எனது பதிநான்கு நூல்கள்

புதன், 13 அக்டோபர், 2021

சரத்குமார் ராதிகா.. எஸ் ராதிகா !

 சரத்குமார் ராதிகா..  எஸ் ராதிகா !


தன்னம்பிக்கை, தைரியம், உற்சாகம், உத்வேகம், விடாமுயற்சி, தொடர் உழைப்பு, ஆளுமைத் தன்மை, வெற்றி  இவற்றுக்கெல்லாம் வாழும் எடுத்துக்காட்டு ராதிகா. முதன் முதலில் வந்த படம் கிழக்கே போகும் ரயில் என்றாலும் நான் பார்த்து ரசித்தது ”அப்பவும் நான் சுதாகர் ராதிகா எஸ் ராதிகா” என்று ராதிகா தைரியமாகத் தந்தையிடமே தன் காதலைக் கூறும் நிறம் மாறாத பூக்கள்தான். 

படமே ஒரு காவியம் அதில் ’ஆயிரம்மலர்களே மலருங்கள், இரு பறவைகள் மலை முழுவதும் எங்கே இங்கே பறந்தன..’ என வெள்ளுடை தேவதைகளும் பஞ்சு மேகங்களும் மனதைக் கவர்ந்த ஓவியம். பதின்பருவத்தை எட்டப் போகும் வயதில் பள்ளியின் ஆண்டு விழாவில் பார்த்து ரசித்த தேசிய கீதமே இதுதான். ஜெர்ஸி துணியில் டாப்ஸும், டபுள் நெட்டட் துணியில் ஃப்ரில்ஸ் வைத்துத் தைத்து மினுமினுக்கும் பாவாடையும் அணிந்து விரிந்த கூந்தலோடு மாணவிகள் தேவதைகளாய் ஆடியது இன்ப ஆச்சர்யம்.

அதில் மெட்ராஸ் கேர்ளாகப் பார்த்த ராதிகாவை கிராமத்து ராதிகாவாக கிழக்கே போகும் ரயிலில் வெகு வெகுளிப்பெண்ணாகப் படைத்திருப்பார் பாரதிராஜா. பாஞ்சாலி ஆடப் பரஞ்சோதி பாட, ‘மாஞ்சோலைக் கிளிதானோ’ என்று பார்ட் பார்ட்டாகப் பரதநாட்டியத்தை ரசித்தது இந்தப் படத்தில்தான். ரயில்வே ட்ராக்கில் தட்டாமாலை சுற்றி விழுந்து அவர் சிரிக்கும் கள்ளமற்ற கலகல சிரிப்புக்கும், மழலை மாறாத குரலுக்கும் தமிழகமே அடிமையாகக் கிடந்தது அப்போது.

செழிப்பமான கன்னக்கதுப்புகள் தீர்க்கமான பார்வை. தென் தமிழர்களுக்குப் பிடித்த பூசிய உருவம். பூசணிக்காய் என ஒரு இண்டர்வியூவில் அவரைக் குறிப்பிடப்பட்ட பாக்கியராஜாவே ’இன்றுபோய் நாளை வா’ என்ற படத்தில் நடிக்கக் கூப்பிட்டார். அதில் மூன்று கதாநாயகர்கள் இவரைக் கவரப் படும் பாடு விலாநோகச் சிரிக்க வைக்கும்.

இப்படிக் கிராமத்து நாயகி லுக்கிலிருந்து தாமரை மடல் விரிந்தது போல் இதழ் விரிந்த சிரிப்பும் செழுமையான கன்னக் கதுப்புகளும். தோள்வரைவெட்டி விடப்பட்ட தலைமுடியுமாக ”பாவை மீது பாரிஜாதம் கொட்ட வேண்டும் “ என படு ஸ்டைலாக முடி அசைய மாடர்ன் லுக்கில் மிரட்டிய படம் நீதிக்குத் தண்டனை. பெண் நீதி வழங்கிய படம் என்பதால் எனக்கும் மிகப் பிடித்தது

”கன்னிமனம்கெட்டுப் போச்சு சொன்னபடி கேக்குதில்ல என்ன பொடிபோட்டீகளோ மாமா” எனக் காதலிலும், கவர்ச்சியிலும் கூட நளினம் காட்டிக் கவர்ந்தவர் ராதிகா. ரங்க்ஸின் ( என் கணவரின் ) ஆஃபீஸில் ஜெயஸ்ரீ என்ற ஆந்திராவைச் சேர்ந்த தெலுங்குப் பெண் வேலை பார்த்தார். அவர் கல்லூரிப் பருவத்தில், ராதிகா சிரஞ்சீவி ஜோடி படம் வருது என்றால் காலேஜைக் கட் அடித்துவிட்டுப் போய்ப் படம் பார்ப்பார்களாம். அவ்வளவு க்ரேஸ் அந்த ஜோடி மீது என்றாராம்.

மெச்சூர்ட் ஆக்டிங் என்றால் கேளடி கண்மணி, சிப்பிக்குள் முத்து, ஜீன்ஸைச் சொல்லலாம். மத்திய வயதுக் காதல். எஸ் பி பி மூச்சு விடாமல் பாடும் பாட்டு கேளடி கண்மணி பாடலில் ரஜனி போல் ஒரு இடத்தில் தலை கோதும் மேனரிஸம் செய்து காட்டுவது அவருக்கேயான குறும்பு.

ஜீன்ஸில் தாலியைக் கழட்டப் போவது போல் மிரட்டுவது கொஞ்சம் ஒரு மாதிரியாக டிஸ்டர்ப் செய்தாலும், கிழக்குச் சீமையிலேயில் பாசமா தாலியா என்று சகோதரனுக்கும் கணவனுக்குமிடையே அல்லாடும் செந்தமிழ்நாட்டுத் தமிழ்மகளாக முத்திரை பதித்திருப்பார்.

”மானூத்து மந்தையிலே மான்குட்டி பெத்த மயிலே” என்று பாசத்தோடும் பெருமையோடும் சகோதரிகளுக்காகச் சீர் சுமந்து செல்லும் ஒவ்வொரு மாமனையும் அவரின் மனசையும் படம் பிடித்த வடிவழகான பாடல் போல் “ வண்டி மாடு எட்டு வைச்சு முன்னே போகுதம்மா, வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா “ என்ற மனம் உருக்கும் பாட்டு ஒவ்வொரு பெண்ணின் மனமும் கணவன் வீட்டுக்கு முன்னே போகும் ஆவலையும், தாய் வீட்டுக்குப் பின்னே போகும் ஏக்கத்தையும் சித்தரிக்கும்.

தென்னிந்தியர்களுக்குப் பிடித்த லெக்ஷ்மிகரமான முகம். லண்டனில் வளர்ந்தவர். இவரது விதம் விதமான காஸ்ட்யூம்ஸ் ஒரு காலத்தில் ஃபேமஸ். இவரது நேர்த்தியான மேக்கப் பற்றியும் காஸ்ட்லியான மேக்கப் பொருட்கள் பற்றியும் நடிகை ராதா ஒரு நிகழ்ச்சியில் புகழ்ந்து இருக்கிறார். தமிழில் இருந்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி என பல ஹிட் படங்கள் கொடுத்தவர். முதல்வர் ஜெயாம்மாவுக்கு ஈடானவர் என்று ஒரு காலத்தில் என்னை நினைக்க வைத்த நெஞ்சுரம் மிக்கவர். .


பாரதிராஜா, பாக்கியராஜா, பாலு மகேந்திரா என பா டைரக்டர்களின் படங்களில் நடித்த ராதிகா பாலசந்தர் படத்தில் நடித்ததில்லை. ஆனால் பத்து வருடங்களுக்கு முன்பு நான் முகநூலில் பாலசந்தருக்குப் பால்கே அவார்டு வழங்கியது பற்றிக் கருத்து வெளியிட்டபோது அன்ஃப்ரெண்ட் செய்துவிட்டார்!

எம் ஆர் ராதாவின் மகள் என்பது அவரது தீர்க்கமான செயல்பாடுகளில் வெளிப்படும். நடிகை நிரோஷா இவரது சகோதரி எனத் தெரியும் ஆனால் நேர்த்தியான வசனகர்த்தா ராதாமோகன் இவரது தம்பி என்பது எனக்குப் புதுத்தகவல்.

பாரதிராஜாவின் அறிமுக ரா வரிசை நாயகிகளில் இன்று வரை பெரிய திரை, சின்னத்திரை இரண்டிலும் நடித்தும் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் ஜொலிப்பவர் ராதிகாவே. தமிழ் சமூகத்தை முதல் அடிமையாக்கிய டிவி சீரியலுக்குச் சொந்தக்காரர்.  சித்தி, அரசி, செல்வி மற்றும் பல. தமிழகத்தில் அனைவருக்கும் சித்தி என்றால் அவர்கள் சொந்த சித்தி ஞாபகம் வருவார்களோ இல்லையோ ராதிகா நிச்சயம் நினைவில் மலர்வார்.

மீண்டும் ஒரு காதல் கதை ப்ரதாப் போத்தனுடன் நடந்த திருமணம் சீக்கிரம் முடிவுக்கு வந்து விஜயகாந்து ராதிகா சினிமா ஜோடி வெற்றி பெற்ற கலவையானது. இவர்களது படங்களில் உழவன் மகன் குறிப்பிடத்தக்கது. ரிச்சர்ட் ஹார்டியுடன் ரயான் ஹார்டி என்ற அழகு மகளும், நடிகர் சரத்குமாருடன் இராகுல் என்ற அழகு மகனும் மட்டுமல்ல சரத்குமாரின் மகள் வரூவும் ராதிகாவுக்குக் கிடைத்த பொக்கிஷம் என்று கோடீஸ்வரி நிகழ்ச்சி பார்த்தபோது தோன்றியது.

சரத்குமார் மகள் வரூவுடன் ஒரு நிகழ்ச்சி செய்தார் அது ஹைலைட். தனது கணவரின் முதல் மனைவிக்குப் பிறந்த மகளுடன் கணவரையும் சேர்த்து அந்த நிகழ்ச்சியைத் தனக்கே உரிய வெள்ளந்திச் சிரிப்புடன் வழங்கியது ஸ்வீட் சர்ப்ரைஸ். அதற்கேற்ப வரலெக்ஷ்மியும் சரத்குமாரும் கலந்து கொண்டு பதிலளித்ததும் மகன் இராகுல் கலந்து கொண்டதும் அதி அற்புதம்.  நெகிழ்வான குடும்பம், ரேயானின் குழந்தையைத் தன் பேரக் குழந்தையாகவே கொண்டு ஒரேமாதிரி ட்ரெஸ் அணிந்து கொண்டாடும் சரத் ஒரு கொடுப்பினை. என்னைப் போன்ற ரசிகைகளுக்கு இன்றும் அவர் அதே எஸ் ராதிகாதான். எல்லா நல்லது கெட்டதுகளையும் ஆமோதித்துக் கடந்து இன்றிருக்கும் இடத்தை அடைந்த சரத்குமார் ராதிகா.. எஸ் ராதிகா. 

ஒவ்வொரு இறக்கத்திலும் அடுத்தடுத்து ஃபீனிக்ஸ் பறவை போல் விடாமுயற்சியுடன் எழுந்து தமிழகத்தின் பெரும்பகுதிப் பெண்களின் மனதைத் தன் தன்னம்பிக்கையால் ஆளும் கோடீஸ்வரி ராதிகா என்றால் மிகையில்லை.


டிஸ்கி :- மணிமடல்களில் ஜம்பு சாரின் பின்னூட்டத்தை வெளியிட்டுள்ளார்கள். நன்றி தனவணிகன் :)

2 கருத்துகள்:

  1. "வானிலே மேகங்கள் தேய்ந்து தேய்ந்து மறையலாம்.மனதில் உள்ள கவிதை கோடு மறையுமா"

    பதிலளிநீக்கு
  2. ஒரு நடிகையை பற்றிய அருமையான அலசல். தேர்ந்தெடுத்து செய்திகளை அமைத்த விதம் சிறப்பு. கிழக்கே போகும் ரயிலை நான் அதிகம் ரசித்துப் பார்த்துள்ளேன்.
    மணி மடல்கள் கண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...