எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 5 நவம்பர், 2018

குணம் அழகு தரும். தினமலர். சிறுவர்மலர் - 42.


குணம் அழகு தரும்


மிக அழகாக இருக்கிறோம் என்ற கர்வத்தால் மற்றவரை மதியாமல் நடந்தாள் ஒரு பெண். அதனால் அந்த அழகி அரக்கியாக மாறும்படி சாபம் கிடைத்தது. அரக்கியாக இருந்தாலும் அறத்தைப் பின்பற்றி வாழ்ந்ததாலும் நல்குணத்தைப் பேணியதாலும் திரும்ப அவள் சாப விமோசனம் பெற்று அழகானாள். அது எப்படி என்று பார்ப்போம் குழந்தைகளே.

மகாபாரதத்தில் அரக்கு மாளிகை தீப்பற்றும்போது சுரங்க வழியாகத் தப்பிச் சென்றார்கள் அல்லவா பஞ்சபாண்டவர்கள் அவர்கள் கங்கையைக் கடந்து வந்து சேர்ந்த இடம் இடும்பவனம். அங்கே இடும்பன், இடும்பி என்ற அரக்கனும் அரக்கியும்  வசித்து வந்தார்கள். இருவரும் அண்ணன் தங்கை. அரக்கியாக இருந்தாலும் இடும்பி யாரையும் துன்புறுத்த மாட்டாள்.

ஆனால் அன்று காலை நேரம் வெகுகோபத்தோடு விழித்தான் இடும்பன். மனித நடமாட்டமும் வாசனையும் அடிக்கிறதே. “ அடி தங்காய். இடும்பி, பக்கத்தில் மனித வாசனை அடிக்கிறது. அது ஆபத்து. நம் இடத்தை அவர்கள் பிடித்துக் கொள்வார்கள். ஆகையால் அவர்களைக் கொன்று விட்டு வா “ என்று கூறித் திரும்பிப் படுத்தான்.


அண்ணன் கட்டளையை மீறமுடியாமல் கானக மரங்களை விலக்கியவாறு சென்றாள் இடும்பி. அங்கே தமது அன்னையுடன் ஐந்து மாவீரர்கள் தோளில் வில்லும் அம்புறாத்துணியில் அம்புகளுமாக நடந்து வந்தார்கள். மிகுந்த தாகத்தில் இருப்பார்கள் போல. தண்ணீர் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்தார்கள்.  

அவர்கள் அருகே வர வர அவர்களில் புஜபல பராக்கிரமத்தோடு கம்பீரமாக நடந்துவரும் பீமனைக் கண்ட இடும்பிக்கு மிகவும் பிடித்து விடுகிறது. ஆகையால் அவர்களைக் கொல்லும் எண்ணத்தைக் கைவிடுகிறாள். அவர்கள் முன்னே சென்று பணிகிறாள். தண்ணீர் வரும் வழியைக் காட்டித் தாகம் தீரச் செய்கிறாள். பீமனுடன் வாழும் ஆசையில் தன்னை மணந்துகொள்ளும்படிக் கேட்கிறாள்.

இதென்ன கூத்து அரக்கியரை மனிதர் மணக்க முடியுமா என்று திகைக்கிறார்கள் அண்ணன் தம்பியர் ஐவரும். தனது தாய் குந்தியிடம் யோசனை கேட்கிறான் பீமன்.

என்னது மனிதர்களை அழிக்க அனுப்பிய தனது தங்கை இடும்பியை இன்னும் காணோமே. என்னாயிற்று அவளுக்கு என்று காடதிர நடந்து வந்தான் இடும்பன். செடிகள் குலுங்கின, விலங்குகள் ஓடின. பூமி அதிர்ந்தது. பீமனை தங்கைக்குப் பிடித்துப் போய்விட்டது கண்டு கோபமான அவன் பீமனைத் தாக்குகிறான்.

அரக்கரை மனிதர் மணப்பதா. பின் தனது அரக்கர்குலப் பெருமை என்னாவது, கொஞ்சம் கூடப் பயமில்லாமல் போய்விட்டதே என்று அவன் தாக்க பீமன் திருப்பித் தாக்க அவன் கதாயுதத்தால் அடிவாங்கிய இடும்பன் இறந்து வீழ்கிறான்.

அண்ணனின் இறப்பால் வருந்தும் இடும்பியை குந்தி தேவி தேற்றுகிறாள். அப்போது அங்கே வியாச முனிவர் வருகிறார். அவரிடம் இதற்கு தீர்வு கேட்கிறார்கள் குந்தியும் பஞ்சபாண்டவரும். அவர் இடும்பியின் பூர்வஜென்மக் கதையை உரைக்கிறார்.

அட முன் ஜென்மத்தில் அழகானவள்தான் இந்த இடும்பி. அப்போது அவள் பெயர் கமலக்கண்ணி. பெயருக்கேற்றாற்போல தாமரைக் கண்கள் உடைய இளவரசி அவள். அவளது கணவனாக முற்பிறப்பில் இருந்த இராஜகுமாரன் இந்த பீமன்தான். அப்போது அவன் பெயர் சித்திரபாகு. இருவரும் இல்லறம் நடத்திவரும்போது பிட்சை கேட்டு ஒரு சிவனடியார் வருகிறார்.

அவரது கன்னங்கரேலென்ற நிறத்தையும் கோணலான உருவத்தையும் பார்த்து சிரித்துவிடுகிறாள் கமலக்கண்ணி. உடனே கோபம் கொண்ட முனிவர் பிடி சாபம் அளித்துவிடுகிறார். தான் அழகாயிருக்கிறோம் என்ற கர்வத்தில்தானே சிரித்தாய். அதனால் அந்த அழகு உருவம் மறைந்து அரக்கி உருவம் பெறுவாய்.

ஐயகோ இதென்ன அழகு கமலக்கண்ணி அரக்கி இடும்பி ஆகிவிட்டாளே. அதன்பின் அவள் யாரையும் எள்ளுவதுமில்லை. ஏசுவதுமில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பாள். இவள்தான் அந்த கமலக்கண்ணி இவளை சித்திரபாகு என்ற பெயரில் முன் ஜென்மத்தில் மணந்து வாழ்ந்தவந்தான் பீமன்.

இவ்வாறு முனிவர் கூறியதைக் கேட்டதும் இருவரும் முன் ஜென்மத்தை உணருகிறார்கள். இருவருக்கும் ஒருவர்மேல் ஒருவருக்குப் பிரியம் மேலிடுகிறது. ஆனால் அரக்கியை மனிதர் மணக்க முடியாதே. என் செய்ய.

அதற்கும் தீர்வளிக்கிறார் வியாச முனிவர். அங்கே இருக்கும் குளத்தில் நீராடி வந்தால் சாபம் நீங்கி பழைய அழகிய உருவம் கிடைக்கும் என்கிறார். அவ்விதம் நீராடி இடும்பி அழகான கமலக்கண்ணி ஆகிறாள். பீமனின் கரம் பிடிக்கிறாள்.

ஆகையால் அழகையும் நிறத்தையும் வைத்து யாரையும் ஏளனமாக எண்ணக்கூடாது. குணமே அழகு தரும் என்பதை உணருங்கள் பிள்ளைகளே.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 2 . 11. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்


4 கருத்துகள்:

  1. இந்தக் கதை கேட்ட நினைவில்லை

    பதிலளிநீக்கு
  2. துளசி: இது கேட்டதில்லை இதுவரை. வாழ்த்துகள்

    கீதா: மகாபாரதக் கிளைக்கதைகளில் வாசித்திருந்தாலும் அதை அழகான கருத்துடன் சொல்லியிருக்கீங்க. அருமை வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  3. வழக்கம்போல அருமையான கருத்தைக் கொண்ட கதை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  4. அஹா அப்படியா பாலா சார் !

    அஹா அப்படியா துளசி & கீத்ஸ் ! நன்றிப்பா

    நன்றி ஜம்பு சார் :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...