நாம் பறக்கும் வானவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். வித்யாதரர்கள், கின்னர்கள், கிம்புருடர்கள், கந்தர்வர்கள், தேவர்கள் ஆகியோர்தான் அவர்கள் . ஆனால் பறக்கும் கோட்டைகளைப் பற்றியும் அவற்றை பரமன் ஏன் எதிர்த்தார் என்பது பற்றியும் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
பிரம்மனுக்கு கேட்டவர்க்கெல்லாம் மனம் இரங்கி வரம் கொடுப்பதே வேலை. அவ்வளவு இளகிய மனம் படைத்தவர். தாரகாசுரன் என்ற அசுரனுக்கு மூன்று புதல்வர்கள். அவர்கள் தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி ஆகியோர்.
அவர்கள் அரக்கர் குலமாயிருந்தாலும் தேவர்களை விட அதிக பலமுள்ளவர்களாத் திகழ வேண்டி பிரம்மனைக் குறித்துத் தவமிருந்தார்கள். இரண்டு கைகளையும் தலைக்கு மேலே கூப்பி காலின் பெருவிரலில் மட்டும் நின்றபடி கோரத்தவம் செய்தார்கள். நிலத்தில் மட்டுமல்ல நெருப்பிலும் தவம் செய்தார்கள்.
அவர்களின் தவம் தேவலோகம் வரை சென்று தேவர்களை வாட்டியது. தனது இந்திர பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோவென இந்திரனும் பயந்து போனான். அனைவரும் பிரம்மாவிடம் சென்று அவ்வரக்கர்களுக்கு வரம் ஏதும் கொடுத்துவிட வேண்டாம் என இறைஞ்சினர்.
