பான நிலை உணர்த்துகிற பதிவு.

  தங்களுக்கும், திருமிகு கலைவாணி, திருமிகு தேனம்மை, திரு ஜீவசிந்தன், திரு நாகநாதன், குழு அனைத்து உறுப்பினருக்கும் இனிய நல்வாழ்த்து.

  சொ.வினைதீர்த்தான்

  பதிலளிநீக்கு
 5. நன்றி மோகன் சார்

  நன்றி ஜனநேசன் சார்

  நன்றி கிருஷ்ணகுமார் சார்

  நன்றி மதுமிதா

  நன்றி ஜீவசிந்தன் சார்

  நன்றி சங்கரசுப்ரமண்யன் சார்

  நன்றி வினைதீர்த்தான் சார்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...