எனது நூல்கள்.

வெள்ளி, 5 அக்டோபர், 2018

அபிதா. – ஒரு பார்வை.


அபிதா. – ஒரு பார்வை.

1970 களில் வந்த ஒரு நாவல், எண்பத்தி நான்காம் ஆண்டு படித்தது, இன்னும் மனதைக் குடையும் அற்புதத்தை என் சொல்ல. இந்த வருடமே இரண்டு முறை படித்துவிட்டேன். சொல்லவந்த விஷயமோ கைக்கிளைக்காதல். ஆனால் இளவயதுக் காதல்போல் அதில்தான் எவ்வளவு நெளிவு சுளிவு புரிதல், அதேசமயம் தவிர்க்கவொண்ணா தாகமும் அடக்கமாட்டா ஆசையும் வெடித்து விரியும் மோகமும், கிளர்ச்சிகொண்ட கோபமும் கூட.

காதலித்தவளின் மகளைக் காதலியாகக் காண்பது மட்டுமல்ல. இது தன்னைப் பற்றி எண்ணாமல் நிறம், வயது , உருவம் இவற்றை முழுமையாகப் பற்றிய காமம் கலந்த காதல்.

கரடிமலையில் சிறுவயதில் தான் காதல் கொண்ட சகுந்தலையைச் சூழ்நிலை காரணமாகப் பிரிய நேரிடுகிறான் அம்பி. அவன் சென்ற ஊரில் ஒரு வேலையும் முதலாளியின் மகளே மனைவியாகக் கிட்டுவதும் நிகழ்கிறது. இதெல்லாம் அதிர்ஷ்டத்தின்பாற்பட்டாலும் அவனது சிறுவயதுக் காதல் அவன் நெஞ்சில் பாரமாக இறங்கி இருக்கிறது. பசைபோட்டு அழுத்துகிறது. இறுக்கத்தோடே மனைவியுடன் வாழ்கிறான். ஆனால் அதே சமயம் மனைவியுடன் காமம் கொள்வது என்பதும் இயல்பாக நடக்கிறது. ஒருவர்மேல் ஒருவர் கொண்ட கோபத்தைத் தீர்க்கும் கழிமுனையாக ஒருவரை ஒருவர் எடுத்து விழுங்கும் கோபத்தீர்வாகக் காமம் அமைகிறது.

மனைவியுடன் கரடிமலைக்குத் திரும்ப வரும்போது அவன் காணும் உருவம் சகுந்தலையின் அச்சாக இருக்க அவளோ தன் பெயர் அபிதா என்கிறாள். சகுந்தலையின் முடிவு துயரம் கப்பியதாய் இருக்க அதன் உண்மையான காரணம் வெளிப்பட உரைக்கப்படுவதில்லை. அம்பியின் மேல் கொண்ட காதலாய் இருக்கலாம் என்றாலும் அவன் மறைவிற்குப் பின் அழுது கொண்டே இருக்கவும் கரடிமலையில் திருவேலநாதர் பாதத்தில் உயிர்துறக்கவும் அதி முக்கியமானதாக அக்காதல் அதிகம் சித்தரிக்கப்படவில்லை. இருவரும் சேர்ந்து ரயிலைப் பார்க்கிறார்கள். வயலை, மலையை, கோவிலைப் பார்க்கிறார்கள். சேர்ந்து வாழ்வதற்கான அல்லது அதி தீவிரக் காதலுக்கான எந்த மோடிவும் அந்த ஆரம்பக்கட்டத்தில் சித்தரிக்கப்படவில்லை. நாம் மட்டுமல்ல நொண்டிக்குருக்களும் அம்பியும் ஊராருமே  யூகித்துக்கொள்ளும்படி ஆசிரியர் விட்டு விடுகிறார்.

தனக்குச் சமைத்துப் பரிமாறும் அபிதாவைக் காணும் இரவில்  தன் மனைவியின் நிழலே அவள் அருகில் பூதம் போல் அம்பிக்குத் தோன்றுவதும் அபிதாவின் சித்தியைப் பற்றிய நாடகத்தனமான சித்திரங்களும் ஒவ்வொரு ஆணும் தன்னைப் பற்றி வரையும் உயர்பிம்பங்களும் தான் காதலிக்காமல் தனக்கு மணம் செய்துவைக்கப்பட்ட மனைவி மற்றும் மற்ற உறவுமுறைப் பெண்கள் பற்றி எண்ணிக்கொண்டிருக்கும் தாழ்ந்த கருத்துக்களும் எள்ளல்களுடன் வேறுபடுகிறது. 

அதே சமயம் தான் காதலிக்கும் பெண்ணை வயது வித்யாசம் அதிகமானாலும் பிரபஞ்ச புத்திரிபோல் ,தேவதை போல் சித்தரிப்பதும், அம்பாளைப் போல் உபாசிப்பதும், நினைத்துக் கொள்வதும் அதீதமாய் மனநிலை பிறந்த  காதல் போல் தோன்றுகிறது.

இயல்பான குடும்ப அமைப்பில் ஏற்படும் தார்மீக மனப் போராட்டங்கள் நடுவில் அவன் மனதுள் இருக்கும் இளவயதுக் காதல் முதுமையிலும் அப்படியே பொங்குவதும் அதற்காகத் தான் இளமை கழிந்து முதுமையின் முகத்துவாரத்தில் இருப்பதற்கான கழிவிரக்கமும் துரத்துகிறது.  

இதை வெறியேற்றும் முடிச்சாக புது அம்பி வந்து அபிதாவைத் தன் வண்டியில் அழைத்துப் போக பழைய அம்பி நினைக்கும் இவனும் அம்பியா என்ற வார்த்தை நையாண்டியையும் அவனுடன் அவள் சந்தோஷமாகப் பயணம் செய்து போகிறாளே என்ற வெறிச்சிந்தனையையும் அழகாகப் படம் பிடித்துள்ளார்.

இக்கதை முதல் பகுதியில் விதி நிமித்தம் ஒன்று சேர நேர்ந்த தம்பதியைப் பற்றியும் நடுநடுவே பரஸ்பரம் அவர்கள் இருவருக்குமிடையேயான அந்தரங்கப் புரிதல் பற்றியும் அமைந்துள்ளது. அதன் மற்றைய பக்கங்களில் இளவயதில் சந்தித்த ஒரு பெண்ணைப் போன்ற பிம்பத்தின் மேல் ஏற்படும் கைக்கிளைக் காதல் பற்றியும் எழுதி உள்ளார் .

தன்னைப் பற்றித் தன் மனைவிக்குத் தெரியாததே இருக்க முடியாது என்பதை உணரும் அவன் அதை ஒப்புக்கொள்ளவும் மனதால் மறுக்கிறான். அதே போல் சகுந்தலை,அபிதாவின் முன்னால் சாவித்ரி அற்பம் என்றும் அங்கங்கே நினைக்கிறான். இது எல்லா சராசரிக் கணவன்களின் மனவெளிப்பாடாகவும் அமைகிறது. 

அநேகமாய் முதுமையைக் கடக்கும் எல்லா ஆண்களுக்கும் பொதுவான உணர்ச்சியாக இக்காதலைக் கொள்ளலாம். கல்கி பார்த்துவிட்டு உறவினர் ஒருவர் சொன்னார் தனக்கு இப்படி ஒரு பெண் கிடைக்கமாட்டாளா என்று அவர் கணவர் நினைத்தார் என்று.

மனைவியான சாவித்ரி ஒவ்வொரு அசைவிலும் அம்பியைப் புரிந்து கொள்ளுதலும் அவள் புரிந்துகொண்டாள் என்பதை உணர்ந்து தன்னிடமிருந்தே அம்பி ஓட்டமெடுப்பதும் புருவமயிரைக் கருப்பாக்கித் தன்னை இளமையாகக் காட்டிக் கொள்ள முயல்வதும் இன்னொரு அம்பியா என எள்ளலோடு எதிர்கொள்வதும் மனைவியையும் தன்னையும் புலியாக உணர்வதும் நல்ல சித்தரிப்பு.

///பற்று ஒன்றின் மேல் விழுந்துவிட்டால் –
தொடல் என்பது ஏன் அவ்வளவு அவசியமாகி விடுகிறது  தொடல், உடைமையின் முத்திரை. உறவின் வழித்துணை.  /// பார்வைத் தீண்டல்தான் பல இடங்களில் என்றாலும் உடம்பால் தீண்டல் மாடு ஓடும் இடத்தில் பகல் மயக்கக் கனவாகவும் கன்னிக்குளத்தில் அந்தி மயக்கக் கனவிலும் நிகழ்ந்தவையே என்று எண்ணத் துணிகிறேன்.

மனித மன விகாரங்களை ஃபியோதருக்கு அடுத்து தி. ஜா. ரா கதைகளில்தான் படித்திருக்கிறேன். இக்கதை வேறுபட்ட கோணத்தில் அதை வெளிப்படுத்துகிறது. 

தன்னை வயதானவனாகக் காணும்போது ஏற்படும் அதிர்ச்சியும் அதே சமயம் அபிதா தவிர மற்றவர்களை ஏதோ ஒன்று போலக் கருதுவதும் நடத்துவதும் கதை முழுக்க நிகழ்கிறது. ஆனால் அபிதாவோ மாமா என்ற சொல்லுக்குமேல் வேறு எதற்குமே , எந்த சந்தேகத்திற்கோ அனுமானத்திற்கோ இடமளிக்காமல் நடந்து கொள்கிறாள். புது அம்பியையும் அவள் காதலித்தாளா என்பது தெரியாமலே தன் தாய் மரித்த அதே கரடி மலையின் மூன்றாவது படியில் மலர்ந்து உதிர்வது வருத்தம்.

கன்னிக்குளத்தில் தனித்து நீராடுவது மோகமெனும் மாயையில் மூழ்குவதையும் பறவையை வேட்டையாடுபவரின் உரையாடல் கதையின் முடிவையும் சொல்லிவிடுகின்றன.  

அபிதாவின் காலில் பச்சை நரம்பின் ஓட்டம் கொடிபிரிவதும். அம்பி சகுந்தலையை நினைக்கும்போது மின்னல்போல் வலி கொடி பிரிந்து மார்பில் பாய்வதும் என இவரது பல்வேறு வார்த்தைகள் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

வாசனைகளில்தான் உயிர்வாழ்கிறோம்.பிம்பங்கள், நிழல்கள். நினைவுகள், கனவுகள், மற்றும் ரயிலைப் பற்றி ஊதல், உவகையின் எக்காளம், வேகத்தின் வெற்றிப் பிளிறு என்று வர்ணித்திருப்பதை ரசித்தேன். தருணக் குமிழி., அழல் நடுவில் ஸ்புடம், உடலின் அசைவில் உள்ளே எரியும் ஜ்வாலையின் குபீர் ? ஆகியவற்றையும்.

சகுந்தலையும் அபிதாவும் சாபமும் விமோசனமும். சக்கு ஒரு இருண்ட கேள்வி, அபிதா ஒரு வெளிச்சமான பதில் என்கிற திருஷ்டாந்தமான முடிவை அம்பி அவ்வப்போது கைக்கொள்கிறார்.

மறதியின் சருகுகள் ஜ்வாலையாகி  தன்னை முன் உந்திச் செல்வதும், வயதின் சருகுகளும் எரிய லேசாதலும் நிகழ்கிறது.

எல்லாமே ஒளிமறைவில் பாயச் சமயம் பார்த்திருப்பவையே என்ற அவரது கூற்று நூறு சதவிகிதம் உண்மை.

நூல் :- அபிதா.
ஆசிரியர் :- லா. ச. ராமாமிர்தம்
பதிப்பகம் :- டிஸ்கவரி புக் பேலஸ்
விலை – ரூ. 80.

3 கருத்துகள் :

ஸ்ரீராம். சொன்னது…

நல்லதொரு விமர்சனம்.

Geetha Sambasivam சொன்னது…

லா.ச.ரா பெயரைப் பார்த்துட்டு ஓடோடி வந்தேன் அருமையான அலசல். கதையின் மாந்தரின் எண்ணங்களை நன்கு புரிந்து கொண்டு அலசி இருக்கிறீர்கள். என்றாலும் அவர் எழுதினதிலே எனக்கு இது கொஞ்சம் ஏற்க முடியாத நாவல். ஒவ்வொருத்தர் கருத்து ஒவ்வொன்று இல்லையா? :)

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஸ்ரீராம்

நன்றி கீதாம்மா :) ஆமாம் அவரின் எழுத்திலேயே இது வித்யாசம்தான். எனக்கு சிந்தாநதிதான் பிடிக்கும்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...