எனது புது நாவல்.

செவ்வாய், 19 ஜூன், 2018

துணையெழுத்து - ஒரு பார்வை.

துணையெழுத்து.


ஆனந்த விகடனில் தொடராக வந்தபோதே நானும் என்னுடைய மூத்த மகனும் போட்டிபோட்டுக்கொண்டு படிப்போம். எஸ். ராமகிருஷ்ணனின் எழுத்தில் என் மகனுக்கு மிகவும் பிடித்த சொல்லாடல் ‘வேலையற்றவனின் பகல்பொழுது’ இத்தனைக்கும் இதைப்படிக்கும்போது அவனுக்கு 11, 12 வயதுதான் இருக்கும். ஆனால் இத்தொடரில் இல்லாத சைக்கிள் பற்றிய பார்வை ராமகிருஷ்ணனின் எண்ணப்போக்கில் இருந்து வேறாக இருந்தது.

ஒரு தேசாந்திரியாக ட்ராவலாக் பாணி, சில சிறுகதைகள், சில தொன்மக் கதைகள் மற்றும்   ஆங்கிலச் சிறுகதைகள், பழமொழிகள், கவிதைகள்  மற்றும் எல்லாருக்குமான விசனத் தொனியோடு முடிக்கும் கட்டுரையிலான ஆதங்கம் அனைத்தும் சேர்ந்து இந்நூலை மிக சுவாரசியமானதாக்கி இருக்கிறது.


கட்டுரைபாணியிலான இச்சிறுகதைகள் எப்போது இறகு விரிக்கும் எப்போது தரை தொடும் எப்போது நீரில் மிதக்கும் எப்போது தேவதையாகும் என்பதெல்லாம் தெரியாத பொழுதில் வாசித்தது இன்று வாசிக்கும்போதும்  அந்த நெகிழ்வும் மகிழ்வும் ஏற்படுகிறது.


தலைப்புகள் சூட்டியிருக்கும் விதம் அற்புதம் & ரசனையானது.

பழகிய பொம்மையைத் தூக்கிப்போடும் குழந்தையின் மனம் நம் மனம்தான் என்று உணரும் போதும், எழுத்தாளர்களுக்கான அடையாளம் எழுத்தன்றி வேறில்லை, வேலையில்லாதவனின் பகல் நத்தையைப் போல் நீண்டு செல்வதும்,  என்று அறியும்போதும் மனம் கனமாகிறது.


பிழை திருத்தம் அங்கதம். காற்று எழுதிய காவியம் அஞ்சலி. பெயரில் என்ன இருக்கிறது முடிவில் கொஞ்சம் பெருமிதம்.

காயங்களில் ஒளிந்திருத்தல், காணாமல் போதல், அம்மாவின் ஆசைகளை நிறைவேற்ற மகன்கள் படும் மன உளைச்சல், உயிரோசை, இனி செய்யப்போவது என்ன, ஹிரண்ய ஸ்நேகம், உறுபசி, மருத்துவமனைப் பழங்கள், ஸ்த்ரிபார்ட், சொல்லாத சொல், மனக்குகை, பகல்வேஷம், இரவின் பாடல், சிறு நுரை, வெறுங்கோபம், முதற்கல், மயில்ராவணன் மறக்கவியலா மனப்படிமங்கள்,   

கோல்போஸ்ட், சாக்பீஸ் ருசி, வெப்போர் எல்லாம் தோல்வியை எப்படி எதிர்கொள்வது அல்லது தோல்வியுற்றவர்களைச் சந்திக்க நேரும்போது ஏற்படும் மனப்ப்ரளயத்தை எப்படிக் கட்டுக்குள் கொண்டு வருவது என்று தோன்றவைத்தன.  

எல்லாவற்றிலும் ஒரு கொத்து சாவி ஏற்படுத்திய அவசம் சொல்லில் அடங்காதது. ஓவியங்கள் மருது என்றாலும் எங்க ஊர் சாவிகளை ஒருமுறை நேரில் பார்த்துவிட்டு வரைந்திருக்கலாம் என்பது என் ஆதங்கம். அதேபோல் பென்னிகுக்கும் வீட்டுச்செடிகளும், அவள் பெயர் நிர்மலாவும், எண்ணும் எழுத்தும், பொங்குமாங்கடலும் ஏற்படுத்திய தாக்கமும்.


மனிதர்களுக்கான ஆதங்கம் மட்டுமல்ல இயற்கைக்கான ஆதங்கமும் பேரன்பும் பெருஞ்சோகமும் அதை மாற்ற வேண்டியதை மென்மையாக அறிவிப்பதுமாகத் தொடர்கின்றன கட்டுரைகள்.

துயரங்களில் நாம் தோய்ந்து போகிறோம் அல்லது தோய விரும்புகிறோம். பழைய நினைவுகள் என்பது நமது மனதில் பொக்கிஷமாய் உறைந்திருக்கிறது. அதன் கீற்றைத் தொட்டு நிலவையோ சூரியனையோ உருவிப் ப்ரகாசிக்க வைக்க ராமகிருஷ்ணனால் முடிந்திருக்கிறது.


எல்லோர் மனங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு பொருள் பற்றிய, நிகழ்வு பற்றிய, நினைவு பற்றிய உரையாடல் ராமகிருஷ்ணனின் வார்த்தைகளில் வரிவரியாய் உயிர்பெறும்போது ஏற்படும் நுண்கிளர்ச்சியே இக்கட்டுரைகளின் வெற்றியாகும்.

நூல் :- துணையெழுத்து
ஆசிரியர் :- எஸ். ராமகிருஷ்ணன்.
பதிப்பகம் :- விகடன் பிரசுரம்
விலை :- ரூ. 130.

8 கருத்துகள் :

Ramani S சொன்னது…

வாராவாரம் தனித்தனியாகப் படித்து வியந்ததுண்டு தங்கள் பதிவைப் படித்ததும் முழுவதையும் மீண்டும் படிக்கவேண்டும் எனும் ஆவல் எழுகிறது வாழ்த்துக்களுடன்

ஸ்ரீராம். சொன்னது…

நானும் விகடனிலேயே படித்தேன். புத்தகமாகவும் வைத்திருக்கிறேன். ரசித்துப் படித்த புத்தகம். என்னிடம் முதலில் வாங்கிய புத்தகத்தை நண்பர் அப்பாதுரைக்குக் கொடுத்தபோது அவரும் புத்தகத்தை ரசித்ததாகச் சொன்னார்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

விமர்சனமும் அருமை...

Nagendra Bharathi சொன்னது…

அருமை

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

மதிப்புரை அருமை. விரைவில் படிப்பேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ரமணி சார்

நன்றி ஸ்ரீராம்

நன்றி டிடி சகோ

நன்றி நாகேந்திர பாரதி சகோ

நன்றி ஜம்பு சார்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

எஸ் ராவின் எழுத்து மிகவும் பிடிக்கும்...உங்கள் மதிப்புரை அருமை.

கீதா

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கீதா

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...