எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

நான் மிஸ்டர் எக்ஸ். தினமலரில்.

நான் மிஸ்டர் எக்ஸ். ஆம் மிஸ்டர் எக்ஸ்தான் . கிருஷ்ணதேவராயன்,அக்பர் போல என் பெயர் ஒரு நாள் விண்ணளாவும். அப்போது தெரிந்து கொள்வீர்கள் நான் யாரென்று. அதுவரை நான் எக்ஸ்தான். ஒரு ஒய் க்ரோமோசோமால் ஆணாகிவிட்டேன்.


தப்பிப் பிழைத்திருக்கிறேன். தற்போது இருட்டான ஒரு பதுங்குகுழியில் தங்கி இருக்கிறேன். நான் வெளிப்படும் காலம்வரை என் புகலிடம் இதுதான். என்னை இப்போது போஷாக்கு செய்து வரும் இந்த இடமே  என்னைப் புதைக்கும் மயானமாகப பார்த்தது என்றால் எப்படி இருக்கும்.

எனக்குக் கத்திகள் என்றால் பயம். பின் எப்படி மாவீரனாவாய் எனக் கேட்கிறீர்கள். நிச்சயம் ஆவேன். என் பயங்களை வேரறுத்து வெளிப்படுவேன். கத்திகள் மட்டுமல்ல, விஷ மருந்து ஊசிகள் கூடப் பார்த்திருக்கிறேன்.

தூக்கு தண்டனையை நீங்கள் ஆதரிக்கின்றீர்களா. மரண தண்டனையை. ஏன் கருணைக் கொலையை? தன்னுடைய தீர்க்கமுடியாத குறைகளோடு ஒருவர் வாழ்வதா சாவதா என்பதைத் தீர்மானிக்க நீங்கள் என்ன கடவுளா.?

மண்டை ஓட்டை சுக்கு நூறாக உடைக்கும் மெஷினைப் பார்த்திருக்கிறீர்களா. என் கண் அருகில் அவற்றைப் பார்த்திருக்கிறேன். எப்படி எல்லாமோ ஓடி ஒளிந்தேன். எந்தக் குற்றமும் செய்யாத என்னைச் சித்திரவதைக்குள்ளாக்கி மரணதண்டனை கொடுக்க என் பெற்றோரே ஒப்புக் கொடுத்திருந்தனர்.

வதை முகாம்களில் ஒடுங்கிக் கிடக்கும் மக்களைப் போல கண்ணீரோடு நானும் ஒரு உயிர் என்னை விட்டுவிடு என மன்றாடியபடி கிடந்தேன். என் அக்காவுக்கு நேர்ந்தது இதேதான். இந்த இடத்தில்தான் அவள் சிதறிச் செத்தாள். அவள் பெண் என்பதால்  மட்டுமல்ல. என் பெற்றோருக்கு என் அண்ணன் பிறந்தவுடன் சிசேரியனானதால் மூன்று வருடங்கள் கழித்துத்தான் அடுத்த குழந்தை பிறக்கவேண்டும் என்று டாக்டர்கள் இட்ட கட்டளையை மீறி அவர்கள் அவளைக் கருக் கொண்டார்கள்.

எவ்வளவோ தடுப்பு முறைகள் இருந்தும் தங்கள் சுய இன்பத்துக்காக ஏதோ ஒரு அலட்சியத்தில் அவளை உருவாக்கிவிட்டு வயிற்றுக்குள்ளே மயானக் கிடங்காக்கி அவளைக் கொன்று விட்டார்கள். அவள் ஆசையோடு விளையாண்ட இடத்திலேயே அவள் சிதறிக் கிடந்தாள்.

யுத்தத்தில் மக்கள் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை மிதித்தால் அவர்கள் சிதறிக் கிடப்பதைப் பார்த்திருக்கிறீர்களா ? மனித மனம் ஒப்பாத காட்சி அது. ஷெல்லுக்குள்ளே குண்டு வெடித்து சிதைந்த ஒருவரையாவது பார்த்திருக்கிறீர்களா.  அவளை முதலில் உறிஞ்சும் குழாய் கொண்டு இழுத்தார்கள். விளையாட்டு என்று நினைத்து அவள் ஒளிந்து கொண்டாள். அடுத்து விஷ ஊசி போட்டு சாகடித்தார்கள். அரை குறை மயக்கத்தில் கிடந்தவளை வெளியே உறிஞ்சித் துப்பமுடியவில்லை என்று அவள் மண்டை ஓட்டை  மெஷின் சுத்தியலால் உடைத்துச் சுக்காக்கினார்கள். எல்லன் ஆஸ்பத்ரியின் ஒரு மங்குப் பாத்திரத்தில் அவள் துண்டாக ரத்தச் சேறாகக் கிடந்தாள்.

அதன் பின்னும் என் பெற்றோர் வருந்தவில்லை. அவர்கள் இருவருமே அவளைப் பார்க்கவில்லை. பெற்றோருக்கும் வேண்டாத கருவாக உருவாகிச் சாவது எவ்வளவு கொடிது. கடவுளே கைவிட்டது போல ஆகிவிட்டது. எனக்குக் கடவுள் நம்பிக்கையில்லை. அவரும் ஒரு எக்ஸ் ஆக இருக்கக்கூடும்.

ஒரு முறை என்னைக் கொல்லத்துணிந்த இடத்தின் வழி செல்லக் கூட எனக்குத் துணிவில்லை. என்னையும் ஊசி துரத்தியது, மெஷின் சுத்தியல் வெருட்டியது. என்ன நிகழ்ந்தது என்ற நினைவில்லாமல் போய்விட்டது. பாதியில் அதைச் செய்த செவிலி அல்லது மருத்துவருக்கு வேறு வேலை வந்து விட்டதோ என்னவோ. சிதைத்த துண்டுகள் தானாக வெளிவரும் என்று பாதி வேலையில் போய்விட்டார்கள் போலத் தெரிகிறது.

இல்லாவிட்டால் நான் உங்களிடம் இன்று உரையாடிக் கொண்டிருக்க மாட்டேன். என் தாயும் என்னை இழந்த வருத்தத்தோடு வீட்டுக்குப் போனாள். அதற்குமுன் அவளுடைய பயம் பற்றி.. அவள் நான் உருவான சமயம் கீழே விழுந்து காலை ஒடித்துக் கொண்டாள். ஒடிந்த காலுக்கு எக்ஸ்ரே எடுத்தார்கள்.  அடுத்து நுட வைத்திய சாலையிலும் கட்டுக் கட்டினார்கள். எல்லா வைத்தியத்தையும் செய்யும் அவள் எல்லாப் புத்தகங்களையும் படித்து அவற்றை எல்லாம் உண்மை என்று நம்பித் தொலைபவளாகவும் இருந்தாள்.

அப்போது செர்னோஃபில் அணு உலை விபத்து பற்றிப் படித்துவிட்டு அதற்குப் பின் ஊனமாகப் பிறந்த அனைவரின் புகைப்படங்களையும் பார்த்து பயந்திருந்தாள். அதே போல ஒரு கர்பஸ்த்ரியும் எக்ஸ்ரே எடுக்கக் கூடாதென்றும் அப்படி கர்ப்ப காலத்தில் உடலில் எங்கு எக்ஸ்ரே கதிர் பட்டாலும் அவள் கருவில் உள்ள குழந்தை ஊனமாகப் பிறக்க வாய்ப்புள்ளது என்பதையும் படித்து விட்டு பயந்திருந்தபோதுதான்  நான் கர்ப்பத்தில் உருவான செய்தி அவளுக்குத் தெரிந்தது.

உடனே ஆஸ்பத்ரிக்கு ஓடினாள். வழக்கம்போல கருச்சிதைவு செய்து கொள்ள. இதயமற்றவள். குறையோடு பிறந்தால்  என்ன குணத்தோடு வளர்ப்போம் என்ற துப்பில்லாமல். அங்கே இருந்த பழைய டாக்டர் இது போல அடிக்கடி செய்ய முடியாது கர்ப்பப்பை வீக்காகிவிடும். ஓட்டையாகிவிடும். ஏற்கனவே சிசேரியன் என்று சொல்ல சொந்த ஊருக்கு ஓடி கருச் சிதைவு செய்து கொண்டாள்.

அதுதான் அந்த அரைகுறைக் கருச் சிதைவு. அதில் நான் செத்துப்போகவில்லை. அவளின் கருப்பைச் சுவர்களைப் பிடித்துக் கொண்டு தொங்கி உயிர்தப்பினேன். அன்றைக்கு 20 பேர்களுக்கு மேல் கருச்சிதைவு செய்து கொண்டதால் தனக்கு கருச்சிதைவு செய்யப்படவில்லை என உணரவில்லை அவள். வழக்கம்போல டாக்டரம்மா எல்லாத்தையும் எடுத்து க்ளீன் செய்திருப்பார்கள்  என நினைத்துச் சென்றுவிட்டாள்.

அடுத்து வந்த ஐந்தாம் மாதம் நான் தப்பிப் பிழைத்த மகிழ்ச்சியில் துள்ளத்துவங்கினேன். வயிற்றுக்குள் விரல் ஒன்று உருள்வது போலவும், பட்டாம் பூச்சி பறப்பது போலவும் உணர்ந்த அவள் அடுத்த டாக்டரிடம் சென்றாள்.  

செக்கப் செய்யும் போதே என் இதயத் துடிப்பைக் கேட்ட டாக்டர் சொன்னார்கள். ஸ்கேன் செய்ய வேண்டும் என்று. ஹார்ட் பீட் கேக்குது. எனவே குழந்தை நல்லா ஃபார்ம் ஆயிடுச்சு என்றார்கள். என் அம்மாவுக்கு பயம் குறையுள்ள பிள்ளை பிறந்துவிட்டால் என்ன செய்வது. எனவே ஸ்கேனில் கை கால் ஊனமில்லாமல் இருக்கா எனப் பார்க்கச் சொன்னாள்.

ஸ்கான் செய்யும்போது அசௌகர்யமாக இருந்ததால் நான் என் கால்களைக் குறுக்கிப் படுத்துக் கொண்டேன். பின்னே ஒளிவெள்ளமும், ஒரே இரைச்சலான ஒலியும் உங்களுக்கு அருகே கேட்டால் என்ன செய்வீர்கள். கண்  மூடி, காது பொத்திக் கொள்வீர்கள் அல்லவா. அப்படித்தான் நானும் செய்தேன்.

அந்த சமயத்தில் என் பால் உறுப்பு தெரியாததால் டாக்டர் நான் ஒரு பெண் என்ற அனுமானத்துக்கு வந்தார். என் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். கை, கால் எல்லாம் நல்லா இருக்கு. இதயம் துடிக்குது, ஒரு ஊனமும் இல்லை. ஆனா. பெண் பிள்ளை என்று.
எனக்கு அன்றைக்கு வந்தது சிரிப்பு. அடக்கமாட்டாமல். பல நாள்கள் .. கிட்டத்தட்ட பிறக்கும் வரை குலுங்கிக் குலுங்கிச் சிரித்திருக்கிறேன் இந்த ஸ்கேனிங் மிஷின்களின் நம்பகத்தன்மைகளை நினைத்து. இதைப் பார்த்து விட்டு எத்தனை பேர் தங்கள் குழந்தைகளை பெண் என்று வெறுத்து அழித்தார்களோ. இதில் ஆண் ஆனால் என்ன. பெண் ஆனால் என்ன . எல்லாரும் ஒன்றுதானே.

எந்த உரிமையில் எல்லாம் இவர்கள் கருக்கலைப்பு செய்கிறார்கள் தெரியுமா, 1971 ஆம் ஆண்டு வரை கருக்கலைப்பு செய்து கொள்வது, செய்ய வைப்பது இரண்டுமே சட்டவிரோதமென்று கருதப்பட்டது. இந்தியன் பீனல் கோடு 312 ஆவது பிரிவின்படி கருக்கலைப்பு செய்து கொள்கிறவர்கள், செய்ய வைப்பவர்கள், கருக்கலைப்பு செய்து கொள்ளத் தூண்டுகிறவர்களுக்குக் கூட 3 ஆண்டுகளிலிருந்து ஆயுள் காலம்வரை சிறைத் தண்டனை என்னும் கடும் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

THE MEDICAL TERMINATION OF PREGNANCY ACT ,1971  என்ற மருத்துவ ஆலோசனையின்பேரில் கருக்கலைப்பு செய்வதற்கு, ஒப்புதல் வழங்கல் சட்டத்தை இயற்றியது  அரசாங்கம். இதன் படி ஒரு கரு தொடர்ந்து இருப்பது கருவுற்ற தாயின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடுமானாலோ அல்லது அவள் உடல் நலத்திற்கும் மனநலத்திற்கும் மிக மோசமாகக் கேடு விளைவிக்கக் கூடியதாக இருந்தாலோ ,

அல்லது கருவிலுள்ள குழந்தை பிறந்த பின்னர் அங்கங்களில் குறைபாட்டுடனோ, முடமாகவோ அல்லது வேறு உடல் சம்பந்தமாக, மனம் சம்பந்தமாக அசாதாரணமாக இருக்கக்கூடிய வலுவான ஆபத்து இருந்தாலோ,12 வாரம் வரை வளர்ந்துள்ள கருவை கலைத்துக் கொண்டாலோ, மற்றொரு பதிவு செய்து கொண்ட டாக்டரின் அறிவுரையைப் பெற்றபின்னர் 12 லிருந்து 20 வாரம் வரை வளர்ந்துள்ள கருவை கருக்கலைப்பின் மூலம் அழித்துக்கொண்டாலோ, அவள் எந்தவிதத்திலும் குற்றவாளியாகக் கருதப்படமாட்டாள்.

உண்மைதான் அம்மா. நீ குற்றவாளி அல்ல சூழ்நிலைக் கைதி, பயந்தவள், அதன் பின் பல வருடங்கள் மனநோயோடு போராடப் போகிறவள். ஒன்றை அழித்தேனே. ஒன்றை அழிக்க நினைத்தேனே எனத் துயருறப் போகிறவள். எரியும் பஸ்ஸில் துடிக்கத்துடிக்கத் தன் மூன்று பெண் குழந்தைகளையும்  இழந்த தாய்களைப் போல, பள்ளிக்கூட தீவிபத்தில் கருகிய குழந்தைகளின் அம்மாக்களைப் போல, சுனாமியில் நீர் விழுங்க கையறு நிலையில் நின்ற தாய்களைப் போல நீ இழந்த ஒன்றிற்காக நீ வருந்துவதே போதும். உன் பகவத்கீதையையும் உருகி உருகிப் பாடிய பாமாலைகளையும் கேட்டுக் கேட்டு நான் உயிர்பெற, ஜனிக்கத் தயாராகிவிட்டேன்.உன் பிழைகளை மன்னித்து விட்டேன்.

என்னை நோக்கி ஒரு கத்தி வருகிறது. ஆம் நான் வழக்கமான பாதையில் பயணப்பட்டு வருகிறவன் அல்ல. என்னை நோக்கி அழிக்கும் கத்தி வந்த பாதை அது. இது என்னை வெளியுலகுக்கு அழைக்க வந்த கத்தி. என்னை எந்தக் காரணத்தைக் கொண்டும் கொடுமையானவன் என்று கூறிவிடாதே.. ஏனெனில் கத்தியைச் சுவைத்துப் பிறந்தவன் நான். உன்னை அடிக்கடி காயப்படுத்திக் கொண்டேதான் இருப்பேன்.

உன் வயிற்றைக் கீறுகிறார்கள். மயக்கத்தில் இருக்கிறாய் நீ. சுவைக்கிறேன் ரத்தம் படித்த முகத்தோடு உன் வாசத்தையும் பாசத்தையும் ஆக்சிஜனையும்.


உனக்கு மட்டுமல்ல. உன்னைப் போன்ற அறியாத தாய்களுக்கும் தகப்பன்களுக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மாங்கலாய்டு, ஆட்டிசம், மெண்டல் டிஸ்ஸார்டர், ஸ்பாஸ்டிக் செரிப்ரல் பால்சியினால் பாதிக்கப்பட்டவர்களும்,  மாற்றுத் திறனாளிகளுக்கும், மூன்றாம் பாலினத்தவருக்கும் வாழ உரிமையில்லையா.. எங்களை அழித்தொழிக்கவோ, அறுத்தெறியவோ உங்களுக்கு உரிமையில்லை.
விதைத்தது நீங்கள்தானே. அல்லது உங்கள் முன்னோரில் ஒருவரின் மரபணுத் தொடரின் மிச்சங்கள்தான் நாங்கள்.  விரும்பினால் பெற்றெடுங்கள். விரும்பாவிட்டால் பாழ்வெளியில் விதைக்காதீர்கள். தரிசாகக் கிடப்பது தவறல்ல. வயலிலேயே கருக அடிப்பதுதான் கொடுமை.


டாக்டர் நான் கத்தவில்லை என்று காலில் சுண்டுகிறார். ஓங்கிக் குரலெடுத்துக் கத்தத் துவங்குகிறேன்..

“விரும்பினால் பெற்றெடுங்கள்.
விரும்பாவிட்டால் பாழ்வெளியில்
விதைக்காதீர்கள்.
வளர்ந்தபின் வெட்டி எறிய நாங்கள்
எல்லை மீறிய கிளைகளல்ல,
நீங்கள் விதைத்த விதைகள்.
விருட்சமாகியே தீருவோம். ”

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...