எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 22 அக்டோபர், 2016

சாட்டர்டே போஸ்ட். வெற்றிக்கான வழி : இலக்கு நோக்கிய பயணம். - முனைவர் ஜம்புலிங்கம்.

எனது மதிப்புக்கும் பிரமிப்புக்கும் உரிய வலைப்பதிவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர் பௌத்தம் பற்றி எழுதிவரும் முனைவர் ஜம்புலிங்கம் அவர்கள். இவரைப் பற்றிச் சொல்ல ஏராளம் இருக்கிறது. தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி வருகிறார், முனைவர், பௌத்தம், சமணம், பிறதுறைகள், விக்கிபீடியா, சிறுகதைகள் போன்றவற்றில் 800 க்கும் மேற்பட்ட அரிய பதிவுகளை எழுதியவர். பௌத்தம் பற்றிய தொல்பொருள் ஆய்வுக் கட்டுரைகளை நான் இவரது தளத்தில் விரும்பி வாசித்திருக்கிறேன். சமீபத்தில் கீழடி பற்றிய இவரது தொல்பொருள் ஆய்வுக் கட்டுரை அனைவரும் வாசிக்க வேண்டிய ஒன்று. 

இவரது சாதனைக்கு வானமே எல்லை எனலாம். பூமிக்கடியிலும் தேடல்கள் நிகழ்த்தி சாதித்திருக்கும் இவரைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். எனவே இவரைப் பற்றி முழுமையாக இங்கே வாசியுங்கள் :) ! . 

தமிழ்ப்பல்கலைக்கழகப் பணியில் 35ஆம் ஆண்டு : 800+ பதிவுகள், 29 கண்டுபிடிப்புகள் 

இவரிடம் சாட்டர்டே போஸ்டுக்காக ஏதேனும் எழுதித்தரும்படிக் கேட்டபோது இன்றைய சூழலில் அதி முக்கியத் தேவையான இலக்கு நோக்கிய பயணம் என்ற கட்டுரையை அனுப்பி இருந்தார்கள். ஒவ்வொருவரும் படித்துப் பயன் பெற வேண்டிய கட்டுரை இது. 


வெற்றிக்கான வழி  : இலக்கு நோக்கிய பயணம்
ஒரு சாதனையைச் செய்வதற்கு ஓர் இலக்கினை நோக்கிய உறுதியான பயணமும் மன உறுதியும் தேவை என்பதை எனது ஆய்வின் அனுபவம் உணர்த்தியது. 1993வாக்கில் பௌத்தம் தொடர்பான ஆய்வில் தடம் பதிக்கும்போது நான் எதிர்கொண்ட நேர்மறைக் கருத்துகளைவிட எதிர்மறைக் கருத்துகள் அதிகமானவை. எதிர்மறைக் கருத்துகளை நேர்மறையாக்கிக் கொண்டு களம் இறங்கியதால் தமிழ்நாட்டில் கால் நூற்றாண்டு காலத்தில் 29 புத்தர் மற்றும் சமண தீர்த்தங்கரர் சிலைகளைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நண்பர்களும் ஆய்வாளர்களும் ஆசிரியர்களும் அப்போது சொன்னவற்றைச் சிந்திக்கும்போது இக்களத்தில் எவ்வாறு நான் துணிவோடு இறங்கினேன் என்பது எனக்கு வியப்பாக உள்ளது.  
  • தம்பி, நீ பாக்குற அலுவலக வேலையை முழுசாப் பாரு. அதுபோதும்.
  • உன்னாலெல்லாம் முடியாது. ஆய்வுங்கிறது கடல்.
  • ஆய்வுப் பணிய கல்வியாளர்கள்தான் பாக்க முடியும். அனாவசியமா இதுல தலையிடாதே. உன்னால முடியாது.
  • வேலையும் பாத்துக்கிட்டு, ஆய்வும் செய்யறதா அது எப்படி?
  • ஏம்ப்பா படிச்சுட்டு இன்னம நீ ஆசிரியரா ஆவப்போறியா. இப்படியே இருந்து   வேலையைப் பார்த்துக்கிட்டு ஏதாவது பதவி உயர்வு கிடைக்குதான்னா பார்.
  • கிளார்க் வேலை பாக்குற உனக்கு அதெல்லாம் முடியாது.
  • எப்பயும் ஆய்வுச் சிந்தனையோட இருந்தாத்தான் ஆய்வுல ஈடுபடலாம்.
  • அங்கங்க சில நூல்களைப் படி. குறிப்பெடு. காலவாரியாகத் தொகுத்துவிடு.
  • தடயமே இல்லாத ஒரு பொருள் குறித்து ஆய்வு செய்வது வீண்.
  • தலைப்பு அப்படியே இருக்கட்டும், சிரமமின்றி செய்திகளைத் தொகுத்து   உள்ளடக்கத்திற்குத் தந்துவிடு.
  • ஏதாவது 200-300 பக்கங்களுக்குத் தொகுத்து ஆங்காங்கே தலைப்புகள், உள் தலைப்புகள் கொடுத்து முடித்துவிடு.
  • அப்பப்ப சில கட்டுரைகளை எழுது. ஒண்ணா தொகுத்துடு. ஆய்வேடு தயார்.
  • உன்னால முடியாது. ரொம்ப ஆசைப்பட்டா ஒண்ணு செய். காளியம்மன்கோயில், மாரியம்மன் கோயில் வரலாறுன்னு எடுத்து ஏதாவது  எழுதிக்கொடுத்து முடிச்சுடு.
  • நாலு புத்தகத்தைப் பாரு. அங்கங்க கொஞ்சத்தை எடு. முடிச்சுடு.
  • இல்லாததைத் தேடி அதில் புதியவற்றைக் கண்டுபிடி. வரலாற்றுக்கு உதவும்.
  • முன்னவர்கள் போட்ட பாதையில் செல். புதியதாக எதையாவது   வெளிக்கொணர முடிகிறதா என்று பார்.
  • எளிதில் எவரும் தொடாத துறை. கண்டிப்பாகச் சாதிக்கலாம்.
  • நேரம் காலம் பார்க்காம அலையணும். அப்பத்தான் முடியும்.
  • பௌத்த சமயச் சுவடு எதுவுமே இல்லை. ஆய்வை ஆரம்பித்தாலும் முடிக்க முடியாது.
  • நீ வாத்தியார் இல்லப்பா. உன்னால முடியாதுப்பா.
  • நம்மளோட வேலை பார்க்குற டைப்பிஸ்ட். இவரு ஆய்வு பண்ணப்போறாராம்.

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக ஒரு ஆசிரிய நண்பர் சொன்னது மனதில் ஆழப்பதிந்தது. அவர், "நீ ஒரு கிளார்க். உன்னால எல்லாம் ஆய்வு செய்ய முடியாது", என்று கூறினார். இது நடந்தது 1993இல். 

அனைவர் சொன்ன கருத்துகளையும் உள்வாங்கிக்கொண்டேன். அனைத்தையும் தீர அலசிப் பார்த்தேன். அவரவர்களின் போக்கில், அவரவர் தகுதிக்கும் இயலாமைக்கும் தகுந்தபடியாக அவர்கள் கூறியதை உணர்ந்தேன். நம்மால் ஏன் முடியாது என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். எந்த ஒரு வெற்றிக்கும் தொடர் முயற்சியும், ஈடுபாடும், அயரா உழைப்பும் தேவை.  தமிழக வரலாற்றில் பல வருடங்களுக்குப் பின்னர் பேசப்படும் அளவில் ஒரு துறையில் நம்மால் முயன்ற வரை சாதிக்கமுடியும் என்ற நிலையில் களம் இறங்கினேன். 

அலுவலகப்பணி பாதிக்கப்படாத வகையில் விடுமுறை நாள்களில் எனது படிப்பும், ஆய்வும் தொடர்ந்தது, தொடர்கிறது. விடுமுறை நாள்களுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு எங்கெங்கு செல்லவேண்டும், எந்தந்த நூல்களைப் படிக்கவேண்டும் என்ற குறிப்பினை வைத்துக்கொண்டு நடைமுறைப்படுத்த ஆரம்பித்தேன். என் முயற்சிக்கு ஓரளவு பயன் கிடைத்ததை உணர ஆரம்பித்தேன்.

முக்கியமான அலுவலக வேலை இருக்கும் நாள்களில் ஆய்வு தொடர்பான செய்திகள் வரும்போது அதனை உறுதி செய்ய விடுப்பு எடுக்க இயலா நிலை அமையும். அவ்வாறான நிலைகளில் அதிகம் சிரமப்பட்டுள்ளேன். ஒரு குறிப்பிட்ட துறைக்கு நம்மால் ஆன பங்களிப்பு என்ற நிலையில் தொடர்ந்து வருகின்ற விடுமுறை நாள்களில் அதற்கான தீர்வினைக் காண ஆரம்பித்தேன்.

குடும்பம் என்ற நிலையில், மனைவி மற்றும் படித்துக்கொண்டிருககும் இரு மகன்கள். பொருளாதார நிலையும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றுவருவதற்கான செலவினைப் பார்த்தபோது மலைப்பாக இருந்தது. ஆய்வினைத் தொடர்முடியுமோ என்ற ஐயம் பல முறை ஏற்பட்டது. இருந்தாலும் மேற்கொண்ட முயற்சிக்கு எந்த தடையும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அதன் பயனாக எதிர்கொண்ட சிரமங்களும் அதிகமாயின.

நான் இருக்கும் இடத்தையும், அருகிலுள்ள இடங்களையும் களமாகக் கொண்டு சோழ நாட்டில் பௌத்தம் என்ற தலைப்பில் ஆய்வு தொடர்பான தேடலைத் தொடர்ந்ததன் விளைவு அரிய கண்டுபிடிப்புகளைக் காண உதவியது. 

பௌத்தம் தொடர்பான துறையில் முதன்மை ஆதாரங்களாகக் கொள்ளும் அளவு இக்கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன என்பதை நினைக்கும்போது நான்  பெருமை அடைகிறேன். 1993இல் சற்று நான் யோசித்து பின்வாங்கியிருந்தால் என் முயற்சியில் தோற்றிருப்பேன். எதிர்மறைக் கருத்துகளையும் நேர்மறைக் கருத்துக்களாகக் கொண்டு நாம் எடுக்கும் முயற்சிகள் உரிய பலனைத் தரும் என்பதைத் தற்போது உணர்கிறேன். 

"நீ ஒரு கிளார்க். உன்னால எல்லாம் ஆய்வு செய்ய முடியாது", என்று கூறிய ஆசிரிய நண்பர் சில நாள்களுக்கு முன்பு என்னை நேரில் பார்த்து தான் அப்போது சொன்னதை மனதில் வைத்துக்கொள்ளவேண்டாம் என்று இருக்கையில் வந்து பாராட்டிவிட்டுச் சென்றார். "உங்களைப் போன்றோரின் கருத்துகளே என்னை ஓர் ஆய்வாளனாக ஆக்கிவிட்டன" என்று கூறி அவருக்கு நன்றி தெரிவித்தேன். அவரும் வலிந்த, வெற்றுப் புன்னகையோடு விடை பெற்றார். இவரைப் போல பலரை அடையாளம் காண உதவியது எனது ஆய்வுக்களம். 

பௌத்தம் மற்றும் சமணம் (65 கட்டுரைகள்), பிற துறைகள் (65), சிறுகதைகள் (40), தமிழ் விக்கிபீடியா (300+), ஆஙகில விக்கிபீடியா (100+), நாளிதழ்களில் கட்டுரைகள் (20), சோழ நாட்டில் பௌத்தம் வலைப்பூ  (85), முனைவர் ஜம்புலிங்கம் வலைப்பூ (135), கண்டுபிடிப்பு பற்றிய செய்திகள் (150+), எண்ணிடலங்கா வாசகர் கடிதங்கள்  என்ற நிலையில் 800க்கும் மேற்பட்ட பதிவுகளையும் ஆறு நூல்களையும் எழுதவும், 16 புத்தர் சிலைகளையும் 13 சமண தீர்த்தங்கரர் சிலைகளையும் கண்டுபிடிக்கவும் உதவியது அப்போது எடுத்த தீர்க்கமான முடிவே. தமிழுலகிற்கு என்னால் ஆன எழுத்துபபணியும் ஆய்வுப்பணியும் தொடரும். 

நான் ரசிக்கும் இயக்குநர் பாலசந்தரின் திரைப்படம் ஒன்றைப் பற்றி ஆங்கில தி இந்து நாளிதழில் வந்த விமர்சனத்தில் "அவருடன் போட்டி போட ஒருவரும் இல்லை. ஆகையால் அவர் தனக்குத் தானே போட்டி போட்டுக்கொண்டிருக்கிறார்" என்று படித்தது இன்னும் என் நினைவில் உள்ளது. இதனை அப்படியே எனக்குப் பொருத்திப் பார்த்து மனம் நிறைவு கொள்கிறேன். எனது பயணம் தொடரும், என் எழுத்துக்கும் ஆயவிற்கும் துணை நிற்கும் அனைவருடைய வாழ்த்துக்களுடனும். 

டிஸ்கி:- எவ்வளவு அரிய தகவல்கள். எவ்வளவு உழைப்பு அதோடு கூடவே தன்னடக்கம். பிரமிப்பாய் இருக்கிறது சார். இலக்கு நோக்கிய பயணத்தில் உங்கள் விடாமுயற்சி வெற்றி ஈட்டித் தந்தது. உங்களை முன்மாதிரியாகக் கொள்கிறேன். புத்தர் சிலை, சமண தீர்த்தங்கரர் சிலைகளை உங்கள் பதிவில் பார்த்தபோதே மிரண்டிருக்கிறேன். குமாஸ்தா பணியிலிருந்து கொண்டே முனைவர் பட்டம் பெற்றது மாபெரும் சிறப்பு. சாட்டர்டே ஜாலி கார்னரை சிலாக்கியமான ஒன்றாக ஆக்கியமைக்கும் அன்பும் நன்றியும். :) தொடரட்டும் உங்கள் தேடல்கள். வாழ்க வளமுடன்.


15 கருத்துகள்:

  1. முனைவர் ஜம்புலிங்கம் ஐயா அவர்களின் பணி போற்றுதலுக்குஉரியது
    மற்றவர்களுக்கு ஓர் முன்னுதாரனம் அவர்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  2. //அவரவர் தகுதிக்கும் இயலாமைக்கும் தகுந்தபடியாக அவர்கள் கூறியதை உணர்ந்தேன். நம்மால் ஏன் முடியாது என்ற கேள்வியை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். எந்த ஒரு வெற்றிக்கும் தொடர் முயற்சியும், ஈடுபாடும், அயரா உழைப்பும் தேவை.//

    நிச்சயமாக. இதனை என்னாலும் நன்கு உணர முடிகிறது.

    இதையேதான் என்னுடைய இந்தப்பதிவினில், பட்டும் படாததுமாக, வேறு விதமாகச் சொல்லியிருக்கிறேன்.

    http://gopu1949.blogspot.in/2014/11/blog-post_7.html

    தலைப்பு: சிறுகதை விமர்சனப்போட்டி நிறைவு விழா - நன்றி அறிவிப்பு

    உபதலைப்பு: போட்டி ஆரம்பிக்கும் முன்பே நான் நடத்தியதோர் கருத்துக் கணிப்பினில் பங்குகொண்டு சிறப்பித்தவர்கள்:

    >>>>>

    பதிலளிநீக்கு
  3. முனைவர் ஐயா அவர்களின் பேட்டியும், அயராத உழைப்பும் போற்றிப் பாராட்டத்தக்கவைகளே. அவருக்கு நம் நல்வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. ஐயாவின் பதிவுகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன்... அவரின் தமிழ்ப்பணி சிறப்பானது... போற்றுதலுக்கு உரிய பெரியவர்களில் இவரும் ஒருவர்....

    பகிர்வுக்கு நன்றி அக்கா...
    வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  5. வணக்கம். எனது எழுத்தினை தங்களது தளத்தில் கண்டு மகிழ்ந்தேன். என்னை நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள விதம் பிரமிப்பை அளிக்கிறது. தங்களைப் போன்றோரின் வாழ்த்துகளுடன் எழுத்துப்பணியும், ஆய்வுப்பணியும் தொடரும். அன்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. ஜம்புலிங்கம் அய்யா என்னுடைய வழிகாட்டி என்றே சொல்லலாம். விக்கிப்பீடியாவில் எழுதத் தொடங்கியபோது நிறைய நடைமுறைகளை கற்றுக்கொடுத்தார். அப்படிப்பட்ட ஒருவரை சாட்டர்டே போஸ்டில் அறிமுகப்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி.

    இப்போது நானும் ஒரு புதிய முயற்சியில் இறங்கியிருக்கிறேன். நானும் இதேபோன்ற பேச்சுக்களை கேட்டு வருகிறேன். அய்யாவை போல் நானும் வெற்றி பெறுவேனா என்று தெரியவில்லை. ஆனால், இப்போதும் அய்யா எனக்கு வழிக்காட்டியாகத்தான் இருக்கிறார்.

    நல்ல பதிவரை அறிமுகப்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி சகோ!

    பதிலளிநீக்கு
  7. ஜம்புலிங்கம் அய்யா என்றொரு அறிஞரை வலைப்பூவில் காண்பேன். அவர் பதிவுகள் என்னை ஈர்க்கும். அவரது ஆய்வுப் பணி தமிழை வாழ வைக்க உதவும். விக்கிப்பீடியாவின் சாதனைப் பதிவர். அவரது வழிகாட்டலைப் பகிர்ந்தமைக்குத் தங்களுக்குப் பாராட்டுகள். பயனுள்ள அவரது வழிகாட்டலைப் பின்பற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  8. டாக்டர் ஜம்புலிங்கத்தை நேரில் சந்தித்து இருக்கிறேன் அவரது பணிவும் விடாமுயற்சியும் என்னையும் ஈர்த்தது

    பதிலளிநீக்கு
  9. பிரமிக்கத்தக்க உழைப்பு, ஆர்வம். பாராட்டுக்கள் முனைவர் ஐயா. நம்மிடையேயே ஒரு பாஸிட்டிவ் மனிதர். நன்றி.

    பதிலளிநீக்கு
  10. ஜம்புலிங்கம் சார் பற்றிய உங்கள் விளக்கமும் அருமை.
    முனைவர் அவர்கள் சொன்னவைகளையும் படித்தேன், எத்தனை சாதனைகள்!
    உழைப்பால் உயர்ந்த மனிதருக்கு வணக்கங்கள், வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  11. ஆம். மிக்க நன்றி ஜெயக்குமார் சகோ.

    மிக்க நன்றி விஜிகே சார் சரியா சொன்னீங்க

    நன்றி குமார் சகோ

    ஜம்பு சார் உள்ளதை உள்ளபடி உரைத்திருக்கிறேன். மிகை என்று எதுவுமே இல்லை. :) தொடர்ந்த உழைப்போடு தொடருங்கள் தொடர்கிறோம். அன்பும் நன்றியும்.

    அஹா சரியா சொன்னீங்க செந்தில் சகோ. இம்மாதிரிப் பேச்சுகள்தான் நம்மை மேலும் செயல்படத் தூண்டுகின்றன. நன்றி

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ.

    நன்றி பாலா சார்

    உண்மை ஸ்ரீராம். நன்றி

    நன்றி கோமதி மேம்.


    பதிலளிநீக்கு
  12. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  13. உண்மையில் முனைவரின் திறமை பலருக்கும் பாடமாக அமையும்
    பதிவில் அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றி சகோ
    - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  14. எங்கள் பெருமதிப்பிற்குரிய முனைவர் ஜம்புலிங்கம் ஐயா பற்றி தங்கள் சாட்டர்டே கார்னரில் வந்தது மிக மிக பெருமைக்குரியது. அவரும் நம்மில் ஒருவராக இருப்பது நாம் எல்லோருமே பெருமைப்பட வேண்டிய விஷயம். அவரது முயற்சி, ஆர்வம், தேடல், உழைப்பு எல்லாமே அதையும் விட தன்னடக்கம் இவை எல்லாமே மிகமிக போற்றுதற்குரிய ஒன்று மட்டுமல்ல நம் எல்லோருக்குமே சிறந்த வழிகாட்டி, எடுத்துக்காட்டு என்றால் மிகையல்ல சகோ/தோழி...

    தாமதமாக வந்தமைக்கு வருந்துகிறோம்...அக்டோபர், நவம்பர் மாதங்களில் எல்லாம் வேலைப்பளு அதிகமாக இருந்ததால் ..

    மிக்க நன்றி பகிர்விற்கு வாழ்த்துகள் இருவருக்குமே!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...