எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 4 பிப்ரவரி, 2013

நிலங்களுக்கும் ரேஷன்.

நிலங்களுக்கும் ரேஷன்.

சென்ற சில மாதங்களாக தொடர்ந்து பயணங்கள் செய்யும் போது ஒரு விஷயம் பளிச்செனக் கண்களில் அறைந்தது. அது என்னவெனில் நம் தமிழ்நாடு முழுமைக்கும் ரியல் எஸ்டேட்டாக துண்டு போடப்பட்டிருக்கும் காட்சி. காடு, மலை, மேடு, கம்மாய் ஊரணி , அருவி  போன்ற சில இடங்களைத் தவிர எல்லா இடங்களும் கற்களாலும் காம்பவுண்ட் சுவர்களாலும் கட்டம் பிரிக்கப்பட்டுக் கிடக்கின்றன.

நிறைய விவசாய நிலங்கள் மற்றும் தூர்ந்த குளங்கள், ஏரிகள் கூட. இதனால்தான் மழை வரும் நேரம் அந்த வீடுகள் எல்லாம் நீரில் மூழ்கிக்கிடக்கின்றன. நிறைய மரங்கள் வைப்பதன் மூலம் காற்றை உற்பத்தி செய்யலாம். கடல் நீரிலிருந்து குடிநீர் தயாரிக்கலாம் ஆனால் உற்பத்தி செய்ய முடியாத ஒன்று என்றால் அது நிலம் மட்டுமே.


சௌதி அரேபியா போன்ற நாடுகளில் கடலைத் தூர்த்து அட்லாண்டிஸ் என்ற இடத்தில் பனைமர  வடிவிலான  அமைப்பில் வீடுகள் தோட்டங்கள், நீச்சல் குளங்கள் கட்டப்பட்டு வருகின்றன. பேரீச்சை மரங்கள் சூழ அந்த வீடுகளில்  உயர்தர உலகப் பணக்காரர்கள் வசித்து வருகிறார்கள்.

வானளாவ எவ்வளவு பெரிய கட்டிடங்கள் வேண்டுமானாலும் கட்டலாம். ஆனால் இருக்கும் நிலத்துக்குள்ளேதான் மனித இனம் தனக்கான இடத்தைத் துண்டுபோட்டுக் கொள்ள வேண்டி இருக்கும்.. ஊரே இல்லாத  இடத்தில் எடுத்தாலும் செண்ட் ஒன்றரை லட்சத்திலிருந்து மூன்று லட்சம் வரை ஆகிறது. இன்னும் ஊருக்குள் என்றால் ஐந்து லெட்சமும், நகரத்தின் நடுவில் என்றால் ( ப்ளாட்டுக்கள் மட்டுமே )  கிரவுண்ட் ஒன்றரை முதல் 3 கோடி
வரையும் டிமாண்டைப் பொறுத்து அமைகிறது.

இன்னும் டெல்லி பாம்பே கல்கத்தா சென்னை போன்ற பெருநகரங்களில் உச்சத்தில் இருக்கிறது. ஒரு ப்ளாட்டின் விலையே 75 லட்சத்திலிருந்து ஆரம்பிக்கிறது. மிகச் சிறிய ப்ளாட்டுக்களை 35 இல் இருந்து 40 லட்சத்துக்கு வாங்கலாம். ஆனால் சாமானிய பொது ஜனத்துக்கு இவ்வளவு தொகை சாத்யமா.

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் இந்தியாவில் முதலில் சேமிக்க நினைப்பது இடங்களில்தான். ( வங்கி என்றால் ஓரளவுதான் சேமிக்க முடியும். பங்குச் சந்தை, மற்ற ஃபண்டுகள் என்றால் சேமிப்பில்  ரிஸ்க் அதிகம். அஞ்சலகம் தங்கம் வெள்ளி, வைரம் என்றாலும் ஓரளவே சேமிக்க இயலும் )

இப்போது பண்ணை நிலங்களைப் போல வாங்கிப் போடும் பாணியும் பெருகி இருக்கிறது.  பின்னாளில் செட்டிலாகும்போது பண்ணை வீடாக உபயோகப்படுத்திக் கொள்ளலாம் அல்லது ப்ளாட்டுக்கள் போட்டு கணிசமான லாபத்துக்கு விற்கலாம் என்று,

சாஃப்ட்வேரில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் வருமானத்துக்கு ஏற்ப வாங்குகிறார்கள் இப்போதெல்லாம் அந்த சாஃப்ட்வேர் பூம் முடிந்து விட்டதால் இந்த நில  விலை ஏற்றத்தில் இவர்களின் பங்கு கம்மி எனலாம்.

இந்த சூழலில் இந்தியாவில் வாழும் ஒரு சாதாரண வங்கி ஊழியர் அல்லது தனியார் நிறுவன  ஊழியர்கள் தங்களுக்கான வீடு, மனை , இடம் என வாங்க ஆசைப்பட்டால் ஊரிலிருந்து 10 அல்லது 15 கிலோமீட்டர் தள்ளி உள்ள இடங்களிலேயே வாங்க முடியும். அதுவும் விசுவின் ஒரு படத்தில் வருவது போல இங்கே ஏர்ப்போர்ட், இங்கே ரயில்வே ஸ்டேஷன், இங்கே பஸ்ஸ்டாண்டு, இங்கே பள்ளிக் கூடம், இங்கே பூங்கா என்ப் பாலைவனம் போல வெற்றாக இருக்கும் இடத்தைக் காட்டிச் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள் ப்ரோக்கர்கள்.

எங்க நிலம் இருந்தாலும் வாங்கிப் போடு பின்னாளில் உபயோகப்படும் என்பது தாரக மந்திரமாகிவிட்டது நிறைய நிலத்துக்குச் சொந்தக்காரர்களே நிலத்தில் பெரும் பகுதி பணத்தைப் போட்டு வீர்யப் பயிர்களையும் மரபணு மாற்றப் பயிர்களையும் பயிரிட்டு நிறைய நஷ்டத்தையும் கஷ்டத்தையும் அனுபவித்து விட்டதால் தங்கள் நிலங்களை அவர்களே ரியல் எஸ்டேட் காரர்களிடம் விற்று விடுகிறார்கள்.

சிலசமயம் நாற்கரச் சாலைகள் பைபாஸ் சாலைகள் போட இவர்களின் நிலங்கள் துண்டாடப் பட்டு வருகின்றன. எனவே எந்த எதிர்ப்பும் காண்பிக்க முடியாமல் ரோட்டோரம் வாழும் மக்கள் வீட்டை விட்டுச் செல்ல வேண்டி வருகிறது. இந்த மக்களுக்கான நிலங்களும் வேறு எங்கும் வழங்கப்பட வேண்டும்.

ஹவுசிங் போர்டு போடும் இடங்களும் வீடுகளும் பெரும்பாலும் நகரைத் தாண்டியே இருக்கின்றன. இவற்றில் பாதுகாப்பாக முதலீடு செய்யலாம் என்றாலும் அது வழங்கும் இடம் கிட்டத்தட்ட நகரில் இருந்து 50 கிமீ தொலைவில் எல்லாம் இருக்கிறது. எனவே ஒரு சாதாரண மனிதன் சொந்த வீட்டில் இருந்து பணிக்கு வந்து போக ஆசைப்பட்டால் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை எலக்ட்ரிக் ட்ரெயினிலேயே கழிக்க வேண்டியதாக இருக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகையை சமாளிக்க நகரில்  போதுமான இடம் இல்லை.  இடத்தை உற்பத்தி செய்ய முடியாது என்பதே உண்மை. ப்ளாட்டுக்கள் வேண்டுமானால் கட்டலாம். ஆனால் அதன் பின் அனைவருக்குமான அத்யாவசியத் தேவைகளான கரண்ட்,  தண்ணீர், ட்ரெயினேஜ் பிரச்சனைகள் வரும்.

மக்கள்  தொகையையும் கட்டுப்படுத்த இயலாது, இடங்களையும் உற்பத்தி செய்விக்க முடியாது என்னும்  நிலை வந்து கொண்டிருக்கிறது. எனவே அருகி வரும் நிலங்களில் சாதாரண பொது ஜனத்துக்கும் ஒரு துண்டு நிலம் கிட்ட வேண்டுமென்றால்அத்யாவசியப் பொருட்களான அரிசி, மளிகை, தண்ணீர், மின்சாரம் எல்லாவற்றையும் அரசு பகிர்ந்து அளித்து வருவதைப் போல இடங்களையும் பொதுமைப்படுத்தி  ஒருவருக்கு இவ்வளவுதான் இடம் என  வழங்கும் நாள் சீக்கிரமே வரும் எனத் தோன்றுகிறது.

8 கருத்துகள்:

 1. நல்ல பதிவு! உணவுக்குத் திண்டாடும் காலம் வெகு தொலைவில் இல்லை!

  பதிலளிநீக்கு
 2. நம்மிடம் இருக்கும் நிலத்தை சரியாக பயண்படுத்தினால் இன்னும் அழகாக பலர் வாழலாம். (உ-ம்) சிங்கப்பூர், சென்னையை விட அளவில் சிறியது.
  Town Planning சரியாக இல்லாத இடத்தில் எதைச்சொல்லியும் பிரயோஜனம் இல்லை. :-(

  பதிலளிநீக்கு
 3. நல்ல பகிர்வு ! பெரு நகரங்களையொட்டி துணை நகரங்கள் உருவாக்கவேண்டும் !

  பதிலளிநீக்கு
 4. நன்றி மதுரை அழகு

  நன்றி வடுவூர் குமார்.

  நன்றி ஆர் ஆர் ஆர்

  நன்றி மணிவண்ணன்

  பதிலளிநீக்கு
 5. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...