எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 17 அக்டோபர், 2023

ஸ்கூபா டைவிங்

ஸ்கூபா டைவிங்

மாலையில் யாரோ மனதோடு பேச.. மார்கழி வாடை மெதுவாக வீச.. தேகம் பூத்ததோ.. ஓ மோகம் வந்ததோ… மோகம் வந்ததும் மௌனம் வந்ததோ.. தென்றலே பாட்டெழுது.. அதில் நாயகன் பேரெழுது.. ” என்று பானுப்பிரியா தன் அழகான கூந்தல் கற்றைகள் முகத்தில் விழ கவர்ச்சிகரமாகப் பாடிக் கொண்டிருந்தார்.

 

சேனலை மாத்திய மஹாராணி ட்ராவல் & லிவிங் சேனலில் ஸ்கூபா டைவிங்கைப் பார்த்ததும் குதூகலித்தாள். பச்சையும் நீலமும் கலந்த மாலத்தீவு, சிறிது சாம்பலும் கலந்த அந்தமான், அடர் பச்சை நிற சென்னை கோவளம் என லிஸ்ட் போட்டு ஸ்கூபா டைவிங்க் போட்டிகளைக் காண்பித்துக் கொண்டிருந்தார்கள்.

 

கடல் ஒரு நீலத்தாமரை மாதிரி மலர்ந்து அவளை அழைத்துக் கொண்டிருந்தது. கருப்பு உடை உடுத்திய வண்டுபோல அதில் துளைந்துகொண்டிருந்தாள் ராணி. மெல்ல மெல்ல பவளப்பாறைகளின் முடிச்சுகளின் மேலாக ஒரு தேனீயைப் போல வட்டமிட்டு வளைந்து நெளிந்து கொண்டிருந்தாள்.

 

”தர்கலி, கஸன், பஹாமாஸ், இங்கெல்லாம் நீந்தணும்னு என்னோட ஆசை. கோவா, பாண்டிச்சேரி, மும்பை, போட்டிகள்ல கலந்துகிட்டிருக்கேன். ஒரு முறை தாய்லாந்து கோ டாவுல பிக் ப்ளூ ஸ்கூபா ஸ்கூல்ல பாடி( PADI)  இன்ஸ்ட்ரக்டராவும் இருந்திருக்கேன். அதன் பின் எஸ் எஸ் ஐ யோட இன்ஸ்ட்ரக்டராகவும் ரோக்டோபஸ்ல..”

 

ஸாம் அவளுக்காக விளக்கெண்ணையில் ஆம்லெட் தயாரித்துக் கொண்டிருந்தான்.

 

”சம்பன்ல, சீலா மீன், ஸ்கார்பியான் ஃபிஷ், திமிங்கில சுறா , கோமாளி மீன், கோள மீன், டிரிக்கர் ஃபிஷ், இவையெல்லாம் கூட நீந்தும். வெள்ளைப்பாறை, பச்சைப்பாறை, மிதக்கும்பாறை இங்கெல்லாம்  அந்தப் பவளப்பாறைகளுக்கு மேலே திமிங்கிலச் சுறா ராக்கெட் மாதிரி நீந்தி வர அதன் கீழேயே வட்டமிட்டபடி சீலாமீன்களும், செவ்வாயை உடைய வௌவால்மீன்கள் குட்டிப் படைவீரர்கள்மாதிரி சுத்திக்கிட்டே வர்ற காட்சி கண்கொள்ளாக் காட்சி. ” ”ஐ ஜஸ்ட் மிஸ்ட் தாய்லாண்ட்.”

 

அவள் கண்களில் இருந்து இரு மீன்கள் துள்ளித்துள்ளிப் பாய்ந்துகொண்டிருந்தன.

 

”என்னது ஸ்விம்மிங்கா அதுவும் ஸ்கூபா டைவிங்கா. அதுக்கு எப்பிடிப் போனே. உன்னை நான் பிச்சாவரத்துல போட்டுல பார்த்தபோது ஒரு நீச்சல் வீராங்கனை மாதிரியே தெரியலையே.” வியப்பகலாமல் கேட்டான் ஸாம். 

 

”அது அப்படித்தான் நிகழ்ந்தது. உங்க போட் கடந்ததும் நாங்க போட்லயே பரங்கிப்பேட்டை போனோம். அங்கே மணலும் கடலும் ரொம்ப ஈர்த்தது. சின்னப்புள்ளைல அப்பத்தா ஊர்ல பம்ப்செட் போட்ட வயல் கிணத்துல மேலேருந்து குதிச்சு எல்லாம் கும்மாளம் போட்டிருக்கேன்.

 

அமைதியான கடலைப்பார்த்ததும் எனக்குள்ள இருந்த ஒரு மீன் துள்ளிருச்சு. நீச்சலடிக்கலாம்னு போனா கடல் விடல. பச்சையும் நீலமுமான கடல் என் மேல் கவிழ்ந்திருச்சு. என்னால அதிலேருந்து மீளவே முடியல. அப்புறம் பாண்டிச்சேரில ஸ்கூபா ட்ரெயினிங் எடுத்துக்கிட்டேன். அப்பிடியே பல போட்டிகள். அதுக்கப்புறம் ட்ரெயினரா கோவா அங்கேருந்து தாய்லாந்து. ரெண்டு வருஷம். அப்புறம் அம்மாக்கு உடம்பு சரியில்லை. பக்கத்திலிருக்கலாம்னு சென்னை வந்திட்டேன். 

 

அப்புறம் இந்தியாவுலயும் பாடி(PADI) இண்ஸ்ட்ரக்டரா கோஸ்டல் செக்யூரிட்டி க்ரூப்போட கமெண்டோஸுக்கு கொச்சின்ல ட்ரெயினிங் கொடுத்திருக்கேன். 

 

”அப்புறம் ஏன் அத தொடரல.. ?” ஆச்சர்யம் தொடரக் கேட்டான் ஸாம்.

 

ஸ்விம்சூட் போட்டுட்டு நான் கத்துத் தரது அதுவும் கமெண்டோஸுக்குன்னவுடனே என் எக்ஸ் ஹப்பிக்கு அந்த ப்ரொஃபஷன் பிடிக்கல.

 

சாப்பாட்டின் நடுவே எசகுபிசகான மீன்முள் நாக்கில் குத்தியது போலிருந்தது ஸாமுக்கு. ஏண்டா கேட்டோம் என. முட்டை ஆம்லெட்டின் மேல் லேசாக பெப்பரையும் சால்டையும் தூவியபடி, ”அட.. ஏகப்பட்ட விஷயம் கத்துக்கிட்டுருக்கே. ” ”இந்தா.. இத சூடா சாப்பிட்டுடு. ” என்றான்.

 

”என்ன ஆயில் டேஸ்ட் வித்யாசமா இருக்கு ”

 

”கேஸ்டர் ஆயில்ல போட்டிருக்கேன்.”

 

”ஓ மை காட் விளக்கேத்தவுல்ல காஸ்டர் ஆயில் வாங்குறீங்கன்னு நினைச்சேன்.”

 

“இங்கே விளக்கே இல்லையே ராணி. அதான் எலக்ட்ரிக் குத்துவிளக்கு வாங்கி நான் வரும்போதெல்லாம் போட்டுவிடுறேனே. அப்புறம் என்ன விளக்கு , இதுல ஆம்லெட் செய்து சாப்பிட்டா டெலிவரி ஈஸியா இருக்குமாம். அம்மா தேவிக்கு செய்து கொடுக்க சொல்லி ஆர்டர். அதனால நான் இங்கே உனக்கு செய்து தரேன்”

 

அவள் பக்கத்தில் சோஃபாவில் அமர்ந்தவன் பக்கத்து ஷோகேஸில் இருந்த அவளது ஸ்கூபா ஸ்டூடண்ஸுடனான புகைப்படத்தை எடுத்துப் பார்த்தான்.

 

ஸ்விம் சூட் உனக்கு ஃபிட்டா இருக்கு. எப்பவுமே நீ நல்ல பாடி கான்ஷியஸோட இருக்கே. எவர் ஃபிட். எவர் சிக். சிக் சிக்கன் மாதிரி.

 

அவள் தோளில் கைபோட்டவன் கன்னத்தை நீவினான்.. “நீ என்ன கடல் பசுவா கடல் கன்னியா ரொம்ப மிருதுவா இருக்கே.?” 

 

அந்த ஆண்பார்வையும் தொடுகையும் அவளை லேசாக கிலிகொள்ள வைத்தது.

 

”இல்ல நான் திமிங்கில சுறா” என்றாள் நிமிர்ந்தபடி வெடுக்கென்று.

 

”அப்ப நாந்தான் உன்னைச் சுத்தும் சீலா மீன்” என்றான் அவனும் சமமாக நிமிர்ந்து படக்கென்று.

 

”ஹாஹாஹா உங்களுக்குக் கடலைப் பத்தித் தெரியாது கடல் கன்னியைப் பத்தியும்” என்றாள்.

 

“எனக்குக் கடலை’யும் தெரியும். கன்னியையும் தெரியும் “ என்றான் குறும்பாக.

 

”யூ நாட்டிபாய்”என்றபடி அவள் அவனைத் துரத்த “ முதலாம் சந்திப்பில் நான் அறிமுகம் ஆனேனே, இரண்டாம் சந்திப்பில் என் இதயம் கொடுத்தேனே “ காதல் வந்தது காதல் வந்தது காதல் வந்ததடா “ என்று அவர் கால் பட்டு மாறிய ரிமோட் இன்னொரு சேனலில் பாட ஆரம்பித்தது.

 

”இன்னும் கோடி கோடி கோடி ஆசைகள் எந்தன் நெஞ்சில் உள்ளதடி” என்று பிரபுதேவாபோல் அவன் அபிநயம் பிடிக்க அவனது கைகளுக்குள் அடைக்கலமானாள் ராணி.

2 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...