எனது புது நாவல்.

வியாழன், 21 ஜூன், 2018

அயல் சினிமா – ஒரு பார்வை.


அயல் சினிமா – ஒரு பார்வை.

முதலில் ஜூலை மாதம் முதலாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் அயல் சினிமாவுக்கு வாழ்த்துக்கள். நூல் வெளியிடுவதும் அதை பொது ஜனத்திடம் கொண்டு சேர்ப்பதும் ப்ரயத்தனமான காரியமாக இருக்க. டிஸ்கவரியில் மட்டுமே கிட்டத்தட்ட 50 வகையான இலக்கிய சிற்றிதழ்கள் பார்த்தேன். டிஸ்கவரியே வெளியிட்டு வரும் நூல்தான் அயல்சினிமா.


அயல் சினிமாவைப் படித்ததும் மிக அற்புதமான விஷயங்களைப் பகிர்ந்திருப்பதாக உணர்ந்தேன். ஆனால் அது மேதைகளுக்காக மேதைகளால் எழுதப்பட்ட நூல்போலும் ஒரு சாயல் தந்தது. அதில் ஓரிரு கட்டுரைகள் சினிமா தவிர்த்த அயல் மனிதர்களால் எழுதப்பட்டிருந்தாலும் முழுக்க முழுக்க அயல் சினிமாவை அதன் தொழில் நுட்பங்களைப் பற்றி, நடிகர்கள், நடிப்புத்திறன், கிராஃபிக்ஸ், ஓவியங்கள், எடிட்டிங். பெண் நடிகை & இயக்குநர்கள் பற்றிய தொகுப்பாக இருந்தது.

ஒளிப்பதிவாளர் சி. ஜெ.ராஜ்குமார், மணி, பழனிக்குமார், சார்லஸ் ஆண்டனி, எஸ். பி . மித்ரன், ஜா தீபாவின் கட்டுரை தவிர்த்த சில கட்டுரைகள் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டவை. 

தூரிகையின் ராஜா டான் ப்ளூத், திரைக்கதை எழுத்தும் படப்பிடிப்புக்கான எழுத்தும் குறித்த ஆந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கி போன்றவர்களைப் பற்றிய கட்டுரைகள் வெகு அருமை. மிர்ரர் படமெடுத்த விபரம் கட்டாயம் ஒவ்வொரு இயக்குநரும் படிக்க வேண்டும். ஏனெனில் ஒரு படத்தின் ஆன்மா எங்கு உறைந்திருக்கிறது என்பதை அவர் வடிக்கும் விதம் அற்புதம். சினிமா என்பது எப்படி அதில் உழைக்கும் எல்லாராலும் உயிர்ப்பிக்கப்படுகிறது என்பதையும் உணர்த்தியது.

சென்ஸ் & சென்ஸிபிலிட்டி, ஷாசாங்க் ரெடெம்ஷன், கண்ணால் காண்பது காட்சியல்ல ஆகியவை பற்றிய தீபாவின் கட்டுரைகள் ஆழ்ந்த அலசல். 

சீனிவாச நடராஜன் பாடல்கள் வணிகமயமாவது பற்றி எழுதி இருப்பது நல்ல கொட்டு. மார்ட்டின் டான்ராஜின் ஜாங் யிமூவின் படத்தில் ஒளியைப் பற்றிய வர்ணனைகளுக்கும், பழனிகுமாரின் லெனி ரீபென்ஸ்டால் பற்றிய கட்டுரைக்கும் ஒரு ஷொட்டு. இதில் ரெனியின் பல்வேறு திறமைகள் வியக்க வைக்கின்றன.

வால்டர் மூர்ச்சின் படத்தொகுப்பு கட்டுரையை மதி மீனாட்சி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக், பற்றிய சார்லஸ் ஆண்டனியின் கட்டுரை ஹிட்ச்காக்கின் வெவ்வேறு பரிணாமங்களைக் காட்டியது.

ரசிகப்பார்வையில் நரேந்திரகுமார் இவ்வளவு படம் பார்த்திருக்கிறாரா என்று ஆச்சர்யமேற்படுத்தினார். அதேபோல் பிருந்தாவின் பாலகுமாரன் கட்டுரையும் நிறைய விவரங்களை அறியத்தந்தது. மயிலம் இளமுருகு கட்டுரையும் உமா பார்வதியின் அன்பெனும் ஆதிச்சொல்லும் சந்தோஷ் கொளஞ்சியின் ரெவலேஷன்ஸ் பற்றிய விமர்சனமும் அருமை.

உடனே பார்த்திருங்க என்று சில படங்களை லிஸ்ட் தருகிறார்கள். உபயோகமாக உள்ளது. அவற்றில் டைட்டானிக், ஜாஸ், ராகிங் புல், போன்ற சிலவற்றை நான் பார்த்திருக்கிறேன்.

புகைப்படங்களும் ஒரு பிழை கூட இல்லாத எடிட்டிங்கும் அருமை என்றால் விளம்பரங்களோ நடுப்பக்கக் கவர்ச்சிப் படங்களோ இல்லாத ஆரோக்கியமான சினிமா இதழாக இது உள்ளது. 

அயல் சினிமாதான் என்றாலும் தமிழ், இந்திய சினிமாக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கலாம். இன்னும் புதுமுக இயக்குநர்கள், சினிமா ஆர்வலர்கள்,முகநூலில் எழுதி வரும் ஆண்/பெண் சினிமா விமர்சகர்களிடமும் கட்டுரைகள் வாங்கிப் போடலாம். அது இந்நூலை பல்வேறு தளங்களுக்கும் கொண்டு சேர்க்கும் முயற்சியாக இருக்கும்.

ஆந்த்ரேய் தார்க்கோவ்ஸ்கியின் கட்டுரையில் என்னை மிகவும் கவர்ந்தது, “ ஒருபுறம் நிஜமான காலத்தில் பதிவு செய்யப்படுகிற காட்சிகள், மற்றொருபுறம், மீண்டும் நிகழ்த்திப் படம் பிடிக்கப்படுகிற கதை சொல்லியின் நினைவுகளில் உறைந்திருக்கும் காலம், “ இது நம்முடைய படைப்புகளுக்கும் ( கதை கவிதை கட்டுரைகளை நாம் படைக்கும் நோக்கும் அதைப் புரிந்துகொள்பவர்கள் நோக்கும் எப்படி ஒப்புவமை கொள்ளும் ) பொருந்தும் என்கிற அதனுடைய உண்மைத்தன்மையினால் இன்னும் சிந்திக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

நூல் :- அயல்சினிமா ( மாதாந்திரி)
ஆசிரியர் :- வேடியப்பன்
பதிப்பகம் :- டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கம் :- 68.
விலை – ரூ. 50.

7 கருத்துகள் :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

G.M Balasubramaniam சொன்னது…

தமிழ் சினிமா பற்றிய செய்திகளே சரிவரத் தெரியவில்லை அயல்சினிமா என்றால் ஆங்கிலசினிமாதான் நினைவுக்கு வருகிறது

Jeevalingam Yarlpavanan Kasirajalingam சொன்னது…

நண்பர் வெடியப்பனின் முயற்சி,
அயல்சினிமா வெற்றி நடை போடும்!

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் பாலா சார். சரியா சொன்னீங்க.

நன்றி யாழ்பாவண்ணன் சகோ.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

ஓ இப்படி ஒரு இதழ் வருகிறதா....புதிய அறிமுகம். வேடியப்பன் எழுதுகிறாரா அட!!

கீதா

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் கீதா. வேடியப்பன் வெளியிடுகிறார். :)

மயிலம் இளமுருகு சொன்னது…

நன்றி தோழரே

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...