எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

அமீரகத்தின் தமிழ்த்தேரில் தாய்மை.

அமீரகத்தில் இருந்து வெளிவரும் தமிழ்த் தேர் இதழில் தாய்மை பற்றிய என்னுடைய மூன்று கவிதைகள் வெளியாகி உள்ளன.

தாய்மை:-
==========
மழை பொழிந்தது
கட்டிடங்கள் கட்டிடங்கள்  
கட்டிடங்கள் வழித்து.. 

கற்கள் வெறுமே நின்றன..  
மழை சலித்துச் சுருண்டது

புழுதி தின்று 
வெய்யில் வெறித்து  
எரிந்தன கட்டிடங்கள்

மழை வந்தது பார்த்தது  
மறுபடி பொழிந்தது.. 

தாய்மை - 2
*****************
அடித்துப் பொழியும் மழை
அழித்துச் செல்கிறது
அனைத்தையும்.


நிர்மலமான வானத்தின்கீழ்
அழுக்கற்று நிற்கிறது பூமி.


குளிர்கவிதை எழுதிச்செல்கிறது
தத்திச் செல்லும் காற்று.


கதகதப்பாய்க் கசிகிறது
வெட்க அணைப்போடு சூரியன்.


முத்தமிடப் பால் வழியும் வாயோடு
ஓடி வருகிறது நிலா.


நினைவும் மறதியுமாய்
மெய்மறந்து நிற்கிறது தாய்மைக்காலம்.

தாய்மை - 3

மேகக் குட்டிகள் :-
*****************
பேரின்ப நொடிகளில் மோதி
மழையாய்ப் பிசுபிசுத்துப்
புரண்டு படுக்கிறது மேகம்.

சிந்திய துளிகளைச் சேமித்து
கர்ப்பமாகிக் கிடக்கிறது நிலம்.

நீச்சலிடும் விதைகள்
காலூன்றி எம்பி
காற்றின் கரம் பிடித்து
மேலேறும்.

மஞ்சள் புன்னகையோடு
ரசித்துக் கடக்கும் சூரியன்
பச்சையம் பரிசளிக்கும்.

வான் தொட்ட இலவம்
மேகம் முத்தமிட்டுதிர்த்து
மேகக் குட்டிகளாய்
பூத்திருக்கும் மண்ணில்.
 நன்றி தமிழ்த் தேர்.& காவிரி மைந்தன் சகோ. புகைப்படம் எடுத்துப் பகிர்ந்தமைக்காக நன்றி நாகினி கருப்பசாமி :) 

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...