எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 பிப்ரவரி, 2025

முதியவனும் கடலும்

முதியவனும் கடலும்

தன்னுடைய சிறு படகில் வளைகுடா நீரோடை என்னும் இடத்தில் தனியாகச் சென்று மீன் பிடித்துக் கொண்டு இருக்கும் முதியவன் அவன். அன்று வரை ஒரு மீனைக் கூடப் பிடிக்காமல் கிட்டத்தட்ட 84 நாட்கள் கடந்துவிட்டன. முதல் நாற்பது நாட்கள் வரை அவனுடன் ஒரு சிறுவனும் வந்து கொண்டிருந்தான். ஆனால் அந்த நாற்பது நாட்களும் ஒரு மீனைக்கூட பிடிக்காததால் சிறுவனின் பெற்றோர் அந்த முதியவனை அதிர்ஷ்டக் கட்டை என்று கூறிச் சிறுவனை அவனோடு மீன்பிடிக்கச் செல்ல அனுமதிக்க மறுத்தனர். முதியவனுக்கும் அது ஒரு துரதிர்ஷ்டமான நிலைதான்.

சிறுவன் தன் பெற்றோரின் சொற்படி மற்றையோரின் படகுகளில் மீன்பிடிக்கச் சென்றான். முதல் வாரத்திலேயே மூன்று நல்ல மீன்களைப் பிடித்து விட்டார்கள் அவனது படகுக்காரர்கள். ஒவ்வொரு நாளும் அந்த முதியவன் தன்னுடைய வெற்றுப் படகோடு திரும்புவதைக் காண்பது அந்தச் சிறுவனுக்கு வருத்தமளிக்கத்தான் செய்தது. சுருட்டி வைக்கப்பட்ட நூல் வலைகளையோ அல்லது மீன் குத்தும் ஈட்டிகள், திமிங்கில வேட்டைக் கருவிகள் மற்றும் சுருட்டி வைக்கப்பட்ட பாய்மரம் ஆகியவற்றையோ தூக்கிச் செல்ல அவன் முதியவனுக்கு எப்போதுமே உதவுவான். மாவுச் சாக்குகளைக் கொண்டு ஒட்டுப் போடப்பட்ட அந்தப் பாய்மரம் நிரந்தரத் தோல்வியினை அறிவிக்கும் கொடி போலத் தோற்றமளித்தது.

மிக ஒல்லியாகவும் மெலிவாகவும் பின்னங்கழுத்தில் அழுத்தமான சுருக்கங்களோடும் காணப்பட்டான் அந்த முதியவன். கடல் நீரில் விழும்  சூரியனின் வெப்பக் கதிர்கள் தாட்சண்யத்தோடு ஏற்படுத்திய தோல் புற்றுநோயினால் ஏற்பட்ட பழுப்பு நிறப் புள்ளிகளும் கறைகளும் அவனது கன்னங்களில் பிரதிபலித்தன. இவ்விதப் புள்ளிகளும் கறைகளும் சுருக்கங்களும் அவனது முகத்தின் இருபுறமும் ஆழமாக இறங்கி ஓடின.

தூண்டில் கயிறுகளில் சிக்கும் கனமான மீன்களைக் கையாள்வதால் கயிறு சுற்றி அழுந்தி அவனது கரங்களில் மடிப்பு வடுக்கள் காணப்பட்டன. ஆனால் அவை எதுவுமே புதிதானது அல்ல. மீன் இல்லாப் பாலைவனத்தில் ஏற்பட்ட அரிப்பைப் போலப் பழைய தழும்புகள் அவை.


-- எர்னஸ்ட் ஹெமிங்வேயின் The old man and the sea நாவலை சிறிது மொழிபெயர்த்துப் பார்த்தேன். :)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...