எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 5 செப்டம்பர், 2018

சூதாட்டம் கேடு செய்யும். தினமலர். சிறுவர்மலர் - 34.


சூதாட்டம் கேடு செய்யும்.

நீதி நெறி தவறாமல் நாட்டை பரிபாலனம் செய்து பார்புகழும் ராஜாவா இருந்தும் என்ன, சூதாட்டம் ஆடியதால் நாடு மனைவி பிள்ளைகளை மட்டுமல்ல உருவம் கூட கூனிக்குறுகி கருப்பாக ஆன ஒரு ராஜாவின் கதை பத்தி பார்க்கப் போகிறோம் குழந்தைகளே. பன்னிரெண்டு வருடத்துக்குப் பின்னாடி அவர் தன் சுய உருவம் பெற்று இழந்த அனைத்தையும் அடைந்தார் என்றாலும் அந்தப் பன்னிரெண்டு வருட காலமும் ஏகப்பட்ட கஷ்டத்தை அனுபவிச்சாரு.  எல்லாம் சூது  படுத்திய பாடு. அது என்னன்னு பார்ப்போம் குழந்தைகளே.

நிடாத நகரை ஆண்ட நிசத் என்ற அரசருக்கு இரு மகன்கள். நளன் மற்றும் குவாரா. இந்த நளன்தான் இக்கதையின் நாயகன். ஒரு முறை நளன் தன்னுடைய தோட்டத்தில் உலவும்போது சில அன்னபட்சிகளைக் கண்டான். அவற்றுள் ஒன்று நளனின் அழகைக் கண்டு வியந்து ’அவனுடைய அழகுக்கீடானவள். அவனுக்கு மனைவியாகும் தகுதிவாய்ந்தவள் விதர்ப்பதேசத்து அரசிளங்குமரி தயமந்தியே’ என்று கூறியது. தமயந்தியிடமும் தூது சென்று நளனின் அழகு பற்றி சிலாகித்தது.விதர்ப்பதேசத்து ராஜாவான வீம மகாராஜா தன்னுடைய மகளுக்கு சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்து ஐம்பத்தியாறு தேசத்து ராஜாக்களும் கலந்துகொள்ளும்படி ஓலை அனுப்பினார். தமயந்தி மனசில் நளனைத்தான் மணக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதைக் கண்டுபிடிச்சதோட, தமயந்தியின் அழகைக் கேள்வியுற்ற இந்திரன், யமன், சனி போன்ற அமரர்களும் அந்தத் திருமணத்துக்கு நளன் போன்ற தோற்றம் எடுத்து வந்து கலந்து அமர்ந்து இருந்தாங்க.

ஆனா நளன் மேல் உண்மை அன்பு கொண்ட தமயந்தி உண்மையான நளனைக் கண்டுபிடிச்சு மாலை அணிவிச்சு கணவரா ஏத்துக்கிட்டாங்க. அவங்களுக்கு இந்திரசேனை, இந்திரசேனன் அப்பிடின்னு இரு குழந்தைகள் பிறந்தார்கள். நல்ல மனைவி, மக்கள், பிள்ளைன்னு நாட்டை ஆண்டுகொண்டிருந்தபோது இவர்மேல் பொறாமை கொண்ட இவரது சகோதரன் குவாரா இவரை சூதாட அழைக்கிறார். விதி யாரை விட்டது. இவரது ஊழ்வினைப்பயன் இவர் சூதாட ஒப்புக்கொண்டு அதில் தோல்வியடைஞ்சு நாட்டை இழந்துடுறாரு.

தன் பிள்ளைகளான இந்திரசேனை, இந்திரசேனன் ஆகியோரை சேடி வசம் ஒப்படைச்சிட்டு ராணி தமயந்தியும் ராஜா நளனோட காட்டுக்குப் புறப்படுறாங்க. அங்கே இவங்க சந்திச்ச இன்னல்கள் கொஞ்சமா நஞ்சமா.

மூன்று நாட்கள் கனி கிழங்கு வகைகளை சாப்பிட்டு உயிர்வாழ்றாங்க. நளன் தமயந்திகிட்ட ”என்னோட சேர்ந்து நீயும் வதைபட வேண்டாம். உன் தந்தையின் விதர்ப்ப தேசத்துக்குப் போய் சுகமா இரு” என்கிறார். ஆனால் பாசக்கார தமயந்தியோ போக மறுத்துடுறாங்க. கணவரோட சேர்ந்து காடு மலை வனாந்திரம் எல்லாம் சுத்தும்போது ஒருநாள் தமயந்தி அசதியாகி தூங்கிடுறாங்க. அப்ப நள ராஜா நாம தமயந்தியை விட்டுட்டுப் போயிட்டா அவ தகப்பன் ஊருக்கு போயிடுவான்னு நினைச்சு விட்டுட்டுப் போயிடுறாரு.

தூக்கத்திலேருந்து விழிச்ச தமயந்திக்கு ஒரே துக்கமும் மயக்கமுமா இருக்கு அப்ப ஒரு பாம்பு வேற அவங்கள விழுங்குது. ஒரு வேடன் காப்பாத்துறாரு. அவர் கெட்ட எண்ணத்தோடு தமயந்தியை அணுக அவங்க அவர்கிட்டேருந்தும் தப்பிச்சு சேதி நாட்டுக்குப் போய் ராணியிடம் சேடியா பணிபுரியிறாங்க. அப்புறம் அவங்க அப்பா வீம மகாராஜா அச்சல்புரா நாட்டிலிருந்த தமயந்தியை ஒற்றர்களை அனுப்பிக் கண்டுபிடிச்சு விதர்ப்ப தேசத்துக்கே அழைச்சிட்டு வர்றாரு.

ங்கே கானகத்துக்குள்ளே தமயந்தியை விட்டுட்டுப் போன நளமகாராஜா காதுல அபயம் காப்பாத்துங்கன்னு ஒரு குரல் கேக்கு. காட்டுத்தீ பத்திக்கிட்டு எரியுது. அதுக்குள்ளே பார்த்தா அம்மாடியோவ்.. ஒரு பிரம்மாண்ட பாம்பு ஒண்ணு உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கு. பாம்புன்னும் பார்க்காம அந்தத் தீயில பாய்ஞ்சு அதைக் காப்பாத்துறாரு நம்ம வீரதீர நளமகராஜா. ஆனா என்ன ஆச்சு? கார்கோடகன் அப்பிடிங்கிற அந்தப் பாம்பு ராஜாவைக் கடிச்சிருது. அதன் மூலமா ராஜா கூனனாகி கருப்பாவும் ஆயிடுறாரு.

அவர் செய்த உதவியால மனம் இரங்கிய பாம்பு இரண்டு ஆடைகளைக் கொடுத்து மிக முக்கியமான தருணத்துல மட்டும் அதைப் போர்த்திக்கிட்டா சுயரூபம் திரும்பவும் கிடைக்கும். அதுவரை அவரை பீடிச்சிருக்கிற கஷ்டத்தை அனுபவிச்சுத்தான் ஆகணும்னு சொல்லிட்டுப் போகுது.

ஒரு வழியா அவர் கானகத்தைக் கடந்து அயோத்தியின் ரிதுபர்ணன் என்ற ராஜாவிடம் தன்னுடைய பெயர் பாகுகன் என்று சொல்லி குதிரைக்காரனா சேருகிறார். குதிரைகளைப் பழக்கி நான்கு குதிரைகளை ஒரே தேரில் பூட்டி மனோவேகம் வாயுவேகமா ஓட்டிக் காட்டி ராஜாவை அசர அடிக்கிறார் பாகுகன்.

விதர்ப்பதேசத்தில் இருந்த மகள் தமயந்தியின் துக்கத்தைப் பொறுக்காக வீம மகாராஜா திரும்ப சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்கிறார். அதைக்கேட்டு நளமகாராஜா எங்கிருந்தாவது வந்து சேர்ந்திடுவார்ங்கிற நம்பிக்கையில். அதே போல் அயோத்தி நாட்டிலிருந்து ரிதுபர்ணன் தமயந்தியின் சுயம்வரம் கேட்டுப் புறப்பட்டு வர அவருக்குத் தேரோட்டியா நம்ம நளமகாராஜாவும் வர்றாரு.

விதர்ப்ப தேசத்துக்கு வந்ததும் தமயந்தி கூனனா கருப்பா இருக்கிற தேரோட்டிதான் தன் புருஷன்னு கண்டுபிடிச்சிடுறாங்க. அவங்க கெஞ்சிக் கேட்டதும் அந்தக் கூனன் கார்க்கோடகன் கொடுத்த துணிகளை அணியிறாரு. அதப் போட்டதும் பழைய நளமகாராஜாவா ஆயிடுறாரு. உடனே தமயந்தி தன் கணவரைப் பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியால் அழறாங்க. அங்கே வந்த இந்திரசேனையும் இந்திரசேனனும் தங்கள் தந்தையைக் கண்டு சந்தோஷமடையிறாங்க.

தன் மாமனார் வீம மகாராஜா உதவியுடன் தன்னுடைய நாட்டைத் திரும்பப் போரிட்டு அடைகிறார் நளமகாராஜா. ஒரு சூதாட்டம் ஆடியதால் பன்னிரெண்டு வருடங்கள் ஒரு மகாராஜா பட்ட துயரத்தைப் பார்த்தீர்களா குழந்தைகளே. எனவே, சூதாட்டம் கேடு செய்யும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்..    

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 31. 8. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்..


டிஸ்கி 2.:- அரும்புகள் கடிதத்தில் கிருஷ்ணரின் ( ஸ்யமந்தகமணி படுத்திய பாடு ) கதையைப் பாராட்டிய வாழைப்பந்தல் அ. கருணாகரன் அவர்களுக்கு நன்றிகள். 

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...