எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 1 ஜூன், 2018

இன்னும் இருபத்தி ஐந்து.


1.எங்கு படித்தீர்கள்? எது சொந்த ஊர்?

ப்ரிகேஜி எல்கேஜி யூகேஜி காரைக்குடியில் உள்ள அழகப்பா மாண்டிசோரியில் படித்தேன். முதலாம் இரண்டாம் வகுப்புகளை ராஜமன்னார்குடியில் உள்ள செயிண்ட் ஜோசப் கான்வெண்டில் படித்தேன். அதன் பின் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை ராஜமன்னார்குடியில் கணபதி விலாஸில் படித்தேன். ஒன்பதாம் வகுப்பிலிருந்து ப்ளஸ்டூவரை செயிண்ட் ஜோசப் ( தூய வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ) படித்தேன். மதுரை ஃபாத்திமா கல்லூரியில் இளங்கலை வேதியல் படித்தேன். எனது சொந்த ஊர் காரைக்குடி. 

2.இளமையில் புத்தகங்கள் படிக்கும் ஆர்வம் இருந்ததா

இளமையில் புத்தகம் படிக்கும் பேராவலால் தூண்டப்பட்டிருந்தேன். தினமணிக்கதிரில் வெளிவந்த என் பெயர் கமலாதாஸை நான் விரும்பிப் படிக்கும்போது நான் நான்காம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். அதன் பின் பைண்டட் புத்தகங்களாக வாஷிங்டனில் திருமணம் ( சாவி ) இவள் அல்லவோ பெண் ( மணியன் ) ஆகியோரது கதைகளை விரும்பிப் படித்திருக்கிறேன். இந்துமதி, சிவசங்கரி, அனுராதா ரமணன், பாலகுமாரன், சுஜாதா ஆகிய வெகுஜன எழுத்தாளர்கள் என்னைக் கவர்ந்திருக்கிறார்கள். ஜெயகாந்தனை படித்துவிட்டு இவர் ரொம்ப மண்டைக்கனம் பிடித்த ஆள் என நினைத்திருக்கிறேன்.


3.நவீன கவிதைகளை எப்போது படித்தீர்கள்

கல்லூரிப்பருவத்தில் படித்தேன். பெரும்பாலும் மு மேத்தா, வைரமுத்து, அப்துல் ரஹ்மான் ஆகியோரது கவிதைகளைப் படித்திருக்கிறேன். கலாப்ரியா, வண்ணதாசன், ந பிச்சமூர்த்தி, ஆத்மாநாம், பிரமீள், நீல பத்மனாபன், கண்ணதாசன் ஆகியோரது கவிதைகளை வாசித்திருக்கிறேன். ”தற்காலத்தில் பெண்களின் நிலைமை “ என்ற தலைப்பில் எனது தமிழ் ஆசிரியை ( அசடனையும் குற்றமும் தண்டனையையும் மொழிபெயர்த்து முப்பெரும் விருது வாங்கியவர் ) எம் ஏ சுசீலா அவர்கள் ஆராய்ச்சி செய்து வந்தார்கள். அதற்காக வாங்கிய புத்தகங்களை எங்களுக்கு வாசிக்கக் கொடுப்பார்கள். அப்படிப் படித்ததுதான் இந்த நூல்கள்.


4.புதுக் கவிதைகளின் தாக்கத்தில் எழுதவேண்டும் என்று முயற்சி செய்தீர்களா?

தினம் தினம் ஒரு புத்தகம் எங்கள் தமிழம்மா எம் ஏ சுசீலாம்மா வழங்குவார்கள். நாங்கள் அதைப் படித்துவிட்டு அவர்களுக்கு எங்கள் கருத்துக்களை எழுதித் தர வேண்டும். இதுபோல் எழுதியபோது அவற்றைப் புதுக்கவிதை வடிவங்களிலும் எழுதிப் பார்த்திருக்கிறோம். வெவ்வேறு தலைப்புகளிலும் நாம் பார்க்கும் பொருட்களை தினம் ஒரு கவிதையாக எழுதிக் காட்ட வேண்டும் என்ற ஆவலும் உண்டாயிற்று.

அப்படி எழுதியதுதான் இக்கவிதை.

பயணம்.

அரிக்கேன் விளக்கு...
யாருடன்
யாருக்காக .,
யாரிடம் நோக்கி.,
ஏன் பயணிக்கிறோம்
என்பது புரியாமல்.,
ஒற்றை அரிக்கேன் விளக்கு..
எந்தக் கரத்திலோ
வளையமாய்த் தொற்றிக்கொண்டு.,
எந்த மாட்டுவண்டியிலோ
எதிர்க்கூதலில் ஆடிக்கொண்டு.,
இருளைத்தேடி..
இருளைத்தேடி..
முன்னே பரவும்
வெளிச்ச வட்டத்தைப் பிடிக்க...
பாலைவன மண்வீச்சுகளுக்குள்..
சிகப்பு வளையமாய்..
தூரப்புள்ளியாய்..
செவ்வாய்க் கோளாய்..
திரிக்குள் ஒளிரும்.,
கண்ணாடிக்குள் ஜ்வல்லிக்கும்
ஒற்றை அரிக்கேன் விளக்கு..
யாருடன்.,
யாருக்காக.,
யாரிடம் நோக்கி.,
ஏன் பயணிக்கிறோம்..
என்பது தெரியாமல்...

5.எழுதுவது உங்களுக்கு ஏன் ஆர்வமூட்டுகிறது என்று சிந்தித்திருக்கிறீர்களா?

எழுதும்போது எதையோ புதிதாய்ப் படைத்த சந்தோஷம் கிடைக்கிறது. பேச்சில் அல்லது உரையாடலில் நாம் சொல்ல நினைத்தும் தவறவிட்ட விஷயங்களை ஆவணப்படுத்திவிட்டதாகத் தோன்றுகிறது. பலர் அதைப் படித்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று ஊக்கமூட்டும்போது இன்னும் எழுதத் தோன்றுகிறது. அசலான விஷயங்களைப் படைக்கத் தோன்றுகிறது.

6.நீங்கள் ஒரு பெண் என்பதால் பாரபட்சம் காட்டப்பட்டீர்களா?

அணு உலை பற்றியோ, சர்வதேச சினிமா விழா பற்றியோ, மின்சார சிக்கனம் பற்றியோ என்னிடம் வானொலிக்காக பேட்டி எடுக்கப்பட்டபோது அதை நான் முகநூலில் பகிர்ந்திருந்தேன். அதைப் பார்த்து நமது நண்பர்கள் எனக் கருதும் சிலர் கூட இவருக்கு என்ன தெரியும் என்று கேட்கிறார்கள் எனக் கிண்டலடித்திருந்தார்கள். நாமும் செய்தி சானல்கள் பார்க்கிறோம். பொது அறிவுத் தகவல்களை வாசிக்கிறோம், சர்வதேச அளவில் தேடித்தேடித் தகவல்களை அறிந்துகொள்கிறோம், திரட்டுகிறோம், நமக்கும் லாஜிக்கல் மைண்ட் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளாமல் பெண்களுக்கு என்ன தெரியும் என்ற பொதுப்புத்தியின் விளைவைச் சந்தித்திருக்கிறேன்.

மேலும் பத்ரிக்கைகளிலும் நாம் நல்ல படைப்பாளியாக இருந்தாலும் சமையல் கோலம் ஆகியன கேட்பார்கள். நமக்குத் தெரிந்த துறைதானே என்றும், அதிலும் சிறப்பாகச் செய்து முத்திரை பதிக்க வேண்டும் என்றும் , மிக அசலாகச் சொல்லப்போனால் அவற்றுக்கான தொகையை அவர்கள் நமது அக்கவுண்டில் க்ரடிட் செய்துவிடுவார்கள், எனவே நாமும் சம்பாதிக்கிறோம் என்ற சந்தோஷத்துக்காகவும் இவற்றை ஒப்புக்கொண்டு செய்வதுண்டு. ஆனால் இவர்கள் இக்கலைக்கு மட்டும்தான் ஏற்றவர்கள் என்று சம்பந்தமில்லாதவர்களின் எள்ளல்களையும் சந்தித்ததுண்டு.

இதுபோக நான் பெண் என்பதால் எனக்கு எழுதும் வாய்ப்புகள் கிடைத்ததை விட நான் ஒரு வலைப்பதிவர் என்பதால் எனது வலையிலும் பகிர்வேன் என்பதற்காக அறிமுகமாகும் பத்ரிக்கைகள் எனக்குச் சில வாய்ப்புகள் அளித்ததுண்டு.

7.பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுவதைப் பார்க்கும் போது என்ன நினைப்பீர்கள்?

எங்களாலும் உங்களுக்குச் சமமாகச் சிந்திக்க முடியும் அதைவிட அதிகமாக சிறப்பாகவே எழுத முடியும் எனச் சொல்ல நினைப்பேன். எவ்வளவுதான் திறமையாக எழுதினாலும் க்ளாஸ் சீலிங்க்ஸ் எனப்படும் சம்பள விகிதாசாரத்தைப் பார்த்துக் கொந்தளிப்பு ஏற்படும். நான் வேலைக்குச் செல்லவில்லையானாலும் கூட ஆணை விட அதிகமாக உழைக்கும் பெண்ணுக்கு ஏன் குறைவான கூலி எனக்கேட்கத் தோன்றும்.

8.அதை எழுத்தாகக் கொண்டு வர எண்ணுவீர்களா?

நிச்சயம் எண்ணுவேன்.

9.பெண்கள் ஒடுக்கப்படுவதைப் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றியிருக்கிறதா?

உலகளாவிய குடும்ப வன்முறையில் ராணிகள் அடிமைப் பெண்களாய் என்ற கட்டுரை எனது பெண்மொழி என்ற மின்னூலில் வெளியாகி உள்ளது. அதில் இருக்கும் 39 கட்டுரைகளில் பெரும்பான்மையானவை பெண்கள் ஒடுக்கப்படுவது குறித்தே எழுதப்பட்டுள்ளது.


10.மனரீதியில் ஒடுக்கப்படுவதை கவனித்திருக்கிறீர்களா?

சொல் ரீதியான வன்முறை, செயல்ரீதியான வன்முறை என்பன குறித்தெல்லாம் எழுதி இருக்கிறேன். அதை உணர்ந்ததாலும் பார்த்ததாலும்தான் எழுதி இருக்கிறேன். உன்னால் முடியாது என்றோ, இது உனக்குப் பாதுகாப்பற்றது என்றோ, இதை ஏன் செய்கிறாய் என்றோ சிலர் என்னிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அக்கறை காட்டுவது போல் தடுத்தும் காழ்ப்புணர்வில் கிண்டலடித்தும் இருக்கிறார்கள்.

11.உங்கள் காலகட்டத்தில் நீங்கள் சந்தித்த பெண்களுக்கு எதிரான அடக்குமுறையாக எதைக் குறிப்பிடுவீர்கள்

எழுத்து மற்றும் பேச்சு சுதந்திரம்தான். கருத்துச் சொல்லிவிட்டால் எதிர்த்துப் பேசுகிறோம் என்று கணிக்கப்படுவது கேவலமானது. சில பெண்கள் எந்தக் கருத்தும் கூறாமல் கமுக்கமாக இருந்து தம் காரியத்தை முடிப்பார்கள். அவர்கள் நல்லவர்கள் பட்டம் பெறும்போது நாம் நியாயத்துக்காகக் குரல் கொடுத்தது தவறோ என்று எண்ணவைத்துவிடுவார்கள். மேலும் பெண்ணியம் குறித்து பேசும் பெண்கள் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பாக வாழ்ந்து கணவன் பிள்ளைகள் பெருமை  பேசும்போது பெண்ணியம் குறித்து அறிந்திராத பெண்களின் வன்முறைச் செயல்பாடு அதிர்ச்சியில் ஆழ்த்தும்.

ஆண்கள் எப்படிக் கையாள்கிறார்கள் என்றால் இன்னொரு ஆணிடம் வேலை சம்பந்தமாக மிக அதிகமாக உரையாட நேர்ந்தால் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை. இதே அதிக சம்பளம் வாங்கும் பெண் செய்தால் பொறுத்துக் கொள்பவர்கள் மிகக் குறைந்த சொற்ப வருமானத்துக்காகப் பத்ரிக்கைகளில் வேலை செய்யும் பெண்கள் செய்தால் பொறுத்துக் கொள்ளாமல் கேவலப்படுத்துவார்கள். இதுதான் முக்கியமா இது தேவையே இல்லை. உன்னை சொற்ப சம்பளத்துக்காக ஏமாற்றுகிறார்கள் என்ற தொனி எல்லா உரையாடல்களிலும் ஒரு பெண் எதிர்கொள்ள வேண்டிய ஒன்றாகும். அப்படியானால் அதிக சம்பளம்தான் ஒரு பெண்ணின் மன/உடல் தூய்மையையும் மதிப்பையும் நிர்ணயிக்கிறதா.


12.பெண்களைத் தாழ்வாகக் கருதும் சிந்தனைகளை நீங்கள் எதிர்கொண்டிருக்கிறீர்களா?

பெண்களைத் தாழ்வாகக் கருதவில்லை. ஆனால் சிலபெண்கள் நலியாமல் வஞ்சகம் செய்வது கோபமுண்டாக்குகிறது. நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமுமில்லாமல் வஞ்சகச் செயல்களில் ஈடுபடுபவர்களை நான் வெறுக்கிறேன். நாம் அவர்களுடன் நன்றாக இருக்கும்போது கூட, நல்ல உறவு முறைகளைக் கையாளவேண்டும் என நினைக்கும்போது கூட குடும்பத்திலும் சரி, முகநூல் போன்ற வெளியுலகிலும் சரி நம்மிடம் சாதீய, பொருளாதாரச் சிந்தனைகளைத் தூண்டி நம் வாயைப் பிடுங்கி நமது கருத்து என்று பறை சாற்றிக் கோபமுண்டாக்கி நம்மை வேடிக்கை பார்ப்பவரைக் கண்டால் பிடிப்பதில்லை.

இன்னோரு பதில்

ஆம். பெண் தானே ஒன்றும் தெரியாது. பொம்பளைன்னாலே எல்லா இடத்திலும் எழுத வாய்ப்புக் கிடைக்கும் என்ற கருத்துக்களைக் கேட்டு அதிர்ந்திருக்கிறேன். அது உண்மையில்லாததால் அதற்கு நான் எதிர்க்கருத்து சொல்லி அந்தக் கேள்விக்கு வலுவூட்டியதில்லை.

13.தந்தை வழிச் சமூகத்தில் இந்த வகையான இயல்பு இருப்பது சரியா?

தந்தைவழி சமூகம் என்று சொன்னால் அது கோபத்தில் பெண்களை இழிவான சொற்களால் சாடும் வகை என நினைக்கிறேன். ஒரு பெண் அவர்களுக்கு உகந்ததைச் சொல்லாவிட்டால் அல்லது செய்யாவிட்டால் அவளைத் தாழ்ந்த சொற்களால் வசைபாடுகிறார்கள். இதைக் காதாரக் கேட்டிருக்கிறேன். அப்படிக் கூறக்கூடாது எனக்  கண்டித்திருக்கிறேன். என்ன தவறு செய்தார்களோ அதை மட்டும் சொல்லுங்கள் ஏன் வேண்டாதது மற்றும் இல்லாதது பொல்லாததைப் பேசுகிறீர்கள். அது எனக்குப் பிடிக்கவில்லை என்று கூறி இருக்கிறேன்.

14.தந்தை வழிச் சமூகத்தில் பெண்ணின் இடம் எதுவாக இருக்கிறது

தந்தை, கணவன், மகன்,சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் இடமாக இருக்கிறது. இது போக உறவினர்கள் & பெரியவர்கள் அனைவரின் சொல்லுக்கும் கட்டுப்பட வேண்டும். சொன்னவற்றை எல்லாம் லாஜிக் சிந்தனை இல்லாமல் செய்ய வேண்டும். சுயசிந்தனை இல்லாத உலகம் தெரியாத அறிவு வேலை செய்யாத  வாய் பேசாத தனிமைப்படுத்தப்பட்ட அடிமைகளாக இருந்தால் போதும்.

15.பெண்களின் நிலை நீங்கள் எழுதத் தொடங்கிய போது எப்படி இருந்தது?

நான் எழுதத் தொடங்கியபோது பெண்கள் எல்லாப் பிரிவிலும் உரிமை கோருபவர்களாக இருந்தார்கள். எங்கும் விடுதலை இல்லை. ஒரு கூண்டிலிருந்து இன்னொரு கூண்டுக்குள் என்பதாகவே குடும்பமும் திருமணமும் இருந்தது. தனித்தியங்கும் சிலரும் இருந்திருக்கிறார்கள். அது அவர்களின் சிந்தனைகளின் செம்மைப்பாடாக இருக்கலாம். உயர் உன்னதப் பதவி வகிக்கும் பலர் இருக்கிறார்கள். ஆனால் அன்றைக்குத் திருமணம் என்பது வெளியுலகில் ஓரளவு முகம் காட்ட , விருந்து விசேஷங்களுக்குச் செல்ல, சுதந்திரக் கருத்தை ஓரளவு உதிர்க்க ஏற்படுத்தப்பட்ட லைசென்ஸாகவே இருந்தது என்பது உண்மை.

16.எல்லா பொருளாதாரப் பிரிவிலும் பெண்கள் மேம்பாடடைந்துவிட்டார்களா?

இல்லை. கடைமட்டத்தில் பெருமளவு சுதந்திரம் இருந்தாலும் இன்னும் உழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். நடுத்தர வர்க்கத்தில் இரண்டும் கெட்ட போராட்டம். உயர்மட்டத்தில் செல்வச் செழிப்பை எட்டிவிட்டாலும் சில மாயத் தளைகளும் வலைகளும் இருக்கத்தான் செய்கின்றன.

17.பெண்கள் இன்னும் பல சிக்கல்களை எதிர்கொண்டுதான் முன்னேற முடிகிறது என்பதை ஏற்கிறீர்களா

நிச்சயமாக. எல்லாவற்றுக்கும் எல்லாருக்கும் பதில் சொல்லவேண்டும். தனித்துத் தங்குதல் தனித்து இயங்குதல் தனித்துத் தொழில் செய்தல் ஆகியன இன்னும் பலருக்கு எட்டாக் கனிதான். அளவுக்கதிகமான தன்னம்பிக்கை உள்ள பெண்கள் தங்கள் சொந்த முயற்சியால் அனைத்தையும் எதிர்த்து வளர்ந்து ஓரளவு சாதிக்கிறார்கள்.

18.பெண்கள் சுய முடிவெடுக்க இன்னும் தயங்குகிறார்கள் என்பதை ஏற்கிறீர்களா?

நிச்சயமாக. குடும்ப அமைப்பில் வளர்க்கப்பட்ட பெண்கள் குடும்பங்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களின் அடித்தளம் குடும்பம்தான். எழுத்தோ வேலையோ இல்லாவிட்டாலும் அவர்கள் சமூகத்தின் முன் மனிதர்களாக மதிப்பான அங்கீகாரம் பெறுவது இன்ன குடும்பத்தை இன்ன சாதியை இன்ன ஊரைச் சேர்ந்தவர் என்பதுதான். எனவே பெரும்பகுதியும் குடும்பத்தைச் சார்ந்திருக்கும் பெண்கள் தங்கள் முயற்சி எல்லாம் வெற்றி பெறுமா என்று தயங்கியும் முடிவெடுக்கத் தயங்குகிறார்கள் என்பதே உண்மை.

19.குடும்பத்தின் கௌரவம் கருதி பெண்கள் தங்களின் சுயத்தேவைகளை விருப்பங்களை நிறைவு செய்யாமல் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா அதைப் பற்றி எழுத நினைத்திருக்கிறீர்களா?

ஆம் ஒரு சில பெண்களுக்கு சுதந்திரமாக எழுத கருத்தை வெளியிட ஆசை. ஆனால் இப்படி எழுத்தில் வெளியிட்டுவிட்டால் தன் சுயம் வெளிப்பட்டு விட்டால் எல்லாரும் எப்படி மதிப்பார்களோ என்று தயங்கி எல்லாவற்றுக்கும் முலாம் பூசி எழுதுகிறார். தன்னை வெளியிடத் தயங்குகிறார்.

அதே போல் காம்ப்யரிங்க் செய்ய, சினிமா தொலைக்காட்சியில் நடிக்க விரும்பியும் மேக்கப் செய்ய ஆசைப்பட்டும் கூட பெண்கள் தங்கள் வீட்டார் ஒப்புக் கொள்ளாததால் மனம் நிறைய ஆசையிருந்தும் அந்தத் தொழிலின் அதி பாதக செயல்பாடுகள் விவரித்துப் பெரிதாக்கிக் காட்டப்படுவதால் அதில் ஈடுபடுவதில்லை.

அதைப் பற்றி ஓரிரு கதைகளில் எழுதி இருக்கிறேன். “ அகல்யா, கல்யாண முருங்கை “ ஆகிய சிறு கதைகள். குடும்பத்தோடு வெளியுலக சமூகத்தை எதிர்கொள்ளத் தயங்கியுமே அவர்கள் தம் ஆசைகளை மட்டுறுத்திக் கொள்கிறார்கள்.

20.பெண்களின் சுயம் ஆண்களின் சுயம் போல் கட்டமைக்கப்படுகிறதா?

இல்லை. பெண்களின் சுயம் ஓரளவு மட்டுறுத்தப்பட்டதுதான். சிந்தனை அளவிலும் செயல் அளவிலும் அவளால் முடியாது என்பதை நூற்றாண்டுகளாகப் புகுத்தி வைத்திருக்கிறார்கள்., துர்க்கைகளை கருப்புக் கர்ப்பக்கிரகத்தில் அடக்கி வைத்ததுபோல். தேவிகள் முயலகன்களை அடக்கி வைத்தால் போதும் முழு உலகையும் ஆண்டதாகப் பிலிம் காட்டி விடுவார்கள்.

21.பெண்ணின் அதிகாரம் ஆணின் அதிகாரத்தைப் போலச் செய்யப்படுகிறதா?

இது நிர்வாகம் மற்றும் பணம் பொறுத்ததாக அமையும். கோவையில் சில பெண் தொழிலதிபர்கள் இருக்கிறார்கள். அவர்களின் அதிகாரம் ஆணின் அதிகாரம் போலச் செயல்படுகிறது. சொல்லப்போனால் பொருளாதார உயர்மட்டத்திலும் பொருளாதாரக் கடைமட்டத்திலும் இந்த அதிகாரம் ஓரளவு செயலில் உள்ளது. பெண்கள் தொழில் செய்தல், சுய உதவிக் குழு, கடன் பிடித்தல், சீட்டுப் பிடித்தல், பல் தொழிலும் செய்து சம்பாதித்தல் தன் காசை ஓரளவாவது தனக்காகச் செலவழித்தல் போன்றவை உண்டு. ஆனால் இந்த நடுத்தரவர்க்கப் பெண்மணிகள் வீடு அளவில் பொருளாதார சுதந்திரம் அடைந்திருந்தாலும், தன் எழுத்து தன் பேச்சு ஆகிய சுதந்திரமோ அதிகாரமோ அடைவதில்லை. மேலும் தன் சுயப் பொழுதுபோக்கான எழுத்து படிப்பு சம்பந்தமாகச் செலவு செய்ய யோசிக்கத்தான் வேண்டும். எனக்கு அந்த சுதந்திரம் கிடைத்தாலும் வாசிக்க வெகுஜனப் புத்தகங்கள் வாங்கவே என் உறவினர் பெண்கள் பலர் கணவரிடம் கேட்டுத் திட்டு வாங்கி இருக்கின்றார்கள். ஐநூறு ரூபாய் புக் வாங்கி இவ படிச்சு என்ன செய்யப்போறா. உலகத்தை மாத்தப் போறாளாமா. இது தேவையா. ஓசில கிடைச்சா படி. அதுவும் வீட்டு வேலை எல்லாம் முடிச்சிட்டுப் படி. இதுதான் கிடைக்கும் அட்வைஸ். இதில் அவர்கள் எழுத எப்படி முடியும்.


22.பெண்ணின் அதிகாரம் உண்மையானதா போலியானதா?

ஓரளவு போலியானதுதான். பாதி உண்மை என்றும் கொள்ளலாம். ஏனெனில் இங்கே பணம் அனைத்தையும் தீர்மானிக்கிறது. பணம்தான் கடவுள். சம்பாதிக்கும் பெண்ணைக் குடும்பமே வணங்குகிறது. ஆனால் இல்லத்தரசியான பெண்ணை அதிகாரம் செய்கிறது. சம்பாதிக்கும் தாயையும் வீட்டில் இருக்கும் தாயையும் பிள்ளைகள் & கணவர் செய்யும் அதிகாரத்திலும் வித்யாசம் இருக்கிறது. அதனால் ஒட்டு மொத்தமாக போலி என்றோ உண்மை என்றோ சொல்ல முடியாது. சில வீடுகளில் பெண் கொண்டுவந்த சீரும் சிறப்பும் கூட புகுந்த வீட்டுக்காரர்களை மௌனிக்கச் செய்து அவளின் அதிகாரம் சிறப்பாகக் கொடிகட்டிப் பறக்க உதவுகிறது. ஆனால் எல்லாம் ஒரு காலகட்டம் வரையில்தான். அதன் பின் அந்தப் பெண் தன்னை விட்டுக் கொடுத்தால் அவ்வளவும் அவுட். இல்லை என்று கெத்து காட்டித் திரிந்தால் அதற்கும் அந்தப் பெண்ணைத் தலை வணங்குகிறார்கள் சிலர்.

23.தந்தை வழிச் சமூகத்தில் சில பெண்களுக்கு மட்டும் அதிகாரம் கிடைப்பது முழுமையான பெண் சமூகத்திற்கும் கிடைத்துவிட்டதாகக் கருத முடியுமா?

கொள்ள முடியாது. அதற்கு பெண்களுக்கே மாற்றுச் சிந்தனைகள் வர வேண்டும். யாம் யார்க்கும் அடிமை அல்லோம் என்றும். எந்தச் சூழ்நிலையிலும் நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையுமாயிருப்போம் என்றும். நேர்மையான முறையிலேயே அனைத்தையும் கொள்வோம் என்று இருந்தால் யாரும் யாரிடமும் பழுது காணமுடியாது. நிச்சயம் அதிகாரம் பரவலாக இரு பாலாருக்கும் சமமாகக் கிடைக்கும். பெண்ணுக்கு முதலில் சிந்தனை மாற்றம் தேவை மேலும் தான் யார் என்ற தெளிவும் ஒரு பெண்ணுக்குத் தேவை. நாம் என்னவாக விரும்புகிறோம் என்பதைத் தெளிவுபடுத்திவிட்டால் அதன் பின் தந்தையர் சமூகமும் அதற்கு ஓரளவு உதவி செய்யத் தயாராகிவிடுகிறது. இதை நான் என் வாழ்விலிருந்தே சொல்வேன். என் தந்தை, என் கணவர், என் பிள்ளைகள் என் முயற்சிகளுக்கு முன்பு என் பாதுகாப்புக் கருதித் தடை சொன்னாலும் பின் எல்லாம் ஊக்கம் கொடுத்துத் தேவையான உதவிகள் செய்தே வந்திருக்கிறார்கள் . சொல்லப்போனால் எனக்கான குழப்பமும் தன்னம்பிக்கை இன்மையும்தான் என்னைத் தெளிவாகச் செயல்படவிடாமல் தடுத்திருக்கிறதே தவிர அவர்கள் அல்ல.


24.இலக்கியத்தில் பெண் எழுத்துக்கள் எப்படி இருக்கின்றன

மிக அருமையாக இருக்கின்றன. பெண்கள் எய்திய நிலை பற்றி எல்லாம் விரவிக் கிடக்கின்றன. தன் இயல்பை உரைப்பதாகவும் உரத்துச் சொல்வதாகவும் இருக்கின்றன. புது பெண் எழுத்தாளர்கள் இன்னும் நம்பிக்கை அளிக்கிறார்கள். உமா மோகன், ஈழவாணி, ராமலெக்ஷ்மி, சாந்தி மாரியப்பன், மாயோ மனோ, சுகிர்தராணி, குட்டி ரேவதி, பரமேஸ்வரி, தமிழ்நதி, லாவண்யா, விதூஷ், சக்தி செல்வி, தமிழரசி, ஆனந்தி, சித்ரா, பத்மஜா, சாந்தா தத், அகிலா புகழ், அனார், ஆழியாள், ஹேமா, மதுமிதா, எம் ஏ சுசீலா,  ஆகியோரின் எழுத்துக்கள் சிறப்பானவையாக இருக்கின்றன.


25.சங்க இலக்கியத்தில் பெண் எழுத்துகளிலிருந்த விடுதலை உணர்வு தற்காலத்திய இலக்கியங்களில் இருக்கிறதா?

விடுபட்ட உணர்வு கட்டாயம் இருக்கிறது. தன்னுடைய அழுத்தங்களைப் பதிவு செய்தாலும் அன்றைக்கு யாக்ஞவல்கியரை வென்ற கார்க்கி வாச்கவி, மைத்ரேயி, கோஷா இவர்கள் போல் ஔவை, ஆண்டாள் ஆகியோருக்கும் இருந்த விடுதலை உணர்வு கூட இப்போது இல்லாவிட்டாலும் சமீபகாலங்களில் மாறி வரும் உலகக் கண்ணோட்டத்தில் கொஞ்சம் விடுபட்ட உணர்வு ஏற்படத்தான் செய்கிறது. எதைப் பற்றியும் கவிதை பாட என்னாலும் முடிகிறது. ஓரிரு எதிர்ப்புகளையும் எள்ளல்களையும் சம்பாதித்தாலும் மூன்றாம் பாலினம், எல்ஜிபிடி, பொதுமகளிர் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி நானும் எழுதி இருக்கிறேன். மத்யதரக்குடும்பத்தில் பிறந்து ஓரளவு என் கருத்துக்களையும் இணையத்தில் பதிவு செய்ய முடிகிறது என்பதே ஆசுவாசம். முகநூலில் பலர் பதிவு செய்கிறார்கள் ஆனால் இன்னும் துணிந்து பெண்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய முன்வர வேண்டும் என்பதே ஆசையும் வேண்டுகோளும்.

டிஸ்கி :- இவற்றையும் பாருங்க.


தேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம். 1 - 25 கேள்விகளும் பதில்களும்





1 கருத்து:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...