எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 23 மே, 2024

தானமாகத் தன்னையேயீந்த ததீசி முனிவர்

தானமாகத் தன்னையேயீந்த ததீசி முனிவர்


சரஸ்வதி நதி ஓடிக்கொண்டிருந்த வேத காலம் அது. வாய்மைக்கும் தவத்துக்கும் சீலத்துக்கும் பெயர்பெற்ற ததீசி முனிவர்  சிட்டிதேவிக்கும் அதர்வண மகரிஷிக்கும் மகனாகப் பிறந்தார். தன் தபோபலத்தால் சுக்கிரனிடம் இருந்து மிருத சஞ்சீவி பெற்றவர். மேலும் அவர் சிவனை நோக்கிக் கடுந்தவம் புரிந்து வஜ்ஜிரம் போன்று உறுதியான உடல் மற்றும் எலும்புகள் பெற்றார்.

இவரது மனைவி சுவர்ச்சா. தன் மனைவியுடன் சேர்ந்து ஔபாசனம், அக்னி ஹோத்ரம், தேவர்கள் பூஜை, பிதுர்க்கள் பூஜை, அதிதி பூஜை அனைத்தையும் நியம நிட்டை தவறாது செய்துவந்த ஒழுக்கசீலர் ததீசி முனிவர். இவருக்கும் ஒரு சோதனை வந்தது. ஆனால் அதனால் பலருக்கும் நன்மை ஏற்படும் என்பதால் எதற்கும் கலங்காமல் தன் வஜ்ஜிர யாக்கையைத் துறந்து தன்னையே ஈந்தவர் இவர் என்றால் வியப்பு ஏற்படும். அது பற்றிப் பார்ப்போம்.  

ஒரு முறை தேவலோகத்துக்கு தேவகுருவான பிரகஸ்பதி வருகை புரிந்தார். அப்போது அவர் வருகையை மதிக்காமல் அமர்ந்திருந்த இந்திரனைப் பார்த்து அதிருப்தி அடைந்த பிரகஸ்பதி தேவலோகம் விட்டு நீங்கினார்.

தேவகுரு இல்லாமல் தேவலோகத்தின் அன்றாடக் கடமைகள் முடங்கின. எனவே அவர்கள் பிரம்மாவிடம் யோசனை கேட்டனர். துவஷ்டா என்பவர் தைத்தியர் குலத்தின் பிரஜாபதி. இவரின் மூத்த மகன் மூன்று தலைகள் கொண்ட் விசுவரூபன் இவனையே தற்போது தேவகுருவாக வைத்துக் கொள்ளும்படிப் பிரம்மா கூறினார். விசுவரூபனிடம் கேட்டபோது ஒப்புக் கொண்டு தேவர்களை வழி நடத்தினான்.

விசுவரூபனின் ஒரு தலை உண்ணவும், ஒரு தலை பருகவும், மூன்றாவது தலை யாகத்தில் கிடைக்கும் சோம ரசத்தைப் பருகவும் பயன்பட்டது. மேலும் யாகத்தின் போது கிடைக்கும் ஆஹூதிகளைத் தேவர்களுக்கு மட்டும் வழங்காமல் தன் இனத்தைச் சேர்ந்த தைத்தியர்களுக்கும் வழங்கி வந்தான். இதைக் கண்டு கோபமுற்ற இந்திரன் விசுவரூபனின் மூன்று தலைகளையும் வெட்டினான்

இதனால் கடுங்கோபமடைந்த துவஷ்டா இந்திராதி தேவர்களை அழிக்க மாபெரும் யாகம் நடத்தினான். அதில் தோன்றியவன்தான் விருத்திராசூரன். அவன் பிரம்மாவை வேண்டிக் கடுந்தவம்புரிந்தான். பிரம்மா அவன் தவத்தை மெச்சி அவன் முன் தோன்றியதும், “பஞ்ச பூதங்களாலும், மரம் மற்றும் உலோகத்தால் தயாரிக்கப்பட்ட எந்த ஒரு ஆயுதத்தாலும் எனக்கு அழிவு நேராதிருக்கும்படி வரம் தர வேண்டும்” என்று வேண்டினான். பிரம்மாவும் அவனுக்கு அவ்வாறே வரம் வழங்கிவிட்டார்.


அதன் பின் தன் தந்தையின் விருப்பப்படித் தன் அண்ணன் விசுவரூபனைக் கொன்ற இந்திரனையும் தேவர்களையும் தேவலோகத்தில் இருந்து விரட்டி அடித்தான். இந்திரனின் ஐராவதத்தையும் கையகப் படுத்தினான். இந்திராதிதேவர்கள் விஷ்ணுவைச் சரணடைந்தனர். ”எந்த ஆயுதத்தாலும் அழிக்க முடியாதவன் விருத்திராசூரன். வஜ்ஜிரம் போல் யாக்கை பெற்றவர் ததீசி முனிவர். இதற்கு ஒரே வழி அவரின் முதுகெலும்பைப் பெற்று அதனைக் கொண்டு ஆயுதம் தயாரித்து அதன் மூலம் மட்டுமே விருத்திராசூரனை வெல்லலாம்” என்று இந்திரனிடம் விஷ்ணு யோசனை கூறினார்.

’என்னது ஒரு முனிவரிடம் அவர் உயிரோடு இருக்கும்போதே அவரது முதுகெலும்பைக் கேட்பதா. என்னதான் அனைத்தும் துறந்த முனிவர் என்றாலும் உயிரோடு தன் முதுகெலும்பை எடுத்துக் கொள்ளச் சம்மதிப்பாரா’ என்று பல்வேறு ஐயங்கள் இந்திரனுக்கு. ஒருவழியாகத் தேவர்களை அழைத்துக் கொண்டு ததீசி முனிவரின் குடிலுக்கு வந்தான் இந்திரன்.

குடிலை விட்டு வெளியே வந்த ததீசி முனிவர் இந்திரனும் தேவர்களும் தன் குடிலைச் சுற்றி அமர்ந்திருப்பதைப் பார்த்தார். இத்தனைபேர் தன்னைப் பார்க்க வந்திருப்பது எதற்காக இருக்கும் என்பதை அவரால் யூகிக்க முடியவில்லை. ஒரு வழியாகத் துணிச்சலைத் திரட்டி இந்திரன் தான் வந்த நோக்கத்தைக் கூறினான்.

எல்லாவற்றையும் கேட்ட முனிவர் ஒரு கணம் கூட யோசிக்கவில்லை.  தேவர்களின் நன்மைக்காகத் தனது யாக்கையைத் துறந்து முதுகெலும்பைத் தருவதாகக் கூறினார். அதன் பின் யோகத்தில் அமர்ந்து உயிர் நீத்தார். விசுவகர்மாவின் துணையுடன் அவரது முதுகெலும்பைக் கொண்டு வஜ்ஜிராயுதம் தயாரிக்கப்பட்டது. அந்த வஜ்ஜிராயுதத்தை எடுத்துக் கொண்டு விருத்திராசூரனுடன் போருக்குச் சென்றான் இந்திரன்.

இந்திரனை வென்ற செருக்கில் இருந்த விருத்திராசூரன் இந்திரன் தன்னை அழிக்க வஜ்ஜிராயுத்தோடு வருவான் என்பதை எதிர்பார்க்கவில்லை. இருவருக்கும் இடையில் நடந்த போரில் இந்திரனின் வஜ்ஜிராயுதத்துக்குப் பலியானான் விருத்திராசூரன்.

எத்தனையோ பேர் எத்தனையோ தானங்கள், தியாகங்கள் புரிந்திருக்கின்றார்கள். ஆனால் அவை அனைத்தும் ததீசி முனிவர் அமரர் நலனுக்காகத் தன் உடல் உறுப்பை உயிரோடு இருக்கும்போதே தானமாக வழங்கிய தியாகத்துக்கு ஈடாகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...