எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

கற்பகம்.. வாழ நினைத்தால் வாழலாம். ..

காரைக்குடியில் ஒரு முறை செல் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருந்தது. நேரம் ஆக ஆக பேசிப் பேசி பாலன்ஸ் குறைந்துகொண்டே வந்ததால் உடனடியாக பக்கத்தில் இருக்கும் ஏதோ ஒரு கடையில் ரீசார்ஜ் செய்யலாம் என யோசிக்கையில் வழியில் ஒரு கடையின் வெளிப்புறத்தில் ரீசார்ஜ் செய்யப்படும் என எழுதி இருந்தது. பார்த்தால் துண்டுகள் விற்கும் கடை. நுழைந்தால்.. இந்தக் குட்டிப் பெண் அமர்ந்திருந்தாள்.


செல் ரீசார்ஜ் செய்யணும் என்றதும் சொல்லுங்க. எவ்வளவு என பேனாவை எடுத்து மூடியிருந்த நோட் புக்கைப் பிரித்தாள். பத்து வயது கூட இருக்காது.. இந்தப் புள்ளயா ரீசார்ஜ் பண்ணப் போறான்னு ஆச்சர்யமா நானும் ரங்கமணியும் பார்த்தோம்..

ரங்கமணி ரீசார்ஜ் செய்ய வேண்டிய நம்பரையும் போன் கம்பெனி பெயரையும் சொன்னார். எங்கள் இருவர் முகத்திலும் வியப்பின் பரவசம் தன்னையறியாமல் குடி கொண்டது. நான் நடுவே பேச்சுக் கொடுத்தேன். ஏம்மா அப்பா, அம்மா எங்கே .. நீ ஏன் பார்த்துக்குறே என்று.

அப்பா காஃபி சாப்பிடப் போயிருக்காங்க. என்றாள். வீடு பக்கமா என்றேன். லேசாக இல்லை என்பது போலத் தலையசைத்தாள். நீ என்ன படிக்கிறே என்றேன். ஃபோர்த் என்றாள். எட்டு வயதுதான். அட..!

எந்த ஸ்கூல் என்றேன் சிதம்பரம் விசாலாக்ஷி என்றாள். எல்லாம் நோட் புக்கில் நம்பரைக் கேட்டு எண்ட்ரி போட்டு திரும்ப ரீசெக் செய்து கொண்டே சிறிது யோசித்தபடி இதெல்லாம் சொன்னாள்.

நடுவில் என் கணவர் என்னென்ன ஆஃபர் இருக்கு என வினவ ஒவ்வொரு செல் கம்பெனிக்கும் எது ஃபுல் டாக் டைம், என்னென்ன ஆஃபர் இருக்கு,  மெசேஜுக்கு என்னென்ன போடலாம். என விலாவாரியாக சொன்னாள்.

பல செல்கள் ட்ராயரில் கிடந்தன. அதில் ஒரு செல்லை எடுத்து நாங்கள் கொடுத்த குறிப்பிட்ட கம்பெனி செல் நம்பருக்கு ரீசார்ஜ் செய்தாள். எங்களுக்கு செல் ரீசார்ஜ் ஆன மெசேஜ் வரும் வரை காத்திருந்து பணம் பெற்றுக் கொண்டாள்.

350 /- ரூபாய் என்பதால்  ரங்கமணி 500 ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுக்க , உடனே வாங்கி ட்ராயரைத் திறந்து பாக்கி நூற்று ஐம்பது ரூபாயைக் கொடுத்தாள்..!  அந்தக்  குழந்தை இப்படி ரொம்ப சமர்த்தாக நடந்து கொண்டது பார்த்து எனக்கும் ரங்கமணிக்கும் ரொம்ப சந்தோஷமாகி விட்டது.

பரவாயில்லையே நல்லா கணக்கு போடுறியே என்று பாராட்டிய நான் எப்போலேருந்தும்மா இத கத்துக்கிட்ட.. எப்பவுலேருந்து ரீசார்ஜ் செய்றே என வினவினேன்..

இரண்டு வருஷத்துக்கு முன்னாடிலேருந்தே செய்றேன் என்று தேர்ந்த தொழிலதிபர் மாதிரி கம்பீரமாக பதிலளித்தாள். அவள் முகத்தில் இருந்த தன்னம்பிக்கையும் பிரகாசமும் என் முகத்திலும் ஒட்டிக் கொண்ட மாதிரி இருந்தது.

நம் வீடுகளில் குழந்தைகளைப் பதினைந்து வயதானாலும் இருபது வயதானாலும் கூட கிச்சன் வேலைகளைச் செய்ய விடுவதில்லை. ஒரு வங்கிக்கு, போஸ்ட் ஆஃபீசுக்கு போக விட்டதில்லை. போன் பில் கட்ட, எலக்ட்ரிசிட்டி பில் கட்டக்கூடப் போனதில்லை. ( வேலைக்குப் போன பின்னாடி இப்ப எல்லாம் ஆன்லைன்ல பண்றாங்க.. ).

உனக்கு ஒன்றும் தெரியாது என்று சொல்லியே முடக்கி விடுகிறோம். ஆனால் இந்தக்குட்டிப் பெண் கிட்டத்தட்ட 6 வயதிலிருந்தே தன் தந்தைக்குப் பக்கபலமாக இருக்கிறார்.. சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது போல.. ஏனெனில் அவள் தந்தை பழக்கிய விதமும் கொடுத்த சுதந்திரமும் அப்படி..! பணத்தைக் கையாள்வதும், நம்பர்களைக் கரெக்டாகக் குறிப்பதும் ரொம்பச் சரளமாகச் செய்தாள் அந்தக் குழந்தை.

ஒரு சில பெண்மணிகள் தங்கள் வாழ்வில் சில துயரங்கள் நடந்தவுடன் முடங்கி விடுகிறார்கள். பொதுவாகவே வீட்டினுள்ளே வளர்க்கப்பட்டு ஒரு டிகிரி முடித்தவுடன் திருமணம் செய்யப்பட்ட பெண்களுக்குத் தன்னம்பிக்கை வரும் அளவு என்ன தொழில் செய்யலாம் என்ற தெளிவு கிடைப்பதில்லை.

இதே போல வீட்டிலிருந்தே இந்த ரீசார்ஜை 4 , 5 கம்பெனிகளுக்கு மொத்தமாக வாங்கி வைத்துக் கொண்டு சொந்தக்காரர்கள் அனைவருக்கும் போனில் தெரிவித்தால் இருந்த இடத்திலிருந்தே ரீசார்ஜ் செய்துகொடுக்கலாம்.  இதற்கான பணத்தை ஒரு வங்கி அக்கவுண்ட் தொடங்கி பெரியவர்களானால் வங்கிக்குச் செல்லும்போது மாதா மாதம்  போடச் சொல்லலாம். அல்லது அவர்கள் தங்கள் ஆன் லைன் அக்கவுண்டின்மூலம் பே பண்ணச் சொல்லலாம்.

இதே போல  எம் டி எஸ் போன்ற ப்ராட் பேண்ட் இணைப்புக்களும் கொடுக்க முடியும். இவை அனைத்தையும் சொந்தம் நட்பு வட்டாரத்துக்குள் அனைவரின் எண்களையும் வாங்கிப் பதிவு செய்து வைத்துக் கொண்டு அவர்களின் தேவைக்கேற்ப ( ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் திரும்ப அழைத்து எவ்வளவு பணத்துக்கு ரீசார்ஜ் செய்யவேண்டும் என விசாரித்து ) போட்டுக் கொடுக்கலாம். நிறையப் பணம் கொடுத்து வாங்கும் போது அதற்கான கமிஷன் தொகை நமக்குக்கிடைக்கும்.

சேவைக்கு சேவையும் ஆச்சு, மாதா மாதம் ஒரு நல்ல தொகையும் வருமானமாகக் கிடைக்கும். தொடர்பில் இருப்பதால் சொந்தம் பந்தம் நட்பு விட்டுப் போகாமலிருக்கும்.

நாங்கள் திரும்பி வந்த போது இன்னொரு ஆள் வந்து 100 ரூபாய்க்கு ரீசார்ஜ் கூப்பன் கேட்டார். அதையும் அந்தக்குழந்தை எடுத்துக் கொடுத்தாள்.

வாழ நினைத்தால் வாழலாம் .வழியா இல்லை பூமியில்..வழிகாட்டியாய் விளங்கும்  கற்பகம் வாழ்க. ( உன்ன ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிடவாம்மா எனக்கேட்டு எடுத்து ) வாழ்த்திவந்தோம்.

3 கருத்துகள்:

  1. ஆஹா!!.. அசத்தல் கற்பகமே.. வாழ்த்துகள்டா.

    எங்கூட்டுக்குப் பக்கத்துலயும் ஒரு அறுந்த வாலு(பத்து வயசுதான் அதுக்கும் இருக்கும்) மொபைல் கடையைக் கவனிச்சுக்குது.

    பதிலளிநீக்கு
  2. very cute girl. இந்த சிறு வயதில் இப்படியா!!!! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...