எனது புது நாவல்.

வெள்ளி, 8 டிசம்பர், 2017

கீத்துக் கொட்டாயும் தாய்மாமன் குடிசையும்.

தென்னங்கீற்று

”தென்னங்கீற்று ஊஞ்சலிலே தென்றலில் நீந்திடும் வேளையிலே,” ”தென்னங்கீற்றும் தென்றல் காற்றும் கைகுலுக்கும் காலமடி”., ”பாடும்போது நான் தென்றல்காற்று பருவமங்கையோ தென்னங்கீற்று”., என்று தென்னங்கீற்று பற்றிய சினிமா பாடல்கள் அநேகம். இங்கு இந்தக் கட்டுரையில் நாம் தென்னை மரத்தைப் பற்றிப் பார்க்கப் போவதில்லை தென்னங்கீற்றை மட்டுமே பார்க்கப் போகிறோம்.

காணி நிலம் வேண்டும் என்று பராசக்தியை வேண்டிய பாரதி அங்கு கேணியருகினிலே தென்னையிளங்கீற்றும் இளநீரும் வேண்டும் என்று பாடி இருக்கிறார். வீட்டுக்கொரு தென்னை வளர்க்கவேண்டும் என்று அரசாங்கமும் கூறி வருகிறது. கேரளாவில் எங்கெங்கு நோக்கினும் தென்னைதான்.

”வானத்தைப் போலே” என்னும் படத்தில் பாசக்கார அண்ணன் விஜய்காந்த் கொட்டும் மழையில் தன் சகோதரர்களை மடியில் உறங்கச் சொல்லி அவர்கள் மேலே மழை விழாமல் தென்னை மட்டையால் காக்கும் காட்சி கண்கசிய வைத்தது. 


சூரிய ஒளியையும் சந்திர ஒளியையும் கவர்ச்சிகரமாக ஆக்குவதில் தென்னங்கீற்றின் பங்கு அதிகம். கொதிக்கும் வெய்யிலில் கொத்துவாட்களைப் போல சலசலத்து அலையும் தென்னங்கீற்று ரசனைக்குரியது. அதேபோல் மயக்கும் இரவில் பௌர்ணமி நிலவினை மாடியில் அமர்ந்து தென்னங்கீற்று வழி பார்ப்பதும் இனம்புரியாத அழகைத் தருவது.

உத்தமர்தாம் ஈயுமிடத்து ஓங்குபனை போல்வரே
மத்திமர்தாம் தெங்குதனை மானுவரேமுத்தலரும்
ஆம் கமுகு போல்வார் அதமரவர்களே
தேன் கதலியும் போல்வார் தேர்ந்து (நீதி வெண்பா)

- என்கிறது நீதி வெண்பா. இதில் மனிதர்களின் மன உயரம் குறித்துச் சொல்லப்பட்டாலும் மரம் ஏறிப்பறித்தால்தான் தென்னை இளநீர் தருகிறது என்றும் பொருள் கொள்ளலாம்.  

இத்தென்னை திருத்தெங்கூர், வடகுரங்காடு போன்ற சில கோயில்களில் ஸ்தலவிருட்சமாகவும் விளங்குகிறது. தென்னை மட்டையால் செய்யப்படும் விசிறி கோடையின் துன்பத்தையும் வியர்வையின் துயரத்தையும் போக்குவது. மின்சாரமற்ற நேரங்களிலும் இயற்கைக் காற்று அளிப்பது. தென்னை விசிறிகள் தென்னை மட்டையைக் கைப்பிடியாகக் கொண்டு சதுர வடிவில் இருக்கும். கோடையில் விசிறியைத் தானமளிப்பது சிறந்த தர்மமென்று சொல்கிறார்கள்.

தென்னங்கீற்று வேய்ந்த குடிசை வெய்யிலையும் வெக்கையையும் துரத்தி இயற்கையான வாழ்வுக்கு அச்சாரம் அளிக்கிறது. இம்மாதிரி குடிசைகளே எக்கோ ஃப்ரெண்ட்லி எனப்படும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தது. தென்னங்கீற்றைக் கொண்டு கூரை வேய்வது மட்டுமில்லாமல் சிலர் அதையே கொண்டு பக்கவாட்டு மண் சுவர்களையும் மூடுவார்கள்.

”மூங்கில் தோட்டம்” என்றொரு ஊருக்கு ”கீற்று கிராமம்” என்றே பெயர். ஊர் முழுவதும் தென்னை மட்டைகள் கொண்டு கீற்று முடைகிறார்கள். மட்டைகள் முதலில் குளத்து நீரில் ஊறப்போடப்படுகின்றன. மறுநாள் இவற்றை இரண்டாகக் கிழித்து காலில் மட்டையை மிதித்துக் கொண்டு பின்னத்துவங்குகிறார்கள். முடிந்தவுடன் மடக்கிச் செருகுகிறார்கள். இங்கே இதுவொரு குடிசைத் தொழில்.ஆண்கள் பந்தல்போடும் வேலை செய்கிறார்கள். தினம் 200 ரூபாய் வரை இத்தொழிலில் வருமானம் ஈட்டுவதாகச் சொல்கிறார்கள்.

இக்கீத்துகள் மறைப்பாகவும் தென்னந்தட்டிகளாகவும் பயன்படுகின்றன. சில கிராமங்களில்  குளியலறைகளை இத்தட்டிகள் மட்டுமே கொண்டு அமைக்கிறார்கள். வேலிப்படல்களில் மறைப்புக்காக தென்ன மட்டையையோ, தட்டியையோ வைத்துக் கட்டுவோரும் உண்டு.

சில மாடர்ன் வீடுகளில் கூட தார்சு ( கான்க்ரீட்)  போட்ட மாடியில் தென்னங்கீற்றைப் பரப்பி வைத்தால் கோடையின் உஷ்ணம் தகிக்காது என்று கீத்துகளை வாங்கிப் பரப்பிவிடுகிறார்கள். ஏர்கண்டிஷன் போட்டதுபோல் வீட்டைக் குளுமையாக்க மொட்டை மாடியில் ”மட்டப் பந்தல்” போடும் வழக்கமும் உண்டு. இது குளிர்ச்சி தரவும் வெப்பத்தைப் போக்கவும் பயன்படுகிறது.

கேரளாவில் ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு நிகழ்த்தப்படும் ”பொங்காலை” என்னும் திருவிழாவில் பெண்கள் வேண்டிக்கொண்டு பொங்கல் பாயாசம் போன்ற பதினாறு வகை உணவுகள் படைப்பார்கள். முதன் முதலில் கோயிலின் மேல் சாந்தி தென்னங்கீற்றை தீபத்தில் இருந்து பற்றவைத்துக் கொடுக்க அனைத்துப் பெண்களும் ( ஊர் முழுக்க அனைத்துத் தெருக்களிலும்) தென்னங்கீற்றைக் கொண்டு அத்தீயை வாங்கி ( செயின் போல ஒருவரிடம் இருந்து மற்றவர் வாங்கி ) அடுப்பைப் பற்றவைத்து பொங்கல் வைத்து வணங்குகிறார்கள்.

குடிசை வேய்ந்த வீடுகள் மட்டுமல்ல, குடிசை வேய்ந்த கோயில்களும் தமிழகத்தில் பலவுண்டு. மண்ணையே அம்மனாகக் கருதி வழிபடும் பல கோயில்கள் மேற்கூரையாக குடிசையையே கொண்டிருக்கின்றன. புராண இதிகாசங்களில் காணப்படும் பர்ணசாலை, குடில் என்பவை எல்லாம் கீற்றாலும் ஒருவகைப் புல்லாலும் வேயப்பட்டவையே. 

கன்யாகுமரி, ராமநாதபுரம் மாவட்டக் கடலோர கிராமத்தின் வீடுகளில் காம்பவுண்டுச் சுவராக தென்னை மட்டையைச் சீவிக் கட்டுக்கோப்பாய் அமைக்கப்பட்ட வேலிகளைக் காணலாம். பச்சைத் தென்னை ஓலையில் பொம்மைகள், கொட்டான்கள் போன்ற கைவினைப்பொருட்கள் செய்யப்படுகின்றன.  

உயர்ந்த மூங்கில் சாரத்தின் மேல் தென்னங்கீற்றால் வேயப்பட்ட ”டூரிங்க் டாக்கீஸுகள் ” என்றழைக்கப்பட்ட அந்தக்கால தியேட்டர்கள் ”டெண்டுக் கொட்டாய்” என்றும் ”கீத்துக் கொட்டாய்” என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றன. திருவிழாக் கூத்து அரங்குகள், நாடக மேடைகள் ஆகியவற்றின் மேங்கோப்புகள் தென்னங்கீற்றால் அமைக்கப்பட்டவையே. அரசியல் மாநாட்டுக்கான அரங்கம், மைதானங்களில் போடப்படும் கண்காட்சிகள், திருமண அரங்குகளும் தென்னங்கீற்றால் வேயப்பட்டவையே. பொதுவாக வீடுகள் மட்டும் கோபுர அமைப்பில் வேயப்படுகின்றன. மற்றவை கிடைமட்டமாக வேயப்படுகின்றன.  

திருமண சமயங்களில் வீட்டின் முன்புற வாயிலிலும்  வீட்டின் உள்ளே உள்ள முற்றத்திலும் கொட்டகை போடுவதுண்டு. திருமணத்துக்குப் போடப்படுவது ”கல்யாணக் கொட்டகை” என்றும் இறப்பின் போது போடப்படுவது ”பந்தல்கால்” என்றும் அழைக்கப்படுகிறது. சிதம்பர்விலாஸ் என்னும் ஹெரிட்டேஜ் ஹோமில் ”பொம்மைக் கொட்டகை” என்றொரு கொட்டகை உள்ளது. அங்கே பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

”தாய்மாமன் குடிசை” என்று சடங்கான பெண்ணை வைத்து சுற்றிலும்  தென்னங்கீற்றால் வேய்ந்து குடிசை கட்டுவார்கள். இது தாய்மாமன் செய்யும் முக்கிய சடங்காக சில சமூகங்களில் இருந்து வருகிறது. பட்டு பவுன் என சீர் செனத்தி எடுத்துவரும் தாய்மாமன் பெண்ணைச் சுற்றிப் பச்சை ஓலைகளால் குச்சில் கட்டுவதை குடிசை கட்டுதல் என்பார்கள்.

திருமணப் பெண்ணுக்கோ, சடங்கான பெண்ணுக்கோ தலையில் வைத்துச் செய்யப்படும் தலை அலங்காரத்தில் ஜடைநாகத்தில் மலர்களைக்கோர்க்க இந்த தென்னை ஈர்க்குச்சிகள் பயன்படுத்தப்படுகின்றன.

திருமண அரங்கை அழகுபடுத்த ”மாவிலைத் தோரணம்” கட்டுவார்கள். இதைச் செய்ய மாவிலையுடன் தென்னங்குருத்துகள்  பயன்படுகின்றன. இவற்றைக் ”கூந்தல்” என்பார்கள். 

மங்கள தோரணம் செய்ய இந்தக் குருத்துக்களை மூன்று நான்கு இடங்களில் கீறி இரண்டாகப் பிரித்து அதை ஒன்றுக்குள் ஒன்று செருகி வி ஷேப்பில் மடிப்பார்கள். இந்த மடிப்புக்களைக்  குருவி என்பார்கள். அமங்கல தோரணங்கள் மூன்று குருவிகள் கொண்டதாகவும் குருவிகளின் தலை கீழ்நோக்கியும் வால் மேல் நோக்கியும் இருக்கும். மங்கள தோரணங்கள் நான்கு குருவிகள் கொண்டதாகவும் குருவிகளின் தலை மேல்நோக்கியும் வால் கீழ்நோக்கியும் இருக்கும். ( இரட்டை வால் குருவி போல )..

வீட்டையும் தோட்டத்தையும், கழிவறைகளையும்  அலுவலகங்களையும் தூய்மைப்படுத்த துடைப்பம் இதிலிருந்து கிடைக்கிறது. வாறுகோல், விளக்குமாறு, சீமாறு, தென்னைமாறு, ப்ரூம்ஸ்டிக், மொளக்கமாறு என்பது இதன் வேறு பெயர்கள். தென்னை மட்டையையில் உள்ள கீற்றுக்களைக் கிழித்து அதில் உள்ள குச்சிகளை அரிவாள்மணையிலோ கத்தியிலோ சீவி அந்த ஈர்க்குச்சிகளை மொத்தமாகக் கட்டி விளக்குமாறுகளை உருவாக்குவார்கள்.

வாழ்வின் மங்கலத்திலும் அமங்கலத்திலும் கூட இவை பங்கேற்கின்றன. முன்பு இறப்பிலும் பச்சைத் தென்னங்கீற்றுகள் முடைந்த பல்லாக்குகள் கட்டப்படும். இதைப் பாடை கட்டுதல் என்றும் சொல்வார்கள்.  

உணவுக்கான தொன்னைகள், தையிலை எனப்படும் தையல் இலைகளை/காய்ந்த மந்தாரை இலைகளை இணைக்கவும் இந்த ஈர்க்குச்சிகள் பயன்படுகின்றன.

யானைகளின் முக்கிய உணவு தென்னங்கீற்றுத்தான் & தென்னங்குருத்துகள்தான். அதனால்தான் தென்னை மரங்கள் மிகுந்த கேரளாவில் யானைகள் அதிகம் வளர்க்கப்படுகின்றன.

கொங்கன் கோவா, கேரளா மலபார் கடற்கரைகளில் தென்னைகள் அதிகம். கொடிப்பந்தல் அமைக்கவும் இதன் மட்டைகள் பயன்படுகின்றன. மூன்று தென்னை மட்டைகளை ஸ்டம்புகளாகவும், ஒரு தென்னை மட்டையை பேட்டாகவும் பயன்படுத்தி சணல் உருண்டைகளை பந்தாகத் தட்டி கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள் இளவயதில் என் தம்பிகள்.

தென்னை மட்டையில் குழந்தைகள் சவாரி செய்து மகிழ்வார்கள். ஒரு குழந்தை மட்டையில் அமர்ந்துகொள்ள இன்னொரு பிள்ளை அந்த நடுத்தண்டை இழுத்துக்கொண்டு ஓடுவார். இது ஒரு விடுமுறைகால விளையாட்டு.

தென்னை மரத்தை நோய் தாக்கினாலும் முதலில் அதை அதிலிருந்து விழுந்து எருவோடு கிடக்கும் தென்னை மட்டைகள் காட்டிக் கொடுத்துவிடும். எனவே மரத்தை சுத்தம் செய்து காப்பாற்றி விடலாம். அது போக மக்கிய வேஸ்டான தென்னை மட்டையே தென்னை மரத்துக்கு உரமாகவும் பயன்படுகிறது.

தீபாவளி, திருவிழா சமயங்களில் சொக்கப்பனை கொளுத்துவதற்கும், சந்திரப்பிரபை, சூர்யப் ப்ரபை கொளுத்தவும், ராம்லீலா போன்றவற்றில் ராவணன் உருவத்தை அழிக்கவும் இந்தத் தென்னை ஓலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஏட்டுப் பள்ளிக்கூடம், என்று போன நூற்றாண்டில் கல்விக்கூடங்கள் இருந்தன. அங்கு பனை ஏட்டில் எழுத்தாணி கொண்டு எழுதப் பயிற்றுவிப்பார்கள். அந்தக்காலத்தில் கணக்கு வழக்குகளையும் இவற்றில் பொறித்திருக்கிறார்கள். பனை விசிறியும் உண்டு. இவை அரைவட்டமாக இருக்கும்.

கிறித்துவர்கள் கொண்டாடும் குருத்தோலை ஞாயிறு திருவிழாவில் மற்ற நாடுகளில் பனை மரக்குருத்துக்கள் , ஒலிவ மரக்கிளை , வில்லோ மரக்கிளை , பயன்பட்டாலும் இந்தியாவில் தமிழகத்திலும் கேரளத்திலும் தென்னங்குருத்துக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றை சிலுவை மாதிரி மடித்து மக்கள் கைகளில் ஏந்தி கோயிலுக்கு எடுத்துச் செல்வார்கள். அடுத்தவருடம் வரும் திருநீற்றுப் புதன் , விபூதிப் புதன் அல்லது சாம்பல் புதன் என்னும் திருவிழாவின் போது இந்த ஓலைகளை எரித்து புனிதப்படுத்தப்பட்ட அந்த சாம்பலைத் தடவிக் கொள்வார்கள்.  

ஆக மொத்தத்தில் தொன்றுதொட்டு இன்றுவரை தென்னைங்கீற்று ஆன்மீகத்திலும், இயல்வாழ்க்கைக்கும்  வெகு உபயோகமாய் இருக்கிறது. 

5 கருத்துகள் :

மனோ சாமிநாதன் சொன்னது…

பிரமாதம் தேனம்மை!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

அப்பப்பா. எவ்வளவு செய்திகள். அருமை.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நல்ல பதிவு. கீற்றைப் பற்றி ஒரு சில தெரியும் என்றாலும் உங்கள் பதிவிலிருந்து நிறைய தகவல்கள் அறிய முடிந்தது.

கீதா: மேலே உள்ள கருத்துடன்... //சூரிய ஒளியையும் சந்திர ஒளியையும் கவர்ச்சிகரமாக ஆக்குவதில் தென்னங்கீற்றின் பங்கு அதிகம். கொதிக்கும் வெய்யிலில் கொத்துவாட்களைப் போல சலசலத்து அலையும் தென்னங்கீற்று ரசனைக்குரியது. அதேபோல் மயக்கும் இரவில் பௌர்ணமி நிலவினை மாடியில் அமர்ந்து தென்னங்கீற்று வழி பார்ப்பதும் இனம்புரியாத அழகைத் தருவது.//

ஆஹா !! என்ன ஒரு அழகு. நான் புகைப்படம் கூட எடுத்து வைத்திருக்கேன்...சந்திரன் தென்னங்கீற்றின் இடையே விளையாடுவதை!! நல்ல கட்டுரை. வாழ்த்துகள்!

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை
வாழ்த்துக்கள் சகோதரியாரே

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மனோ மேம்

நன்றி ஜம்பு சார்

ஆஹா கீதா உங்கள் ரசனையும் என் ரசனையும் ஒத்துப் போகிறதே :)

நன்றி ஜெயக்குமார் சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...