எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 28 செப்டம்பர், 2018

புத்திசாலித்தனத்தால் ஜெயித்தவள். தினமலர். சிறுவர்மலர் - 37.


புத்திசாலித்தனத்தால் ஜெயித்தவள்.

வ்வளவுதான் கற்றறிந்திருந்தாலும் சமயோஜிதமான நடவடிக்கையால் நாம் நமக்கு வரும் இடர்களைக் களைய முடியும். அப்படித்தான் சாவித்ரி என்னும் பெண் தனக்கு வந்த கஷ்டத்தைத் தன் புத்திசாலித்தனத்தால் ஜெயித்தாள். அது எப்படி என்று பார்ப்போம் குழந்தைகளே.

மத்ராபுரி என்னும் நாட்டை அஸ்வபதி என்னும் மன்னர் ஆண்டு வந்தார். நெடுநாளாகக் குழந்தைப்பேறில்லாமல் இருந்த அவர் பல யாகங்கள் பூஜைகள் செய்ததன் பலனாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்குச் சாவித்ரி என்று பெயரிட்டு சீரோடும் சிறப்போடும் வளர்த்து வந்தார்.

பெண்குழந்தை என்று எண்ணாமல் நாட்டின் இளவரசியாக அவளுக்கு சகல உரிமைகளையும் கொடுத்திருந்தார். எனவே அவள் தோழிகளுடன் நகர் உலா வருவாள். ஒருமுறை அவர்கள் தங்கள் நகர் உலாவிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டார்கள். கானகம் ஆரம்பமாகிவிட்டது.

அக்கானகத்தில் ஒரு அழகான இளைஞன் தன் கண்ணிழந்த பெற்றோருக்குச் சேவை செய்வதைப் பார்த்தாள். அவனுடைய பணிவும் அன்பும் தொண்டுள்ளமும் சாவித்ரியைக் கவர்ந்தது. அவன் சாளுக்கிய தேசத்து அரசன்  சத்யவான் எனவும் பகைவர்களுடன் நடந்த போரில் நாட்டைவிட்டு வந்துவிட்டார்கள் எனவும் அறிந்தாள்.


தந்தையிடம் சத்யவானையே மணந்துகொள்ளவேண்டும் என்ற ஆசையைத் தெரிவித்தாள். ஆனால் அங்கே வந்த நாரதர் அவனுக்கு இன்னும் ஓராண்டுதான் ஆயுட்காலம் உள்ளது அதனால் மனதை மாற்றி வேறு மணமகனைத் தேர்ந்தெடுக்கும்படிக் கூறினார்.

ஆனால் சத்யவானின் நல்லுள்ளம் கண்டபின் சாவித்ரி அவனையே மணம்முடிக்கவேண்டும் என்ற உறுதியில் இருந்தாள். எனவே அரசர் தன் மகளை சத்யவானுக்கு மணம் முடித்துக் கொடுத்தார்.

இருவரும் கானகத்தில் தங்கள் வாழ்க்கையைத் தொடங்கினார்கள். சத்யவான் மரம் வெட்டிக் கொண்டுபோய் விற்று வர சாவித்ரி அந்தக் கானகத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு உணவு படைப்பாள். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். சத்யவானுடன் இருப்பதால் அவளுக்கு எந்தக் கஷ்டமும் அவளுக்குத் துன்பத்தைத் தரவேயில்லை.

ஆனால் ஓராண்டு முடிய இன்னும் சில நாட்களே இருந்தன. அப்போது அவள் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு காட்டில் கிடைத்தவற்றைக் கொண்டு படையலிட்டு காமாட்சி பூஜை செய்தாள். எப்படியாவது சத்யவானைக் காப்பாற்றிவிடவேண்டும் என்ற மனத்திண்மை அவளுக்கு அதிகரித்தது.

ஓராண்டு முடியும் நாளில் குறிப்பிட்ட நேரத்தில் சாவித்ரி கணவனுடனே விறகுவெட்டும் இடத்துக்குச் சென்றாள். அங்கே அவன் மயங்கி விழுந்தான். அப்போது கருத்த நிறமுள்ள யமன் நெருங்கிவந்து சத்யவானின் உயிரைக் கவர்ந்து செல்ல சாவித்ரியோ அவர் பின்னே தொடர்ந்து சென்றாள்.

கணவன் மேல் வைத்த அன்பினால் அவனை யமனிடம் இருந்து எப்படி மீட்டுச் செல்வது என்று கலங்கியது அவள் உள்ளம். அவள் பின் தொடர்வதைக் கண்ட யமன் அவளை விட அதிகமாகக் கலங்கினார்.

“பெண்ணே நீ உன்னுடைய கணவனின் மீது வைத்த அளவு கடந்த பாசத்தினாலேயே பாசக்கயிறு வீச வந்த நான் உன் கண்ணுக்குத் தெரிகிறேன். என் கோட்டைக்கு உயிருள்ளவர்கள் வரமுடியாது . பின்னே திரும்பிப் போ “ என்று அதட்டினார்.

கலங்காத சாவித்ரி “யாரும் கண்ணால் காண முடியாத உங்களையே கண்டுவிட்டேன். அதனால் என் கணவரைத் திருப்பித்தந்தால் திரும்பிப் போகிறேன் “ என்று சாதுர்யமாக உரைத்தாள்.

”என்ன வரம் வேண்டுமானாலும் கேள் அம்மா. ஆனால் எடுத்ததைத் திருப்பித்தர இயலாது “ என்று சொன்னார்.

“ என் மாமனார் மாமியாருக்கு கண் பார்வை கிடைத்து அவர்கள் நாட்டைத் திரும்பப்பெற வேண்டும்” என்று வரம் கேட்டாள். ”அப்படியே தந்தேன்” என்று கூறிவிட்டு யமன் செல்ல திரும்பவும் பின் தொடரும் சாவித்ரியைப் பார்த்து ”இன்னும் என்ன வேண்டும். செல் அம்மா.” என்று மிரட்டினார்.

“என் தாய் தந்தையருக்கு ஆண்குழந்தை பிறந்து நாடாள வேண்டும் “ என்று கேட்க அதையும் “ தந்தேன் ‘ என்று கூறிவிட்டு வேக வேகமாகச் செல்லத் தொடங்கினார் எமன்.

சாவித்ரியும் துரத்துவது போல் பின் தொடர்ந்து ஓடினாள். தன் கணவனை எப்படியும் மீட்டாக வேண்டுமே. அவள் விடாமல் பின் தொடர்வது கண்டு மிரண்ட எமன் அவள் தன்னை விட்டால் போதும் என்று ”இன்னும் ஒரு வரம் தருகிறேன். அதன் பின் நீ கட்டாயம் திரும்பிச் சென்றுவிட வேண்டும்” என்றார்.

தனது புத்திசாலித்தனத்தால் மூன்றாவதாக சாவித்ரி “ என் கணவர் மூலமாக எனக்கு நூறு குழந்தைகள் பிறக்கவேண்டும் “ என்று வரம் கேட்டாள். சாவித்ரி பின் தொடர்ந்து வந்ததால் ஏற்பட்ட கலக்கத்தில் இருந்த எமன் அவள் கேட்ட வரத்தை சரியாக கேட்டுக் கொள்ளாமல் “தந்தேன் அதையும் . திரும்பிப் போ “ என்றார்.

கலகலவெனச் சிரிக்க ஆரம்பித்தாள் சாவித்ரி. எமன் திகைத்து நின்றார். ‘ என் கணவர் மூலமாக எனக்கு நூறு குழந்தைகள் பிறக்கும் வரை அவரை நீங்கள் கொண்டு செல்ல முடியாது. எனவே அவரைத் திருப்பித் தாருங்கள். “ என்று கேட்டாள்.

தன் வாக்காலேயே மாட்டிக் கொண்ட எமன் சத்யவானை விட்டுவிட்டுத் திரும்பிச் சென்றார். அங்கே தூக்கத்தில் இருந்து விழித்தவன் போல் சத்யவான் எழுந்து அமர்ந்தார். தன் புத்திசாலித்தனத்தால் ஜெயித்த சாவித்ரி அவனுக்கு பக்கபலமாக இருந்து நாட்டையும் மீட்டு நல்வாழ்வு வாழ்ந்தாள்.

எனவே எந்தப் பிரச்சனை வந்தாலும் சாவித்ரி போல் நம்பிக்கையையும் மன உறுதியையும் கைவிடாதீர்கள். அவளைப் போல கஷ்டத்தைப் புத்திசாலித்தனமாக எதிர்கொண்டால் நிச்சயம் ஜெயிப்போம் குழந்தைகளே.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 21. 9. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்..

2 கருத்துகள்:

  1. நன்றி ஜெயக்குமார் சகோ


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...