எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 7 டிசம்பர், 2023

மறுபடியும் ரேவதி

மறுபடியும் ரேவதிநேற்று இல்லாத மாற்றம் என்னது, கண்ணுக்கு மை அழகு, பொன்மானே கோபம் ஏனோ, காதல் வெண்ணிலா கண்ணில் வந்ததே, வந்ததே குங்குமம், பச்சைமலப் பூவு, பாடு நிலாவே தேன் கவிதை, பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு, காலகாலமாக வாழும் காதலுக்கு நாங்கள் அர்ப்பணம், பூமாலையே ஏங்கும் இரு தோள் சேரவா, சின்னச் சின்ன வண்ணக் குயில், நீபோகும் பாதையில் மனசு போகுதே மானே, ஆகாய வெண்ணிலாவே தரை மீது வந்ததேனோ என எத்தனை எத்தனை மெலோடீஸ்.

நடிகையர் திலகம் சாவித்ரி, சரோஜாதேவி, கே ஆர் விஜயா என்ற வரிசையில் வைக்கக்கூடிய தகுதி வாய்ந்தவர் ரேவதி. இவருக்குக் கிடைத்த கதாபாத்திரங்கள் அனைத்துமே அழுத்தமானவை. பெண்ணின் பிரச்சனைகளைப் பல்வேறு கோணங்களில் பேசியவை. காஜோல் போன்ற குட்டி உருவம். க்ளோஸ் நெக் ப்ளவுஸ், தீர்க்கமான பெரிய கண்கள், திருத்தமான நாசி, அழகிய கூந்தல், வடிவான உடலமைப்பு, அந்தக் கண்கள் குறும்பில் உருளும்போது வெகு அழகாய் இருக்கும். உடலமைப்பால் அல்ல, நடிப்பால் மட்டுமே பேசப்பட்டவர்களுள் ரேவதி முக்கியமானவர்.  

ரேவதியின் பெயர் ஆஷா கேளுண்ணி நாயர். 1966 ஜூலை 8 அன்று பாலக்காட்டைச் சேர்ந்த இந்திய ராணுவ மேஜரான மலங்க் கேளுண்ணி நாயரின் மகளாகப் பிறந்தார். பாரதிராஜாவின் ஆர் வரிசை நாயகிகளில் ராதா, ராதிகாபோல் முத்திரை பதித்தவர். 1983 இல் தனது பதினேழு வயதில் மண் வாசனையில் அறிமுகமானார். முதல் படமே வெள்ளிவிழாப் படம். இதற்கு ஃபிலிம்ஃபேர் சிறப்பு விருது பெற்றார். 1984 இல் புதுமைப்பெண். 1986 இல் ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் சுரேஷ் சந்திர மேனனுடன் திருமணம். கருத்து வேறுபாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து விவாகரத்துப் பெற்று வாழ்கிறார். இவருக்கு இன்விட்ரோ கருத்தரித்தல் மூலம் ஐந்து வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

இந்தி, தெலுங்கு, கன்னடம் இவற்றை விட தமிழ் மற்றும் தாய்மொழியான மலையாளத்தில் அதிகப் படங்களில் நடித்துள்ளார். மூன்று தேசிய திரைப்பட விருதுகள், ஆறு ஃபிலிம்ஃபேர் விருதுகள் பெற்றவர். கைதியின் டைரியில் கமலின் நடிப்பைப் பார்த்து அசந்துபோய் தான் பேச வேண்டிய டயலாக்குகளை மறந்ததாக ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். ஆனால் இவரும் டயலாக் டெலிவரியில் க்வீன். குட்டி & சுட்டி

வைதேகி காத்திருந்தாளில் அழகு மலராட என்று ஆடலரசர் சிவனே இரங்கும் வண்ணம் ஒரு கொந்தளிப்பான நடனம். இவர் பரதநாட்டியம் பயின்றவர் என்பதால் அக்காட்சி மனதை நெகிழ்த்தும் வண்ணம் அமைந்தது. 1986 இல் ரமணி சந்திரன் மற்றும் மில்ஸ் & பூன் டைப் கதையான மௌனராகத்தில் நடித்தார்.  மணிரத்னம் டைரக்‌ஷன். அதே வருடம் புன்னகை மன்னனில் கமலுடன் ஜோடி. புன்னகை மன்னன் தீம் ம்யூசிக்கில் கமல் ரேவதியின் நடனம் அசத்தல் ரகம்.. அரங்கேற்ற வேளை பாடல்களும் கதைப்போக்கும் வித்யாசம்.ஆகாய வெண்ணிலாவே பாடல் ரேவதி, பிரபு மற்றும் வி கே ராமசாமி ஆகிய மூவரின் பார்வையிலும் வித்யாசமாய் எடுக்கப்பட்டிருக்கும்.

அஞ்சலியில் மனவளர்ச்சியற்ற குழந்தையின் தவிப்பான தாயாய் ஒரு பாத்திரம். இதில் ரகுவரன் அதிகம் ஸ்கோர் செய்து விடுவதால் ரேவதியின் பாத்திரம் பின்னுக்குப் போய்விடும். தேவர் மகனில் தாய் இருந்தால் தன் திருமணத்தைத் தன்னைக் கேட்டுத்தான் முடிவெடுப்பாள் என்று தைரியமாகக் கூறும் அதே கணம் , இஞ்சி இடுப்பழகி மஞ்ச செவப்பழகி, கள்ளச் சிரிப்பழகியை (கௌதமியை) மறக்க மனம் கூடுதில்லையே என்று தேவர் மகன் பாட, மறந்துருவேன்னு சொன்னீங்களே என்று நைச்சியமாய்க் கேட்கும் கன கம்பீரமான கிராமத்துக் கெத்து. பிரியங்கா நீதிக்குப் போராடிய வித்யாசமான படம்.

ஆண்பாவம், உதயகீதம், பகல் நிலவு, லட்சுமி வந்தாச்சு, புன்னகை மன்னன், புதிய முகம், அவதாரம், கைகொடுக்கும் கை, கிழக்கு வாசல், பா பாண்டி, ஜாக்பாட், மலையாள வைரஸ், அஞ்சலி, அரங்கேற்ற வேளை, உதயகீதம், ஒரு கைதியின் டைரி, கிழக்கு வாசல், தாஜ்மகால், தேவர் மகன், ப்ரியங்கா, புதிய முகம், புதுமைப்பெண், புன்னகை மன்னன், மகளிர் மட்டும்,மண்வாசனை, மறுபடியும், மௌனராகம், சிங்கையில் குருக்ஷேத்திரம் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


சிங்கையில் குருக்ஷேத்திரம் படத்தில் போதைப் பொருள் கடத்துவோர்., (வேறு வேலை வாய்ப்பற்று இருக்கும் மக்கள் )( ப்ரகாஷ்., வினோத்., ) அதைக் கண்டு பிடிக்கும் நார்கோடிக் டிவிஷனில் வேலை பார்ப்பவர்( அன்பரசன்)., அந்த மாதிரி பிடிபட்டுச் சிதைந்த குடும்ப உறுப்பினர்களுக்கும்., குழந்தைகளுக்கும் உதவி செய்யும் சைகலாஜிகல் கவுன்ஸிலிங் செய்து மறுவாழ்வுக்கு ஏற்பாடு செய்பவர்( ரேவதி) அனைவரும் நம் மக்கள்தான்..

மிகவும் பிடித்த காரெக்டர் அந்த கவுன்சிலிங் செய்யும் ரேவதி. கடைசி காட்சியில் போதைப்பொருள் கடத்தும் குடும்பத்தினர் அனைவரும் (விப்ரா என்ற மன வளர்ச்சி அற்ற குழந்தையின் தாய் உட்பட அனைவரும்) இறந்துவிட எஞ்சியிருக்கும் விப்ரா ரேவதியின் கை பிடித்துக் கொள்ளும் காட்சி நெகிழ வைத்தது.. அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள் என்று சொல்வதா .. வாழ்ந்திருக்கிறார்கள் என சொல்வதா.. அவ்வளவு யதார்த்தம்.

ரேவதி பானியன், திறன் அறக்கட்டளை, டேங்கர் அறக்கட்டளை மற்றும் வித்யாசாகர் ஆகிய பல்வேறு சமூக சேவை நிறுவனங்களுக்கும் தொண்டாற்றி வருகிறார். மேலும் சென்னை சர்வதேச திரைப்பட விழா, இந்தியத் திரைப்பட விழா மற்றும் சர்வதேசத் திரைப்பட விழாக்களில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

1990 இல் கிழக்குவாசலுக்காக விருது, அதே ஆண்டு அஞ்சலிக்காக விருது, 1992 ஆம் ஆண்டு தேவர் மகனுக்காக சிறந்த துணை நடிகைக்கான விருது, 1993 இல் மறுபடியும் திரைப்படத்திற்காக விருது, 1998 இல் தலைமுறைக்காக விருது பெற்றவர். SIIMA, தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள், JFW விருது, மயிலாப்பூர் அகாடமி பெர்க்லி நாடக விருது, பெண்ணுக்காக தொலைக்காட்சியில் சிறந்த நடிகை விருது, விஜய் விருது, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் கலைமாமணி விருது, கர்மவீர் புரஸ்கார்: CMS மீடியா சிட்டிசன் விருது, ஆனந்த விகடன் திரைப்பட விருதுகளும் பெற்றவர்.

ரேவதி மித்ர,மை ஃப்ரெண்ட், ஃபிர் மிலேங்கே ஆகிய இரண்டு படங்களை இயக்கியுள்ளார். மேலும் கேரளா கஃபே மற்றும் வெளிவராத மும்பை கட்டிங் ஆகிய படங்களுக்குப் பங்களிப்புச் செய்துள்ளார். ரேவதி என்ற பெயரிலேயே 1986 இல் ஒரு படம் செய்திருக்கிறார். மண்வாசனை, புதுமைப்பெண், மகளிர் மட்டும் என்று எத்தனை படங்களில் பார்த்தாலும் என் நினைவில் நிற்பவர் மறுபடியும் ரேவதிதான். பாரதிராஜா படங்களில் அவரிடம் ஒரு செயற்கையான ஆக்ரோஷம் இருக்கும். ஆனால் பாலு மகேந்திராவின் மறுபடியும் படத்தில் ரொம்பவே யதார்த்தமான நடிப்பு.

”ரொம்ப நம்பிக்கிட்டு இருந்தேன். கனவு கலைஞ்சு போச்சு. கண்ண மூடிக்கிட்டு  மறுபடியும் ஒரு கனவு காண நான் தயாராயில்லை.. எந்த எக்ஸைட்மெண்டும் இல்லை. வெறும் துளசி. இதுதான் எனக்குப் பிடிச்சிருக்கு, உங்க பக்கத்துல இருந்தா நான் கோழையாயிடுவேன்” என்று ரேவதி சொல்லிவிட்டு சிறிது தூரம் சென்று திரும்ப, அவரை மறுமணம் செய்ய விரும்பும் அரவிந்தசாமி, ”துளசி திரும்பிப் பார்க்காதீங்க, போயிட்டே இருங்க” என்று தம்ஸ் அப் செய்து வாழ்த்தும் காட்சி மனதை விட்டு அகலாதது. நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள். தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள் என்ற பாடல் காட்சியும் அருமை.  நாளுக்கு நாள் மெருகேறிய நடிப்பு அவருடையது. ரேவதி உங்கள் நலம் வாழ எந்நாளும் எங்கள் வாழ்த்துக்களும்.டிஸ்கி:- ஜெர்மனியில் எனது 25 ஆவது நூல் ரைன் தமிழ்ச்சங்க ஒன்று கூடலில் வெளியிடப்பட்டது. அது குறித்துத் தனவணிகனில் செய்தி வெளியாகி உள்ளது. நன்றி தனவணிகன். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...