எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 17 ஏப்ரல், 2012

பள்ளி நினைவுகள்..( நம்பிக்கைப் பாண்டியனுக்கு நன்றி)

காரைக்குடி அழகப்பா மாண்டிசோரி( ப்ரிப்பரேட்டரி)தான் முதன் முதலா நான் போன பள்ளிக்கூடம். அங்கே பள்ளிக் கூடம் குடில் குடிலாக இருக்கும். ஏப்ரல் பூ அங்கேதான் எனக்கு அறிமுகம். போகன் வில்லா பார்க்கும்போதெல்லாம் எனக்கு எங்க ஸ்கூல் ஞாபகம் வந்துடும். அப்புறம் ஞாபகம் வருதே ஞாபகம் வருதேன்னு எல்லாம் பாட ஆரம்பிச்சுடுவேன்னா நம்பவா போறீங்க..:)

அங்கே படிச்சனோ இல்லையோ ஆண்டுவிழாவுல ஒரு பாட்டுப் பாட சொன்னாங்க. நல்லா கொழுக் மொழுக்குன்னு இருக்க பிள்ளைங்கள எல்லாம் மேடையில ஏத்தி ரைம்ஸ் சொல்ல சொல்வாங்கள்ள அதுதான். அந்தப் பாட்டு

“ தங்கம் போல பளபளவென்று ஆப்பிள் இருக்குது
தங்கைப் பாப்பா கன்னம் போல ஆப்பிள் இருக்குது
எங்க ஊரு சந்தையிலும் ஆப்பிள் விக்குது
எனக்கும் உனக்கும் வாங்கித் தின்ன ஆசை இருக்குது”


அப்பிடின்னு கன்னம் எல்லாம் தொட்டு அபிநயம் செய்து பாட சொல்லி கொடுத்தாங்க. சமத்தா பாடினவுடனே ஒரு சில்வர் ஆப்பிள் டப்பாவுக்குள்ள நிஜ ஆப்பிளும் ஒரு யானை பொம்மையும் ( துணியில் தச்சு பஞ்சு அடைச்சு ஜம்கி , சரிகை வேலைப்பாடு செய்தது ) கிடைச்சுது.

எல் கே ஜி , யுகேஜி எல்லாம் முடிச்சதும் மன்னைக்கு அனுப்பிட்டாங்க.. பின்ன ஆயா வீட்டிலேயே வச்சு அலக்கொடுப்பாங்களா என்ன..:) மன்னார்குடி.. இது ராஜ மன்னார்குடி..அங்கே ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு, செகண்ட் ஸ்டாண்டர்ட். ஏன் இங்கிலிபீஸ் ல சொல்றேன்னா அது கான்வெண்ட்.செயிண்ட் ஜோசப் ஸ்கூல் அப்போதான் கட்டிக்கிட்டு இருந்தாங்க.  க்ளாஸ் எடுத்த டீச்சர்ஸும் ஆங்லோ இண்டியன்ஸ். டீச்சர்ஸுக்கு பிடிச்ச பொருளை வைச்சு ஒருத்தர ஒருத்தர் நிக் நேம்ல கூப்பிட்டுப்பாங்க. எனவே எனக்கும் அந்தப் பேருதான் ஞாபகம் இருக்கு. ஹார்லிக்ஸ் மிஸ். பனானா மிஸ். எங்க மிஸ் பேரு ஹார்லிக்ஸ் மிஸ். என் தம்பியோட க்ளாஸ் மிஸ் பேரு பனானா மிஸ்.

இங்கேயும் ஸ்கூல் ரைம்ஸ் ஆண்டுவிழாவில்  ஏதோ ஒரு ஆங்கில ரைம்ஸ் சொல்லி பரிசு கிடைச்சுது. ( நாம பாருங்க தமிழ் நேசக்காரி.. அதுனால நாம சொன்ன தமிழ் பாட்டு ஞாபகம் வச்சிருந்து இம்மி பிசகாம எழுதினோம். ஆனா பாருங்க ஆங்கிலப் பாட்டுன்னு அதை ஞாபகம் வச்சுக்கலை !)

இங்கே நான் ஒரு பரத நாட்டிய க்ளாஸ்ல சேர்ந்தேன். சேர்த்துவிட்டாங்க.. பதற வேண்டாம்.இன்னும் ஒரு நாட்டியப் பேரொளியை நீங்க இழந்துட்டீங்க. !. சாயங்காலம் ஆனா தை தை தித்தித்தை.. தாம் தாம் என்று ஒரெ ஸ்டெப்பை நாலு நாள் மடக்கி மடக்கி போட்டதுல முட்டி எல்லாம் வலி. அதோட முடிஞ்சுது நம்ம டான்ஸ் ஆர்வம். இன்னும்கூட ஆச்சர்யம்.  ஆடுறவங்க  எல்லாம் எப்பிடி இதையே வாரக்கணக்கா ஆடி பின்ன அடுத்த ஸ்டெப்பெல்லாம் கத்துகிட்டாங்ன்னு.

எங்க சித்தப்பாக்களும் நாங்களும் அடுத்து போன ஸ்கூல் மன்னார்குடியிலேயே ரொம்ப ஃபேமஸ்.. “ கணபதி விலாஸ். நடுநிலைப் பள்ளி” இது மன்னார்குடி ஒத்தத்தெருவில இருக்கு. இங்கே ஸ்கூல் படிக்கும்போது பள்ளிக் கூட எதிர்ல தூரத்துல ஆனந்த விநாயகர் கோயில் தெரியும். இங்கேருந்தே ஒரு கும்புடு மட்டுமில்ல. ரோட்டுல இருக்க மண்ணையும் எடுத்துப் பூசிக்கிறது. இதெல்லாம் நாமளா செய்யிறதில்லை. பள்ளிக்கூட மாணவமணிகளோட நம்பிக்கை. ஒரு நாள் எங்க வாத்தியார் நாராயணன் சார் திட்டுனவுடனேதான் இத சில பேரு விட்டோம். நீங்க எல்லாம் என்ன ஆட்டு மந்தைகளா. ஒருத்தன் எடுத்து நெத்தில பூசுனா எல்லாரும் பூசிக்கிட்டு வர்றீங்கன்னு விளாசிட்டாரு  .. வார்த்தையாலதான். அதுக்கப்பறமும் சில பேரு ரகசியமா பூசிக்கிட்டுத்தான் இருந்தாங்க.

இங்கதான் ப்ரேயர் சாங்ஸ் ல பித்தா பிறை சூடியையும், ஓங்கி உலகளந்தவையும் கத்துக்கிட்டேன். அலுவலகத்துக்குப் பக்கத்துல ஒரு தண்டவாளத் துண்டு தொங்கவிட்டு  இருக்கும் அதுல ஒவ்வொரு முக்கா மணி நேரத்துக்கும் ஒண்ணு , ரெண்டு , மூணுன்னு பெல் அடிப்பாங்க. பட்டாபி ராமன் சார்தான் தலைமை ஆசிரியர். வகுப்பு முடிஞ்சதும் எல்லாரும் போயி குச்சி ஐஸ், இலந்தை வடை, பெப்பர்மிண்ட், கல்கோனா, கடலை அச்சு, பாக்கு மிட்டாய், தேன் மிட்டாய், மாங்கா பத்தை, கொடுக்காபுளி,  எல்லாம் வாங்கி திம்பாங்க. ஆனா நம்ம வீட்டுல செம்ம கண்டிஷன்கிறதால நோ பாக்கெட் மணி.. ஒன்லி ஜொள்ஸ் விட்டுட்டு வூட்டுக்குவர வேண்டியதுதான். ( (வேணும்னா வீட்டுல சொல்லு வாங்கித்தரோம் .. என்ன வேணும்னு கேப்பாங்க.. ஆனா அந்த பள்ளிக்கூட ஃப்ரெண்ட்ஸ் முன்னாடி பந்தாவா வாங்கி தின்னுகிட்டே போற சந்தோஷம் கிடைக்குமா.. ஹூம்ம்ம்ம்.:))

 மன்னார்குடியை சேர்ந்த பாதிப்பேர் கணபதி விலாஸ்லயும் நேஷனல் ஹைஸ் ஸ்கூல்லயும்தான் படிச்சிருப்பாங்க. அங்கே ஷண்முகம் வாத்தியார்னு ஒருத்தர் மூணாப்பு எடுத்தார். நாலாவது க்ளாஸ் டீச்சர் பேர் மறந்துடுச்சு. ஆனா வகுப்பு லீடர் சிவசங்கர். கொட்டு வைச்சஆளை  மறக்க முடியாதுல்ல. ஹிஹி. ஆனா அஞ்சாவது க்ளாஸ் டீச்சர் பேரு. மீனாக்ஷி டீச்சர். அப்பதான் நாம் படிக்கணும்னு எல்லாம் ஒரு குறிக்கோள் வந்துச்சு. அது வரைக்கும்  ஏதோ பள்ளிக் கோடத்துக்கு அனுப்புறாங்களேன்னு போன நாம படிக்க ஆரம்பிச்சது அப்பத்தான். 4, 5 வது ராங்க் வாங்குவேன்.

அங்கேயும் ஒரு வில்லன் இருந்தான் வகுப்பு லீடர் ரூபத்துல. சந்தான ராமன்னு பேரு. சரியா ஒப்பிக்காட்டி பெஞ்ச் மேலே ஏறுன்னு சொல்லி நிக்க வைச்சிருவான். குர்ருன்னு பார்த்துகிட்டே மேலே ஏறி நின்னா. சாயங்காலம் வந்து என் சித்தப்பாகிட்ட என்ன உன் தங்கச்சி மொறைச்சி பார்க்குது. ஜாக்கிரதையா இருக்க சொல்லுன்னு மிரட்டல் வேற.. நாம எங்க முறைச்சு பார்த்தோம் . பயந்தபடிதானே பார்த்தோம்கிறது நமக்குத்தான் தெரியும்.

ஆறாப்பு ராமாமிர்தம் சார். ஏழாவது சட்டநாதன் சார், எட்டாவது இன்னொரு நாராயணன் சார். இதுல டீ பார்ட்டின்னு வருஷா வருஷம் கலெக்‌ஷன் செய்து வாத்தியார்களை கூப்பிட்டு பசங்க ஆட்டம் போடுவாங்க. பொண்ணுங்க சைலண்ட்தான். அடிக்கடி பென்சில் திருகி எழுதிகிட்டு இருந்ததுதான் ஞாபகம் வருது. அப்போவெல்லாம் ரேவதின்னு ஒரு பக்கத்து சீட் வில்லி.,” டீச்சர் இவ காப் வீட்டு காப் விட்டு எழுதுறான்னு போட்டுக் கொடுப்பா. பொதுவா நல்ல மதிப்பெண்களும்  எப்பவாவது 3, மத்தபடி 4, 5, 7 ந்னு ராங்க் வாங்கினதால டீச்சர்கள் ஒண்ணும் சொல்றதில்லை.வீட்டிலேயே எல்லாருக்கும் ட்யூஷன் வாத்தியார் வந்து சொல்லிக் கொடுக்கும்படி அப்பா ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த வகுப்புல எல்லாம். கலைமகள்னு  இந்தியன் பாங்க் மேனேஜர் பொண்ணு என் கூட படிச்சா. என் அப்பாவும் வங்கியில் காசாளரா இருந்ததால நாங்க ரெண்டுபேரும்தான் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ், இன்னும் வைஜெயந்தி மாலா, தாமரைச் செல்வின்னு தோழிங்களும் இருந்தாங்க.

ஒன்பதாம் வகுப்பு மன்னையின் செயிண்ட் ஜோசப் பள்ளியில். தூயவளனார் பெண்கள் மேல் நிலைப்பள்ளி. அப்ப இந்த ஸ்கூல் இன்னும்  மேல் நிலைப் பள்ளி லெவலுக்கு வந்துருச்சு.  இதுலதான் என் ஒன்பதாம் வகுப்பு ஆசிரியையாக தங்கம் மிஸ்ஸும். பத்தாம் வகுப்பு ஆசிரியையாக மைதிலி மிஸ்ஸும் வந்தாங்க. கணக்குன்னா எனக்கு உயிரு. ஏன்னா எனக்கு வகுப்பு எடுத்த மைதிலி மிஸ் அவ்வளவு அழகா கணக்கு சொல்லிக் கொடுத்தாங்க. குட்டை புஸ்கானா இருந்த நான் இந்தப் பள்ளிக்கூடம் வந்ததும் ஓல்லிக் குச்சியா உயரமா வளர ஆரம்பிச்சுட்டேன். நான் வளர்கிறேனே மம்மின்னு பாடாத குறைதான். ஒரு வேளை அம்மா கொடுத்த( பூஸ்ட் , ஓவல்டின், போர்ன்விட்டா, மைலோ, )காம்ப்ளானோ என்னவோ..:)

பத்தாவது படிக்கும்போதுதான் ஒரு பெண்ணுக்கு உண்டான குணங்கள் குடியேற ஆரம்பித்தன. அதுவரைக்கும் சரிக்குச் சரியாக ஆண் போல எண்ணிக் கொண்டிருந்த எண்ணங்களில் எல்லாம் மாற்றம். நேற்று இல்லாத மாற்றம் என்னதுன்னு பாடலை அவ்வளவுதான்..:)பள்ளிக்கூட ஆண்டுவிழாவுல  எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது அப்பிடிங்கிற பாட்டுக்கு ஒரு டாக்டர் பொண்ணு அழகா டான்ஸ் ஆடினா. அந்த தேவதை பாட்டு ரொம்பப் பிடிச்சுது.

அங்கேயும் நாங்க மூணுபேர் ஃப்ரெண்ட்ஸ். அமுதா. ராணி. அமுதா ஒரு லாண்ட்லார்டு பொண்ணு. தஞ்சாவூர்ல வயல். எனவே பாட்டி வீட்டில் இருந்து ராமகிருஷ்ணா நகர்லேருந்து வந்து படிச்சா.  ராணி கொழும்பு ஸ்டோர்ஸ்காரர் பொண்ணு. எங்களுக்கு அஃஹன்னா ராணிகள்னு பேரு. எங்க இருந்தாலும் ஒண்ணா இருப்போம். ஒண்ணா உண்போம். ஒண்ணா படிப்போம். இன்னொருத்தி பேர் வச்சா முக்கூட்டு உடன்படிக்கை, முந்நாட்டு ஒப்பந்தம்னு..யார் என்ன கண்ணு வச்சாலும் பிரியாத நாங்க ப்ளஸ்டூவுல பிரிய நேர்ந்துச்சு. இதுக்கு நடுவுல என்னோட பத்தாவது படிச்சவ நளினி. பயங்கர பாசம். மன்னார்குடி ரெட்டைத்தெருவில இருந்து வருவா. எனக்கு அப்பவே ரொம்ப பாசத்தைக் கொட்டி கடிதம் எழுதுவா.நிறைய சினிமா பாடல்கள், வசனங்கள் எல்லாம் போட்டு ஒரு மாதிரி பாசக்கடல். நாம அவகிட்ட திரும்ப சரியா அன்பு காட்டலையோன்னு கூட எனக்கு ஒரு கில்டி ஃபீலிங்க் இன்னிக்கு வரைக்கும் உண்டு. தோழிகள் கை கோர்த்து உரையாடுவது போன்ற இன்பம் எங்காவது இருக்கா என்ன..?

ஆனா ஒண்ணு நாங்க டில்லியில் இருந்து சிதம்பரத்துக்கு மாற்றலாகி வந்து ட்ரெயினை விட்டு இறங்கி நிக்கிறோம். லக்கேஜ் எல்லாம் இறங்கிட்டு இருக்கு கிட்ட வந்து தேனம்மைன்னு கட்டிப் பிடிச்சுகிட்டவ  என் பசங்களப் பார்த்துக் கேட்டா என்னடி இவங்க உன் தம்பியான்னு.. டீ இவ்வளவு வருஷம் கழிச்சும் என் தம்பிங்க அப்பிடியேவா இருப்பாங்க.. இது என் பசங்கடி என்றேன்..:)

சந்த்ரோதயம்னு இன்னொரு தோழி. அவங்க அப்பா மன்னை மளிகைன்னு வச்சிருந்தார். அவளை அடுத்து சிதம்பரம் வந்தபின்னாடி சந்திச்சேன். ரோட்டில போயிக்கிட்டு இருக்கும்போது ஏய் நீ தேனம்மை தானேன்னு கையைப் பிடிச்சுகிட்டா. பத்தாவதுல தோள் மேல் கை போட்டு உலவிய நாங்கள் அதன் பின் பல முறை சந்திச்சோம்.. 

வயசுப்பிள்ளைகள் என்பதால் ஒரு மாட்டு வண்டியில்  ஸ்கூலுக்கு அனுப்புவாங்க. அந்த வண்டியில் டி ஏ எஸ் ரத்தினம் பட்டணம் பொடி கடைக்காரர் பொண்ணு லதாவும், நானும், என் அன்புத்தோழி சிராஜுன்னிசாவும் போவோம். ஒரே ரோட்டில மூணு பேர் வீடும் இருந்தது. சிராஜ் சிகப்பு பர்தா போட்டு வருவா. கண்ணுக்கு வலை மாதிரி ஓபன் இருக்கும். பத்தாவதோட நளினி, அமுதா, ராணி, சந்திரா, சிராஜ் ஆகியோர் படிப்பை நிறுத்திட்டதாலும் வேறு டிப்ளமா படிப்புல சேர்ந்ததாலும் சந்திக்க முடியலை.

ப்ளஸ்டூவில் ப்யூர் சயின்ஸ் க்ரூப்புக்கு மட்டும்தான் ஆங்கில மீடியம் கொடுத்தாங்க எங்க பள்ளிக்கூடத்துல. மத்ததெல்லாம் தமிழ் மீடியம்.  நேஷனல் ஹைஸ்கூலில் தான் கணிதம் ஆங்கில மீடியம் படிக்க முடியும். ஐயோ ஒரு ராமனுஜராகவோ, சகுந்தலா தேவியாவோ வரணும்னு நினைச்ச என் நெனைப்பில மண் விழுந்தது. அங்கே ப்யூர் சயின்ஸ் எடுத்து படிச்சேன். இங்கே எங்க க்ளாஸ் டீச்சர் இராஜராஜேஸ்வரி. பேருக்கு ஏத்தமாதிரி கம்பீரமானவங்க. இங்க்லீஷ் டீச்சர் பாரதி கண்ணம்மா. இந்தப் பேரைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு  அப்போ வந்த பாரதி கண்ணம்மா பாட்டு ஞாபகம் வரும்.

டென்த் படிக்கும்போது  கிராஃபும், மேப்புமா அலைஞ்ச மாதிரி ப்ளஸ்டூ படிக்கும் போது டெய்லி ரெக்கார்டு நோட்டு வரைவேன். எனக்கு வரைய பிடிக்கும். அதுல பென்சில ஷார்ப்பா சீவிக்கிட்டு புள்ளி புள்ளியா வைச்சு செல்லோட பாகம் குறிக்கிறதும். விதம் விதமான ஃபாண்ட் ல அது பேரை எழுதுறதுமா இருப்போம் நானும் ஜெயலெக்ஷ்மியும்.

அங்கேயும் நான், அமுதா, சாந்தி. மூணு பேரும் திக் ஃப்ரெண்ட்ஸ். அமுதா அப்பா திருச்சியில் கஸ்டம்ஸ் ஆஃபீசர், சாந்தி அப்பா ஏதோ பிஸினஸ் செய்துகிட்டு  இருந்தார். எங்களுக்கு தமிழுக்கு ஒரு மாஸ்டர் . அவர் பேரு அறம் வாழி.. மிக அழகான பேரு இல்ல.  என் நல்ல தமிழுக்கெல்லாம் இவரும் ஒரு காரணம்.

இன்னும் சில மாஸ்டர்சும் இருந்தாங்க. அடைக்கலம் மாஸ்டர் பிசிக்ஸ் எடுத்தார், பொலிட்டிகல் சயின்ஸ் போஸ் மாஸ்டரும், எகனாமிக்ஸ் செல்வராஜ் மாஸ்டரும் எடுத்தாங்க. மத்தவங்க எல்லாரும் டீச்சர்ஸ்தான். எப்பவாவது ஸ்கூல்ல திரைப்படம் போடுவாங்க. “ குழந்தையும் தெய்வமும்” நு ஒரு படம் பார்த்து பிழிய பிழிய அழுதேன் நான். அன்னைக்கு புடவையில் ( மலேசியாவில் இருந்து சபாபதி மாமா கொண்டுவந்த  ப்ரிக் ரெட் புடவை) போனதால அழுதத எல்லாம் பிழிந்து துடைக்க முடிந்தது..:) புதுசா முதல் முதல்ல புடவை கட்டினதால டீச்சர்ஸ் மற்றும் தோழிகளின் ஆச்சர்யப்பார்வைகளை முதன் முதலா சந்திச்சேன். நாம் கூட அழகா இருக்கமோன்னு சின்ன சந்தேகம் வந்திருச்சு..:))

என் பெரியம்மா மற்றும் அம்மா சில்வர் பாத்திரக் கடை வைச்சிருந்ததால (ஏவிஎம் மார்ட்னு பேரு) , வருடம் ஆரம்பிச்சா காலண்டர் டீச்சர்ஸுக்கு காலண்டர் கொடுக்குற வேலையை என்கிட்ட கொடுத்துடுவாங்க. அப்ப நான் எல்லாருக்கும் கொடுத்துட்டு கடைசியா என் ஃப்ரெண்ட் சாந்திகிட்ட கொடுத்தேன். அவளுக்கு கோவம். நம்மோட இருக்கவங்கதாண்டி முக்கியம். மத்தவங்களுக்கு அப்புறம் கொடுத்திருக்கலாம்ல என்றாள். என் கண்ணோட்டம் என்னவென்றால் அவள் என் தோழி . கடைசியில் பத்தாமல் போயிட்டா கூட வீட்டில் இருந்து மறுநாள் கொண்டு வந்து கொடுக்கலாம் என்பது. ஒன்னா இருந்தாலும் ஒவ்வொருவர் கண்ணோட்டமும் வேறுன்னு புரிஞ்சுகிட்டேன்.

வசந்தி. ராஜ ராஜேஸ்வரி, ப்ரேமலதா, ஷெண்பகம்,  ஆயிஷா,ஜெயலலிதா , மலர்விழி ன்னு நல்ல தோழிகள் அதிகம் அந்த வகுப்பில். ஆங்கில மீடியம் என்பதால் 16 பேர்தான் இருந்தோம். ஒரு நாள் ” ஒரு தலை ராகம்” படம் பார்த்துட்டு வந்து  அவ ஏண்டி அப்பிடி பண்ணான்னு வசந்தி, ஜெயலலிதா, எல்லாம் அழுதது மறக்க முடியாது.

எங்க பள்ளியில் எனக்கு பிடிச்ச அம்சம் என்னன்னா. அதுலயே வயல் குளம்னு ஒரு தன்னிறைவு பெற்ற கிராமம் போல இருக்கும். சோலை போல அழகு. இன்னும் என் பதின்பருவப்பள்ளிதான் கண்ணுக்குள்ள நிக்குது. சொல்ல முடிந்ததும் சொல்ல முடியாததும், உணர முடிந்ததுமான பதின்பருவம் யாருக்குமே மறக்க முடியாத பருவம்தானே. 

என்ன படிச்சதை எல்லாம் எழுதாம நடந்த நிகழ்ச்சிகளையே எழுதி இருக்கேன்னு பார்க்கிறீங்களா. நாம் என்ன படிச்சும் என்ன ஐ நா சபைக்கா போயிட்டம். ஏதோ பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தோம். ப்லாக் எழுதுறோம். இதுதாங்க அதோட பலன்.. சரி சரி ஒரு ப்லாகரா என்னைப் பள்ளி நினைவுகள் எழுத கூப்பிட்ட ராஜு பாண்டியன் என்ற நம்பிக்கைப் பாண்டியனுக்கு நன்றி..!!!

11 கருத்துகள்:

  1. நினைவுகள் அருமை... சில வரிகள் எனக்கும் என் பள்ளியை நினைவுப்படுத்தியது...

    -
    DREAMER

    பதிலளிநீக்கு
  2. //நாம் என்ன படிச்சும் என்ன ஐ நா சபைக்கா போயிட்டம். ஏதோ பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தோம். ப்லாக் எழுதுறோம். இதுதாங்க அதோட பலன்..//

    தங்கள் திறமைக்கு, என்றாவது ஒரு நாள் ஐ.நா. சபைக்கே நீங்கள் சென்று சொற்பொழிவு ஆற்றி வந்தாலும் நான் ஆச்சர்யப்படவே மாட்டேன்.

    அட்வான்ஸ் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நன்றி ட்ரீமர்

    நன்றி கோபால் சார்

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. தங்கள் திறமைக்கு, என்றாவது ஒரு நாள் ஐ.நா. சபைக்கே நீங்கள் சென்று சொற்பொழிவு ஆற்றி வந்தாலும் நான் ஆச்சர்யப்படவே மாட்டேன்.
    // என் மேல் வைத்திருக்கும் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் நன்றி கோபால் சார்.:)

    வலைத்தளம் இப்படிப்பட்ட நல்ல நட்புக்களையும் கொடுத்திருக்கிறது. நன்றி கூகுளாண்டவருக்கு..:)))

    பதிலளிநீக்கு
  6. எங்க பள்ளியில் எனக்கு பிடிச்ச அம்சம் என்னன்னா. அதுலயே வயல் குளம்னு ஒரு தன்னிறைவு பெற்ற கிராமம் போல இருக்கும். சோலை போல அழகு. இன்னும் என் பதின்பருவப்பள்ளிதான் கண்ணுக்குள்ள நிக்குது. சொல்ல முடிந்ததும் சொல்ல முடியாததும், உணர முடிந்ததுமான பதின்பருவம் யாருக்குமே மறக்க முடியாத பருவம்தானே.//

    உண்மை தேனம்மை, பதின்பருவம்
    யாருக்குமே மறக்க முடியாத பருவம்தான்.

    பதிலளிநீக்கு
  7. நாம பாருங்க தமிழ் நேசக்காரி.. அதுனால நாம சொன்ன தமிழ் பாட்டு ஞாபகம் வச்சிருந்து இம்மி பிசகாம எழுதினோம். ஆனா பாருங்க ஆங்கிலப் பாட்டுன்னு அதை ஞாபகம் வச்சுக்கலை !

    அருமையான மலரும் நினைவுகள்...

    பதிலளிநீக்கு
  8. நன்றி கோமதி அரசு

    நன்றி ராஜி..:)

    பதிலளிநீக்கு
  9. அருமை.. கலைச்செல்வியை ஒருமுறை நாராயணசாமி என்னும் சிவசுப்பிரமணியன் ஸ்கேலால் அடித்து விட்டார். அந்தப் பெண் மட்டும்தான் தாவணி அணிந்து வருவார். அவரை அடித்து விட்டு, சிவசுப்பிரமணியன் மிகவும் பயந்து விட்டார். சந்தானராமன் கொஞ்சநாள் அவரை பயமுறுத்திக் கொண்டே இருந்தான்.
    என்ன ஆச்சரியம்? கடந்த சில தினங்களாக மன்னையின் பால்யகால நண்பர்கள் பலபேரை தொடர்பு கொள்ள முடிந்திருக்கிறது. சிவசங்கரன் இங்கு கோவையில் இருக்கிறான்.
    நல்ல பதிவு. பழைய ஞாபகங்கள் என்றுமே இனியவை.

    பதிலளிநீக்கு
  10. நான் மன்னையில் எட்டாம் வகுப்பு வரை கணபதி விலாஸிலும், அடுத்த இரண்டு
    வருடங்கள் NHSSலும் படித்தேன் . நீங்கள் சொல்வதை வைத்து நாம் இருவரும்
    எட்டாம் வகுப்பு ஒரே section ஆக சாத்தியங்கள் உண்டு. நாங்கள் மன்னையை
    விட்டு புலம் பெயர்ந்து 41 வருடங்கள் ஆகி விட்டன. சென்னை தான். உத்யோகம்
    நிமித்தம் தற்போது கோவையில் இருக்கிறேன். அடிக்கடி மன்னை செல்லும்
    வாய்ப்பு உண்டு.
    கடந்த சில வாரங்களாக மன்னை நண்பர்களுடன் தொடர்பு கிட்டி இருக்கிறது. V
    கணேசன், R கணேசன் (இவன் தற்போது சீரியல்களில் நடித்து வருகிறான். தெய்வ
    மகள் என்னும் தொடரில் காமெடி கதாபத்திரம். சிவசங்கரன் இங்கு கோவையில்
    தான் இருக்கிறான். 9444219883. சமீபத்தில் பேசினேன். சந்திக்க வில்லை.
    சந்தான ராமன் பற்றி தகவல் இல்லை. மிக்க மகிழ்ச்சி.
    my number is 8920943515

    பதிலளிநீக்கு
  11. தமிழ் அறிஞர் அறவாழி அவர்களின் சகோதரி ஜெயந்தி நம் பள்ளியில் படித்தவர். என்னுடன் ஏழாம் வகுப்பு வேம்பு சார் அவையில் படித்தார். முதல் தெரு மீனாட்சி என்கிற சித்ரா (இவர் பெயர் சித்ரா என்பதே போன மாதம் தான் தெரியும்) தற்போது சென்னை அண்ணாநகரில் வசிக்கிறார். நான் மற்றும் சந்தான ராமனுடன் முதல் பெஞ்சில் அமர்ந்து இருந்த நாலாம் தெரு சீனிவாசன் சென்னையில் ஆழ்வார் பேட்டையில் வசிக்கிறார். இது எல்லாமே கடந்த சிலவாரங்களில் கிடைத்த விபரங்கள்.

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...