ஒரு காலத்தில் மிக அழகாக இருந்த இளைஞன் ஒருவன் மிகப் பயங்கரமான உருவத்தை அடையும்படி நேரிட்டது. அந்த அழகு தர்மராஜனான அவனை அப்படிச் செய்தவர் கயிலைமலையில் வாழும் பரமேஸ்வரன்தான். அதுவும் தர்மராஜன் செய்துவந்த தொழிலின் நிமித்தம்தான். அது என்ன தொழில். ஏன் அவர் அழகை இழந்தார் எனப் பார்ப்போம் குழந்தைகளே.
தர்மராஜனின் கொள்ளுப்பாட்டன் மகாவிஷ்ணு. அவரது மகன் பிரம்மா தர்மராஜனின் பாட்டன். அவரது மகன் சூரியன் தர்மராஜனைப் பெற்றவர். சூரியனுக்கும் உஷாதேவிக்கும் பிறந்தவன் தர்மராஜன் எனப்படும் காலதேவன். இவனை யமா என்றும் அழைப்பார்கள். இவனுக்கு இவனது தாய் உஷாதேவி மூலம் மனு என்ற சகோதரனும், யமுனை என்ற சகோதரியும் உண்டு. உஷாதேவி உருவாக்கிய இன்னொரு தாயான சாயாதேவி மூலம் சனி, சாவர்ணி மனு என்ற சகோதரர்களும் தபதி என்ற சகோதரியும் உண்டு.
சிறுவயதில் சாயாதேவியைத் தன் தாய் என நினைத்து வந்த யமா ஒரு கட்டத்தில் அது தன் தாய் அல்ல, தாயின் சாயல் கொண்ட தாய் உருவம் எனப் புலப்படுகிறது. அதனால் தன் தந்தையைத் தாய் ஏமாற்றுவதாகக் குறை கூறி கோபத்தால் காலால் எட்டி உதைத்து விடுகிறான். சாயாதேவி உடனே கோபமுற்று அவனது கால் புண்ணாகும்படி சபித்துவிடுகிறார்.
அதைக் கண்ட சூரியன் யமாவை சிவனை நோக்கித் தவமிருக்கும்படிக் கூறுகிறார். அவன் தவத்தை மெச்சி பரமேஸ்வரன் தென் திசைக்குக் காவலனாக ஆக்கி அவனிடம் மனிதர்களின் முடிவுக்காலத்தில் மேலோகம் கொண்டு சேர்க்கும் பணியைக் கொடுக்கிறார்.
மனிதர்களின் பாவ புண்ணியக் கணக்கைச் சரிபார்த்து சித்திரகுப்தர் கணக்குக் கொடுக்க அவர்களை யமாதான் பிடித்து மேலோகம் சேர்ப்பிக்கிறார். அந்த உலகத்தின் அதிபதியும் அவர்தான். அவர்கள் செய்யும் பாவபுண்ணியத்துக்கு ஏற்ப சொர்க்கமோ நரகதண்டனையோ வழங்குவதும் அவர்தான். இதைப் பிசகாமல் செய்துவந்ததால் யமாவைத் தர்மராஜன் என அனைவரும் போற்றினர்.
எல்லாம் நல்லபடியேதான் போய்க் கொண்டிருந்தன., தர்மத்தின் ராஜனான அவன் தன் தொழிலில் அக்கறை காட்டும் வரை.
சூரியனின் புத்திரன் என்பதால் இவரும் சூரியனைப் போல தேஜஸோடு திகழ்ந்தார். நல்ல உயர்ந்த ஆகிருதியான உருவம் . செக்கச்சிவந்த நிறம், அழகிய முகம், கவர்ச்சியான கண்கள், முத்துப் பற்கள், புன்னகை முகம். இவரது அழகைப் பார்த்து அனைத்து ஜீவராசிகளும் இவரிடம் மயங்கும்.
எந்த உயிரும் இவரைப் பார்த்துப் பயப்படாது. இவருக்கும் இரக்க இதயமானதால் அவர் தன்னைப் பார்த்து மயங்கும் ஜீவராசிகளிடம் இரக்கம் காட்டித் தனது கடமையைச் செய்வதில்லை.. ஆனால் பூமாதாவின் பாரமோ அதிகமாகிக் கொண்டிருந்தது.
உயிர்கள் உற்பத்தி ஆகிக்கொண்டே இருக்கிறது. கனம் தாங்காத பூமாதா பரமனிடம் முறையிட்டாள்.
உடனே யமாவை அழைத்தார் பரமன். பேரழகோடு வந்து நின்ற யமாவின் உருவைக் கண்டு பரமனே கவரப்பட்டார். உடனே முடிவெடுத்தார் யமாவின் உருவை மாற்றினால்தான் அவரால் தனது தொழிலைச் செய்யமுடியும் என.
கரிய நிறமும் கோரைப் பற்களும் முரட்டு மீசையும் சிவந்த விழிகளும் தலையில் இருபுறமும் கொம்புகள் இருக்கும்படி மாற்றி விட்டார். இதைப் பக்கத்தில் இருந்த ஒரு வாவியின் நீர்ப்பரப்பில் பார்த்த யமா அதிர்ச்சியடைந்து பரமனிடம் ஓடி வந்து தன் உருவைப் பழையபடி மாற்றும்படி வேண்டினான்.
தேவதேவன் போலிருந்த அந்தக் காலதேவன் எவ்வளவு மன்றாடியும் சிவன் மனம் இறங்கவில்லை. பிரம்மனைச் சந்தித்துப் பரிகாரம் கேட்கலாமா, விஷ்ணுவைச் சந்தித்துப் பரிகாரம் கேட்கலாமா என்று புழுங்கித் தவித்தான் யமா.
பூலோகம் வந்து தென் திசையில் சென்று மகாவிஷ்ணுவை நோக்கித் தவமிருந்தான். அவன் தவத்துக்கு இறங்கிய அவர் காட்சி அளித்து ” என்ன வரம் வேண்டும் யமா ? “ என வினவினார்.
“தேவரீர் நான் தான் யமா. உங்கள் கொள்ளுப் பேரன். ”
“ நன்றாகத் தெரியும் யமா. என்ன வேண்டும் சொல் “
“மிக அழகாக நான் இருந்தேன். கடமையில் தவறியதால் என்னை இப்படி ஆக்கிவிட்டார் பரமன். என்னைப் பழையபடி அழகாக ஆக்குங்கள் . எனக்கு விமோசனம் அளியுங்கள் ப்ரபோ “ என வேண்டி நின்றான்.
” ஒருவர் கொடுத்த சாபத்தை மாற்ற இயலாது. வேண்டுமானால் உன் கொம்புகளை அகற்றி உனக்கு எருமையை வாகனமாகத் தருகிறேன். அந்தக் கொம்புகள் அதற்கு அளிக்கிறேன். ”
“சுவாமி என் கோரைப்பற்களையும் அகற்றுங்கள் “ என வேண்டி நின்றான் யமா.
“ அது முடியாது யமா “
“ ஏன் ஐயனே, முடியாது. உங்களால் முடியாததும் உண்டா ?”
“ நீ படைப்புக் கடவுள் பிரம்மனை ஒரு முறை அவமதித்துவிட்டாய். எனவே அவர் தந்த சாபம்தான் இது இந்தக் கோர உருவமே உன் தொழிலுக்கு உறுதுணையாக அமையும். இனிக் கடமை தவறாதே ” என்று சொன்னார்.
மனக்குறை இருந்தாலும் அன்றிலிருந்து யமா தன் தொழிலைச் சரிவரச் செய்துவருகிறார். பூமாதேவியும் பாரம் குறைந்தாள். எந்தத் தொழில் செய்தாலும் கடமை தவறாமல் செய்யவேண்டும் என்பதை உணர்ந்ததால்தான் அவர் தர்மராஜன் எனப் புகழப்படுகிறார் குழந்தைகளே.
டிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 21 . 12. 2018 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & தேவராஜன் ஷண்முகம் சார்.
டிஸ்கி:- இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 21 . 12. 2018 தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர், தனது அழகான ஓவியங்களால் கதைக்கு எழில்கூட்டும் ஓவியர் அஷோக் & தேவராஜன் ஷண்முகம் சார்.
நல்ல கதை வாழ்த்துகள் சகொதரி/தேனு
பதிலளிநீக்குதுளசிதரன், கீதா
நன்றி துளசி சகோ
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!