எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

சனி, 16 அக்டோபர், 2021

சாட்டர்டே போஸ்ட். இதிகாச புராணப் பாத்திரங்களை ஓவியத்தால் உயிர்ப்பித்த திரு பிரபாகரன்.

ஓராண்டுக்கு முன் தினமலர் சிறுவர் மலரில் வெளிவந்த இதிகாச புராணக் கதைகள் கொரோனா காரணத்தால் சிறுவர் மலர் வெளிவராததால் நின்றுபோயின. 


அச்சமயம் மதிப்பிற்குரிய நண்பர் திரு சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் ( இவர் பற்றி மூன்று கட்டுரைகள் என் வலைத்தளத்தில் முன்பே எழுதி உள்ளேன். 2011 அக்டோபரில் வெளியான இக்கட்டுரைக்கு 17500 பார்வைகள் !. 

ஏற்றுமதி ஆலோசனைகள் சேதுராமன் சாத்தப்பன்.
இவை இரண்டுக்குமே ஆயிரக்கணக்கில் பார்வைகள். ஆச்சி வந்தாச்சு இதழில் நகரத்தார் எழுத்தாளர்களில் ஒருவராக என்னை அறிமுகம் செய்வதற்காக 2010 களில் தொடர்பு கொண்டார் திரு சாத்தப்பன் சார். அதன்பின் மும்பை நகரவிடுதி, காரைக்குடியில் பாரதி ஆகிய கட்டுரைகளுக்காகத் தொடர்பு கொண்டேன். 

அவர் இரு ஆண்டுகளுக்கு முன் ஸ்டார்ட் அப் அண்ட் பிஸினஸ் நியூஸ் என்று ஒரு மின்னிதழ் ஆரம்பித்து நடத்தி வருகிறார். சொற்கோயில் என்ற ஆன்மீக மின்னிதழையும் பொறுப்பேற்று நடத்தி வருகிறார். என்னுடைய கதைகள் நின்று போனது பற்றிக் குறிப்பிட்டபோது சொற்கோயிலுக்கு அனுப்பும்படி சொன்னார். அப்போது அதில்  திருநெல்வேலி பிரபாகரன் சார், எடிட்டர் ஹுமாயூன் சார், எடிட்டர் குமார் சார் ( 2016 இலேயே சொற்கோயில் இதழுக்கு எழுத அழைத்திருந்தார். ) ஆகியோர் பங்களிப்புச் செய்து வந்தார்கள். 

அதில் என் கதைகள் கடந்த ஓராண்டுகளாக வெளிவருகின்றன. என் கதைகளுக்கான வண்ணப் படத்தைத் திரு பிரபாகரன் சார் வரைந்து கொடுத்து வருகிறார். மிகத் தத்ரூபமான ஓவியங்கள். ஒவ்வொரு இதிகாச புராணக் காட்சியையும் நம் முன்னே நிறுத்தும் சித்திரங்கள். இதுவரை இருபது கதைகளுக்கும் மேல் அவரின் ஓவியங்களால் என்னுடைய கதையும் சிறப்படைந்துள்ளது. கீழே கொடுத்திருக்கிறேன் பாருங்கள். 

ஓவியம் பயின்றதில்லை என்கிறார். ஆனால் பிறவிக் கலைஞர். இவரது ஓவியங்களுக்காகவே நான் சொற்கோயில் வரும் நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். ஒவ்வொரு ஓவியமும் நுணுக்கமாக இருக்கும். வானரங்களின் அரண்மனையை அவர் வரைந்திருந்தது கண்டு மிரண்டுவிட்டேன். 

அவற்றுள்ளும் லோபா முத்திரா, சுவேதகேது, அனுசூயா , அபிமன்யூ, கைகேயி, தும்புரு, ஆழ்வார்கள், தாரை ஆகிய ஓவியங்கள் என்னை மிகவும் கவர்ந்தவை. அதிலும் லோபாமுத்ரா, சுவேதகேது, ஆழ்வார்கள், தும்புரு, தாரை, கைகேயி, குலசேகரர், அதி அற்புதம். கீழே கொடுத்திருக்கிறேன். பாருங்கள். !!

இப்போது தினமலரிலும் தேவராஜன் சார் எழுதும் சிறுவர் கதைக்கு ஓவியம் வரைந்து மெருகூட்டி வருகிறார். மிகப் பிரமாதமான ஓவியரான அவரிடம் அவரது ஓவிய அனுபவங்களை எழுதித்தரும்படிக் கேட்டிருந்தேன். அவர் கையெழுத்தே அழகாக இருந்தது. அதையும் கீழே அப்படியே வெளியிட்டு உள்ளேன். படிக்கும் வசதிக்காக டைப்பும் செய்துள்ளேன். பாருங்கள். 

///பள்ளிப் பருவத்திலிருந்தே எனக்கு ஓவியத்தில் நாட்டம் இருந்தது. மனித முகங்கள் யானை, மாடு, போன்ற விலங்கினங்களின் உருவங்கள் போன்றவற்றை சிலேட்டில் வரைந்து சக மாணவர்களிடம் காட்டுவேன். அவர்கள் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள்.

பின்பு திருக்கோயிலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது சகமாணவனான தேவநாதன் எனக்கு நெருங்கிய நண்பன் ஆனான். அவனுக்கும் சங்கீத ஓவியத் திறமைகள் உண்டு. அவன் சிவாஜி கணேசன் மற்றும் நாகேஷ் போன்ற நடிகர்களைக் கார்ட்டூனாக வரைந்து காட்டுவான். நானும் அவனும் போட்டி போட்டுக் கொண்டு வரைவோம்.

பின்பு அவன் சென்னை சென்றுவிட்டதாக அறிந்தேன். பிற்காலத்தில் அவன் ‘தேவா’ என்ற பெயரில் பத்திரிக்கைகளில் கார்டூன் வரைவதாகவும், ரேடியோ நிலையங்களில் சங்கீதக் கச்சேரிகள் செய்து வந்ததாகவும் இந்தியன் வங்கியில் சீனியர் மேனேஜராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது சென்னை குரோம்பேட்டையில் வசித்து வருவதாகவும் நண்பர்கள் மூலம் அறிந்தேன்.

எங்களுடைய ஓவிய ஆசிரியர் பெயர் ராமமூர்த்தி. அவர் சோப்பில் சிலை செதுக்குவதைக் கவனித்திருக்கிறேன். நான் கல்லூரியில் பயின்றபோது லக்ஸ் சோப்பில் நானே சைக்கிள் ஸ்போக்ஸில் உருவாக்கிய கருவி கொண்டு கிருஷ்ணர், யேசுநாதர் போன்ற பல உருவங்களைச் செதுக்கி நண்பர்களுக்குப் பரிசாக வழங்குவேன். அவர்கள் ஆச்சர்யமுடன் பாராட்டுவார்கள்.

கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் எனது நண்பன் ராம்கி என்னை சென்னை குடோன் தெருவில் ஒரு இன்கம்டாக்ஸ் ப்ராக்டீஷனரிடம் வேலைக்குச் சேர்த்துவிட்டான். ஒரு வருடம் அப்படியே ஓடியது. அதன்பின் ஒரு வருடம் TNGTC என்கிற அரசு நிறுவனத்தில் பணிபுரிந்தேன். பின்பு அதையும் விட்டு விட்டு மருந்து வியாபாரத்தில் ஈடுபட்டேன்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் என் மாமா மெடிக்கல் ஷாப் வைத்திருந்தார். அதில் மானேஜராக இருந்து பிஸினஸைக் கவனித்துக் கொண்டிருந்தேன். பின் சொந்தமாக அந்த ஊரிலேயே ஒரு மருந்துக் கடையைத் தொடங்கினேன்.

நான் என் மாமாவின் கடையில் இருந்தபோதுதான் சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் குலசேகரம் கனரா வங்கிக் கிளையில் பணியில் சேர்ந்தார். எங்கள் கடைக்கு எதிர் பில்டிங் மாடியில் தங்கி இருந்தார். அப்போது எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது.

அவரும் நல்ல ஓவியர். கையெழுத்து மணிமணியாக அச்சடித்தது போன்று கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போல் இருக்கும். சிறந்த அறிவாளி, கடுமையான உழைப்பாளி. அவருடைய மக்கள் சேவை எல்லாரையும் பிரமிக்க வைக்கும். பாமரன் பணக்காரன் என்ற பாகுபாடில்லாமல் எல்லோருக்கும் உதவி புரிவார்.

அவரும் நானும் சேர்ந்து ஒரு அட்வர்டைஸிங் கம்பெனி ஒன்று ஆரம்பித்தோம். ஒன்றிரண்டு புத்தகங்களுக்கு அட்டைப்படம் வரைந்து கொடுத்ததோடு சரி.

பின்பு ஒரு மருந்துக்கடையை இருவரும் சேர்ந்து தொடங்கினோம். அதன்பின் குறுகிய காலத்தில் அவர் பணி உயர்வு பெற்று சென்னை மும்பை என்று போய் அவர் இருந்த துறையின் உச்சத்தைத் தொட்டார் என்பது வரலாறு.

நான் என் மாமாவின் கடையை நிர்வகித்துக் கொண்டிருந்தபோது என்னுடைய குருவும் நண்பருமான டாக்டர் திரு வேலாயுதன் நாயர் எம் எஸ் அவர்களின் அறிமுகம் கிடைத்ததது. அவர் மிகச் சிறந்த ஸர்ஜன். நான் சொந்தமாகக் கடை வைப்பதற்கும் அவ்வியாபாரம் பெருகுவதற்கும் பெரிய அளவில் ஆதரவு அளித்தவர்.

அவர் மருத்துவமனையை நிர்மாணம் செய்து கொண்டிருந்தபோதே அந்தக் கட்டிடத்தைக் கோட்டோவியமாக வரைந்தேன். மேலும் சுற்றுப்புறம் எவ்வாறு அமையவேண்டும் என்பதையும் கற்பனையான வரைந்து கொடுத்தேன். அது அவருக்கு மிகவும் பிடித்துப் போயிற்று.

அவர் பிற்காலத்தில் “ஸ்ரீ மூகாம்பிகா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சைன்ஸ்” என்ற கல்வி நிறுவனத்தைத் தொடங்கிய போது பிராஸ்பெக்டஸில் போடுவதற்காக நர்ஸிங் காலேஜ், டெண்டல் காலேஜ் மற்றும் காலேஜ் ஆஃப் பிசியோதெரஃபி ஆகியவற்றின் கட்டிடங்களைப் பார்த்து கோட்டோவியங்களாக வரைந்து கொடுத்தேன். அப்படங்களைப் பார்த்து என்னை வெகுவாகப் பாராட்டினார். அனைத்துப் படங்களும் காலேஜ் பிராஸ்பெக்டஸில் பிரிண்ட் செய்யப்பட்டது.

2003 ஆம் ஆண்டு பல காரணங்களால் குலசேகரத்தை விட்டு சென்னை சென்று சரிப்பட்டு வராமல் திரும்பவும் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்து புதிய பஸ் நிலையத்தில் ‘வைத்தீஸ்வரா மெடிக்கல்ஸ்’ என்ற மருந்துக் கடையைத் தொடங்கி பத்து வருடங்களுக்கு மேல் நடத்தி உடல் நிலை காரணமாக அதையும் மூடிவிட்டு ஓய்வில் இருந்தபோது திரு சேதுராமன் சாத்தப்பன் ( நெருக்கமான நண்பர்கள் வட்டாரத்தில் அவரை செல்லமாக ‘சாத்தி’ என்று அழைப்போம் ) அவர்கள் அவர் நிறுவனராக இருக்கும் ”ஸ்டார்ட் அப் அண்ட் பிஸினஸ் நியூஸ்” என்கிற மாதம் இருமுறை வெளியிடப்படும் மின்னனு பத்ரிக்கையில் கட்டுரை எழுதுமாறு ஊக்கப்படுத்தினார். அவர் வழிகாட்டுதலின் படி நானும் ஒரு தொடர் கட்டுரை எழுதினேன்.

அவர் குழுமத்தில் இருந்து மாதம் இருமுறை வெளியிடப்படும் ”சொற்கோயில்” என்ற ஆன்மீக மின்னிதழில் ஓவியம் வரையுமாறு ஊக்கப்படுத்தினார். அப்பத்திரிக்கையில் பிரபல எழுத்தாளரும் பேச்சாளருமான திருமதி. தேனம்மை லெக்ஷ்மணன் அவர்களின் கதைக்குத்தான் முதன்முதலாகப் பத்திரிக்கையில் வரைய ஆரம்பித்தேன். கடந்த ஒரு வருடமாக வரைந்தும் வருகிறேன்.

பின்பு அவர் பத்திரிக்கை நண்பர்கள் மூலம் எனக்கு தினமலர் சிறுவர்மலரில் ஓவியம் வரையும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக அதிலும் வரைந்து வருகிறேன்.

நான் ஓவியம், சிற்பம் எதையும் முறையாகக் கற்றவனில்லை. இயற்கையாக ஏதோ தோன்றும். அதன்படி வரைகிறேன். அவ்வளவுதான்.

என்னுடைய நட்பு வட்டத்தில் திரு சேதுராமன் சாத்தப்பன் அவர்கள் மிக முக்கியமானவர். என்னுடைய வாழ்க்கையில் இன்ப துன்பங்களில் பங்கெடுத்தவர். நான் கஷ்டப்பட்ட காலங்களில் எனக்கு உதவியவர். நான் மட்டுமல்ல. பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்வு செழுமை பெற வழி வகுத்துக் கொடுத்தவர். அவரால் பயனடைந்தவர்கள் ஏராளம். அவருடனான நாற்பது வருட நட்பு இன்றும் தொடர்கிறது.

சிறு வயதிலேயே ஆனந்தவிடகன் குமுதம் போன்ற பத்திரிக்கைகளில் வரும் ஓவியங்களை ஆர்வமுடன் கவனிப்பேன். கோபுலுவின் ஓவியங்கள், சிற்பியின் கோட்டோவியங்கள், ஜெயராஜ், மணியம் செல்வன், மாருதி போன்றோரின் ஓவியங்கள் என்னை வெகுவாக ஈர்த்தன. அதிலும் கோபுலுவின் உயிரோட்டமான ஓவியங்கள் பிரமிக்க வைக்கும். மதனின் கார்ட்டூனை விரும்பிப் பார்ப்பேன்.

மேலும் மேலை நாட்டு ஓவியர்கள் வான்கோ, மைக்கலேன்ஜலோ, ராபர்ட் டாம்ப் போன்றோரின் ஓவியங்கள் பிரமிக்க வைக்கும். கொரியன் கார்டூனிஸ்டான கிம் ஜங்க் ஜியின் ஓவியத்திறமை வியக்க வைக்கும்.

நான் தற்போது திருநெல்வேலிக்கு அருகில் இருக்கும் மூலக்கரைப்பட்டி என்ற ஊரில் என் மகன் நடத்தி வரும் மெடிக்கல் ஷாப்பில் அவனுக்கு உதவியாக இருந்து வருகிறேன்.

”ஸ்டார்ட் அப் அண்ட் பிஸினஸ் நியூஸ்” பத்திரிக்கைக் குழுமத்தில் உள்ள திரு. ஹுமாயூன், திரு. கணேஷ், திரு. ராஜசேகர் மற்றும் திரு. ஐஓபி கணேசன் ஆகியோர் எனது நெருங்கிய நண்பர்கள் ஆவார்கள்.

1980 களில் நானும் சில உள்ளூர் நண்பர்களும் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தினோம். அதற்கு “ செம்மை” என்று பெயரிட்டோம். அதில் தற்போது மார்த்தாண்டம் எல் ஐ சி கிளையில் டெவலப்மெண்ட் ஆஃபீசராகப் பணியாற்றி வரும் திரு. பிரேம்குமார்தான் பொறுப்பாசிரியர். இப்போது நாகர்கோவிலில் இருந்து அச்சிட்டு வெளியிடப்படும் ’திணை’ என்ற காலாண்டிதழின் பொறுப்பாசிரியரக இருந்து நடத்தி வருகிறார்.

‘செம்மை’யில் பேராசிரியர் குமார செல்வா, ஹமீம் முஸ்தபா மற்றும் திருவட்டார் சிந்துகுமார் போன்ற நண்பர்கள் பதிவாக எழுதி வந்தனர். அதில் வரும் அனைத்து ஓவியங்களையும் நான்தான் வரைவேன். அது ஒரு மகிழ்ச்சியான அனுபவம். என்னுடைய ஓவியங்கள் வாசகர்களால் பாராட்டப்பட்டது.

தற்போது சிந்துகுமார் அவர்கள் குமுதத்தில் பணியாற்றி வருகிறார். செம்மையில் வரும் அனைத்துக் கவிதை கட்டுரைகளிலும் பொதுவாக மார்க்ஸீய சிந்தனைகள் பொதிந்திருக்கும். அதில் நானும் ஒரு கதை எழுதியதாக ஞாபகம். ஒரு வருடம்தான். பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்குச் சென்றுவிட்டதனால் அதுவும் நின்று போயிற்று.

ஆறு மாதங்களுக்கு முன் நண்பர் பிரேம்குமார் கேட்டுக் கொண்டதற்கிணங்க இரண்டு கோட்டோவியங்களை வரைந்து கொடுத்தேன். அவைகள் ‘திணை’யில் பிரசுரமாயின. மற்றபடி என்னுடைய வாழ்க்கை சாதாரணமானதுதான். சொல்லிக் கொள்ளும்படி ஒன்றுமில்லை.

திரு. சாத்தப்பன் அவர்கள் இல்லையென்றால் எனக்குள் ஓவியத் திறமை இருப்பது யாருக்கும் தெரிந்திருக்காது.டிஸ்கி:-- உங்கள் சிறப்பான ஓவியங்கள் போல உங்கள் எழுத்து நடையும் மிகப் பிரமாதமாயிருக்கிறது பிரபாகரன் சார். எத்தனை தகவல்கள். பள்ளியில் சிலேட்டில் வரைந்தது, சோப்பில் சிலை, ஓவியர் தேவா, பத்ரிக்கையாளர் திருவட்டார் சிந்துகுமார் பற்றிய தகவல்கள் வியப்பைத் தந்தன. திணை, செம்மை ஆகிய இதழ்களில் உங்கள் பங்களிப்பும் மருந்துக் கடை சேவை தொடர்ந்து வருவதும் கூட ஆச்சர்யமூட்டின. தமிழக ஓவியர்கள் மட்டுமல்ல. சர்வதேச அளவிலும் நீங்கள் ஓவியர்களின் படைப்புகளைக் கூர்த்து கவனித்துப் படைப்பதாகக் கூறியுள்ளது சிறப்பு. புதிதாக வரைய வருபவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பால பாடம். 

உங்களை ஊக்குவித்த மருத்துவர் திரு வேலாயுதன் சார் & திரு சாத்தப்பன் சார் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. எங்களுக்குச் சிறந்த ஓவியர், நண்பர் கிடைத்துள்ளார். சாத்தப்பன் சாருடன் உங்கள் நட்பை நீங்கள் விவரித்துள்ள விதம் ஆத்மார்த்தம். நண்பர் திரு சாத்தப்பன் அவர்களால் பயன்பெற்றோர் ஏராளம் எனக் கூறியது உண்மைதான். நட்புக்குப் பெருமை சேர்த்துள்ளீர்கள் இருவருமே. 

மிகச் சிறந்த ஓவியரான நீங்கள் இன்னும் உயரம் தொட வேண்டும். உலகளாவிய அளவில் பெருமையும் புகழும் பெற வேண்டும். இன்னும் பல பத்ரிக்கைகளில் உங்கள் ஓவியங்கள் வரவேண்டும் என்ற பேராவலுடன் உங்களுக்கான பாதை வகுத்துத் தொடர்ந்து அதைப் பின் தொடர்ந்து வரும் திரு சாத்தப்பன் சார் போன்ற நண்பர்கள் கிடைக்க நீங்கள் மட்டுமல்ல நாங்களும் கொடுத்து வைத்திருக்கிறோம். 


உங்கள் ஓவியங்களை ஒரு எக்ஸிபிஷனாக வைக்க வேண்டும் என்பதும் அவரது அவா. குடத்தில் இட்ட விளக்குப் போல இருந்த உங்களைக் குன்றில் இடச் செய்து அடையாளம் காட்டி இருக்கிறார். உங்கள் ஓவியங்கள் அனைத்துப் பத்திரிக்கைகளிலும் வெளிவந்து உலக அளவில் அடையாளம் காணப்பட்டு  நீங்கள் இன்னும் பேரும் புகழும் பெற நாங்களும் வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன் பிரபாகரன் சார். ( என் கட்டுரைகளை அழகாக எடிட் , லேஅவுட்டுடன் வெளியிடும் குமார் சார், ஹுமாயூன் சாருக்கும் நன்றிகள் ) என் வலைத்தளத்தில் உங்கள் அபூர்வத் திறமை பற்றி எழுதச் சொல்லி நட்புக்குப் பெருமை சேர்த்த சாத்தப்பன் சாரும் வாழ்க வளமுடன். அன்பும் நன்றியும். 

2 கருத்துகள்:

 1. திரு.பிரபாகரன் அவர்களுக்கு வாழ்த்தும் பாராட்டும்.
  உங்கள் ஓவியம் பரவலாக மிளிர
  ணும்...

  பதிலளிநீக்கு
 2. பிரபாகரன் சாரை வாழ்த்தியமைக்கு நன்றி தேவராஜன் ஷண்முகம் சார்

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...