எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 16 டிசம்பர், 2017

மழபுலவஞ்சியும் உழபுலவஞ்சியும்:-

மழபுலவஞ்சியும் உழபுலவஞ்சியும்:-

வெட்சித்திணை :-

இது குறிஞ்சித்திணக்குப் புறமாகும்.

நூற்பா:-

“வெட்சிதானே குறிஞ்சியது புறனே “

திணைவிளக்கம் :-

“ஆ தந்து ஓம்பல் மேவற்றாகும்”.

குறிஞ்சியின் ஒழுக்கம் களவொழுக்கம். வெட்சியின் நோக்கம் நிரை கவர்தல். தொல்காப்பியர் கருத்துப்படி நிரை கவர்தலும், நிரை மீட்டலும் வெட்சிதான். வெட்சியும் களவொழுக்கத்துக்குரியது.

குறிஞ்சியின் காதலர் களவொழுக்கத்திற்கு குறியிடம் மலை. அதுவே வெட்சி வீரருக்கும் பொருந்தும். ”மலை சார்ந்த இடத்தில்” இருந்து ஆநிரையை ஓட்டிச் செல்வர்.

குறிஞ்சிக்குரிய காலம் ”கங்குற் காலம்”. தலைவி தலைவன் சந்தித்தற்குரிய நேரம். நிரைகவர்தலுக்கு ஏற்ற காலமும் அதுதான். ”யாமப் பொழுது” தலைவன் தலைவியருக்கும் வீரருக்கும் பொருந்தும்.

தலைவன் தலைவியை மகிழ்விக்க பலவகைத் தழை கொண்டு செய்யப்பெற்ற ஆடையைப் பரிசளிப்பான். தலைவியும் தோழியும் ”பலவகைப் பூக்களை”யும் பறித்துத் தொடுத்துச் சூட்டி மகிழ்வர். போர்வீரரும் “வெட்சிப்பூவைச்” சூடி ஆநிரையைக் கவர்வர்.

”களவொழுக்கத்தின் நோக்கம் கற்பாக மாறவேண்டும். அதுபோல் போர் வீரரின் நோக்கம் போர் புரிய வேண்டும். அதற்குக் காரணமாய் ஆநிரை கவர்தல். ”

தலைவன் தலைவி மணம் புரிய விரும்பின் உடன்போக்கு சென்றுவிட்டால் பின்பு வீட்டாரே
“ நும்மனை சிலம்பு கழீய
எம்மனை வதுவை “ செய்ய
வேண்டுமென்று தலைவன் தலைவியருக்கு மணம் புரிந்துவிடுவர். 

அதுபோல் வீரர் ஆநிரை கவர்ந்தால் அவற்றை மீட்க, போர்வீரரும் தொடர்ந்து சென்று ஆநிரை கவரப் போரிட்டு, வெற்றி பெற்று ஆநிரைகளை ஓட்டி வருவர்.

துறை:-

இருபதுக்கும் மேற்பட்ட துறை உண்டு. ஆநிரை கவர்வதற்கு முன்பு முரசறைந்து பிணியாளர், மகப்பெருதோர், முதியோர், ஆநிரை ஆகியோர் தப்பியோடுமாறும் போர் நடக்கப் போகின்றது என்றும் அறிவிப்பர், ஆநிரைகள் வாயில்லா ஜீவன்கள். அவை தப்ப வழியில்லை. எனவே குறிஞ்சியில் நிரை கவர்தல் ( குறிஞ்சித் தொழில் – ஆடுமாடு மேய்த்தல் ) நடக்கின்றது.

கவர்வதற்கு முன் ஒற்றன் மூலம் ஆநிரைகளின் விவரம், இயல்பு, அவை எங்கிருக்கின்றன என்ற விவரம் அறிந்துதான் கவர்ந்து செல்வர்.

பெருஞ்சோற்று நிலை, உண்டாட்டு இதன் நிலைகளாம். ( படை இயங்கு அரவம் ) ( விரிச்சி கேட்டல் ) முதலியனவும். ஆநிரையைக் கவர்ந்து வந்து இருப்ப, பகைநாட்டார் வந்து போரிட்டு மீட்டுச் செல்வர்.

உழிஞைத்திணை :-

இது மருத்தத் திணைக்குப் புறம்பாகும்.

நூற்பா:-

“உழிஞைதானே  மருதத்துப் புறனே “

விளக்கம் :- உழிஞை வீரர்கள் உழிஞைப் பூவைச் சூடிப் போரிடுவர். மதிலை வந்து வளைத்துப் போரிதல் உழிஞையாம். தொல்காப்பியர் கருத்துப்படி மதிலை வளைத்தலும், மதிலைக் காத்தலும் உழிஞை.

மதில் மருதநிலத்தில்தான் சிறப்பாக அமைந்திருக்கும். மதிலைத் திறத்தலும் மூடுதலும் மருதத்துக்குச் சிறப்பு. இது ஊடலும் ஊடல் நிமித்தமும் நடைபெறும். ( தலைவன், தலைவியரிடத்து )

பரத்தை மாட்டுச் சென்ற தலைவனைத் தலைவி வீட்டு வாயிலிலேயே நிற்கவைத்துக் கதவைத் திறக்க மறுத்தல் போன்று தம்மைத் தாக்க வந்த எதிர்நாட்டுப் படைவீரரை நிற்கவிட்டு மதிலைத் திறக்க மறுத்தல்.

விடியற்போதில் தலைவன் வீட்டையடைந்து வாயில் வேண்டுதல் போல், போர்வீரரும் விடியற்பொழுதில் மதிலைச் சூழுவர்.

வீரர்கள் மேலிருந்து அம்புகளையும் விற்களையும் எய்ய எய்ய, பகை வீரர்கள் காடுகளையும் அகழிகளையும் கடந்து மதில் மேல் ஏணி வைத்து ஏறி மேலே போக முயற்சிப்பர்.

மதிலை வளைத்துவிட்டால் பின்பு பகைவர் மதிலை அழித்து, நாட்டை எரியூட்டி, நிலங்களில் கழுதை ஏர் பூட்டி உழுது எள் பயிரிட்டு உழவுக்கு அற்றதாகச் செய்வர்..

மருதநிலத்தில்தான் வயல்வெளி உண்டு என்பதால் இது அங்கே நிகழும்.

துறை :-

1.பாசிநிலை :- பகைவர் மதில்மேல் பாசி படர்வது போல் ஏறி ஏறி வர வீரர்கள் அவரை எதிர்த்தலாம்.

2.மண்ணுமங்கலம்:- நீராட்டு விழா நடத்துதல்.

3.வாள் மங்கலம்:- வாளை நீராட்டுதல்.

4.குதிரைப்படை கொண்டு போரிடல்.

5.மழபுலவஞ்சி :- பகைவர் நாட்டை எரியூட்டல்


6.உழபுலவஞ்சி:- பகைவர் நாட்டு மண்ணில் கழுதை ஏர் பூட்டி, எள் பயிரிட்டு மண்ணை வளமிழக்கச் செய்தல். 

டிஸ்கி :- என்ன அப்பிடியே ஷாக் ஆயிட்டீங்களா. :) பார்வைகள் கிட்டத்தட்ட பத்து லட்சத்தை நெருங்கப் போகுது. இன்னும் கூட பொறுப்பில்லாம எழுதிக்கிட்டு இருந்தா எப்பூடி.? அதான் நான் முன்னே எழுதின ஒரு கட்டுரையை இங்கே போட்டிருக்கேன். முகநூல்ல என் அன்புத் தோழி சத்யா அசோகன் சும்மா பிச்சு ஒதர்றாங்க. அதுக்கு இது எச போஸ்டு இல்ல. வெத்தல பாக்கு கூட காணாது. சும்மா என் ஆத்ம திருப்திக்கு நாமளும் இலக்கியம் எல்லாம் புகுந்து விளையாடி இருக்கோம்னு சந்தோஷப்பட்டுக்கத்தான் :) :) 

2 கருத்துகள்:

  1. தற்போது பக்தி இலக்கியங்கள் படித்து வருகிறேன். விரைவில் சங்க இலக்கியம் படிக்க ஆரம்பிக்க உள்ளேன். உங்கள் பதிவு அந்த ஆர்வத்தினை மிகுவித்துவிட்டது. நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜம்பு சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...