2821. இவர் எங்கே இருக்கார்னு சொல்லுங்க
2822. வாளைமீனும் விலாங்குமீனும்
அன்பொளி ANBOLI, தர்ம சக்கரம், நகரத்தார் மலர் – ஒரு பார்வை
அன்பொளி ANBOLI, தர்ம சக்கரம், நகரத்தார் மலர்
அன்பொளி ANPOLI - வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்ற கேப்ஷனுடன் வெளியாகும் நூல் அன்பொளி. இதன் 339 ஆவது இதழை வாசித்தேன். திரு. வேதாத்ரி மகரிஷி அவர்களின் தலையங்கத்துடன் வெளியாகி உள்ளது..
மாயை – அரூபம் – ரூபம் – அரூபாரூபம் = சத் சித் ஆனந்தம் பற்றிய கட்டுரை அருமை. அருள் நிதியர்களின் சமுதாயத் தொண்டு, ஆண் பெண் நட்பு ஒழுக்கம், குண்டலினி யோகத்தின் பயன்/பலன் இவற்றோடு சாந்தி யோகம் பற்றி விவரித்துள்ளது வெகு சிறப்பு. இது பைத்தியம் முதலான மன நோய்களையும் ஏன் கர்ம நோயையுமே தீர்க்கும் என்பது விசேஷ செய்தி.
இறைவனை அறிவாகக் காணும் இன்பப் பூரிப்பு என்றொரு கவிதையை அருட்தந்தை எழுதி உள்ளார். அந்தோ ஆபாசம் என்று சினிமா பற்றியும், கவி என்றால் என்ன என்றும் மகரிஷி கவி இயற்றி இருக்கிறார்.
அறிவுத்திருக்கோயில் ஆழியார் பற்றியும் அங்கு அளிக்கப்படும் பயிற்சிகள் பற்றியும் கூறியுள்ளார்கள்.
மேலும் அருட்தந்தை பற்றித் தொகுத்து நூலாக்கம் செய்யப் போவதாகவும் அறிவித்து உள்ளார்கள். இந்நேரம் வந்திருக்கலாம்.
( இது 1997 இல் வெளிவந்த இதழ்) இந்நூலின் பாதிப்பக்கங்கள் தமிழிலும் பாதிப்பக்கங்கள் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன.
நூல் :- அன்பொளி
தர்மச்சக்கரம் –
ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறையில் இருந்து வெளிவரும் நூல் இது. ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தரின் அறிவுரை, தியானம், வேதாந்தம், ஜீவபிரம்ம ஐக்கியம், பாகவதம், சச்சிதானந்த சிவம், பிரபந்தம், தாயுமானவர் பாடல் ஆராய்ச்சி ஆகியன இடம்பெற்றுள்ளன.
மாணவர்களுக்கான பண்பாட்டுப் பயிற்சி, ஆன்மீகப் பயிற்சி, அந்தர்யோகம், பிரார்த்தனை ஆகிய விவரங்கள் அடங்கியுள்ளது. வெற்றி பெறுவதற்கு மனத்தூய்மை & மன ஒருமைப்பாட்டின் அவசியம் , சவிகல்ப சமாதி, மதுர பாவனை ஆகியவை பரமாச்சார்யா ஸ்ரீ ராமகிருஷ்ணர் பற்றிய கட்டுரையில் தெளிவுறுத்தப்பட்டிருக்கின்றன.
உண்மையான ஞானி பற்றிய விவேகானந்தரின் அறவுரை, நட்பையும் கற்புறு சிந்தையாகக் காட்டி கட்டுரை, விஷ்ணு சகஸ்ரநாமத்துக்குப் பொருளுரை பதவுரை, யதீஸ்வரியின் ”தியான வாழ்விற்குரிய குறிப்புகள்” (ஆத்ம சாதகன் கடைபிடிக்கவேண்டிய - பண்பாளன், பொறுமையுடையவனாய் இருத்தல், குறை சொல்வதை நிறுத்துதல், அகத்திலும் புறத்திலும் இசைவினை ஏற்படுத்துதல் ஆகிய குணநலன்களைக் குறிப்பிடுகின்றன),
வேதாந்த சொற்களஞ்சியம்,
சித்பவானந்தரின் சொற்பொழிவு – ஜீவ பிரம்ம ஐக்கியம் ( தேனின் சிறப்பு – மதுவித்யா – பிரம்ம ஞானம் , கண்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் ஏற்பட்ட இணக்கம் ) , பிரம்மம் மித்தை பற்றிய அறிவு, அனைத்தும் சிறப்பு.
சுவாமி ஸதானந்தரின்
“உலகைத் துறந்த பேரரசர்கள்” என்று இராமன் பரதன் பற்றிய கட்டுரை நனி சிறப்பு. ஸ்ரீமத் பாகவதத்தில் இன்னொரு பரதன் பற்றிய கட்டுரையும் தகவல்களும் வித்யாசம். திருக்குறள் பொதிந்திருக்கும் தாயுமானவர் பாடல்களை ஒப்பு நோக்கும் சி.ர.சகுந்தலா அவர்களின் கட்டுரை மெச்சத்தக்க ஒன்று. சுவாமி நியமானந்தரின் நாலாயிரதிவ்யப் பிரபந்தத்தின் விளக்கம் இடம்பெற்றுள்ளது.
நூல்:- தர்ம சக்கரம்
விலை :- ரூ. 3/-
நகரத்தார் மலர் – பதினைந்தாம் ஆண்டுச் சிறப்பிதழ் ( 15.3.1993) படிக்கக் கிடைத்தது.நமது புள்ளிகள் என்ற தலைப்பில் நகரத்தார் புள்ளி ஒருவரை அறிமுகம் செய்திருக்கிறார்கள். நகர விடுதி அமைக்க உதவியவர்கள் பற்றிய கட்டுரை அருமை. அம்மான் பதில்கள் சிறப்பு. லயன் வீ ஆர் சின்ன அருணாசலம் அவர்கள் நாளிதழ்கள், சுபாஷ் சந்திர போஸ் பற்றிய தொகுப்புச் செய்திகள் இடம் பெற்றுள்ளன.
பொதுக்கூட்டம், நாட்டு நடப்பு, ஜேசுதாசின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல் வெளியீட்டுத் தகவல், இளைய தலைமுறை, திருமணச் சோலை, மணிவிழா நிறைவுச் செய்திகள், திருமண அறிவிப்புகள், நலம் தரும் மூலிகைகள் பற்றி இடம்பெற்றுள்ளன.
இராயவரம் மீனாள் என்பவரின் “யார் உயர்ந்தவர் ?” என்ற சிறுகதையும் , சிதம்பரம் முத்துக் கருப்பன் என்பவரின் ”நாற்றங்கால்” என்ற சிறுகதையும் இடம் பெற்றுள்ளது. மதுநதி விநாயகர் பற்றிய செய்தி இதுவரை அறியாதது.
முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை என்ற தன்னம்பிக்கைக் கட்டுரை எனர்ஜி பூஸ்டர்.
நூல் :- நகரத்தார் மலர்.
ஆண்டுச் சந்தா – ரூ. 35/-
மொத்தத்தில் மூன்றுமே அருமையான நூல்கள்.