ஞாயிறு, 10 ஜூன், 2018

அஞ்சறைப் பெட்டி மருந்திருக்க அலோபதி மருந்தெதற்கு? ( நமது மண்வாசம் )

அஞ்சறைப் பெட்டி மருந்திருக்க அலோபதி மருந்தெதற்கு?

இன்றைக்கெல்லாம் நாற்பத்தியைந்து வயதைத் தாண்டிய இருவர் சந்தித்துக் கொண்டால் உங்களுக்கு இரத்த அழுத்தம், தைராய்டு , இனிப்பு நீர் எப்படி இருக்கு என்று குசலம் விசாரித்துக் கொள்வதைக்காண முடியும். 

இந்தத் தலைமுறையில் உள்ள அநேகம் பேருக்கு இரத்த அழுத்தம், தைராய்டு, இனிப்பு நீர் போன்றவற்றில் ஏதோ ஒன்றாவது இருக்கு.
  கலர் கலரா அட்டை அட்டையா மாத்திரைகளை தினம் சாப்பிட வேண்டி இருக்கு. நம்ம ஆரோக்யத்தை பேண ஒவ்வொரு தமிழர் வீட்டுக்குள்ளேயும் ஒரு மருந்துப் பெட்டி இருக்கும்போது நாம் ஆங்கில மருந்துகளை நாடி ஓடுறோம். சிறுவாட்டுக் காசு என்று வீட்டுச் செலவு போக உள்ள பணத்தை அப்போதைய பெண்கள் சேமிப்பதெல்லாம் அஞ்சறைப் பெட்டியிலேதான். அந்த அஞ்சறைப் பெட்டிதான் நம்ம ஆரோக்யப் பெட்டி. அது எப்பிடின்னு பார்க்கலாம் வாங்க.

கடுகு, உளுந்தம்பருப்பு, சின்னச்சீரகம், பெருஞ்சீரகம், வெந்தயம், மிளகு, பெருங்காயம் , பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவைதான் அதுல வைக்கப்பட்டிருக்கும். அஞ்சு அறை உள்ள பெட்டின்னு பேருக்குச் சொல்றது ஆனால் அது ஏழு கப்புகள் கொண்டதாகவோ இல்லாட்டி ஆறு அல்லது எட்டு அல்லது பத்து கிண்ணங்கள் கொண்டதாகவும் இருக்கும்.


அநேக சமையல்ல முடிவில் நாம தாளிதம் செய்துதான் பயன்படுத்துவோம். தாளிப்பது என்பது தென்னிந்திய சமையலில் இன்றியமையாதது. சாம்பார், வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு, ரசம், பச்சடி, கூட்டு, பொரியல், உப்புமா, ஊறுகாய், இடியாப்பம், என எல்லா உணவு வகையிலும் நமக்கு தாளிச்ச கடுகு தெரிஞ்சாதான் நிறைவா இருக்கும்.. காய்ந்த எண்ணெயில் கடுகைத் தாளிக்கும்போது அதிலிருந்து சல்ஃபர் வெளியாகுது. இந்த சல்ஃபர்தான் நம்மோட உடலின் வளர்சிதை மாற்றத்தில் பங்கேற்குது. நம்மோட தோல், முடி ஆகிய வளர்ச்சிக்கும் சல்ஃபர் தேவை. அது இந்த வெடிச்ச கடுகுலேருந்து கிடைக்குது.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதும்பாங்க. இதுல செலினியம் அதிகம் இருக்கு. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியையும் கொடுக்குது. நம்ம ஊரில் மாவடு ஊறுகாய் போடும்போது பச்சையாகவே அரைத்து ஊற்றுவார்கள். கேரளாவில் பச்சைக் கடுகும் தேங்காயும் அரைத்து பப்பாளிக்காய்க் கூட்டு செய்வார்கள்.  வடநாடுகளில் சின்ன சைஸ் கடுகு கிடைக்கும் அதுக்கு ராய் என்று பேர். கடுகு எண்ணெயில் வங்காளமக்கள் சமையல் செய்வார்கள். கடுக்கீரையும் சோள ரொட்டியும் குளிர்காலத்தில் வட இந்தியர்களின் முக்கிய உணவு. உடலைக் கதகதப்பா வைப்பதிலும் நிறம் கொடுப்பதிலும் பெரும்பங்கு வகிப்பதால் இந்த எண்ணெயை உடலில் தேய்த்தும் குளிப்பார்கள்.

உளுந்து தாளிப்பது நமக்கு ருசிக்காக என்றாலும் அதில் இருக்கும் ப்ரோட்டின் உடல் வலிமை கொடுக்கும். தாளிக்க மட்டுமல்ல உளுந்தை  வறுத்த அரைத்து பிட்ளை, வத்தக்குழம்பு போன்றவற்றில் பயன்படுத்துவதோடு, இட்லிபொடி, மொளகுபொடி போன்றவற்றிலும் சேர்க்கிறோம். உளுந்துக்களி சேர்த்தால் கருப்பை, இடுப்பெலும்பு போன்றவை பலப்படும். மலச்சிக்கலை நீக்கும். இரத்தத்துல கொலஸ்ட்ராலைக் குறைப்பதால் இதயம் பலப்படும். இரத்த ஓட்டம் சீராகும். அதனால் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும்.

சீரகம் என்பது நமது அகத்தைச் சீராக வைக்க உதவுவது. சீரணத்தை எளிதாக்குவது. அஜீரணத்தை நீக்கும். எடைகுறைக்கும். அல்சர், மைக்ரேன் தலைவலி, உப்புசம், விக்கல், உளநோய், குடல் புற்று, இரத்த அழுத்தம் போன்றவற்றையும் நீக்கும். சீரக வில்வாதி லேகியம், பஞ்ச தீபாக்னி சூரணம் ஆகியன இதில் தயாரிக்கப்படும் சித்த மருந்துகள். சீரகம் போட்ட எலுமிச்சைச் சாறு கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் வாந்தியைப் போக்குகிறது.


இதில் சிறுஞ்சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், ஜல்ஜீரா ஆகியன உண்டு. இதில் சிறுஞ்சீரகத்தை நாம் தாளிக்க உபயோகிப்பதோடு பொங்கலில் போடுகிறோம். ரசம் வைக்கிறோம். வறுத்துப் பொடித்து ஊறுகாயில் சேர்க்கிறோம். மற்ற சமையல் பொடிகளிலும் பயன்படுத்துகிறோம். நம்ம நாட்டில் மட்டுமல்ல மெக்ஸிகோவின் பிரிட்டோஸ், மொராக்கோவின் ரஸ்-எல்-ஹேனா ஆகிய உணவுகளும் சீரகம் கொண்டு தயாரிக்கப்படுபவைகளே.  ஜல்ஜீரா எனப்படும் சீரகம் போட்டுக் காய்ச்சிய குடிநீர் சிறுநீர் அழற்சியைப் போக்கும். குழந்தைகள் சாப்பிடவேண்டும் என்பதற்காகவே இவை சீரகமிட்டாய் என்று கலர் கலராக செய்து விற்கப்படுகிறது. கருஞ்சீரகம் சித்த மருந்துகள் தயாரிக்கப் பயன்படுது. கருஞ்சீரகம் மாதவிடாய் பிரச்சனை, கர்ப்பப்பையில் நீர்க்கட்டிப் பிரச்சனை, கர்ப்பப்பை அழுக்கு ஆகியவற்றை நீக்குது.

பத்து மிளகு இருந்தா பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம் என்பது பழமொழி. மலைப்பக்கங்களில் கொடிகளில் விளைகிறது மிளகு. இதுக்கு கறுப்புத் தங்கம் என்றும் மசாலாக்களின் ராஜா என்றும் பெயர். முதன்முதலா கேரளாவை பழசிராஜா ஆண்ட காலத்துல ஆங்கிலேயர் மிளகை வெளிநாடுகளுக்கு கொள்முதல் செய்து கொண்டு போக ஏகத் தந்திரம் பண்ணி இருக்காங்க.வேத காலங்களிலேயே பப்பாளிக்காயை நெய்யும் மிளகும் போட்டுப் பொரிச்சு வதக்கி சாப்பிட்டிருக்காங்க.

பச்சைமிளகு, வெள்ளை மிளகு, கறுப்பு மிளகு, குறுமிளகு, வால்மிளகு என்று ஏகப்பட்ட மிளகு இருந்தாலும் கறுப்பு மிளகுக்குத்தான் தேவை அதிகம். பச்சை மிளகுக் கூட்டு, மிளகுக் குழம்பு, மிளகு ரசம், சூப், முட்டை ஆம்லெட், மிளகு சாதம், பிரியாணி, புலவுசாதம், ஃப்ரைட் ரைஸ் மற்றும் அனைத்து அசைவ உணவுகளிலும் மிளகு சுவையூட்டவும் நறுமணப் பொருளாகவும் உபயோகப்படுகிறது. கான்சர் பேஷண்டுகளும் மிளகு சேர்த்து உண்ணலாம் என்பது சிறப்பு. இதுவும் பசியைத் தூண்டும். சளி, இருமல், தொண்டைக் கரகரப்பு, சைனஸ் பிரச்சனை, வாயு, காய்ச்சல் நீக்கவும், உடலின் நச்சுத்தன்மை போக்கவும் பயன்படுது.  

சோம்பு எனப்படும் பெருஞ்சீரகம் செரிமானத்துல முக்கியப் பங்கு வகிக்கிது. கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒன்பதாம் மாதத்தில் சுகப் ப்ரசவம் நிகழ சோம்பை வறுத்து வேகவைத்து சோம்புக் கஷாயம் கொடுப்பார்கள். இதுல விட்டமின் பி,  பீட்டா கரோட்டின் ஆகிய சத்துக்கள் இருக்கு. சோம்பு லேசான இனிப்பு சுவை உடையது. அசைவ உணவு சாப்பிட்டபின்னாடி இதை சாப்பிட்டா செரிமானம் கொடுக்கும். அதுனாலதான் இதை ஹோட்டல்களில் சாப்பாட்டுக்குப் பின் சீனிப்பாகில் தோய்த்தோ அல்லது அப்படியேவோ லேசாக வறுத்த சோம்பை வைப்பார்கள்.  சோம்புக் கீரைகளை ஆந்திராவில் அரிசிமாவில் போட்டுப் பிசைந்து அக்கி ரொட்டி சுடுவார்கள். பிரட்டல், குருமா மசாலா பொரியல், மசால்வடை போன்றவற்றில் சோம்பு சேர்க்கப்படுகிறது.

வெந்தயம். லேசாகக் கசப்புச் சுவை உடையது. இரும்புச்சத்து கொடுக்கும். இதை முதல்நாள் ஊறவைத்து மறுநாள் காலை தினமும் ஊறவைத்த நீரோடு அருந்தி வந்தால் தைராய்டு, சர்க்கரை நோய் ஆகியன சீராகும். வெந்தயம் குளிர்ச்சி என்பதல் தயிருடன் சேர்த்து சாப்பிட சூட்டால் ஏற்பட்ட அடிவயிற்று வலி நீங்கும். லேசாக வறுத்த வெந்தயம் புளிக்காய்ச்சல் மற்றும் ஊறுகாய் சாம்பார்களில் போடப்படுது. ஆப்பம், தேங்காய்ப்பால் கஞ்சி செய்யவும் வெந்தயம் சேர்ப்பார்கள். வெந்தயத்தை வறுத்துப் பொடித்து வெல்லத்தோடு சேர்த்து இடித்து வெந்தய உருண்டை செய்து சாப்பிட்டால் ஹீமோக்ளோபினின் அளவு அதிகமாகும். முடி உறுதியாகவும் சில்க் போன்றும் இருக்க சீயக்காயுடனும் குளியல் பொடிகளிலும் வெந்தயம் சேர்த்து அரைப்பார்கள். முளைகட்டிய வெந்தயத்தை ஊறுகாயாகச் செய்து உண்டுவந்தால் பித்தம் தணியும். இதில் நார்ச்சத்து இருப்பதால் நீரில் இப்பொடி கலந்து குடிக்க கெட்ட கொழுப்பு குறைந்து உடல் எடையும் குறையும்.  

பெருங்காயம் உப்புசம், பொருமல், கெட்ட வாயு நீக்கும்.செரிமானம் கொடுக்கும். மார்பு வலி போல் உண்டாகும் வாய்வு வலி மற்றும் வாய்வுப்பிடிப்பை நீக்கும்.  பெருங்காயம் இல்லாமல் சாம்பார், ரசம், ஊறுகாய் போன்றவை செய்யமுடியாது. தட்டை, நாடா முறுக்கு , முறுக்கு போன்றவற்றிலும் பெருங்காயம் கரைத்து ஊற்றித் தயாரிப்பார்கள். மோரில் பெருங்காயம் கரைத்துக் குடிக்க உடம்பில் குளிர்ச்சி உண்டாகும்.  

பட்டை, இலை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசிப்பூ, அன்னாசிப்பூ, ஜாதிக்காய் போன்றவை பெரும்பாலும் அசைவ உணவுத்தயாரிப்பில் பயன்படுபவை. சைவ உணவு வகைகளிலும் சூப், குருமா, பிரியாணி போன்றவற்றில் ருசிகூட்டப் பயன்படுத்துகிறோம். ஸ்பாஸ்மிண்டான் என்றொரு மருந்து இன்னதென்று வலி தெரியாமல் அழும் கைக்குழந்தைகளுக்குக் கொடுப்பதுண்டு. அம்மருந்தின் சுவை பட்டை கிராம்பு போன்ற மசாலப்பொருட்களை வைத்து செய்யப்படும் சூப்பின் சுவையில் இருக்கும். எனவே உடலில் ஏற்படும் அனைத்துவிதமான வலிகளையும் இவைகளை வைத்து செய்யப்படும் உணவுகள் நீக்கும். சுறுசுறுப்பைக் கொடுக்கும். 

ஏலக்காய் வாய் துர்நாற்றம் போக்கும். இனிப்பிலும் பாயாசத்திலும் போடுவதுண்டு. கிராம்பு பல்வலி போக்கும், பட்டை நுரையீரல் புற்றைத் தவிர்க்கும். பிரிஞ்சி இலைகள் ஆர்த்தரைட்டீஸ், தசைவலிகள் போக்கும். ஜாதிக்காய் தோல் சுருக்கம் போக்கி வயதாவதைத் தடுக்கும். தக்கோலம் என்றழைக்கப்படும் அன்னாசிப்பூவில் இருந்துதான் பன்றிக்காய்ச்சலுக்கு சித்தமருத்துவ மருந்து தயாரிக்கிறார்கள்.ப்ளாக் ஸ்டோன் ஃப்ளவர் என்றழைக்கப்படும் கல்பாசிப்பூ குடல் அழற்சியையும் சிறுநீரகக் கோளாறையும் போக்குது.

வீட்டிலேயே ஆரோக்யம் பேண அஞ்சறைப்பெட்டி மருந்திருக்க அலோபதி மருந்தை நோக்கி ஓடுபவர்கள் அப்படி ஓடுமுன் கொஞ்சம் யோசித்தால் இனியெல்லாம் நலமே.   

4 கருத்துகள் :

Chellappa Yagyaswamy சொன்னது…

ஒரே கட்டுரையில் இவ்வளவு தகவல்களா?

இராய செல்லப்பா சென்னை

R Muthusamy சொன்னது…

உணவே மருந்து மருந்தே உணவு என்பது நம் வாழ்வு முறை. நம் உணவில்தான் எத்தனை கடைச்சரக்குகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பயனுள்ள பகிர்வு... நன்றி...

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா நன்றி செல்லப்பா சார்

நன்றி முத்துசாமி சகோ

நன்றி டிடி சகோ

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...