வித்தைகளைக் கற்றுக் கொள்வதில் சிரத்தை உள்ளவர்களைப்
பார்த்திருக்கிறோம். விளையாட்டில் கூட சிரத்தை எடுத்து விளையாடி வெற்றிக் கோப்பைகளைக்
கைப்பற்றுபவர்களைப் பார்த்திருக்கிறோம். படிப்பில் சிரத்தை எடுத்து சூரப்புலி என்று
பட்டம் பெற்றவர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் பெற்றவர்களின் மேல் பக்திசிரத்தை எடுத்து
சேவை செய்த ஒருவனைப் பற்றிக் கூற வேண்டுமானால் அதில் சிரவணகுமாரன்தான் முதலிடம் வகிப்பான்.
யார் அந்த சிரவணன். அப்படி அவன் என்ன செய்தான்?
அயோத்தி மாநகரின் கானகம் அது. அங்கே உலவிய
துஷ்ட மிருகங்கள் நகருக்குள்ளும் புகுந்த மக்களைத் தொல்லைப்படுத்தின. முற்றி விளைந்த
பயிர்களை யானைகள் கபளீகரம் செய்தன. கால்நடைகளை புலிகள் , சிங்கங்கள் வேட்டையாடின. மக்கள்
மன்னனிடம் முறையிட்டனர், அந்தத் தொல்லைகளில் இருந்து விடுவிக்கும்படி.
கானக மிருகங்களை
வேட்டையாடப் புறப்பட்டார் தயரத சக்கரவர்த்தி. எதிர்நோக்கப் போகும் இன்னலைப் புரியாமல்
அவரது குதிரையோ படை பட்டாளங்களை விட்டு இருண்ட கானகத்தின் உள்பகுதிகளுக்குப் பாதை மாறிப்
பிரிந்து வெகுதூரம் சென்றுவிட்டது. நடை தளர்ந்த குதிரையை விட்டுக் கீழே இறங்கினார்
சக்கரவர்த்தி, எங்கோ ஒரு யானை நீரருந்தும் சத்தம் குபுக் குபுக் எனக் கேட்டது. அச்சத்தம்
வந்த இடம் நோக்கி தயரதரின் அம்பு பாய்ந்தது.