எனது நூல்கள்.

புதன், 10 அக்டோபர், 2018

கண்களும் கண்மணிகளும் - ஒரு பார்வை.

கண்களும் கண்மணிகளும் - ஒரு பார்வை.

என்றென்றும் உலகத்தை வளர்க்கும் பெண் குலத்துக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டிருக்கும் இந்நூலை எழுதியவர் பிரபல பத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்கள். அவர்களின் வழக்கமான பாணியில் துல்லியமான புள்ளி விவரங்களுடன் ஒரு ஆவணம் போன்ற நேர்த்தியில் தயாராகி இருக்கிறது இந்நூல்.

அட்டைப்படமும் தலைப்புமே இந்நூல் பற்றிய சுவாரசியமான வரைபடைத்தைத் தோற்றுவித்திருக்கிறது. ஆம் பெண்களும் குழந்தைகளும் எதிர்கொள்ளும் அனைத்துவிதமான ஏற்ற இறக்கங்களையும் இந்நூல் பேசுகிறது.


இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி இருப்பவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) யின் மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி அவர்கள்.  இந்நூல் பெண்களுக்கு அவர்களின் உரிமைகளைப் பெற்றுத்தரத் தூண்டுதலாய் இருக்கவேண்டும் என்பதே நூலாசிரியரின் அவா

பெண்களின் பாதுகாப்பில் தமிழகம் பத்தாவது இடத்தில் இருக்கிறதாம். பெண் சிசுக்கொலை, கருக்கொலை, பணியிடப் பாலியல் துன்புறுத்தல், இணையத்தில் பாலியல் அச்சுறுத்தல், பெண்களுக்கான பொருளாதார அதிகாரம் அளித்தல், பொருளாதார சுயசார்பு, க்ளாஸ் சீலிங்க் எனப்படும் சம்பள விகிதாசாரம் ( ஊதிய முரண்பாடு ) , அவர்கள் உடை பற்றிய பிற்போக்கான கருத்துக்கள்,  கல்வி வழங்குவது & வேலைக்குச் செல்வது, முடிவெடுப்பது போன்ற நிலைமைகளில் இன்னும் தெளிவு மட்டுமல்ல தீர்மானமான முடிவுக்கும் வரவேண்டும் என்கின்றார் ஆசிரியர்.

அரசியலில் பெண்கள் நிலை, குடிகாரக் கணவர், குடும்ப வன்முறை, தாங்கவொண்ணா பிரச்சனைகளால் தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள், கைம்பெண்களின் நிலை, அவர்களின் மறுமணம் மற்றும் மறுவாழ்வு, நலத்திட்டங்கள், தொண்டு நிறுவனங்களின் உதவி என்று பிரச்சனைகளுடன் அவற்றுக்கான தீர்வும் கூறுகின்றன பல கட்டுரைகள்.

அலுவலகத்திலும் வீட்டிலும் பெண் படும் இடர்ப்பாடுகள், வீட்டரை நன்கு கவனிக்கும் பெண் தன் உடல்நிலையைக் கவனிக்காத பெண் இனம் பற்றிய அக்கறை, ஊட்டச்சத்துக்குறைபாட்டோடு வளரும் குழந்தைகள் பற்றிய ஆதங்கம்  பல்வேறு கட்டுரைகளில் தொனிக்கிறது. சூழலியலைக் காக்கப் பெண்கள்படும்பாடும், சுதந்திர வேள்வியில் தம்மை ஈந்த பெண்களின் தியாகமும் கூட சிறப்பிக்கப்பட்டுள்ளது.

நிர்பயா நிதியம் என்ற கட்டுரை ஆழ்ந்து சிந்திக்க வைத்தது. தாயைக் கொண்டாடும் கட்டுரை மிகச் சிறப்பானது.

குழந்தைகளைப் பாலினப் பாகுபாடு இன்றி சமமாக நடத்துதல், கல்வி முறையிலேயே ஆண் பெண் என்ற சிந்தனையோடு புகுத்தப்பட்டிருக்கும் பாடத்திட்டம், குழந்தைகளுக்கான பாலியல் தொந்தரவு, அது பற்றிப் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,தற்காப்புக் கலையின் அவசியம்,  பெண் குழந்தைகளுக்கான குடும்ப சமூக லிமிட்டேஷன்ஸ், அவர்களின் உடை அணியும் உரிமை மீதான குற்றச்சாட்டு, பாலியல்தொழிலுக்காகவும் பிச்சை எடுத்தலுக்காகவும்  உடலுறுப்புத் திருட்டுக்காகவும் , நரபலிக்காகவும் நடத்தப்படும் குழந்தைக் கடத்தல் பற்றிய அதிர்ச்சித் தகவல்கள், அவர்களின் பாதுக்காப்பு குறித்த பயம் பற்றிப் பல கட்டுரைகள் குழந்தைகளின் பிரச்சனைகளையும் பேசுகின்றன.

குழந்தைகள் கொண்டாடப்பட வேண்டியதன் அவசியம், குழந்தைகளுக்கான உரிமைகள், ( உயிர்வாழும் உரிமை, வளர்ச்சி காண்பதற்கான உரிமை, பாதுகாப்புப் பெறுவதற்கான உரிமை, பங்கேற்பு உரிமை ) இவற்றைச் சட்டமாக்குவதற்கான அவசியம் , காப்பகத்தில் வாழும் குழந்தைகள் நிலை, அநியாயமாக நடக்கும் குழந்தைத் திருமணங்கள் , தன்னம்பிக்கை இல்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் சிறார்கள், அவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டியதன் அவசியம், பெற்றோரின் அரவணைப்பின் தேவை ஆகியவற்றை விரிவாக அலசுகின்றன  பல கட்டுரைகள்.

பெண் சமத்துவம் , பெண் முன்னேற்றம், 50 சதவிகிதம் இருக்கும் பெண்களுக்கு 33 சதவிகிதம் அளிப்பதில் நேரும் குளறுபடிகள், இட ஒதுக்கீட்டிலும் உள் ஒதுக்கீட்டிலும் நடக்கும் பாரபட்சம், பெண் உரிமைகள், இதோடு சரிந்து வரும் வேலைவாய்ப்பு, ஏதோ ஒரு தொழிலைப் பிழைப்புக்காகச் செய்தல், வெளியுலகத்திலும் வீட்டிலும் இருக்கும் கருத்துச் சுதந்திரம், பற்றித் தெளிவான புள்ளி விபரங்கள் தருகிறார் ஆசிரியர்.

ஒவ்வொரு கட்டுரையிலும் காந்தியடிகள், மோடி,  மற்றும் பல்வேறு தலைவர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், சமூக ஆர்வலர்கள் கூறிய கருத்துக்கள் யதார்த்த எடுத்துக்காட்டுகளுடன் மேற்கோள் காட்டப்பட்டு இருப்பது சிறப்பு. அதோடு அவ்வப்போது அது சம்பந்தமாக வந்த செய்திகளையும்  , அரசியல்வாதிகளின் கருத்துக்களையும் தோலுரித்திக் காட்டி இருப்பது அதி சிறப்பு.

அரசுப் பள்ளிக்கூடங்களையும் மருத்துவமனைகளையும் புதுமைப்படுத்துவது மட்டுமல்ல. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உரிமைகள் தொடர்பான சட்ட திட்டங்களிலும் புதிய ஷரத்துக்களை அரசு அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்நூல் தெளிவுறுத்துகிறது.

மொத்தம் 20 கட்டுரைகள். இருபதும் சிப்பிக்குள் முத்தாக ஜொலிக்கின்றன. பெண்கள் மட்டுமல்ல. அனைவரும் வாசித்துத் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயப் பேழை இந்நூல்.

நூல் :- கண்களும் கண்மணிகளும்
ஆசிரியர் :- ப.திருமலை.
வெளியீடு :- தமிழர் ஆய்வு மையம்
விலை :- ரூ. 100. 

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...