கிருஷ்ணர் கொடுத்த குரு தட்சணை
புராணக் காலங்களில் குழந்தைகள் குருகுல முறைப்படிக் கல்வி பயின்றனர். குருகுலக் கல்வி முடியும்போது தங்கள் குருவுக்குத் தக்க முறைப்படிக் குரு தட்சணை அளித்து வணங்கி மகிழ்வார்கள். கிருஷ்ணர் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் குருகுலக் கல்வி முடித்தபோது தட்சணை தர முன் வந்தும் அவரது குரு அதை மறுத்தார். ஆனால் தன் குருவுக்கு ஏதாவது தட்சணை தந்தே ஆக வேண்டும் என விரும்பிய கிருஷ்ணர் வித்யாசமான குரு தட்சணையைச் சமர்ப்பித்தார்.
மதுராவில் பலராமருக்கும் கிருஷ்ணருக்கும் கர்கர் என்ற மகரிஷி மூலம் பூணூல் சடங்கையும், காயத்ரி மந்திர உபதேசத்தையும் செய்வித்தார் வசுதேவர். அதன் பின் அவர்கள் சாஸ்திரங்களிலும் அஸ்த்ர சஸ்திரங்களிலும் தேர்ச்சி பெற சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்துக்கு வந்தனர்.
அவந்தி நாட்டில் உஜ்ஜயினி நகரத்தில் சாந்தீபனி முனிவரின் ஆசிரமம் அமைந்திருந்தது. வினயத்துடன் அவரை அணுகி இருவரும் தங்களுக்கு சகல வித்தைகளையும் கற்றுக் கொடுக்கும்படி வேண்டினார்கள். அவரும் வேதங்கள், உபநிஷத்துக்கள் ஆகியவற்றின் சாரத்தையும், வில் வித்தை மற்றும் அஸ்திரங்களுக்கான ப்ரயோக மந்திரங்களையும் கற்றுக் கொடுத்தார். நன்கு கற்று அறுபத்து நான்கு கலைகளிலும் தேர்ச்சி பெற்று விட்டார்கள் பலராமரும் கிருஷ்ணரும்.
குருகுலக் கல்வி முடிந்ததும் குருவை அணுகித் தாங்கள் தங்களால் முடிந்த தட்சணையைத் தர விரும்புவதாகவும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் விண்ணப்பித்தார்கள். குருவோ தட்சணை எதுவும் வேண்டாம் என மறுத்தார். அங்கே அமர்ந்து இருந்த குரு பத்னியான சுமுகி தேவியின் கண்களிலோ கண்ணீர் வடிந்தது. அதற்கான காரணத்தை இருவரும் அறிய முயன்றபோதுதான் தெரிந்தது குரு சாந்தீபனி முனிவரின் ஒரே மகன் பல்லாண்டுகளுக்கு முன் ஒரு நாள் கடற்கரையில் விளையாடியபோது கடலில் மூழ்கி இறந்துவிட்டான் என்பது.
குருவுக்குத் தட்சணையாக ஏதாவது தர விரும்பிய கிருஷ்ணரோ எதையும் யோசிக்காமல் பிரபாசப் பட்டணம் எனப்படும் சோம்நாத் கடற்கரையை நோக்கி ஒரு ரதத்தில் தன் அண்ணன் பலராமருடன் புறப்பட்டார். இன்றும் என்றும் பல நூறு உயிர்களைக் காவு கொண்ட பிரபாசப் பட்டினக் கடற்கரை அலை வீசிக் கொண்டிருந்தது. இருண்ட நீலக் கடலின் மேலே எங்கெங்கும் தகிக்கும் சூரியனின் அனல் வெப்பம். மனித உயிர்களைத் தூண்டிலில் போட்டுப் பிடிப்பதைப் போல அலைகள் நுரைதள்ளிக் கொண்டிருந்தன.
குருவினது குழந்தையை எப்படியாகிலும் திரும்பப் பெற்றே ஆகவேண்டும் என்ற நோக்கத்தில் ”சமுத்திரராஜனே.. சாந்தீபனி முனிவரின் மகனை ஏன் விழுங்கினாய். எங்கள் குருவும் குருபத்தினியும் மகன் இல்லாமல் வாடுகிறார்கள். தயவுசெய்து அவனை இப்போது திருப்பிக் கொடு “ எனக் கேட்டார். கிருஷ்ணரைக் கண்ட சமுத்திர ராஜன் அலைபொங்க ஓடி வந்து அவரது காலடியில் வீழ்ந்தான்.
“ஐய.. நான் விழுங்கவில்லை. பாஞ்சனன் என்ற அசுரன் கடலில் சங்கு வடிவம் கொண்டு அனைவரையும் விழுங்கி விடுகிறான்.” என்று கூறினான். உடனே கிருஷ்ணன் கடலில் குதித்துத் தேடினார். எங்கோ அந்தகாரத்தில் ஒளிந்திருந்தான் அந்தப்பாஞ்சனன். ஒருவழியாக பாஞ்சனனைப் பிடித்துக் கேட்டால் அவன் “ என் மேல் விழும் எல்லாவற்றையும் நான் விழுங்கி விடுவேன் அக்கினியைப் போல. திரும்பவெல்லாம் தர இயலாது. அச்சிறுவன் அப்போதே யம உலகை அடைந்துவிட்டான்” என்று கூறவும் கோபம் கொண்ட கிருஷ்ணர் அவனை அங்கேயே கொன்றார். அங்கே கிடைத்த சங்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.
பின் எப்படியும் குருவின் மகனைப் பெற்றே தீருவது என்ற எண்ணத்தோடு உயிரோடு இருப்பவர்கள் யாருமே செல்ல இயலாத சம்யமனீ எனப்படும் யமனின் இருப்பிடத்துக்குச் சென்றார்கள் பலராமரும் கிருஷ்ணரும். எவ்வளவு தேடியும் யமனை எங்கும் காணாததால் பாஞ்சனனிடமிருந்து எடுத்த பாஞ்சசன்யம் என்னும் சங்கை உரக்க ஊதினார் கிருஷ்ணர். சம்யமனிக்குள் சங்கொலியா.. உரத்த சங்கொலி கேட்டதும் ஓடிவந்த யமன் கிருஷ்ணரையும் பலராமரையும் உரிய மரியாதையோடு வரவேற்று வணங்கி விவரங்கள் கேட்டறிந்தான்.
தங்கள் குருவின் மகனைத் திரும்பித் தரவேண்டும் என்று அவர்கள் கூறியதை ஏற்ற யமதர்மன் ” இதுவரை இங்கே வந்தவர்கள் யாரும் உயிருடன் திரும்பிச் சென்றதில்லை. ஆனால் இச்சிறுவன் தங்கள் குருவின் மகன் என்பதாலும் திருப்பித் தரும்படிக் கட்டளை இட்டது தாங்கள் என்பதாலும் நான் கட்டுப்படுகிறேன் “ என்று கூறிக் குருவின் மகனைத் திருப்பித் தந்தார். விடாமுயற்சியுடன் சமுத்திரராஜன், சங்காசுரன், யமன் ஆகியோரிடம் சென்று கேட்டுத் தங்கள் குருவின் மகனைப் பெற்று ஆசிரமம் திரும்பி வந்தார்கள் கிருஷ்ணரும் பலராமரும்.
ஆச்சர்யத்தில் வாயடைத்துப் போன சாந்தீபனி முனிவரும், அவர் மனைவி சுமுகி தேவியும் தங்கள் அன்பு மகனைக் கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்தார்கள். தங்கள் பிறவிப் பேறான முக்தியை அடைவதற்குரிய பித்ருக் கடன்களைச் செலுத்தத் தங்கள் மகன் வந்தது குறித்து மகிழ்ச்சியுற்றார்கள். வாயார மனதாரக் கிருஷ்ணரையும் பலராமரையும் வாழ்த்தினார்கள். தங்கள் குருவுக்குத் தக்க தட்சணையை அளித்த மகிழ்ச்சியோடு பலராமரும் கிருஷ்ணரும் மதுராவுக்குத் திரும்பினார்கள்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)