எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 1 டிசம்பர், 2023

நிலை & ஜன்னலில் இயற்கை வண்ண ஓவியங்கள் , கடியாபட்டி

 கடியாபட்டியில் உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றிருந்தபோது வீட்டைப் புதுப்பித்து இருந்தார்கள். அப்போது இந்த ஜன்னல் மற்றும் நிலை ஓவியங்கள் பளிச்சென்று தெரிந்தன.

கலைநோக்கில் அக்காலத்தில் வரையப்பட்ட இந்த ஓவியங்களின் பின்னணி தெரியவில்லை.ஆனால் நூறாண்டுகளுக்குமுன் இயற்கைச் சாயங்களால் வண்ணம் தீட்டப்பட்டவை.

இரட்டை மான்கள். சுற்றிலும் பூக்களும் இலைகளும். 

ஜன்னல் வரந்தையில் பூக்களும் இரட்டைச் சிங்கங்களும், கீழே இரட்டைச் சிம்ம யானை. 


இந்த ஓவியத்தில் இரண்டு கின்னரர்கள் அல்லது கிம்புருடர்கள்  *இவர்கள்தான் இசை வாசிப்பவர்கள். கையில் இரட்டை நாயனம் போன்ற வாத்தியங்களுடன் காட்சி தருகிறார்கள். இவர்களின் முதுகில் தேவதைகளுக்கு இருப்பது போல் சிறகுகள் உள்ளன. பூக்களும் இலைகளும் கூட வித்யாசம். முந்திரிப் பழம் போன்ற உருவத்தில் பூக்கள் காட்சி தருகின்றன. இவை பூக்களோடு உள்ள மாதுளம் பழமா என்றும் தெரியவில்லை. 

வீட்டில் மூலைப்பகுதிகளிலும் விதானத்தில் ஓவிய வரந்தைகள். நீலம், அரக்கு, ஆரஞ்சு, பச்சை, அரக்கு, நீலம் என்று தொடர்கின்றன. 
இந்த ஜன்னலின் வரந்தையை மூன்று மூன்றாக உள்ள கொத்துப் பூக்கள் அலங்கரிக்கின்றன. இரட்டைத்தலை பட்சி ஒன்றும். (அண்ட பேரண்டப் பட்சி போன்ற தோற்றம்.) இரண்டு பக்கமும் நீலப் பறவைகளும் வண்ண வண்ண அடுக்குச் சிறகுகளுடன் காட்சி தருகின்றன.  நீலவண்ணக் கிளிகள் போன்ற தோற்றம்.

இது போஜன் ஹாலின் நுழைவாயில், பொதுவாக செட்டிநாட்டு இல்லங்களில் தனலெக்ஷ்மியும் தான்யலெக்ஷ்மியும் விஜயலெக்ஷ்மியும் வீட்டின் முன் வாசல்களில் சுதைச் சிற்பமாகவும். உட்பகுதிகளில் வண்ண ஓவியங்களாகவும் இடம் பெற்றிருப்பார்கள். இங்கே விஜயலெக்ஷ்மி இருபுறமும் யானைகள் சேவை செய்ய தாமரை மலரில் மலர் மஞ்சத்தில் அமர்ந்து அருட்காட்சி தருகிறாள். இருபுறமும் மாலையணிந்த சிறகுகள் கொண்ட விறலியர் போன்ற தேவதைகள், பணிப்பெண்கள் கவரி வீசுகிறார்கள். 
பூக்களின் வரந்தையில் இரட்டைச் சிங்கங்கள் இணைந்து காட்சி அளிக்க, கீழே ஜன்னலின் மேல்புறம் பூரண கும்பமும் இரட்டை யானைகளும் அழகுக்காட்சி. இதில் கும்பம் வைத்திருக்கும் பலகையும் கும்பத்தில் தேங்காய் பக்கவாட்டில் இருப்பதும் மாவிலைகளும், யானைகளின் முகபடாமும் முதுகில் போர்த்திய சால்வையும் மணியும் தத்ரூபம்.
அக்காலத்தில் ஆங்கிலேயர் ஆட்சி மூலம் விக்டோரியா மகாராணியின் ஆட்சி இங்கே நடைபெற்றதன் காரணமாக இந்த ப்ளஸ் டிசைன் வரையப்பட்டிருக்கலாம். மேல் வரந்தையில் தெரியும் கோட்டை கொத்தளமும் அந்த ப்ளஸ் சின்னமும் இங்கிலாந்து மகாராணியின் ஆட்சியைக் குறிக்கலாம். கீழே இரட்டைச் சிங்கங்கள் இணைந்து ரோஜாப்பூக்களை மகிழ்வோடு நீட்டுகின்றன. 

வரந்தையில் பூக்களும் வரந்தையின் கீழ் இரட்டை மயில்களும். ஆண்மயில்கள். தோகையோடு காட்சி தருகின்றன. 
மேலே ராமர் பட்டாபிஷேகம் படம்

கீழே ஆயர்பாடிக் கண்ணன். ஆவினங்கள், மான்சூழ இருக்கிறான். பக்கத்தில் வசுதேவர், யசோதை, ஆயர்பாடி மக்கள். கையில்வெண்ணெய். தோளில் கிளி. அனைத்து ஆபரணங்களும் பூண்டு அழகுக் காட்சி தருகிறான் குழந்தைக் கிருஷ்ணன். 

மேல் வரந்தைகளில் ஸ்பீக்கர் பூக்களும் இலைகளும். கீழே ஜன்னலில் தவழும் இரண்டு ஆண் குழந்தைகள் ஓவியம். 

பூக்களும் இலைகளும், வாவியில் தாமரைப் பூவும் பெயர் தெரியாப் பறவைகளும். 

இந்த ஜன்னலில் ரொம்ப விசேஷமான படம். மேலே கருட வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள். கீழே கிருஷ்ணரின் லீலா விநோதங்களில் மகிழ்ந்திருக்கும் வசுதேவர்,யசோதை, ஆயர்பாடி மக்கள். தம்புரா மீட்டிப் பண்ணிசை கோர்க்கிறார் ஒருவர்.  

எல்லா ஜன்னல்களும் கம்பி வலையால் அடைக்கப்பட்டு இளம் பச்சை, அடர் பச்சை நிற வண்ணங்களால் அழகூட்டப்பட்டுள்ளன. மொத்தத்தில் ஒரு அருமையான இயற்கை வண்ண ஓவியக் கண்காட்சி உலாவுக்குச் சென்று வந்தது போல் இருந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...