எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 16 பிப்ரவரி, 2024

பங்கு வர்த்தகத்தில் பெண்களும் ஈடுபடலாம்

 பங்கு வர்த்தகத்தில் பெண்களும் ஈடுபடலாம்






காரைக்குடியில் கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாகப் பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டுவரும் திருமதி முத்துசபாரெத்தினம் அவர்களிடம் பெண்கள் அதிகம் ஈடுபடாத இந்தத் துறையில் அவருக்கு எப்படி ஆர்வம் ஏற்பட்டது என விசாரித்தபோது அவர்,

 

“எனது பெயர் முத்துக் கருப்பாயி சபாரெத்தினம். எனக்கு இப்போது எண்பது வயதாகிறது. எனது கணவர் திரு. சபாரெத்தினம் அவர்கள் ஐசிஐசிஐ வங்கியில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எங்களுக்கு நான்கு குழந்தைகள். பிள்ளைங்களுக்கெல்லாம் கல்யாணமாகி குடும்பமாக்கி வச்சபிறகு செடிகொடி மரம் வளத்தேன். (செடிகொடி நம்மளோட இருந்து பாய்ச்சின தண்ணிக்கும் போட்ட உரத்துக்கும் நல்ல பலன் தருது). (எங்க கல்யாணம் முடிஞ்சு 6 வருசத்தில மாமியார் 2 பையன்கள வச்சிட்டு சிவனடி சேர்நதுவிட்டார்கள். அவர்களும் எங்க பிள்ளைகளோட வளந்து பேரன்பேத்தி பார்ததுவிட்டார்கள்.)

 

மாமனாரும் சிவமாகியபிறகு குலதெய்வம், கோவில் வேலைகள், பொதுவேலைகள், பஞ்சாயத்து என பொழுது நல்லபடியாக இருக்கு. எங்க அப்பச்சி ஷேர் பிசினசு செய்வார்கள் அதனால் அதில் ஆர்வம் ஏற்பட்டு அவர்களிடம் 2003ல கற்றுக்கொண்டேன். அவர்களுக்கு அப்புறம் டிவில ஷேர் சானல்கள்ல பாத்து அவன் வாங்கு  வித்திருன்னு போடுவான் அதப்பாத்துட்டு அனுபவமான ரெண்டுமூணுபேர்ட்ட கேட்டுட்டு ரெண்டு மூணு நாள் மார்க்கெட் எப்படி ஏறி எறங்குதுன்னு பாத்துட்டு வாங்குவேன், குடுப்பேன்.

 

ரொம்ப எறங்குச்சுன்னா இருக்கபணத்துக்கு தோதா வாங்கிருவேன். கடன் வாங்கி ஷேர்வாங்கக்கூடாது. எப்பக் கால வாரும்னு தெரியாது. அதனால சொந்தப்பணம் இருந்தாத்தான் வாங்கணும்.ரொம்ப எறங்கிருச்சுன்னா ஒருபக்கமா வச்சிருவேன். நாலு வருஷத்துக்கு முன்னாடி கரூர் வைசியா பேங்க் வாங்கினதுக்கப்பறம் ஐந்தில் ஒரு பங்காக இறங்கிவிட்டது. அப்படியே வச்சிட்டேன். வாங்கியவிலை 3 லட்சம். இப்பக் கொஞ்சநாளா விலை ஏறவும் கொஞ்சங் கொஞ்சமா வித்துட்டு வரேன். இன்னும் மிச்சம் இருக்கு. இப்பக் கிட்டத்தட்ட 6 மடங்குக்கிட்ட ஏறிடுச்சு. இன்னும் மிச்சம் இருக்கு. பொறுமையாக தேடிப்பாத்து அலசி ஆராஞ்சு நன்கு தெரிந்து வாங்கினால்  லாபம் பாக்கலாம்.

 

லாபம் பாக்கணும்னா பொறுமை அவசியம். ரொம்பக் குறைஞ்ச விலைல உள்ள ஷேர்களும் கொஞ்சங் கொஞ்சமா வாங்கிக் கொஞ்ச லாபத்துக்கே வித்துருவேன். வேலைகளுக்கு இடையில  டிவியில் ஷேர் மார்க்கெட்டோட ஆரம்பம், அப்பறம் இடையில, அப்பறம் முடியற நேரத்திலன்னு பார்ப்பேன். வெல கொறஞ்சா வாங்கணும். ஏறினா லாபம் வந்தா வித்துரணும். இதுதான் என்னோட அனுபவம்.  

 

எண்பது வயதில் நானும் என் கணவருமா சமைச்சு சாப்பிடுகிறோம்.  எங்கள் துணிகளை நாங்களே துவைத்துக்கொள்கிறோம். மிசின் கிடையாது. கட்டிச்சோப்பு  போட்டுத்தான் துவைப்போம். சொந்தங்களுக்கு தேவையானபோது யோசனைகள் சொல்லி முடிந்தவரை உதவியாக இருப்போம். கைவேலைகள் மற்றும் தையல் முடிந்தவரை மற்றவர்களுக்கு சொல்லித்தருவேன். ப்லாக் ஓபன்பண்ணி எழுதிவருகிறேன்.

 

தோட்டவேலையில் ஆர்வம். வீட்டில் வெற்றிலைக்கொடி பொன்னாங்கண்ணி, புதினா, மல்லி, கருணைக்கிழங்கு, வெண்டிக்காய்ச் செடி வளர்க்கிறேன். பூச்செடிகள் கனிமரங்கள் வளர்க்கிறேன். வீட்டைச் சுற்றி மா, பலா, சாத்துக்குடி, ஆரஞ்சு மரங்கள் வளர்க்கிறேன். பிள்ளைகளுக்கு வாழ்க்கை அமைச்சுக்கொடுத்தாச்சு. இப்ப மரஞ்செடி வளக்கிறோம். அது நம்மளோடவே இருக்கு. கவனமாப் பாதுகாத்தா நல்ல பலன் தருது. வீட்டு வாசல்லயும் என்னால முடிஞ்சது நாட்டுக்காக 2 மரம் வளத்துட்டேன். 25 வருசமாயிருச்சு (வேம்பு,அசோக மரம்) பலாப்பழம் பழுக்கற காத்துல பையில மண்ணு எடுத்து பலாக்கண்ணு,மாங்கண்ணு எல்லாம் வளத்து ஆர்வமுள்ளவர்களுக்கு தருகிறேன்.

 

இந்திய கம்பெனி, இந்தியாவுக்கு நலம்தரும் கம்பெனி எது என்று பார்த்து வாங்குவேன். பெண்கள் இந்தப் பங்கு வர்த்தகத்துல அதிகம் ஈடுபடுறது இல்லை. வங்கிப் பங்குகளை வாங்கினால் அதிக நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இல்லை. அதுனால பெண்களும் இந்தப் பங்குச்சந்தையில் ஈடுபட்டுப் பொறுமையா வர்த்தகம் செய்தா லாபம் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...