எனது நூல்கள்.

செவ்வாய், 4 டிசம்பர், 2018

அம்மா - ஒரு பார்வை.

இந்நூலில் மூன்றுவிதமான அம்மா பேசப்படுகிறார். தேசம் என்னும் அம்மா, பிரவீன் நவின் என்னும் நாயகர்களின் அம்மா சரஸ்வதி,. அண்ணியாக வந்து குடும்பத்தையே அம்மாவாக மாறி ரட்சிக்கும் சாந்தா.
விடுதலைப் போராட்டக் காலக்கட்டத்தில் நடைபெறுகிறது இக்கதை. இதன் இந்தி மூல ஆசிரியர் கமலேஸ்வர் கொடுத்திருக்கும் மூலக்கதையைப் பேர்கள் தவிர்த்து தமிழ் நாவல் படிப்பது போன்ற உணர்வே ஏற்படுகிறது.தலைமை ஆசிரியனான பிரவீனை மணக்கும் சாந்தா தன் கொழுந்தன் நவீனை ( சுதந்திரப் போராட்ட வீரனான அவனை புரட்சிக்காரன் என்று கைது செய்ய வருகிறார்கள்.) ரயிலில் புர்கா அணிந்த உருவமாக சந்திக்கிறாள். 

இதில் ஐயம் எழுப்பும் கேள்வி , சாதாரணமாக ஒரு குடும்பத்தில் வயது வித்யாசம் அதிகமில்லாத அண்ணன் தம்பியருக்குள் அண்ணி கொழுந்தனுக்கு  (ரயிலில் புர்காவுக்குள் இருக்கும் அவனை லாலாஜி என்று அன்பாக அழைத்தாலும்)  உணவு ஊட்டிவிடமுடியுமா என்ற கேள்விதான். ஹோலி கொண்டாட்டமும் அப்படித்தான். ஆசிரியர் சறுக்கும் சில இடங்கள் இவை.

ஆங்கிலேய போலீஸ்காரர்களின் அத்துமீறலும் அராஜகமும் அப்படி அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மேலும் ரயிலில் பணத்தைக் கொள்ளையடித்துப் போராட்டத்துக்குப் பயன்படுத்தும் நவீனை போலீஸ் துரத்திக் கொண்டே இருக்கிறது.

இதன் நடுவில் நவீன் ப்ரவீனின் பெரியப்பா பெரியம்மா அவர்களின் சொத்துக்களை அபகரித்து வக்கரித்து நடந்து கொள்வது சித்தரிக்கப்படுகிறது. அவர்களே நவீனைப் போலீசாரிடம் காட்டிக் கொடுப்பதும் பிரவீன் குண்டடிபட்டு இறப்பதும் நிகழ்கிறது.

தேசமென்னும்  தாய்க்காகப் போராடும் நவீன் அண்ணியாரையும் தாயாக உணர்கிறான்.  அதே சமயம் போலீஸார் படுத்தும் பாட்டில் பிரவீன் ஒரு கட்டத்தில் இறந்துவிட தாயாய் மருமகளை அரவணைத்த சரஸ்வதியே மருமகளை உடன்கட்டை ஏறச்சொல்லும் கொடுமையும் அதை மூடத்தனமாக வழிமொழியும் பத்தாம்பசலித்தனமான உறவினர்களுமென விரிகிறது கதை.

இக்கதையின் போக்கை மாற்றுபவர் குந்தன்லால். அவர் புரட்சிகர சிந்தனைகளின் இருப்பிடமாய் இருக்கிறார். இரண்டாம் மகனின் புரட்சியை ஆதரிப்பதும் நாட்டு விடுதலையை முக்கியமென நினைப்பதும், மருமகளை மகள் போல் எண்ணி அவளை சதி என்னும் துயரில் இருந்து காப்பாற்றி விடுவித்து அழைத்து வருவதுமென அவரின் புரட்சிகரப் பங்களிப்பு இக்கதையில் அதிகம். குடும்ப வருமானத்துக்கென ரயில்வே ஸ்டேஷனில் கூலியாகவும் வேலை பார்க்கிறார்.

இரு மகன்கள், மனைவி இறந்தபின்னர் மருமகள் சாந்தாவின் ஊக்கத்தாலும் முயற்சியாலும் குடும்பம் நிமிர்வதும் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மகளும் மாப்பிள்ளையும் உணவுத் தயாரிப்புக் கம்பெனியை விழுங்க முயல, தன் பால்ய கால நண்பன் சலீமுடன் ( வக்கீல்) தன் சொத்துக்களைப் பாதுகாப்பதும் அவற்றை நியாயமாகப் பிரித்துக் கொடுப்பதும் என செயல்படுகிறாள் சாந்தா.

இக்கதையில் ஆரம்பமும் முடிவிலும் சாந்தாவும் சலீமும் ஒருவர்மேல் ஒருவர் கொண்ட ப்ளேடானிக் லவ் வெளிப்படுகிறது. பல்வேறு விஷயங்களை இக்கதையில் ஆசிரியர் கொண்டு வந்திருப்பதே புரட்சிகர சிந்தனைதான். ஆனால் அவன் சினிமா காதலன் போல் முடிவில் காதலித்தவளின் மடியிலேயே மரிக்கிறான்.

சுதந்திரத்துக்கு முன்னான அரசியல் நிலை, ஆங்கிலேய ஆக்கிரமிப்பாளரின் போக்கு, போலீஸ்காரர்களின் அராஜகம், குடும்பங்களின் பிற்போக்குத்தன்மை, அக்காலத்தில் நிலவிய மூட நம்பிக்கைகள், அதைத் தகர்த்து வாழ நினைக்கும் புரட்சிகர மனிதர்கள் என வித்யாசமான கதை. மொழிபெயர்த்த ராஜேஸ்வரி கோதண்டம் அவர்களுக்கு வாழ்த்துகள்.

நூல் :- அம்மா
ஆசிரியர் :- கமலேஸ்வர்
தமிழில் :- இராஜேஸ்வரி கோதண்டம்
வெளியீடு :- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
விலை :- 125./-3 கருத்துகள் :

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல அறிமுகம். நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

உங்களுடைய விமர்சனம், நூலைப் படிக்கும் ஆவலை உண்டாக்கிள்ளது. நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி வெங்கட் சகோ

நன்றி ஜம்பு சார்.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...