வியாழன், 1 செப்டம்பர், 2016

பொசலுத் தாயி.

மிகத் தைரியமாக தான் நினைத்ததைக் கதைகளின் வாயிலாகச் சொல்லும் கம்பீரம் கவிதா சொர்ணவல்லிக்கு வாய்த்திருக்கிறது குறித்துப் பெருமையும் அதே சமயம் பொறாமையும் ஏற்படுகிறது. நேசிக்கும் ஒன்றைத்தானே வெறுக்கவும் பின் விரும்பவும் முடியும். பொசலை விரும்பவும் அதில் சென்று ஆடவும் பாடவும் ஒருத்தியினாலேயே முடியும் என்றால் அவள் கவிதாவாகத்தான் இருக்க முடியும். ஒன்பதே கதைகள் கொண்ட தொகுப்பை இரு வருடங்களுக்கு முன் வெளியிட்டுள்ளாள். அதைப்படிக்க இப்போதுதான் சமயம் வாய்த்தது. ( சென்னைக்குச் சென்றால்தான் அதுவும் டிஸ்கவரிக்குச் சென்றால்தான் வாங்க முடியும் என்ற நிலையிலேயே இன்றைய எனது வாசிப்பு இருக்கிறது )

கவிதாவின் கதைகள் காத்திரமானவை அவள் முகநூலில் வெளியிடும் கருத்துக்களைப் போல. ஒரு பதின் பருவப் பெண்ணாக அவள் வெளிப்படுத்தும் ”நான் அவன் அது” என்னை சிறிது துணுக்குற வைத்த கதை. உறவு முறைகளில் சிற்சில சமயங்களில் ஏற்படும் மனக்குழப்பத்தைச் சரேலெனப் போட்டுடைத்த கதை. உலகின் ஆண் பெண் என்ற இருபாலுக்கும் எந்தவகை உறவிருந்தாலும் ஏற்படும் ஈர்ப்பை காதல் ஆழிக்கான கூட்டத்தில் நண்பர்கள் முன்வைத்த போது ஏற்பட்ட அதிர்வு இக்கதையிலும் எனக்கு ஏற்பட்டது.

கடவுளிடம் நமக்கு ஏற்படும் கோபதாபங்கள் பிரியங்கள் பற்றிய கதை ”விலகிப் போன கடவுள்கள்”. கிராம தேவதைகளைச் சிநேகிதியாகவும் உறவினராகவும் பாவிக்கும் மனம் கொண்டோருக்கு நகரக் கடவுள்கள் அந்நியம்தான்.

”கதவின் வெளியே மற்றொரு காதல் ” முன்பே படித்திருக்கிறேன். அப்போது பிரம்மிப்பாயிருந்தது. இப்படியெல்லாம் நச்சென்று சொல்ல முடியுமாவென்று. அதே பிரமிப்பு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. ஒரு பாட்டில் கமல் சொல்வதுபோல ஒரே காதல் ஊரில் இல்லையடா . ஆனால் இங்கே ஒரே சமயத்தில் இரு வேறு நபர்கள் மேல் காதல் என்பதுதான் ஹைலைட். காதல் என்பதைப் பிரியம், நேசம், பாசம், அன்பு எனக் கொண்டால் இது இரு பாலினரிடத்தும் வருவதுதான். ஆனால் இங்கே சொல்லி இருக்கும் விதம் கவிதாவுக்கே உரித்தான அதிர்வலை கொண்ட தனிப்பாணி. மழை பொழியும் இந்நேரத்திலும் புழுக்கம் குறைய சாரலுக்காக ஜன்னலில் அண்டி நிற்கத் தோன்றியது இக்கதையைப் படித்ததும்.

அம்மாவின் பெயர் அசர வைத்தது. ஒவ்வொருஅம்மாவின் பின்னும் ஒரு பெயரில்லாத தியாகி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறாள். பிள்ளைகள் நலனுக்காக தன்னையே கரைத்துக் கொண்ட, இனம் தெரியாமல் அழித்துக் கொண்ட தான் என்ற தன்மையை மறந்துவிட்ட தாய் தியாகியல்லாமல் வேறென்ன. கடமைகளைச் செய்துவரும் அந்தத் தாய்மையின் மேல் சமூகத்தின் பார்வைகள் மாற மாறத் திராவிடச் செல்வி என்ற வீர்யப் பெயர் பெற்ற தாயும்மாறி மன அழுத்ததிலும் மனச் சோர்விலும் ஆட்படுவது தினம் காணக்கூடிய ஒன்றுதான். குடும்பத்தாரும் பிள்ளைகளும் கூட தாயை புரிந்து கொள்வதில்லை. பொசலைப் பார்த்து மகள் கூட ஓரிரு தருணத்தில் பொறாமைப்படுகிறாள். என் கல்லூரிப் பருவம் முடிந்து திருமணம் நிச்சயமானதை  என் கவியரங்கக் கவிதைகளைக் கேட்ட ஒரு ஜூனியர் பெண் சொன்னாள் ”அக்கா நீங்கள்ளாம் கல்யாணம் செய்துக்குவீங்கன்னே நினைக்கலை. உங்க எழுத்துகளை வாசிச்சிருக்கேன். அதில் அப்படியான அடையாளமே இல்லையேக்கா” என்றாள். உண்மைதான் திருமணத்துக்கு முன் ”பொசலாய்” இருந்தவர்கள் திருமணத்துக்குப் பின் கரையைக் கடந்த புயல் வீழ்த்திய நிலமாய் ஆகிவிடுகிறார்கள்.

”எங்கிருந்தோ வந்தான்” ஆண்புயலைப் போல அவளைக் கடந்து செல்கிறான்.பெருமாள் என்று கவிதா முகநூலில் எப்போதாவது சொல்வதுண்டு, அது பக்தியாலா இல்லை பரவசத்தாலா இல்லை தோழமை உணர்வாலா எனப் பகுத்தறிய முடியவில்லை.நிசமாவே ஒரு நாள் புயல் பொழுதில் கடற்கரைக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணத்தை இக்கதை ஏற்படுத்தியது. ஒரு நல்ல நட்பும் அதை மீறிய காதலும் கூட கொள்கை கொண்ட மனிதர்களைத் துருப்பிடிக்க வைத்துவிடும் விலகி இருத்தல் சிறந்தது எனச் சொல்லிய கதை.  ஆனாலும் பட்டு நூலிழையினால் ஆன பிரியமும் தேவதூத சிறகுகளும் பித்துக் கொள்ள வைத்தன.

”மழையானவன்”.என்னை முன்பே நெகிழ்த்தி வீழ்த்திய கதை. ///என்னைக் கடக்கும், என்னை ஆச்சர்யப்படுத்தும், என்னை நெகிழ்ச்சியூட்டும் அத்தனை பேர் மீதும் காதல் வழிந்தோடுகிறது. /// /// காதல் சுற்றிச் சுற்றி வலம் வரும் ஒருத்திக்கு வலி தாங்குவது கடினமா என்ன /// என்று கேட்கும் சிறுமியை நேசிக்காமல் இருக்க முடியுமா. அன்பு முத்தங்கள் கவி. உன்னைக் கடந்து செல்லும் எதையும் தன்னிச்சையாய்க் கடக்க விடுவதே உன் மேலான அதீதப் பிரியத்துக்கும் காரணமாகிறது.

”யட்சி ஆட்டம்”. சிறுவயதில் ஓரிரு உறவினர் வீட்டுப் பெண்கள் இதுபோல முனி அடித்தது என்று சொல்லி மந்திரிக்கக் கூட்டிச் சென்றதைப் பற்றிக் கேள்வியுற்றிருக்கிறேன். மீளமுடியாத மாற்ற முடியாத சூழலில் சிக்கித்தவிக்கும் பெண்கள் மனதில் தோன்றும் அதீத சக்தியே யட்சியாக உருவெடுத்திருக்கும் என்பது என் எண்ணம். அந்த ஊரணி வழியா வீடு விட்டு வீடு கறிக் கொழம்பு கொண்டு போனா பேய் பிடிச்சுக்கும் என்று சொல்லி கரியும் விளக்குமாற்றுக் குச்சியும் போட்டுக் கொடுத்தனுப்புவார்கள். அமானுஷ்யம் என்று கவிதா சொல்வதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன். யட்சி அழகானவள் அதே சமயம் அதிசக்தி வாய்ந்தவள்.

“பச்சைப் பாம்புக்காரி” எல்லார் வீட்டிலும் இருக்கிறாள். கைப்பக்குவம் என்ற பெயரில் அவள் சமைக்கும் ஒவ்வொன்றையும் குடும்பத்தார் பாராட்டிக் கொண்டே இருக்கிறார்கள். கைப்பக்குவத்துக்குக் காரணம் அருகாமணையா பச்சைப் பாம்பா தெரியாது ஆனால் ஆச்சி சொல்லும் கதைகளும் அது தரும் நெருக்கமும் மனசுக்குப் பிடித்ததாக இருக்கிறது.

”டிசம்பர்பூ” கொஞ்சம் திகிலடைய வைத்த கதை. பாசக்காரத் தாயும் மகனும். இறப்பிற்குப் பின்னும் அவள் அந்த வீட்டில் அரூபமாய் உலாவந்ததை உணர்ந்து சிலிர்த்தது. கொஞ்சம் அச்சுறுத்துவதாகவும் இருந்தது. பொசசிவ்னெஸ் என்பதன் எல்லை எது என யோசிக்க வைத்தது. // அம்மாவே ஆனாலும் தொடர்ந்து நர்ஸிங் பண்ண அன்னை தெரசாதான் வரணும்// என்பதை மகனின் வாக்குமூலமாகப் படித்தபோது வருத்தமாக இருந்தது. ஓரிடத்தில் வெறுமையாகவும் ஓரிடத்தில் நிரம்பியும் இருக்கும் வீட்டை மனக்கண்முன் கொண்டு வந்தது எழுத்து.

உறவுமுறைச் சிக்கல்கள், மனச் சிக்கல்கள், நிறைவேறாத ஆனால் நிரம்பித் ததும்பும் காதல்கள், மாற்றே இல்லாத பிரியங்கள், ஆச்சி அம்மாச்சி அக்கா ஆகிய உறவுகள் தரும் இனிமையான அதே சமயம் காய்த்துப் போன தவிர்க்க முடியாத உணர்வுகள் என்று கலந்து கட்டிச்செல்லும் சிறுகதைத் தொகுதியில் முக்கியமாகக் கவர்ந்தது கவிதாவின் கதை சொல்லும் திறனும் அதில் ஸ்பஷ்டமாகத் தெறித்த உண்மைகளும்தான். உண்மையை உரக்கச் சொல்வதில் பல சிக்கல்களையும் சவால்களையும் சந்திக்கும் என் போன்ற எழுத்தாளர்களுக்கு கவிதா எங்கள் சிரசில் சூடிய வைரம்.ஜொலிக்கிறது என்று யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற சந்தோஷம் மின்னுகிறது மனசெங்கும். வாழ்த்துகள் கவிதா உன் அடுத்த நூலுக்காகவும் காத்திருக்கிறேன். அதை நீ வெளியிடும் அற்புத தருணத்தில் உன் பக்கத்திலிருந்து உன் பொசலுத் தாயைப் போல நானும் பொசலாவேன். அன்புமுத்தங்கள் கவி. எதற்கும் சமரசம் செய்து கொள்ளாமல் இதே தெளிவோடும் தன்னம்பிக்கையோடும் வாழ்க வளமுடன்.

அட்டை வடிவமைப்பு அற்புதம். யட்சியைக் கண்முன்னே கொண்டு வந்த வடிவமைப்பாளர் புருஷோத்தமனுக்கும் வாழ்த்துகள். அருமையான இந்நூலினைத் தந்த நிலமிசை பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள்.

 நூல் :- பொசல்

ஆசிரியர்:- கவிதா சொர்ணவல்லி

பதிப்பகம் :- நிலமிசை

விலை:- ரூ 80/-

கிடைக்குமிடம் :- டிஸ்கவரி புத்தக நிலையம், கே கே நகர், சென்னை. 5 கருத்துகள் :

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நூலினைப் படிக்கத் தூண்டும் விமர்சனம்
அவசியம் வாங்கிப் படிப்பேன்
நன்றி சகோதரியாரே

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நூல் அறிமுகத்திற்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கரந்தை ஜெயக்குமார் சகோ

நன்றி வெங்கட் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

அப்பாதுரை சொன்னது…

நிச்சயம் படிக்கப் போகிறேன். மின் வடிவத்தில் ஏன் வெளியிடுவதில்லை? உலகவீச்சு கிடைக்குமே?

நிற்க.. ஹிஹி.. பொசல் என்றால் என்ன?

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...