காவிரிப்பூம்பட்டிணத்தில் பதினோராம் நூற்றாண்டில் சிவநேசர் என்பவர் தன் மனைவி ஞானகலையுடன் வசித்து வந்தார். திரை கடல் ஓடித் திரவியம் தேடிய வணிகக் குடும்பம். எனவே அவர்களுக்குக் கோடிக்கணக்கில் சொத்து இருந்தது. வீட்டின் வாயில் எல்லாம் வெள்ளிக் கதவுகள், வீட்டுக்குள்ளோ முழுவதும் ரத்தினக்கம்பளங்கள், பாத்திரங்கள் எல்லாம் தங்கம், வீட்டினுள் உள்ள செல்வச் செழிப்பில் பாலாறும் தேனாறும் ஓடியது. வைரமும் வைடூரியமும் இழைத்த நகைகளை அவர்களது ஒரே மகள் அணிந்திருப்பாள்.
இவ்வளவு இருந்தும் அவர்களுக்கு ஒரு ஆண்மகவு இல்லையே என்ற குறை இருந்தது. இறைவனை வேண்ட அந்தக் குறையும் போக்க திருவெண்காடன் என்றொரு மகன் தோன்றினார். அவருக்கும் அவரது சகோதரிக்கும் உரியபருவத்தில் திருமணம் நடைபெற்றது. திருவெண்காடரின் மனைவி பெயர் சிவகலை. திருவெண்காடருக்கும் பல்லாண்டுகளாக மக்கட் செல்வம் இல்லாதிருந்தது.
வீடு முழுக்கப் பொன்னும் வெள்ளியும் நவநிதியமும் குவிந்து கொண்டே இருந்தது. ஆனால் அதை ஆளப் பிள்ளையில்லை. தங்கத் தொட்டிலும், வெள்ளிப் பாலாடைச்சங்கும், நடைவண்டியும் ஆடுகுதிரையும் அந்த வீட்டுக்கு ஒரு பாலன் இன்றித் தவித்தன. திருவெண்காடரின் இல்லறம் நல்லறம்தான் ஆனால் பிள்ளைவரம் இல்லையே.