காவிரிப்பூம்பட்டிணத்தில் பதினோராம் நூற்றாண்டில் சிவநேசர் என்பவர் தன் மனைவி ஞானகலையுடன் வசித்து வந்தார். திரை கடல் ஓடித் திரவியம் தேடிய வணிகக் குடும்பம். எனவே அவர்களுக்குக் கோடிக்கணக்கில் சொத்து இருந்தது. வீட்டின் வாயில் எல்லாம் வெள்ளிக் கதவுகள், வீட்டுக்குள்ளோ முழுவதும் ரத்தினக்கம்பளங்கள், பாத்திரங்கள் எல்லாம் தங்கம், வீட்டினுள் உள்ள செல்வச் செழிப்பில் பாலாறும் தேனாறும் ஓடியது. வைரமும் வைடூரியமும் இழைத்த நகைகளை அவர்களது ஒரே மகள் அணிந்திருப்பாள்.
இவ்வளவு இருந்தும் அவர்களுக்கு ஒரு ஆண்மகவு இல்லையே என்ற குறை இருந்தது. இறைவனை வேண்ட அந்தக் குறையும் போக்க திருவெண்காடன் என்றொரு மகன் தோன்றினார். அவருக்கும் அவரது சகோதரிக்கும் உரியபருவத்தில் திருமணம் நடைபெற்றது. திருவெண்காடரின் மனைவி பெயர் சிவகலை. திருவெண்காடருக்கும் பல்லாண்டுகளாக மக்கட் செல்வம் இல்லாதிருந்தது.
வீடு முழுக்கப் பொன்னும் வெள்ளியும் நவநிதியமும் குவிந்து கொண்டே இருந்தது. ஆனால் அதை ஆளப் பிள்ளையில்லை. தங்கத் தொட்டிலும், வெள்ளிப் பாலாடைச்சங்கும், நடைவண்டியும் ஆடுகுதிரையும் அந்த வீட்டுக்கு ஒரு பாலன் இன்றித் தவித்தன. திருவெண்காடரின் இல்லறம் நல்லறம்தான் ஆனால் பிள்ளைவரம் இல்லையே.
தவித்த தம்பதிகள் கோவில் கோவிலாகப் போய் பிள்ளைதரும்படி வேண்டினார்கள். ஒரு சமயம் திருவிடை மருதூரில் இறைவனை வேண்டிக்கொண்டிருந்தார்கள். அப்போது வறுமை வாய்ப்பட்ட சிவசருமர் என்ற அந்தணர் கோயிலில் உள்ள மருதமரத்தடியில் கிடந்த ஒரு குழந்தையைக் கடவுள் அவர்களிடம் கொடுக்கச் சொன்னதாகக் கொடுத்துத் தன் வறுமை நீங்கும் அளவு பொருள் பெற்றுக் கொண்டார்.
இறைவன் கொடுத்த பரிசு என்று அந்தக் குழந்தையைப் பெற்றோர் இருவரும் தமது இல்லத்துக்குக் கொண்டு வந்து வளர்த்தார்கள். மருதமரத்தடியில் கிடைத்ததால் அவனுக்கு மருதவாணன் என்று பெயரிட்டார்கள். குழந்தை நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து நின்றது. அவன் என்ன செய்தாலும் பெற்றோர் களிபேருவகை பொங்கப் பார்த்து ரசிப்பார்கள்.
வீட்டில் இருக்கும் செல்வம் போதாது என்று தனது மகனையும் வியாபாரத்தில் பழக்கினார் திருவெண்காடர். அவன் இளைஞனானவுடன் வெளிநாட்டுக்கு மரக்கலத்தில் அனுப்பி வியாபாரத்தை விரிவுபடுத்திச் செல்வம் சேர்த்து வர அனுப்பினார்.
கொண்டுவிக்கச் சென்ற மகன் ஒருநாள் வந்து சேர்ந்தான். தந்தையிடம் ஒரு ஓலையையும் அதனுள் ஒரு காதற்ற ஊசியையும் வைத்துக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான். மரக்கலம் முழுக்கப் பொன்னும் மணியும் இருக்கும் என நினைத்துப் போய்ப் பார்த்தார் திருவெண்காடர். ஆனால் அதிலோ முழுக்க முழுக்க தவிடும் எருவும் உமியும் இருந்தன. அவர் மகன் கொடுத்த ஓலையைப் படித்துப் பார்த்தார் . அதில் “ காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே “ என்று எழுதி இருந்தது.
சட்டென்று ஞானம் கிடைத்துவிட்டது திருவெண்காடருக்கு. மகனாய் அவர் வளர்த்த மருதவாணன் அவருக்கு சாகும்போது எதுவும் உடன் வராது என்று உணர்த்திவிட்டுச் சென்றுவிட்டான். உடனே அவருக்குத் துறவற மனம் வாய்த்தது.
அரண்மனை போன்ற வீடு, ஆடம்பரப் பொருட்கள், பாசமுள்ள அன்னை, நேசமுள்ள மனைவி யாவரையும் துறந்து துறவியாய் சுற்ற ஆரம்பித்துவிட்டார். அவரது சகோதரியோ தன் தம்பி துறவியானதால் அந்த சொத்து முழுக்கப் போய்விடுமே என்று எண்ணி அந்த சொத்துக்களை அடைய அப்பத்தில் விஷம் வைத்துக் கொடுத்தாள்.
என்றைக்கும் அன்னமிடாத தமக்கை அன்றைக்கு அப்பத்தைக் கொடுத்து உபசரித்ததும் சந்தேகப்பட்ட திருவெண்காடர் அதை தமக்கையின் வீட்டு ஓட்டின் மேலேயே வீசி எறிந்து ”தன் வினை தன்னைச் சுடும், ஓட்டப்பம் வீட்டைச் சுடும் “ என்று கூறிச் செல்ல வீடு பற்றி எரிந்தது.
அவரின் சக்தி கண்டு மிரண்டனர் அனைவரும். அவர் சித்தரைப் போல அலைந்தார். ஆனால் துறவியானாலும் தன் தாய்க்குச் செய்ய வேண்டிய கடைசிக் கிரியைகளைத் தன் கையாலேயே செய்தார்.
அதன் பின் துறவியானவன் சொந்த ஊரிலேயே இருக்கக்கூடாது என்று ஊர் ஊராகச் செல்ல ஆரம்பித்தார். அப்போது உஜ்ஜயினியில் ஒரு காட்டு விநாயகர் கோவிலில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அரண்மனையில் திருடப்போன திருடர்கள் அதில் ஒரு முத்துமாலையை விநாயகருக்குக் காணிக்கையாக வீச அதுவோ திருவெண்காடர் மேல் விழுந்தது.
அவர்தான் திருடினார் என்று எண்ணி வீரர்கள் ராஜாவிடம் பிடித்துக் கொடுக்க ராஜா அவரைக் கழுவில் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் அவரைக் கழுவில் ஏற்றிய கழுமரமே தீப்பிடிக்க அரசன் பத்ரஹரியும் திருவெண்காடரின் மகிமை உணர்ந்து சீடனானார்.
இவ்வாறு இவர்கள் இருவரும் ஊர் ஊராக வந்து திருவிடை மருதூரை அடைகின்றார்கள். திருவெண்காடருக்கு மருதவாணனைப் பிள்ளையாகத் தந்த அதே திருவிடை மருதூர்தான். அங்கு பத்திரகிரியாருக்கும் அவர் வளர்த்த நாய்க்கும் முக்தி கிடைக்க தனக்கு மருதவாணன் வடிவில் ஞானம் வழங்கிய ஈசனிடம் தனக்கு எப்போது முக்தி கிடைக்கும் என்று கேட்கிறார் திருவெண்காடர். அப்போது அவர் ஒரு கரும்பைக் கையில் பிடித்திருக்க ஈசன் அந்தக் கரும்பின் நுனி இனிக்கும் இடத்தில் முக்தி கிடைக்கும் என்கிறார்.
பல ஊர்களுக்கும் அலைந்த திருவெண்காடர் முடிவில் பட்டினத்தை அடைகிறார். அங்கே திருவெற்றியூருக்குள் நுழைந்ததும் அவரின் கையில் இருந்த கரும்பின் நுனி இனிக்கிறது. இங்கேதான் தனக்கு முக்தி என உணர்ந்த அவர் அங்கேயே தியானத்தில் அமர்ந்து முக்தி அடைகிறார்.
பணம் காசு எல்லாம் எவ்வளவு சேர்த்தாலும் பேராசை அதிகமாகுமே தவிர குறையாது என உணர்த்திய மருதவாணன் மகனாக வந்து அவருக்கு ஞானத்தை வழங்கினார்.. மிகப்பெரும் செல்வந்தராய் வாழ்வைத் தொடர வழி இருந்தும் மருதவாணன் என்ற தத்துப்புத்திரன் கொடுத்த ஞானத்தால் திருவெண்காடர் துறவறம் எய்தி பட்டினத்தார் ஆனார். ஞானமும் தியானமும் கொண்டு திருவெண்காடர் சென்னைப்பட்டினத்தின் திருவெற்றியூரிலேயே சமாதியும் கொண்டார்.
டிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 23 . 11. 2018 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & தேவராஜன் ஷண்முகம் சார்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!