செட்டிநாட்டு இல்லங்கள் திராவிடக் கட்டிடக்கலை பாணியில் அமைந்திருந்தாலும் இந்தோ இஸ்லாமிய வேலைப்பாடுகளாலும் அழகு பொலிபவை. வீடுகளின் நுழைவாயில்களில் காப்பாய் கடவுளர்களின் சிலை வைக்கப்பட்டிருப்பதும் நிலைவாயில்களிலும் அவர்கள் சிற்பமாய் அரசோச்சுவதும் காட்சிக்கு விருந்தாகும். இப்படியாகப்பட்ட கோட்டைபோன்ற வீடுகளின் இன்றைய நிலை என்ன ?
தமிழ்நாட்டின் மேம்பட்ட நகர்ப்புறக் கட்டிடக்கலைக்கு சாட்சியமாய் எஞ்சி இருப்பது செட்டிநாட்டின் பாரம்பர்ய இல்லங்களே. மற்ற மாவட்டங்களில் உள்ள பாரம்பர்ய இல்லங்கள் பொருளாதாரக் காரணங்களால் நலிவுற்றும் நில விற்பனைக்கு இரையாகியும் வருகின்றன. சொல்லப்போனால் எழுபது ஆண்டுகளுக்கு முன், மியான்மர் மற்றும் மலேயாவின் விடுதலைக்குப் பிறகு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்களைக் கொண்டுவிக்கச் சென்ற செட்டிநாட்டினரும் சந்திக்க நேரிட்டது.
பர்மாவிலும் மலேயாவிலும் செழிப்பாக நடந்துகொண்டிருந்த நகரத்தார்களின் தொழில்கள் இறக்கத்தைச் சந்தித்தன. மேலும் அங்கே இருந்த சொத்துக்களை அப்படியே விட்டுவிட்டு வரும்படி ஆயிற்று. இது அவர்களின் பாரம்பர்ய இல்லங்களின் தலையில் வந்து விடிந்தது. புதிதாக செட்டிநாட்டு பாணி இல்லங்களைக் கட்டுதல் நின்றுபோனதோடு அவற்றைப் புதுப்பித்தல் மற்றும் புனரமைத்தல் ஆகியவற்றை உரிய காலத்தில் செய்ய இயலாமல் போயிற்று.
மூன்றில் ஒரு பங்கு செட்டிநாட்டு வீடுகள் ஏற்கனவே அழிக்கப்பட்டு விட்டன. 5 சதம் 10 சதம் வீடுகளே பாதுகாக்கப்பட்டு ஒழுங்காகப் பராமரிக்கப்பட்டு அவ்வப்போது வசிப்பதற்கு ஏற்றதாகவும் இருந்து வருகின்றன. மிச்சமுள்ள 80 சதவிகித வீடுகளும் பாழடைந்துகொண்டு வருகின்றன. இது இந்த வட்டாரத்துக்கும் சமூகத்துக்கும் அச்சுறுத்தலாக மட்டுமல்ல., தமிழ்நாட்டுக்கே எச்சரிக்கை மணியாய் ஒலிக்கிறது.
செட்டிநாட்டின் வீடுகளுக்கு அரசு பாரம்பரிய அந்தஸ்து அளித்திருந்தாலும் மாதிரி வீடுகள் பராமரிப்பு,, கலைப்பொருள் சேகரிப்பு மற்றும் கலாச்சாரச் சுற்றுலா போன்றவை இவ்வீடுகளைப் பாதுகாக்க நாங்கள் எடுக்கும் முன்னெடுப்பு முயற்சிகளாகும். அழிவின் விளிம்பில் இருக்கும் கட்டிடக்கலையைப் பாதுகாக்க புதிதாய் எதையும் செய்யாவிட்டாலும் மேலும் அவற்றை அழியவிடாமல் பாதுகாத்துப் பளிச்சிடச் செய்ய இயலும்.
கட்டிடக்கலையின் தனித்துவம்.
உலகளாவிய பாரம்பர்யங்களின் தாக்கங்களினால் அவர்கள் தங்கள் கட்டிடக்கலையை மேம்படுத்தினர். நகர்ப்புறத் திட்டமிடல், நீர் மேலாண்மை, தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு மற்றும் கலை படைப்பாற்றல் ஆகியவை துல்லியமாகத் திட்டமிடப்பட்டு எல்லா செட்டிநாட்டு கிராமங்களிலும் வீடுகள் அமைக்கப்பட்டன. இவை தமிழ்நாட்டில் செவ்வக உள்முற்றம் வைத்த அமைப்பைக் கொண்ட கிராம வீடுகளை ஒத்திருக்கின்றன.
இந்த வீடுகள் அனைத்துமே மிக உயரமான தளம் அமைக்கப்பட்டுக் கட்டப்பட்டிருக்கின்றன. இவற்றில் முகப்பு, பட்டாலை, வளவு, வளவறைகள், முற்றம், ஆல்வீடு, இரண்டாங்கட்டு, மூன்றாங்கட்டு ஆகையவை உண்டு. இம்மாதிரி வீட்டின் ஒழுங்கமைப்புகள் இந்தக் கட்டுக்கோப்பான சமூகத்தின் கட்டமைப்பைக் கண்ணாடியாகப் பிரதிபலித்தது.
இப்போது ஏன் இந்த அக்கறையின்மை ?
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமது இருப்பிடங்களை விட்டுத் தொழில் மற்றும் உத்யோகம் நிமித்தம் வெவ்வேறு நகரங்களுக்குக் குடிபெயர்ந்தனர். பரம்பரைத் தொழில்களான லேவாதேவி மற்றும் கொடுக்கல் வாங்கல் வியாபாரம் ஆகியவை இறக்கம் கண்டன. வேறு தொழில்துறைகளும் அரசாங்க உத்யோகங்களும் அவர்களுக்கு நிதிப்பாதுகாப்பு அளித்தாலும் அவர்கள் வளர்ச்சிக்கு அதிகம் உதவவில்லை. அதனால் அவர்கள் நிதிச்சரிவையும் சந்தித்தார்கள்.
ஓரளவு சிதைந்துவந்த வீடுகளில் இருந்த கலைப்பொருட்களையும் மேங்கோப்புகளையும் பிரித்து மறு கட்டுமானத்திற்கும் பயன்படுத்தக்கூடிய பொருட்களை எடுத்து விற்பது வாழ்வாதாரத்துக்குப் பயனுள்ளதாயிருந்தது. இந்தப் பிராந்தியக் கலைப்பொருட்கள் உலங்கெங்கும் சென்று நமது கட்டிடச்சிறப்பைப் பறைசாற்றுகின்றன. இது செட்டிநாட்டுப் பகுதியில் உலகளாவிய கலைப்பொருள் சந்தையை உருவாக்கியுள்ளது.
மூன்றில் ஒரு பங்கு அழிந்து இருக்கும் இன்றைய வீடுகளின் இந்நிலை மக்கள் வீடுகளைப் புறக்கணித்ததாலும், அழித்ததாலும் மற்றும் பொருளாதாரக் காரணங்களினாலும் ஏற்பட்டதாகும். மிச்ச 80 சதம் வீடுகளும் ஆபத்தின் விளிம்பில் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கின்றன.
மூன்று நான்கு நூற்றாண்டுகளாகப் பொருளாதாரத் தன்னிறைவு பெற்றவர்கள் நகரத்தார்கள். தற்போதைய தலைமுறையினர் நம் செட்டிநாட்டுப் பாரம்பரிய இல்லங்களின் மதிப்பை உணர்ந்துள்ளனர். 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டுகளின் அவற்றின் புராதனப் பெருமை கொண்ட கட்டிடக்கலையைப் போற்றிப் பாதுகாக்கவும் தக்கவைக்கவும், புனரமைக்கின்றனர்.
பின் என்னதான் பிரச்சனை?
இன்று அந்த பாரம்பரியக் கட்டிடக் கலைகள் அறிந்த தொழில் திறனாளிகள் இல்லை. அவற்றின் கலைமதிப்பும் நமக்குத் தெரிவதில்லை. இவற்றை மறுசீரமைக்கும், தக்கவைக்கும் மற்றும் பாதுகாக்கும் செலவுகளும் அதிகமாக இருக்கும். இதனால் ஆர் சி சி கட்டமைப்பின் கட்டளைப்படி கட்டிடங்களை நவீனப்படுத்தும்போதோ அல்லது மாற்றியமைக்கும்போதோ இவற்றில் கலைமதிப்புமிக்க பொருட்களும் செட்டிநாட்டு வீடுகளும் நாசமடைகின்றன.
ஏன் செட்டிநாட்டு இல்லங்களைப் பாதுகாக்க வேண்டும் ?
செட்டிநாட்டின் பிராந்தியத் தனித்தன்மையைப் பாதுகாக்கவும் கலாச்சார சமூக பொருளாதாரப் பெருமைகளைத் தக்கவைக்கவும் எடுத்துக்காட்டாக இருக்கும் செட்டிநாட்டுக் கட்டுமானத்தைப் பாதுகாப்பதும் மறுசீரமைப்பதும் பராமரிப்பதும் புனருத்தாரணம் செய்வதும் இன்றியமையாதது.
தனித்துவமிக்க செட்டிநாட்டுக்கட்டுமானத்தைப் பாதுகாக்க, புதுப்பிக்க புனருத்தாரணம் செய்ய, மேலும் பழமையைப் பாழாக்காமல் புதுமைக் கட்டமைப்பையும் புகுத்த விசேஷ சக்திவாய்ந்த தனித்திறன்கள் தேவைப்படுகின்றன.
இங்கேதான் ” சேவ் செட்டிநாடு “ செட்டிநாட்டு இல்லங்களைப் பாதுகாப்போம் என்ற அமைப்பு செட்டிநாட்டு இல்லங்களைப் பாதுகாக்க, புதுப்பிக்க, பராமரிக்க அவற்றின் பாரம்பரிய மதிப்பு கெடாமல் சீரமைக்க உதவுகிறது.
பழமை வாய்ந்த இவ்வீடுகளின் பயன்பாட்டை அதிகரிக்க நவீன வசதிகளான கழிப்பறை, குளிரூட்டி, சி சி டிவி, மின் பாதுகாப்பு, நீச்சல் குளம், நீர் வழங்கல், கழிவுநீர் வெளியேற்றப் பாதை ஆகியவற்றைப் பாதுகாப்பான முறையில் செய்து வீடுகளை நவீனமாக்கியும் தருகிறோம்.
இவற்றை நாங்கள் ஏற்று நடத்துவதன் மூலம் செட்டிநாட்டின் கட்டிடக்கலை மற்றும் கலைப்பொருட்களின் மதிப்பைப் புரிந்தவர்கள் என்ற முறையில் எங்கள் பணி சிறப்பானதாக இருக்கும். பயிற்சி வகுப்புகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் தொடர்ந்த வழிகாட்டல்கள் மூலம் எங்கள் பணியாளர்களுக்கு இப்பணிகளைப் பயிற்றுவித்திருக்கிறோம்.
இதுவரை நாங்கள் காரைக்குடி, பள்ளத்தூர், ஆத்தங்குடி, நாட்டரசங்கோட்டை, கொத்தமங்கலம் ஆகிய 30 நகரத்தார் ஊர்களில் உள்ள செட்டிநாட்டு வீடுகளை அவற்றின் பாரம்பரிய மதிப்பு மாறாமல் மீட்டுள்ளோம். இன்னும் நமது பிரதேச இல்லங்களின் பாரம்பரிய மதிப்பீட்டை உங்கள் துணையோடு தக்கவைப்பதை எதிர்நோக்குகிறோம்.
SAVE CHETTINAD WEBSITE.
www.savechettinad.com
PLEASE HAVE A LOOK AT THIS FOR FURTHER DETAILS.
பாரம்பரிய மதிப்பு மீறாமல் மீட்டப்பட்டுள்ள செய்தி போற்றத்தக்கது. நம் பண்பாட்டின் அடையாளமாக உள்ள இவை பாதுகாக்கப்படவேண்டும். பணி சிறக்க வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅந்தந்த விட்டு சொந்தக் காரர்கள் கையில்தானிருக்கிறது ராஜா அண்ணாமலையார் வீட்டுக்குள் சென்று பார்த்தநினைவு மரச் சிற்பங்களும் கைவினைப்பொருட்களும் உதிரியாக சந்தையில் விற்கும்நிலைக்கு வந்துவிட்டது
பதிலளிநீக்குநன்றி ஜம்பு சார்
பதிலளிநீக்குநன்றி பாலா சார். ஆம் :(
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!