வெள்ளி, 23 செப்டம்பர், 2016

அதிரூபனின் காதலிக்கு அன்பு முத்தங்கள்.அதிரூபனின் காதலிக்கு அன்பு முத்தங்கள்.

உன்னை வரைந்த கைகளுக்கே ஒரு புத்தகத்தைப் பரிசளிப்பாயென்றால் அதற்குப் புகழுரை எழுதிய எனக்கு உன் மனதின் ஒரு பக்கத்தையாவது பரிசளிக்க மாட்டாயா என்ன ?

இளவேனிலும் முதுவேனிலும் மழையும், குளிரும் முன்பனியும் பின்பனியும் வருவதுதான் வாழ்க்கை சுழற்சி என்றால் உனக்கும் எனக்குமான தொடர்பு முன்பனியோடு மூடிப்போனதென்ன ?. இருக்கட்டும் என்றாவதுன் மனமேகம் விலகும்தானே. முழுநிலவாய் உன்னை அங்கங்கே கண்டும் விடையறியாமல் தவிக்கும் நான் உன் அதிரூபனையும் சிண்ட்ரெல்லாவையும் இரண்டாண்டுகளாய்ச் சுமந்து திரிகிறேன்.

போகட்டும் நான் துரத்தியது மாரீசப் பொய்மானல்ல என்கூடச் சிரித்துத் திரிந்த என் சகப் பெண்மான்தான். இது மானுக்கு மான் எழுதும் மனம் தகர்ந்த மடல் கூட. காரணம் தெரியாமல் கானோடு அலைகின்றேன். சரி போகட்டும் என்னோடு ஏதொன்றும் தெரியாமல். புதையட்டும் என்னுள்ளே என் வருத்தம் உனைத் தாக்காமல்.

இன்றுனது பிறந்தநாளென்று ஊர் சொல்லும். போஸ்டர்கள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள் உடன்பிறவா சகோதரிகள். ஒளிந்து ஒன்றும் பார்க்கவில்லை ஓவியமாய் நீ தெரிந்தாய். உன் சிரிப்பும் உன் நகைப்பும் எதிரொலித்துக்கிடக்குதடி.

உனக்குப் பிடித்த அதிரூபனும் சிண்ட்ரெல்லாவும் எனக்குப் பிடித்த கதை சொல்கின்றேன் இனி..

”அவன் கடவுளானவன், கர்ப்பத்தின் சூட்டை அணைப்பாகத் தருபவன், அவன் மையல் பேசும் தையல் அவள். அவர்கள் கூரையைக் காதல் மழையால் நனைத்துக் கொண்டிருக்கிறது வானம். தேவகுலமென்று மீட்க தேவதைகள் வந்து தாபக் குளத்தில் அவர்கநீராட்டிவிுகிறார்கள். கோர்க்காமல் கிடக்கின்றன வீடெங்கும் அறுந்த மணிமாலையாய் அவர்கின் முத்தங்கள்,  அந்த நனைதலின் சுகம் வேள்வித்தீயில் அணைகிறது.  இருந்தும் முடிசூட்டு விழாவுக்குத் தயாராய் திருவீதி உலாப்போக வந்தேகுகிறது காதல், அவள் வாசிப்பில் பெருநூலாகும் பாக்யம் வாய்க்கிறது தேநீர் ஈந்தவனுக்கு. காட்டுக்கூந்தலில் அலையாடினவனைக் கதிர் அறுக்கக் கூப்பிடும் கள்ளி அவள். முத்தம் வேண்டிக் கொல்லும் கோட்டான் அவன், அவர்களுக்கானவைகளைத் தோற்றுவித்துக்கொண்டு கடவுளானவர்கள் & அரிச்சுவடியில் ஆரம்பித்து அகராதிகளையே எழுதியவர்கள், நீ என் பிள்ளை நான் உன் தாரம் எனத் தாய்மையானவள் அவள், கரங்கள் அடைகாக்க அவளைப் பிரசவிக்கும் அவனும் தாயுமானவன், முத்தத்தில் அவன் மூத்த குடி, அவளோ காதல் தந்த காயங்களோடு களைப்பாறிக் கொண்டிருப்பவள், அவளை ஒளித்துக் கொள்ள மறுக்கிறதாம் குளம், மோகக் குளத்தில் புரவிகள் மேவ வெட்கம் அணிந்தவள் விரட்டுகிறாள், அண்டபகிரண்டமும் ஆண்டவளாகிறாள், அவர்கள் உடன்கட்டை ஏற நீறுபூத்துக் கொண்டிருக்கின்றன உடல்கட்டைகள், அவன் நெஞ்சுக்கூட்டில் சாயும்போதெல்லாம் கூடுவிட்டுக் கூடுபாய்கிறாள் அவள். அமுதையும் தேனையும் மறுதலித்து அவனைக் குடிக்கிறது அவளின் இதழ்கள்.

கடைசியாக ப்ரியங்களின் தோட்டத்தில் நீ உனக்கென படைத்துக் கொண்ட தேவதை சிண்ட்ரெல்லா “ என முடிக்க அஹா அஹா ஆஹாஹா எத்தகைய தேவதையவள் எனத் தரிசித்துக் கொண்டிருந்தேன்.

இவர்கள் இருவரும்  மேன்மையை மென்மையைச் சமைப்பவர்கள். அன்பாலே சமைந்தவரக்ள். அதிரூபனும் சிண்ட்ரெல்லாவும். அடங்காத காதலில் நிரம்பித் ததும்புபவர்கள்.

”கல்லாகவே இருந்திருக்கும் கல், சொம்பு நீரால் தீர்கிறது பெருந்தாகம், ஒற்றுமை வேண்டும், உயிர்வலி அறிதல் வேண்டும் , புழக்கடைகள் இல்லாத புழக்கம்,ரத்தத்தில் தோய்ந்த மண், மரங்களை வெட்டிய இடத்தில் வரையேட்ோட மனிதனின் மூளை, எல்லை பார்த்துப் பாதையைக் கட, பெரிதினும் பெரிது கேட்டோம், கொழுத்த நிலையில் இருக்கும் ப்ரியங்கள், விஞ்ஞானம் குடியேற தன் ஞானம் துறந்த வானம்,நூல்களில் நூலானவள், படிப்பினையில் பல்கலைக் கழகமானவள், கூடைக்குள் கோழியாய் கொக்கரிக்கும் மனம் கொண்ட சுதந்திர தேவி,சிறுபான்மை இனம் களையுங்கள் தினமெடுப்பவர்களே, வாழும் அன்பை உயிர்ப்பிக்க நேரமில்லை தோழா, பருவகாலங்கள் மட்டுமே பருகிக் கொண்டிருக்கிறது என் பருவத்தை, என்று குத்துவிளக்காகும் இந்த வீதி விளக்குகள், பெண்மை மறந்த போராளி, கன்னித் திரை கிழியா காதல் வாழும் சொர்க்கம், இங்கிதம் தெரியாத மழை, பொதுக்கழிப்பிடமாய் இல்வாழ்க்கை, வாய்கட்டாமல் தின்று வாய்க்கரிசி வாங்கும் நாட்கள், நானும் ஒரு வீராங்கனைதான், முழங்கைக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் கண்ணீரும் காதலும், சில்லறை வணிகம் என்ற பெயரில் சீரழிந்து விடுவோமோ, பிரித்து மேயத் தெரியவில்லை ப்ளாஸ்டிக் பைகள் வேண்டாமே., தாழப் பறத்தல் என்பது தரை இறங்க அல்ல, ”

என சொல்லாட்சியிலும் பொருளாட்சியிலும் மிரட்டும் கவிதைக்குச் சொந்தக்காரி இந்த அதிரூபனின் காதலி. கில் மட்டுமல்ல, இயற்கை, சுற்றுச்சூழல் சீரழிவு, விலங்குகள் பாதுகாப்பு, மனிதருக்குள்ளே வர்க்க பேதம், எனவும் நிறைய யோசிக்க வைத்தவள் இந்த அதிரூப சுந்தரியும்.

மிக மிக ரசித்த கவிதை.

தொட்டில் தாவரம்.

எப்போது
வித்திட்டாய்
தெரியவில்லை

இப்போது
முளைவிட்டேன்
தொட்டித் தாவரமாகவே
இருந்து
தொலைகிறேன்

பெரிதாய் கிளை விட்டு
மண்ணில் வேரூன்ற
மனமில்லை
உன்னில்
கிளைத்த எனக்கு.

ஆம் தமிழ் நீ இங்கு சுகம் நான் அங்கு சுகமா. இனிய பிறந்தநாள் வாழ்த்துகளடி, அன்பு முத்தங்களும். 

நூல் :- அதிரூபனும் சிண்ட்ரெல்லாவும். 
ஆசிரியர் :- தமிழரசி
பதிப்பகம் :- டிஸ்கவரி புத்தக நிலையம், சென்னை
விலை:- ரூ 70/-

5 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

வாழ்த்துக்கள்

பரிவை சே.குமார் சொன்னது…

கவிஞருக்கு உங்கள் கட்டுரை வாழ்த்து அருமை...
என் வாழ்த்தையும் சொல்லிடுங்க அக்கா...

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்லதொரு அறிமுகம். நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி ஜெயக்குமார் சகோ

நன்றி குமார் சகோ

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...