ஒருவர் சிறுபிழை செய்தாலும் பொறுக்காமல் தான் ஏந்திய மழு என்ற ஆயுதத்தால் தண்டித்து விடுவார் எறிபத்தர் என்பார். அதுவும் அவர் உயிராய்க் கருதும் சிவனடியார்களுக்குத் துன்பம் ஏற்பட்டால் பொறுப்பாரா. தன் பரசு என்னும் ஆயுதத்தைக் கொண்டு அவர்களை தண்டித்தார் ஆயினும் அவர் சிவகணங்களின் தலைவராய் உயர்ந்தார் அது எப்படி எனப் பார்ப்போம் குழந்தைகளே.
கொங்குநாட்டில் கருவூர் என்ற ஊரில் மாசி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர் எறிபத்தர். இவர் அன்பும் பண்பும் ஒருங்கே கொண்டவராயினும் சிவபக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பொறுக்க மாட்டார். அப்படி இடையூறு செய்தவர்களை தன் மழுப்படையால் தண்டித்து விடுவார். அவ்வளவு கோபக்காரர்.
ஒருமுறை சிவகாமியாண்டார் என்பார் சிவனுக்கு சார்த்த அதிகாலையில் எழுந்து தூய நறுமணமிக்க மலர்களைக் கொய்து தனது பூக்குடலையில் எடுத்துத் தலையில் சுமந்து கொண்டு திருக்கோயில் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அந்த அதிகாலையில் அலங்காரமாக நகர் உலா வந்து கொண்டிருந்தது புகழ்ச்சோழர் என்ற அரசரின் பட்டத்து யானை. கூடவே நான்கு பக்கமும் நான்கு பாகர்களும் யானையின் மேல் அமர்ந்து அங்குசத்தால் குத்தியபடி ஒருபாகனுமாக மொத்தம் ஐந்துபாகன்கள் சூழ அது நடந்து சென்று கொண்டிருந்தது.